Monday, March 30, 2009

யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி

எனது பதிவான "டேய் மரத்தை வெட்டதடா"வை தனது இணையதள listல் சேர்த்து எனது பதிவுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த யூத்ஃபுல் விகடனுக்கு எனது நன்றி. இந்த தகவலை எனது பதிவில் வந்து சொல்லிய வண்ணத்துப் பூச்சியாருக்கும் நன்றி.

Friday, March 27, 2009

குடும்பத்துல இருக்கது .... தெரியாத வார்த்தை

கூட்டுக் குடும்பம், தனிக்குடித்தனம் பற்றிய வார்த்தை இல்ல இது. கிராமப்புற, அடித்தட்டு மக்கள்கிட்ட முனியப்பன் கேட்ட வார்த்தை இது.

முனியப்பன் படிப்பு, உலக நிகழ்ச்சிகள் தவிர நடைமுறை வாழ்க்கைப் பழக்கத்துல இல்லாதவர். மொதல்ல இந்த வார்த்தையக் கேட்ட முனியப்பனுக்குப் புரியலை. அந்த வார்த்தையச் சொன்ன நோயாளிகிட்ட "குடும்பத்துல இருக்கது, இருந்தா" அப்படிங்கிற வார்த்தைக்கு விளக்கம் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டார்.

அந்த வார்த்தையின் அர்த்தம், கணவன் - மனைவிக்கிடையே உள்ள உடலுறவு. எவ்வளவு நாகரீகமா சொல்றாங்க பாருங்க. கிராமத்துப் பெண்கள் சிலரும் "குடும்பத்துல இருக்க" பிரச்னைகளுக்காக முனியப்பனிடம் ஆலோசனைக்கு வந்திருக்காங்க.

கிராம மக்கள், அடித்தட்டு மக்கள்கிட்ட நாம தெரிஞ்சிக்கிட வேண்டியது நெறைய இருக்கு. அவங்க நடைமுறை வாழ்க்கைய வாழறவங்க. அவங்க வாழ்க்கை ஏற்றமோ, எறக்கமோ ஓடிருது. நாமதான் கணக்குப் போட்டு, கற்பனைல உலாவி, வாழ்க்கைய தொலைச்சிர்றோம்.

Tuesday, March 24, 2009

முனியப்பனும் கட்டு விரியனும்

முனியப்பன் தொழில் ஆரம்பிச்ச புதுசுல வீட்லயும் கேஸ் பார்ப்பார். ஒரு நாள் சாயங்காலம் 5 மணி இருக்கும் 7,8 பேர் வந்தாங்க. பாம்பு கடிச்சிருச்சுன்னாங்க. கடிபட்டவன் கடிபட்ட எடத்துக்கு மேல கால்ல துணிய டைட்டா கட்டியிருக்கான் ஒரு transparent பிளாஸ்டிக் பைய தூக்கி முனியப்பன் டேபிள்ல போட்டாங்க. அதுக்குள்ள குட்டி பாம்பு. 11/2 அடி நீளம் தான்.
கட்டு விரியன் (Russels viper). கடிச்ச பாம்ப சும்மா விடுவாங்களா, கொன்னுதான் கொண்டு வந்தாங்க.

முனியப்பன் பல்ஸ், BP பார்த்து ஒரு TT போட்டு லேட் பண்ணாம ஒடனே மதுரை இராசாசி மருத்துவமனைக்கு கட்டு விரியன் குட்டியோட மருத்துவமனைக்கு கட்டு விரியன் குட்டியோட அனுப்பி வச்சுர்றார். அங்க ஒடனே அட்மிட் பண்ணி கட்டுவிரியன் விஷத்துக்கு மாத்து மருந்து போட்டு ஒரு வாரம் பெட்ல வச்சிருந்து காப்பாத்தி அனுப்புனாங்க.

பாம்புக்கடிய பாத்த ஒடனே முனியப்பனுக்கு "ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே" பழைய நினைப்பு வந்துச்சு.

நாகப்பாம்பு, கட்டுவிரியன் கடின்னா ஆளை காலி பண்ணிடும். ஒடனே வைத்தியம் பாத்தா காப்பாத்திரலாம். நாகப்பாம்பு விஷம் Neurotoxic, கட்டு விரியன் விஷம் Vasculo toxic, கட்டு விரியன் கடிச்சா இரத்தம் உறையற தன்மையை (Clotting) தன்மையை எழுந்துரும்.

முனியப்பன் பயிற்சி மருத்துவரா இருக்கப்ப பாம்புகடி (கட்டிப்புடி இல்ல) வைத்தியம் நெறய பாத்திருக்கார். கட்டு விரியன் கடிச்சவங்க இரத்தத்தை sample எடுத்து கண்ணுல படுற மாதிரி testtube அ பிளாஸ்டர் போட்டு சொவத்துல ஒட்டி வச்சிருவாங்க. இரத்தம் ஒறையுதான்னு பாக்கத்தான். எப்ப clott ஆகுதோ அதுவரைக்கும் இந்த மாதிரி blood sample அ , testtbeல சுவத்துல ஒட்டி வைச்சு பாத்துக்கிட்டேயிருக்கணும். ரொம்ப விறுவிறுப்பா
இருக்கும். clott ஆனாப்புறம்தான் நோயாளி பொழைச்சான்.

பாம்பு கடிப்பட்ட ஒடனே கால்ல கட்ட போட்டுகிட்டு வந்துட்டா 100% பொழைக்க சான்ஸ். கால்ல கட்ட போடாம, வாய்ல நுரை தள்ளின பெறகு வந்தா பொழைக்கிறது 50% தான்.
கடுகு சிறுத்தாலும் காரம் கொறையாது குட்டியா இருந்தாலும் கட்டு விரியின் கட்டுவிரியன்தான்.

Friday, March 20, 2009

முனியப்பனும் மோகினிப் பேயும்

முனியப்பன் மருத்துவம் படிச்ச ஒடனே கிளினிக் வச்சுட்டார். நெல்லைல இருந்து 26 கி.மீ.ல தாமிரபரணி ஆத்துக் கரைல ஆராம்பண்ணை கிராமம். முஸ்லிம் மதத்தினர் பெருமளவில் வசிக்கும் கிராமம். அங்க எடம் பாக்கப்போனா, "முத்தவ்லியப் பாருங்க" அப்படின்னாங்க. முத்தவ்லிங்கிறது முஸ்லிம் சமுதாயத்துல ஒரு பொறுப்பான பதவி.

முத்தவ்லி கருங்குளத்துல இருக்கார். தாமிரபரணி ஆத்துல இடுப்பளவு தண்ணில எறங்கி கருங்குளத்துக்குப் போனார் முனியப்பன். கிராமத்துல ஆஸ்பத்திரிங்கவும் முத்தவ்லி சந்தோஷப் பட்டு, முஸ்லிம் ட்ரஸ்ட்டுக்குச் சொந்தமான எடத்த முனியப்பனுக்குக் கிளினிக் நடத்த குடுக்கறார்.

ஒரு காலத்துல பள்ளிக்கூடம் நடந்த எடம் அது. ஒரு செவ்வகக் கட்டடம். அதுல "ட"னா சைஸ்ல பள்ளி நடந்த வகுப்புகள். அடுத்த "ட"னா கட்டி முடிக்கப் படாத கட்டடம். அதுல கடைசில ஹெட் - மாஸ்டர் ரூமா இருந்ததை நம்ம முனியப்பனுக்குக் கிளினிக் நடத்தக் குடுத்தாங்க. கட்டி முடிக்கப் படாத எடத்துல கருவேல முள்ளு. கட்டடத்துக்குப் பின்னாலயும் கருவேல முள்ளு. கட்டடத்துக்கு சைட்ல தாமிரபரணி ஆத்துல தண்ணி எடுக்கப் பெண்கள் போவாங்க.

முனியப்பன் கிளினிக் டைம் 4.30 to 8.30. கேஸ் 6.30 வரை வரும். அப்புறம் வராது. "இப்பத்தான ஆரம்பிச்சிருக்கோம், இன்னும் கொஞ்ச நாள்ல கேஸ் பிக்அப் ஆயிரும்"னு முனியப்பன் மனசைத் தேத்திக்கிடுவார். கிளினிக் பையனும் 6.30க்கு ஓடிப்போயிருவான். ஒரு மாசத்துல மக்கள் கொஞ்சம் freeஆ பேசப்பழகிட்டாங்க. முனியப்பன் ரூம்ல ஒரு 60 வாட்ஸ் பல்ப், கட்டடத்தை விட்டு வெளிய ரோட்டுக்கு வரணும்னா 70 அடி வரணும். இப்படி ஒரு சூழ்நிலைல 6.30க்கு மேல case வராததுக்குக் காரணமா ஒரு குண்டைப் போட்டாங்க பாருங்க.

பள்ளிக்கூடமா இருந்த கட்டடம் ரொம்ப நாளா சும்மா கெடந்ததால அங்க மோகினிப் பேய் குடியேறிருச்சாம், அதுனால தான் அங்க யாரும் வரலைன்னாங்க.

முனியப்பனுக்கு டர்ராயிருச்சு. படிக்கிற காலத்துல டிராகுலா (இரத்தக் காட்டேரி) படம் அதிகமா பாக்குற ஆளு. சந்திரமுகில வடிவேலு ரஜினியக் கேப்பாரு பாருங்க ஒரு கேள்வி "அப்பா பேய் இருக்கா? இல்லையா?". அதே கேள்விய தனக்குத் தானே கேட்டுக்கிட்டார் முனியப்பன், 27 வருஷத்துக்கு முன்னால. கருவேல முள்ளு ஆடுனா, சும்மா காத்து வீசுனா, கதவு ஆடுனா முனியப்பனுக்கு லேசா ஒரு திக் வரும். முனியப்பன் வீரம் வெளஞ்ச மண்ணுக்காரர் - சொந்த ஊர் M.கல்லுப்பட்டி. 7 மணி ஆயிருச்சுன்னா ரூம விட்டு வெளிய வந்து தில்லா நிப்பார், ஆள் நடக்கற மாதிரி, ஆவியா ஒரு உருவம் மாதிரி கட்டி முடிக்கப்படாத கட்டடத்துல தெரியும். மோகினிப்பேய் வரும். ஒத்தைக்கு ஒத்தை மல்லுக்கட்டலாம்னு, முனியப்பன் ரெடியாயிருந்தார். 2 மாசம் போச்சு ஒண்ணும் நடக்கலை.

'டாக்டர் பயப்படாம ஒக்காந்திருக்கார், நம்மளும் அவர்கூட இருப்போம்'னு, கிளினிக் பையன் முனியப்பன் கூட 8.30 வரை இருக்க ஆரம்பிச்சான். கொஞ்ச நாள்ல 6.30க்கு மேலயும் நோயாளிகள் வர ஆரம்பிச்சாங்க. நெல்லைக்கு 8.30க்கு பஸ். நோயாளிகள் இருந்தா, முனியப்பனுக்காக அந்த பஸ்ஸை நிப்பாட்டி வச்சிருவாங்க.

மோகினிப் பேய் பயம் ஊர் மக்கள்கிட்ட இருந்து ஒரு வழியா போயிருச்சு. முத்தவ்லி சந்தோஷமா முனியப்பன்கிட்ட சொன்னார். "நீங்க பயப்படாம இருந்தீங்க, அதுனால வீடுகட்டி மக்களைக் குடிவைக்கப் போறோம்". அந்த ஊர் ஜமாத்ல இருந்து பள்ளி அறைகளை வீடாக்கி வாடகைக்கு விட்டாங்க. நுழைஞ்ச ஒடனே மொத வீடு நம்மாளு முனியப்பனுக்குத் தான்.

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' அப்படிம்பாங்க. பேய்ங்கிறது ஒரு பிரம்மை.

Wednesday, March 18, 2009

டேய் .... மரத்தை வெட்டாதடா

முனியப்பன் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அதுனால தோட்டக்கலை ஆர்வம் உள்ளவர். வீட்டைச் சுத்தி, இருக்க எடத்துல பலவகைச் செடிகளை வளத்துக்கிட்டிருக்கார்.

மதுரை வெயில், சும்மா சொல்லக்கூடாது, அத அனுபவிக்கக் கொடுத்து வைக்கணும். வெயிலோட கடுமை தாக்காம இருக்க முக்கியமான செடிகளை எடத்த மாத்தி வச்சிக்கிட்டே இருப்பார் முனியப்பன். வீட்டுக்குப் பின்னால மாதுளை மரம். அதுக்கடில பூந்தொட்டிய வைக்கலாம்னா ரெண்டு கெள தடுக்குது.

என்ன செய்ய? வேற வழியில்லை. அருவாள வச்சு ரெண்டு கெளயவும் வெட்டுனார். திடீர்னு பின்னால இருந்து ஒரு சத்தம் 'டேய், மரத்த வெட்டாதடா'. திரும்பிப் பாத்தா 7 வயசு அமர், முனியப்பன் தங்கை மகன்.

ஏம்ப்பான்னு அமர்கிட்ட கேட்டார் முனியப்பன். அதுக்கு அமர், "மரத்தை வெட்டிட்டா ஆக்ஸிஜன் எப்படி கிடைக்கும் ?, எப்படி மூச்சு விடுவ?"ன்னான்.

இளம் தளிரின் மனதில் இயற்கையின் தாக்கத்தைப் பாருங்கள். இவ்வளவு அருமையான கருத்து உள்ள பையனை முனியப்பன் ஒடனே கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினார். நல்ல எண்ணங்களைப் பாராட்டுவதற்கு லேட் பண்ணக் கூடாது.

மரங்கள் நாம் வாழ பிராணவாயு கொடுப்பவை என்று பள்ளியில் அமருக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியப் பெருந்தகைக்குத் தான் பாராட்டு.

Thursday, March 12, 2009

சன் (son) of தமிழன் எழுத்து

இன்னார் மகன் இன்னார்

குழந்தை பிறந்த ஒடனே தாயார் தகப்பனார் பேர் போட்டு பிறப்பு சான்றிதழ் ஸ்கூல்ல காலேஜ்ல சேரும் போது அப்ளிகேஷன்ல இன்னார் மகன் இன்னார் ஸ்கூல் காலேஜ் TCல இன்னார் மகன் இன்னார் எங்க போனாலும் இதே தான். கடைசில செத்த பிறகு இறப்பு சான்றிதழ்ல கூட இன்னார் மகன் இன்னார் போட்டுதான் பதியனும்.

இது தான் தெரியுமே. அப்புறம் எதுக்குங்கிறீங்களா ? இங்க தான் தமிழன், அவனோட மொழி, அவனோட எழுத்து வருது.

தமிழன் நாகரீகம், சுமேரிய நாகரீகம், ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகங்கள் பழமையானவை எல்லா எடத்துலயும் எழுத்து இருக்கு. தமிழன் இங்கதான் ஸ்கோர் பண்றான்.

தமிழ் பிராமி எழுத்து காலத்துல இருந்து இன்றைக்கு வரைக்கும் இன்னார் மகன் இன்னார்னு பதியறாங்க. தமிழ் பிராமின்னா தமிழ் மொழிய மொத மொத எழுதுனது பிராமி முறைல. 2000 வருஷம் பழமையான எழுத்து தமிழன பாருங்க 2000 வருஷத்துக்கு முன்னாலேயே மகன் அப்படிங்கற வார்த்தைல பயன்படுத்தியிருக்கான். அன்னைக்கே தமிழ் மொழிய எழுத்துல பொறிச்சு வச்சிருக்காங்க.

1) அந்தைய் பிகன் மகன் வெண்அ
விக்கிரமங்கலம் கல்வெட்டு கிமு.2ம் நூற்றாண்டு
2) கணதிகண் கணக அதன் மகன் அதன்
அழகர் மலை கிமு முதலாம் நூற்றாண்டு கல்வெட்டு
3) இலஞ்சில் வேள் பாப்பாவன் மகன் மெயவன்
கிமு 3ம் நூற்றாண்டு அரிட்டாபட்டி கல்வெட்டு
என்ன மகன் கதையா இருக்கே அந்த காலத்து தமிழனுக்கு மக இல்லையா? கொதிக்காதீங்கப்பா கூல் டவுண்.


நல்லிய் ஊர் ஆ பிடந்தை மகள்
கீரன் கொற்றி அதிடானம்
கல்வெட்டு புகளுர்-2ம் நூற்றாண்டு கி.பி
ஆ பிடந்தை மகள் கீரன் கொற்றி

மகன் மகள் என்ற வார்த்தைகள் அந்த காலத்திலேயே வழக்கில் இருந்திருக்கிறது. அதைக் கல்வெட்டில் பதித்து மொழியை வளர்த்திருக்கிறார்கள்.

ஜராவதம் மகாதேவன், நாகசாமி இவங்கல்லாம் சீனியர் தொல்லியல் ஆய்வாளர்கள் கல்வெட்டுகளை பத்தி நெறய புக் போட்ருக்காங்க.

சன் ஆஃப், டாட்டர் ஆஃப் எல்லாம் இன்னைக்கும் இருக்கு தமிழன் தெரிஞ்சோ, தெரியாமலோ தாய் மொழி தமிழை காப்பாத்திகிட்டுருக்கான். தமிழ் நிரந்தரமானது. தமிழுக்கு அழிவில்லை. என் தாய்மொழி தமிழ் என கூறுவதில் நம் அனைவருக்கும் பெருமைதான்.

Thursday, March 5, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (வள்ளி)

சேலையா ? கொடமா ?

மதுரைல அஞ்சாநெஞ்சர் மு.க.அழகிரியோட பிறந்த நாளை, மதுரைல உள்ள தி.மு.க. உடன் பிறப்புகள் ஒவ்வொரு பகுதிவாரியா கொண்டாடுறாங்க. நலத்திட்டங்கள்னு பேர்ல, இலவச மருத்துவ முகாம், இலவசமா பொருட்கள் வழங்குறது அப்படின்னு.

முனியப்பன் கிளினிக் நேரம். அந்த நேரத்துல ஒருத்தர் வந்து வள்ளிகிட்ட அழகிரி படம் போட்ட ஒரு கூப்பனைக் குடுத்து "சேலை குடுக்குறாங்க. ஒடனே போ" அப்படின்னு சொல்றாங்க. வள்ளிக்கு 'ஆஹா. சேலை free' அப்படின்னு ஒரு ஜில். முனியப்பன்கிட்ட சொல்லிட்டு சேலை வாங்கப் போறாங்க. அங்க போய்ப் பார்த்தா ஒரே கூட்டம். ஒரு கல்யாண மண்டபம் முன்னால 2000 பேருக்கு மேல நிக்குறாங்க. முனியப்பன்கிட்ட இருக்கறதால,

அந்த கூட்டத்துல பாதிப்பேர் தெரிஞ்ச முகமாயிருக்கு, "நீ போப்பா"ன்னு, வள்ளிய முன்னால அனுப்பி விடுறாங்க. பொருள் குடுக்கற எடத்துக்கு போனா, - வள்ளிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. 'சேலைன்னு சொன்னாங்க, கொடமும் சேர்த்துக் குடுக்குறாங்க'ன்னு. வள்ளிகிட்ட அழகிரி படம் போட்ட கூப்பனை வாங்கிக்கிட்டு கொடமும் சேலையும் குடுக்கறாங்க.

சேலையும், கொடமும் வாங்கிட்டு சந்தோஷமா வள்ளி வெளிய வாராங்க. அப்ப பாருங்க கொடுமைய. வாங்கிட்டு வர்றத புடுங்கிட்டு போறதுக்கு ஒரு 40 பேர் நிக்கிறான். அவங்கள தாண்டித்தான் வரணும். வள்ளி வாங்கிட்டு வந்த சேலையப் பிடிச்சு ஒருத்தன் இழுக்கிறான். இந்த மாதிரி இக்கட்டான நேரங்கள்ல நம்ம மூளை ரொம்ப சுறுசுறுப்பா செயல்படும். ரெண்டுல ஒண்ணு-எதுன்னு முடிவு பண்ண வேண்டிய தருணம். வாழ்வா? சாவா? உயிரா? மானமா? மாதிரி இப்ப வள்ளிக்கு கொடமா? சேலையா? பிரச்சினை.

வள்ளியோட ஒடம்புல அட்ரினலின் ஓட்டம். கண நேரத்துல (fraction of a second) முடிவு பண்றாங்க. சேலை இத்துப் போகும், இல்ல கிழிஞ்சு போகும். கொடம் என்னைக்கும் இருக்கும். சேலை போனாப் போகுதுன்னு கொடத்தை இறுகப் பிடிச்சுக்கிட்டு தப்பிச்சு வந்துர்றாங்க.

Wednesday, March 4, 2009

உன் புன்னகை

கண்ணை உயர்த்தாமல்
என் முகம் பார்க்காமல்
நிலம் பார்த்து
நீ சிந்தும் புன்னகை

என்முகம் நேராகக் கண்டவுடன்
உன்முகம் திருப்பி ஒரு புன்னகை
என் முன்னால் நடந்தாலும்
பின்னால் திரும்பி ஒரு புன்னகை
தொலைவில் நின்றாலும்
தொல்லை கொடுக்கும் புன்னகை
சும்மா இருந்தாலும் சிங்காரமாய்
சீண்டும் புன்னகை .......

என் கிண்டலுக்கும் புன்னகை
என் சீண்டலுக்கும் புன்னகை
பொய்க் கோபத்திலும்
நிஜமான புன்னகை
இதழ் மூடியும் புன்னகை
இதழ் திறந்தும் புன்னகை
பல் வரிசை பளபளக்க
பளிச்சிடும் புன்னகையும் உண்டு

என் வருகை கண்டவுடன்
உன் முகத்தில் புன்னகை
என் அருகில் வந்தவுடன்
உன் அழகிய புன்னகை
தென்றலாய் என் தோளில் நீ
துவளும் போது ஆனந்தப் புன்னகை
ம்ம்ம்... முத்தத்தில் திளைக்கும்
மோகனப் புன்னகை
முத்தத்திற்குப் பின்னர் மீண்டும்
முத்தம் கேட்கும் ஒரு புன்னகை
வெட்கத்திலும் புன்னகை
வேட்கையிலும் புன்னகை

களம் புகுந்தபின் கணக்காய்
இதழ் கோடியில் புன்னகை
போர்க்களத்தின் நடுவில்
மயக்கத்தில் புன்னகை
மோகத்தில் புன்னகை
முனகலில் புன்னகை
மோகத்தில் திளைத்த பின்
முகத்தை மூடி ஒரு புன்னகை

உன் புன்னகை
நினைவுகளைக் குறித்திருக்கிறேன்
குறிக்க மறந்திருந்தால்
குற்றம் சாட்டாதே
உன் புன்னகையால் .............