Tuesday, December 9, 2008

முனியப்பன் - இருப்பு மருத்துவர்

Compulsory Residential Rotatory Inter nee - CRRI

முனியப்பனின் வசந்த காலம்
முழுநேர சேவையான CRRI
அவனுக்கென ஒதுக்கப்பட்ட நோயாளிகளை
அவன்தான் பார்க்கணும்

அவனுக்கு மேல் ஒரு Asst. Surgeon
அதற்கு மேல் Chief

முதலில்
முனியப்பன் ரவுண்ட்ஸ்
அடுத்து அசிஸ்டெண்டுடன்
அதுக்கடுத்து Chief உடன்

மூணு ரவுண்ட்ஸ் முடித்த
முனியப்பனுக்கு
கிடைக்கும் கேப்பில்
காலை உணவு

ஊசிபோட ஸ்டீல் ஊசி காலம்
ஊசி ஆஸ்பத்திரியில் எடுக்க மாட்டான்
ஊசி தனியாக ஒரு Needle Box-ல், தனி
ஊசி அவன் நோயாளிகளுக்கு மட்டும்

ஊசி போட்டு ட்ரிப் மாட்டி
ஊர் சுற்ற நேரம் இல்லாத காலம்
மூணு மணிக்கு முடியும்
முனியப்பன் வேலைகள்

மதிய உணவு
மதிய தூக்கம் கொஞ்ச நேரம்
முழித்தவுடன் மறுபடி
முனியப்பன் வேலைகள்
இரவு 9 மணிக்கு Free ஆகும்

இரவுப் பறவை
அப்புறம் கொஞ்சம்
ஆட்டம் பாட்டம்

அவ்வப் பொழுது வரும்
அவசர அழைப்புகள்
அட்டெண்ட் பண்ண
அர்ஜெண்டாகப் பறக்கும் முனியப்பன்

ICU Casuality
அயராமல் உழைத்த நாட்கள்
Accident ward Operation Theatre
அதற்காக அலைந்த வேளைகள்

பக்கத்திலிருக்கும் வீட்டிற்கு
பத்து நிமிடம் கூட செல்லாத காலம்
பாம்புக்கடி பாய்ஸன் கேஸ்களை
பக்கத்து கட்டிலில் படுத்துப் பார்த்த காலம்

ஒரு வருடம்
ஓடியது தெரியவில்லை
இப்பொழுதும் நினைவுக்கு வரும்
இனிமையான நாட்கள் ...................

80 வயது பெருசு

முனியப்பன் சந்திச்ச வித்தியாசமான கேஸ்

மதுரைல ஒரு பெரிய பணக்காரர், 80 வயசு. இவருக்கு சொத்து அதிகம். அவருக்கு என்ன ஆகுது ...., கோமாவுக்குப் போயிர்றார். அய்யாவத் தூக்கிட்டு முனியப்பன்கிட்ட கூட்டமா வர்றாங்க.

முனியப்பன் பெருச அட்மிட் பண்ணி உயிர் இருக்க மாதிரி Life line Support குடுக்குறார். மூளை பாதிச்ச ஆளுக்கு, அதுவும் 80 வயது பெருசுக்கு, பெருசா ஒண்ணும் செய்ய முடியாது. வந்தவங்க சொல்றாங்க "உயிர மட்டும் பிடிச்சு வச்சுக்குங்க (காப்பாத்த வேணாமாம்), ரிஜிஸ்ட்ரர் வர்றார், பத்திரத்துல எல்லாம் ரேகை வைக்கணும். "

அடப்பாவிகளா, உயிர் வேணும்ல கைரேகை வைக்கிறதுக்கு, செத்த பெறகு ஒண்ணும் செய்ய முடியாதுல்ல... 12 மணிக்கு ரிஜிஸ்ட்ரர் வருவார்னு எல்லாரும் ஒக்காந்திருக்காங்க.

மணி 11.30 பெருசு ஹார்ட் நின்னுருச்சு. எல்லாருக்கும் பக்குன்னு ஆயிருது. முனியப்பன் ஒடனே ஹார்ட்டுக்குள்ள Inracardiac adenalin அ போட்றார். கார்டியாக் மசாஜ் குடுக்கறார். பெருசுக்கு ஹார்ட்பீட் வந்துருச்சு, மூச்சும் விடுறார். Life செட் ஆயிருச்சு, எல்லாருக்கும் நிம்மதி.

மணி 12.00, மறுபடியும் Inracardiac adenalin, கார்டியாக் மசாஜ், உயிர் வருது.

மணி 12.15, ரிஜிஸ்ட்ரர் வர்றார். பெருசு கைய புடிச்சு கைரேகை வக்கிறாங்க, 20 - 30 பேப்பர்ல. 1.00 மணி, சுத்தியிருந்த கூட்டம் எல்லாத்தையும் காணோம். ரேகை வச்சாச்சுல்ல, வந்த வேலை முடிஞ்சிச்சுல. அப்புறம் எதுக்கு பெருசு ?, ஒரே ஒரு
வேலைக்காரம்மா மட்டும் இருக்கு.

சாயங்காலம் 8 மணி வரைக்கும் மூச்சு விடுற பெரிசு, மூச்சு 8.15 மணிக்கு மொத்தமா நின்ருச்சு. ரேகை வாங்க வந்தவன்கள்ல பாடிய வாங்க ஒருத்தன் மட்டும் 9.30க்கு வர்றான். ரேகை வாங்க வந்த கூட்டம் பாடி வாங்க வரலை.

உயிர் பெரிசா .... ? சொத்து பெரிசா .... ? போப்பா போ, புரியாத ஆளா இருக்க.

முனியப்பனும் மூணார் MIST ம்

நெஞ்சைத் தொட்டுச் செல்லும்
மஞ்சு மூட்டம்தான் MIST

தேனி தாண்டினால்
தெரியும் போடி மெட்டு
அதில் MIST இருந்தால்
அன்றைய தினம் ஆனந்தம்

MIST-க்குள் பயணம்
மனதிற்கு உற்சாகம்

மலரும் பொழுதின் MIST ம்
மயங்கும் பொழுதின் MIST ம்
ஆண்டவன் அளித்த வரம்
அங்கு இருப்பவர்களுக்கு

மூணாரே MIST தான் அதில்
மூன்று இடங்களில் கண்டிப்பாக MIST

முனியப்பனின்
MIST Valley
ராஜமலை MIST
ரசனையான cape road MIST

பத்தடி தெரியும் MISTக்குள்ளும்
பல அடி தெரியும் MISTக்குள்ளும்
பயணிப்பது ஒரு சுகம்
பயணம் fog lamp உடன்

முன்னால் ஒரு முறை நடந்து பார்த்து
பின்னால் காரைச் செலுத்தி
முரட்டுத்தனமான MISTக்குள்
மாட்டிய thriller நேரங்கள்

புல்லரித்த
புது அனுபவம்
மழைக்கு அடுத்து
மனம் கவர்வது MIST தான்

பள்ளி நண்பர்கள்

காணாமல் போன
கல்லூரி நண்பர்களுக்கிடையே
பழையதை மறக்காத
பள்ளி நண்பர்கள்

நீண்ட காலம் கழித்து
மீண்டும் பார்த்த பள்ளி நண்பர்கள்
முதுகைப் பார்த்து
முகம் கண்ட தனுஷ்கோடி
முப்பது வருடம் ஓடியும்
முதுகை மறக்காத தமிழ் வாத்தியார்

கைவிரல் காயத்துக்கு
கட்டுப்போட வந்த Mr. Ravi திருப்பூர்
கைக்காயத்தை மறந்து நண்பனை
காண பிடித்த காலம் 33 வருடம்

செண்டுவாரை சுரா
சினிமாவில் PRO
சந்தித்த காலம்
சற்றேறக் குறைய 32 வருடம் கழித்து

VIVA குடித்ததை 34 வருடம் கழித்து
விளக்கிய சிவநேசன் K.K. பட்டியில்

மன்னர் மன்னனைப் பார்க்கும் போது
கண்டக்டர் PRC- யில் 15 வருடம் போனபின்

பனிரெண்டு வருடம் கழித்து பார்த்து
இனிதாகத் தொடரும் நண்பர்கள்
அக்ரிகல்சர் ஆபிசர்
ஆண்டிபட்டி திலகர்
இரயில்வேயில் அஜிமுல்லாகான்
இராசாசி அரசு மருத்துவமனை Dr. சம்பத்
பத்துத் தூண் சந்து A.மோகன்

இப்போது கனடாவில்
திருத்தங்கல் வெங்கடேசன் - அவனிடம்
திருடிய தயிர்சாத தினங்கள்
ராஜேந்திரன் IOB யில் இன்னொரு
ராஜேந்திரன் அச்சம்பத்தில்

மிட்டாய் கடை ஜெகதீசன்
மிலிட்டரியில் சங்கர்
பள்ளி நடத்தும் ஈஸ்வரமூர்த்தி
பட்டும் படாத தலைமலையான் Dr.விஜயராஜ்

மதுரை வந்த 23 வருடமும்
இதுவரை அரணாக நிற்கும் White God வெள்ளைச் சாமி
நண்பர்களும் மறக்க வில்லை
நானும் மறக்க வில்லை

பள்ளி நட்பின்
பாசப்பிணைப்பு ஈடு இல்லாதது

ரம்ஜான் பிரியாணி

ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் முனியப்பனின் முஸ்லீம் நண்பர்கள் சிலர், ரம்ஜான் அன்னைக்கு செய்யும் பிரியாணியை முனியப்பனுக்கும் கொடுப்பாங்க. முன்னாடி நாலஞ்சு வீட்டுல இருந்து வந்த பிரியாணி, முனியப்பன் வீட மாத்திட்டதால, இப்ப இரண்டு பேர் வீட்டுல இருந்து மட்டும் ரம்ஜான் அன்னைக்கு மதியம் 2.30ல இருந்து 3 மணிக்குள்ள வரும்.

ரம்ஜான் அன்னைக்கு முனியப்பன் வீட்ல எல்லாருமே காலை சாப்பாடு லைட்டா வச்சுக்குவாங்க. முனியப்பன் காலைல சாப்பிட மாட்டான். மத்தியானம் பிரியாணி வருது, ரவுண்டு கட்டி அடிக்கணும்ல பிரியாணி நல்லாயிருக்கும். அதுலயும் பாய் வீட்டு பிரியாணி பட்டயக் கிளப்பும். பிரியாணி, தால்சா அப்புறம் தயிர் வெங்காயம், அவ்வளவுதான். இது போதாதா நம்மாளுக்கு .....

மத்தியானம் 3 பிளேட், சாயங்காலம் 1 பிளேட், நைட் 2 பிளேட், நடக்க முடியாத அளவுக்கு சாப்பிடுவார் முனியப்பன். முனியப்பனுக்கு 24 வருஷமா ஆரப்பாளையத்துல இருந்து பிரியாணி வரும். ஹபீப் பாய், மதுரை மாநகராட்சில வேலை பாக்கும் போது ஆரம்பிச்சி, இப்ப ரிடையர் ஆன பிறகும் அவர் வீட்ல இருந்து பிரியாணிய முனியப்பன் வீட்ல கொண்டு வந்து குடுத்துருவாங்க. இன்னைக்கு வரைக்கும் வந்துகிட்டு இருக்கு.

10 வருஷத்துக்கு முன்னால அவங்க வீட்ல இருந்து பிரியாணி வரலை. என்ன காரணம்னு புரியலை. 3 மாசம் கழிச்சு அவங்க வீட்ல இருந்து ட்ரீட்மெண்டுக்கு வர்றாங்க. அப்ப சொல்றாங்க அவங்க வீட்டு மருமகன் திடீர்னு இறந்துட்டார்னு. 32 வயசுக்காரர். பொண்டாட்டி, 3 பிள்ளைய தவிக்க விட்டுட்டு போய்ச் சேர்ந்துட்டார். முனியப்பன் இதயம் கனமாயிருச்சு.