Monday, August 24, 2009

நிர்வாண சாமியார் - முனியப்பன்

முனியப்பன் நெல்லை மருத்துவக் கல்லூரில படிக்கும் போது ஒரு கலக்கல் பார்ட்டி. கலக்கல்லயும் அதிரடிக் கலக்கல் தான். அந்தக் கலக்கல்ல ஒண்ணு தான் நிர்வாண சாமியார்.

Dr. பரதன் குமரப்பா, Dr. திவாகர், Dr. அல்போன்ஸ் செல்வராஜ்னு ஒரு Mega மாணவர் கூட்டணி. அவங்க நெல்லை மருத்துவக் கல்லூரி விழாக்கள்ல நாடகங்கள் போடுறதை வழக்கமா வச்சிருந்தாங்க. நாடகம் முழுக்க நையாண்டி மேளம் தான். ஒரே கேலியும் கிண்டலும் தான். பொதுவா ராஜா காலத்து நாடகம், அதுல அந்தக் காலகட்டத்துல உள்ள சமூக நிகழ்ச்சிய கலந்து கலக்கிருவாங்க.

அந்தக் கால கட்டத்துல 1978 - 80ல், நிர்வாண சாமியார்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தாங்க. குரூப்பா, இல்லைன்னா தனித்தனியா வருவாங்க. அவங்க போற எடம் பூராம், போலீஸ் பாதுகாப்பு. ஏன்னா ? நிர்வாணம்.

நம்ம டாக்டர் மாணவர்கள் கூட்டணி இதை விடுவாங்களா ? அந்த நிர்வாண சாமியாரை அவங்க நாடகத்துல ஒரு கதாபாத்திரமா அவங்களோட நாடகத்துல சேத்துக்கிட்டாங்க. Character ரெடி. Actor யாரு ? எல்லாரையும் கேட்டுப் பாக்குறாங்க, "யாருப்பா நடிக்கிறது ?" கதாபாத்திரத்தைக் கேட்ட ஒடனே தலை தெறிக்க ஓடுறாங்க நான் இல்ல, நீ இல்லன்னு. College function அதுல நிர்வாண சாமியாரா stageல வரணும். எப்படி இருக்கும்?, ஒரு பயலும் மாட்டேங்கிறான்.

நம்மாளு முனியப்பன் கலக்கல்ல இருந்து ஒதுங்கி முழுமூச்சா படிச்சிக்கிட்டிருந்த நேரம். அந்த Mega மாணவர் கூட்டணியிடம் அன்பான தொடர்புள்ளவர். அவங்க யோசிச்சுப் பாத்து முனியப்பனை அன்பால நடிக்கச் சம்மதிக்க வச்சுர்றாங்க. முனியப்பன் நிர்வாண சாமியார் வேஷம் கட்ட ரெடியாயிர்றார். ரிகர்சல் நடக்குது. அந்த நேரத்துலயே சிரிப்பை control பண்ண முடியாம எல்லாரும் சிரிச்சு உருள்றாங்க. அந்த நாளும் வருது. கல்லூரி விழா. Stage performance.

மேடைல ராஜாவோட தர்பார் ஹால். ராஜா seatல இருக்கார். மந்திரி, சேனாதிபதி, எல்லாம் இருக்காங்க, சேவகன் "பராக், பராக்" போடுறான். "நிர்வாண சாமியார் வர்றார் பராக், பராக்" Audience அதிர்றாங்க, சிரிப்பலை, சிரிப்பு அடங்குது. Audienceக்கு ஒரு ஆவலான எதிர்பார்ப்பு, மூவர் கூட்டணி ஏமாத்திடுவாங்களா என்ன? ரெண்டு பேரு மடிச்ச 4 முழ வேஷ்டியை வச்சு மறைச்சுக்கிட்டு, முனியப்பனோட இடுப்புக்கு மேல, பாதி தொடைலருந்து தெரியற மாதிரி முனியப்பனை நடுவில வுட்டு அழைச்சு வர்றாங்க. வேஷ்டிக்குப் பின்னால முனியப்பன் கவர்ச்சி நடிகையை விட கம்மியான காஸ்ட்யூம்ல, அரங்கமே அதிருது சிரிப்பால்.
Audience பூராம் குலுங்கி குலுங்கி சிரிக்கறாங்க. இதுல விசில் சத்தம் வேற. மூவர் கூட்டணி எதிர்பார்த்தது இது தான். அவங்க கதாபாத்திரத்துக்கான வெற்றி கெடைச்சுருச்சு. சிரிச்சுக்கிட்டே இருக்காங்களே ஒழிய சிரிப்பலை நிக்க மாட்டேங்குது. Audience சிரிச்சது பத்தாதுன்னு Stage ல் உள்ள ராஜா, மந்திரி, சேனாதிபதி வேற சிரிக்க ஆரம்பிச்சுர்றாங்க. ஆம்பிள சிங்கமா Stageக்குள்ள நுழைஞ்ச முனியப்பன், கழுத்துல மாலயப் போட்டு வெட்டுறதுக்கு ஆட்டை கூப்பிட்டுப் போவாங்கள்ல, பலிகடா, அந்த மாதிரி Portionக்குப் போயிர்றார். எல்லாருடைய சிரிப்புக்குக் காரணமான காட்சிப் பொருள் முனியப்பனுக்குப் பேச வேண்டிய வசனம் மறந்து போயிருது. இதுக்கு இடைல ஒரு பயம் வேற, வேஷ்டியப் பிடிச்சிக்கிட்டு இருக்கவங்க வேட்டியைக் கீழே விட்டுட்டா ?

சிரிப்ப நிப்பாட்டி நாடகத்தைப் பாக்க எல்லாரும் தயாராகுறாங்க. Prompter முனியப்பனுக்கு வசனத்தை எடுத்து விடுறார். சீன் களை கட்டுது. வீரபாண்டிய கட்டபொம்மன், ஜாக்சன் துரை மாதிரி வசனம்

ராசா : என்னவே இப்படி வந்திருக்கீரு ?

நி.சா. : டிரஸ்ஸக் கழட்டுனா நீரும் இப்படித்தான்வே.

அரங்கம் சிரிப்பலையால் அதிர்கிறது. சரிப்பலை அடங்கிய பிறகு,

ராசா : வீட்டை விட்டு வெளியே வந்தா கொஞ்சமாவது துணி வேண்டாமாய்யா ?

நி.சா. : பிறந்ததுல இருந்தே ஆடையில்லாதவன்யா நான்

தலையில் அடித்துக் கொள்ளும் ராசா,

ராசா : ஆமா, ஒத்த ஆளாத்தான் வந்தீராவே ?

நி.சா. : இல்ல ராசா, இன்னம் 23 பேர் வாரவ

அரங்கத்தில் சிரிப்பு, ராசா சுதாரித்துக் கொண்டு,


ராசா : உம்ம வருகையின் நோக்கம் என்னய்யா

நி.சா. : எம் கொள்கையைப் பரப்ப வந்திருக்கோம்யா

ராசா : ஒம்ம மாதிரி திரியறுதுக்கா ?

சிரிப்பலை

நி.சா. : அது ஆரம்பம்

ராசா : ஆரம்பமே சரியில்லையேய்யா, சேனாதிபதி ...

சேனாதிபதி : ராசா,

ராசா : இந்த ஆளைத் தூக்கிக் கொண்டு போய் நாட்டின் எல்லையைத் தாண்டி வீசிவிட்டு வாரும்

சேனாதிபதி, சேவகர்கள் பிடிக்க வர, நிர்வாண சாமியார் முனியப்பன் நேரா மேக்கப் ரூமுக்குப் பறந்து போயிட்டார், அவ்வளவு ஸ்பீடு.

அரங்கமே அதிர்ந்தது.

அதுக்கப்புறம் ஒரு வாரம் காலேஜ்ல முனியப்பன் படாத பாடு பட்டுப் போனாரு. சீனியர் மாணவர்கள் "என்னடே" அப்படின்னு சிரிப்பாங்க, ஜூனியர் மாணவர்கள் 'சார்.....ர்' ஒரு நமுட்டுச் சிரிப்பு, மாணவிகள் தலையைக் குனிஞ்சு சிரிச்சுகிட்டுப் போயிருவாங்க.

இப்ப Dr. பரதன் குமரப்பா நிலக்கோட்டைல இருக்கார், Dr. திவாகர் சிவகங்கைல இருக்கார், Dr. அல்போன்ஸ் செல்வராஜ் சென்னைல இருக்கார். அவங்க மூணு பேரும் காலேஜ்ல நாடகங்கள் போட்டு கலக்குனது - அப்பா, செம கலக்கல் நாட்கள்.

Thursday, August 13, 2009

சிக்ஸ் பேக் அப்

இந்த வார்த்தை, இப்ப தமிழ் சினிமாவை வச்சு தமிழ்நாட்ல மீடியா மூலமா பிரபலமா இருக்கு.

சத்யம் படத்துல விஷாலோட சிக்ஸ் பேக் அப், வாரணம் ஆயிரம் படத்துல சூர்யாவோட சிக்ஸ் பேக் அப், இப்ப தனுஷ்ம் சிக்ஸ் பேக் அப் முயற்சில இருக்கிறார்னு ஒரு சினிமா பத்திரிகை நியூஸ்.

சிக்ஸ் பேக் அப்புக்குன்னு தனி எக்சர்சைஸ், டயட் கண்ட்ரோல் அப்படின்னு சொல்றாங்க.

நம்ம ஊர்ல ஒவ்வொரு கிராமத்துலயும் குறைஞ்சது 5 பேராவது சிக்ஸ் பேக் அப்ல தான் இருக்காங்க. டவுண்ல லோடுமேன்களப் பாருங்க, நெறய பேர் சிக்ஸ் பேக் அப் தான். கடின உழைப்பாளிகள் கிட்ட சிக்ஸ் பேக் அப், கண்டிப்பா பார்க்கலாம். அளவான சாப்பாடு, அதிக உழைப்பு ..... இதான் சிக்ஸ் பேக் அப் ரகசியம்.

சிக்ஸ் பேக் அப்னா என்ன ?

ஜிம் காரன் கிட்ட கேட்டா ... அப்டாமினல் கட்ஸ் அப்படிங்கிறாங்க .... அதாவது வயித்துல இருக்கிற கட்டான அமைப்புகள்.

முனியப்பன் கிட்ட கேட்டா .... மருத்துவ ரீதியான பதிலைச் சொல்றார். நெஞ்சையும் (Xiphisternum) அடிவயிற்றையும் (Pubis) இணைக்கும் சதை ரெக்டஸ் அப்டாமினஸ் (Rectus Ubdominis). தொப்புளுக்கு அது வலது பக்கமும், இடது
பக்கமும் தனித்தனியாக மொத்தம் இண்டு உள்ளன. ஒவ்வொன்றும் மூன்று திரட்சியான பகுதியைக் கொண்டிருக்கிறது. அப்படி 2x3 = 6 ... இது தான் சிக்ஸ் பேக் அப் (Six Pack Ab). இந்த இரண்டு பக்க சதை தான் நம் வயிற்றுக்கு (abdomen)
security guard.

எது எப்படியோ, சிக்ஸ் பேக் அப் உள்ள ஆண்களைத் தான் பெண்கள் விரும்புவதாக ஒரு கருத்துக் கணிப்பு.

Tuesday, July 21, 2009

பேரன் பொறந்தாச்சு - V

V - மதுரைல TNSTC அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர். மதுரை to சென்னை பஸ் ஓட்டுறது TNSTC டிரைவர்களுக்கு ஒரு கெளரவம். மதுரை - சென்னை டூட்டி பாக்குற டிரைவர்கள்ல நம்மாளு Vயும் ஒருத்தர்.

முனியப்பன், முன்னால சென்னைக்குப் போகும்போது V- டூட்டில போவார். போற வழில டிரைவர் கண்டக்டருக்கு ஓட்டல் சாப்பாடு ஃப்ரீ. முனியப்பன் V கூடப் போறதால டிரைவர் கண்டக்டர் பகுதில ஒக்காந்து அவங்களோடு சாப்பிடுவார். முனியப்பன் மதுரை ரிட்டர்னும் V கூடத்தான். முனியப்பன் தங்கியிருக்க ரூமுக்கே வந்து முனியப்பனைக் கூப்பிட்டுப் போவார் V.

Vக்கு வாரத்துக்கு 2 டூட்டி. மதுரைலருந்து சென்னை போக ஒரு நாள். நைட்ல பஸ்ஸ ஓட்டிட்டுப் பகல்ல தூக்கம். ஒரு டூட்டிங்கறது 2 நாள். Vக்கு வாரத்துக்கு 2 டூட்டி - 4 நாள் வேல. மீதியெல்லாம் ரெஸ்ட். நடுவுல வேற ஏதாவது ஒரு வண்டி OT (Over Time) பாப்பாரு. வண்டிலருந்து டூட்டிய முடிச்சு மதுரைல எறங்கிட்டா தண்ணி தான். டூட்டில தண்ணிய தொடமாட்டாரு.

தண்ணி அடிக்கிறதுக்கு ஏதாவது வரணுமில்ல. Vக்கு சுகர் வந்துருச்சு. "தண்ணிய நிப்பாட்டுங்க. Diabetesக்கு ஆகாதுன்னு" முனியப்பன் என்ன சொன்னாலும் கேக்க மாட்டாரு V. தலை வெடிச்சுரும்ல. 200ல ஆரம்பிச்ச Blood Sugar 400க்குப் போயிருச்சு.

வாழ்க்கை எப்பயும் ஒரே மாதிரி ஓடிக்கிட்டிருக்காது. Twist & Turn வரும்ல. அது Vக்கும் வந்துச்சு. V மகனுக்குக் கல்யாணம் முடிஞ்சு பேரன் பொறந்தாச்சு. பேரன் சென்னைல. V மதுரைல. சென்னைக்கு டூட்டில போற V, பேரனைப் பாக்காம எப்படி வருவாரு? பேரனைப் பாத்து கொஞ்சிட்டுத்தான் வருவார்.

ரொம்ப நாள் கழிச்சு V முனியப்பனைப் பாக்க வந்தாரு. V யோட மூஞ்சி தெளிவாயிருந்துச்சு. "என்ன திடீர்னு மாற்றம்" அப்படின்னு கேட்டதுக்கு V சொல்றாரு - "இப்பல்லாம் தண்ணியடிக்கறதுல அளவைக் கொறைச்சாச்சு. பேரனப் பாக்கப் போகும் போது சிகரட்டும் அடிக்கிறதில்ல."

6 மாசப் பேரனுக்கு தண்ணி வாட, சிகரட் வாட ஆகாதாம். ஆளப் பாருங்க, இளம் தளிரின் வரவு Vக்குள்ள எவ்வளவு மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கு பாருங்க... பேரனுக்காகத் தண்ணிய, சிகரட்ட V கொறைக்க ஆரம்பிச்சிருக்காரு. சீக்கிரமா totalஆ நிப்பாட்டிருவாருன்னு நம்புவோமாக.

Saturday, July 11, 2009

அப்பா உன்னிடம் படித்தது

பாடத்தில் படிக்காமல்
பழக்க வழக்கங்களை உன்னிடம் படித்தேன்.

செய்தி வாசிக்க
சொல்லிக் கொடுத்தாய்
உடல் நலத்துக்கும் உறுதியான
உடம்புக்கும் உன் குறிப்புகள்
உணவுக்கும் உன் குறிப்புகள்
உடை, உடல் சுத்தத்துக்கும் உன் குறிப்புகள்

மன உறுதிக்கும் மன மகிழ்ச்சிக்கும்
மன நிறைவுக்கும் உன் குறிப்புகள்
ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தாய்
ஒழுக்கத்தால்

அன்பு, அறிவு, பண்பு
அனைத்தும் கற்றுக் கொடுத்தாய்
சாதி பார்க்காமல்
சமத்துவம் பழகியவன் நீ

பெரியவர்களை மதிக்க வைத்தாய்
பெருந்தன்மையுடன் நடக்க வைத்தாய்
அடுத்தவனை அடக்கி ஆளாமல்
அனைவரையும் மதிக்கப் பழகினாய்

அகந்தை ஆணவம்
அண்டவிட வில்லை நீ
யாருக்கும் அடி வருடாமல்
எவருக்கும் அஞ்சாமல்
தவறு செய்யாமல் வாழ
தலைநிமிர்ந்து நடக்க வைத்தவன் நீ

சுதந்திரக் காற்றை சுவாசிக்க
சுதந்திரமாக உலா வர
சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுத்தாய்
சுடர் விளக்கான நீ

தியாகத்தையும் உன்னிடம் கற்றேன்
தியாகத்தை நீ எங்கே கற்றாய் .......... ?

Sunday, July 5, 2009

ஒத்த யானையும் 70 பேரும்

முனியப்பனின் பாட்டையா, தாத்தா மூணார்ல பொழைச்சவங்க. அப்ப எடம் வாங்கிப் போட்டு ஏலக்கா தோட்டம் உண்டாக்குனாங்க. அந்தக் காலத்துல மூணாறுக்குப் பஸ் வசதி கெடையாது. போடிலருந்து நடந்தே போகணும். அப்படி மலைல, காட்டு வழியா போகும்போது யானைய cross பண்ண வேண்டிய சூழ்நிலைகள் வரும். முனியப்பன் சின்னப்பிள்ளையா இருக்கறப்ப, முனியப்பனின் அப்பா யானைக்கதை சொல்லுவார்.

தாத்தா சம்பாதிச்ச ஏலக்கா தோட்டத்துல முனியப்பனுக்கு ஒரு பங்கு இருக்கு. அதப் பாக்க வருஷத்துக்கு ஒரு தடவை மூணார் trip உண்டு. அப்படிப் போகும் போது காட்டு யானையப் பாக்க, முனியப்பன் கெளம்பிப் போயிருவார். மூணார்ல, காட்டு யானைய கண்டிப்பா பாக்க சான்ஸ் உள்ள எடம்; மாட்டுப்பட்டி டேமுக்கு மேல, எக்கோ (ECHO) பாயிண்டுக்கு முன்னால, டைம் - காலைலன்னா 7 மணிக்குள்ள சாயங்காலம்னா 5.30 மணிக்கு மேல. இந்த டைம்ல டேம்ல தண்ணி குடிக்க யானை வரும். அந்த டயத்தை கணக்குப் பண்ணி முனியப்பன் அங்க போயிருவார்.

போனவருஷம் அங்க போனப்ப, ஒரு நல்ல சைஸ் ஆண் யானை தனியா நின்னு புல்லு தின்னுகிட்டிருந்துச்சு. ஒத்த யானை.. அந்த வழியா ரோட்ல ஜீப்ல, கார்ல போனவங்கள்லாம் "டேய், யானை நிக்குதுடா"ன்னு வேடிக்கை பாக்க கூடிட்டாங்க. வேடிக்கை பாத்த 70 பேர்ல முனியப்பன் அமர், அஷீவோட இருக்கார். யானை பள்ளத்துல இருக்கு ! வேடிக்கை பாக்க வந்த மக்கள்லாம் மேட்ல, ரோட்ல யானைக்கும் மக்களுக்கும் 100 மீட்டர் இடைவெளி.

வேடிக்கை பாக்க வந்த எளவட்டப் பயலுக 6 பேர், கொஞ்சம் கீழே எறங்கி "உஸ்"னு சவுண்டு கொடுத்தாங்க. அமைதியா மேஞ்சிகிட்டிருந்த யானை, சத்தம் கேட்ட ஒடனே disturb ஆயிருச்சு. ஒத்த யானை, அதுவும் ஆம்பளப் பய கொஞ்சம் கோபப்பட்டு, 4 ஸ்டெப் எடுத்து வச்சுச்சு. அவ்வளவு தான். கீழே எறங்கி நின்ன 6 பேரும் திடுதிடுன்னு மேல ஏறிட்டாங்க. வேடிக்கை பாத்த மக்கள்லாம் ஜீப், கார்னு ஏறிப் பறந்துட்டாங்க. முனியப்பனும் அஷீ, அமர கூப்பிட்டுகிட்டு மேல ஏறி கார் கதவத் தெறந்து எஸ்கேப் ஆக ரெடியாயிட்டார். எல்லாம் கண நேரத்துக்குள்ள (fraction of a second).... 55 பேர காணோம்.

ஆட்கள்லாம் ஓடின ஒடனே யானை அமைதியாகி மறுபடியும் புல்லு திங்க ஆரம்பிச்சிருச்சு. மறுபடியும் பிள்ளைகளுக்கு யானைய காமிச்சிட்டு கெளம்புனாரு. ஒத்த யானையோட காணொளி 3 பிரிவா இருக்கு. 1. புல்லு திங்கற யானை 2. 4 ஸ்டெப் வக்கிறது 3. அமைதியாகி நிக்கிறது. 4 ஸ்டெப் வைக்கும் போது யான மொகத்துல தெரியற கோபத்தப் பாருங்க.



யானை மனுஷனைப் பாத்தா 3 விதமான policyய கடைப்பிடிக்குது. 1. Safe zone 2. Attack zone 3. Ready zone 4. Safe zone; இதுல மனுஷன் நம்மள ஒண்ணும் செய்ய மாட்டான்னு யான அமைதியா அது வேலயப் பாத்துக்கிட்டிருக்கும். Attack zoneல மனுஷன் பொல்லாதவன் அவனைப் பிச்சிப்புடுவோம்னு attack பண்றது. Ready zoneல மனுஷன் நம்மகிட்ட வந்தாலும் வருவான், எதுக்கும் attack பண்ண ரெடியா இருப்போம்னு மனுஷன் மேல ஒரு கண்ண வச்சிக்கிட்டு புல்லு திங்கறது.

வேடிக்கை பாத்த 70 பேரையும் ஒத்த யானை attack பண்ண ready ஆகி, பெறகு பொழைச்சு போகட்டும்னு விட்டுருச்சு. Close Shave அப்படிம்பாங்களே Narrow escape - அது மாதிரி இல்லைன்னாலும் ஒரு பயம் கலந்த யானை அனுபவம் புதுமை.

Sunday, June 28, 2009

கொடியவள் நீ ...

காதல் என்றால் என்ன என்றவனை
காதல் வலையில் வீழ்த்தி காதலுக்கு
முகவுரை எழுதியவளும் நீ
முடிவுரை எழுதியவளும் நீ

கரம்பற்றி கைகோர்த்தது
கைவிடவா....?

நீ கவிழ்த்தது கப்பலை அல்ல
என் இதயத்தை
சிதறு தேங்காய் போல்
சிதறியது என்மனக் கோட்டைகள்

நீ வளர்த்த காதலை
நீயே தகர்த்த கொடியவள் நீ

என் இதயத்தை
ஏன் ரணகளமாக்கினாய் ... ?

காதலிக்க ஒருவன்
கைப்பிடிக்க ஒருவன்
நீயும் ஏன்
பத்தோடு பதினொன்றாகிப் போனாய்....?

Monday, June 22, 2009

Table Tennis காலங்கள்

முனியப்பன் டேபிள் டென்னிஸ் விளையாடப் பழகுனதே ஒரு தற்செயலான நிகழ்ச்சி. முனியப்பன் காலேஜ்ல இருந்து ஒதுக்கி வச்சிருந்தாங்க. சேட்டைக் காரனை என்ன செய்வாங்க. Suspension தான். அப்ப சும்மா இருக்க காலத்துல, காலேஜ் டேபிள் டென்னிஸ பிளேயர் ஒருத்தர் அடிஷனல் ஸ்டூடண்டா இருந்தாரு. ரெண்டு பேரும் பிரண்ட்ஸா, பொழுது போகணும்ல முனியப்பனுக்கு Table Tennis விளையாட சொல்லிக்குடுத்தார்.

அப்ப நெல்லை மருத்துவக் கல்லூரில, ஸ்போர்ட்ஸ் டே வந்துச்சு, inter class தான். முனியப்பன் அவர் classmateடோ ட கல்லூரி விளையாட்டு விழாவுக்காக கொஞ்சம் seriousஆ அதிக நேரம் பிராக்டிஸ் பண்ணாங்க. லேடிஸ் வேற Table Tennis வெளையாடலாம்னு முடிவு பண்ணி அவங்களுக்கும் போட்டின்னு அறிவிச்சாங்க.

முனியப்பனே அரைகுறை. இதுல அவர் பேட்ச் லேடி ஒருத்தருக்குTable Tennis வெளையாட பழகிக் கொடுத்தார். எல்லா கிளாஸ்லயும் miss world மாதிரி ஒரு அழகி இருப்பாங்கள்ல, "clean beauty" வகுப்பு அழகி அவங்க தான். முனியப்பன் கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டாங்க.

வகுப்பு அழகியோட முனியப்பன் Table Tennis வெளையாடுற நியூஸ் மாணவர்கள் மத்தில தீயாப் பரவிருச்சு. ரெண்டு பேரும் எப்படா வெளையாடுவாங்கன்னு தேடி வந்து பாக்க ஒரு குரூப். வகுப்பு அழகிய பின் தொடர்பவர்கள் (followers) ஒரு குரூப். One side love (ஒரு தலைக் காதல்) உள்ளவங்க ரெண்டு பேர், அவன்ங்களுக்கு தொணைக்கு 2 பேர், நாலு பேரும் முனியப்பன் வகுப்பு அழகி வெளையாடும் போது, பந்து பொறக்கி போட வந்துருவாய்ங்க.

ஒரு 15 நாள், செம ஜாலி "முனியப்பன் நேரத்தைப் பாருடா"ன்னு அவிங்களுக்கு முனியப்பன் மேல பொறாமை வேற. அவனுகளைப் பாக்கப் பாக்க முனியப்பனுக்கு சிரிப்பா வரும். சிரிப்ப அடக்காம முனியப்பன் சிரிச்சிருவார். அவனுகளுக்கு ஒரு மாதிரி ஆயிரும். ஒரு lady முன்னாடி nose cut பண்ணா feeling அவனுகளுக்கு வந்துரும்.

Sports dayம் வந்துருச்சு. முனியப்பனும் அவர் நண்பரும் ஆண்கள் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று வின்னர். முனியப்பன் நண்பர் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தோல்வி. மகளிர் பிரிவில் நம்ம வகுப்பு அழகி இரண்டாவது சுற்றில் தோல்வி.

இரட்டையர் கலப்பு பிரிவில் (mixed doubles) என்னாச்சு ? நம்ம முனியப்பனும் வகுப்பு அழகியும் இறுதி ஆட்டத்தில். இறுதி ஆட்டம்(Finals)னாலே பரபரப்பு தான். ஆட்டத்தைப் பார்க்க ரெண்டு வகுப்பைச் சேந்த 60 பேர் சுத்தி இருக்காங்க. எதிர் தரப்பு ஒரு காதல் ஜோடி. அப்பத்தான் சீரியஸான காதல் ஆரம்பம். முனியப்பனுக்கு எதிர்தரப்பு ஜோடி நெருங்கிய நண்பர்கள். முனியப்பனுக்கு எளகின மனசு. அப்புறம் என்ன நடக்கும் ? போராடி தோக்குற மாதிரி முனியப்பன் தோத்துட்டார்.

60 பேர் முன்னால இறுதி ஆட்டத்துல தோத்தா எப்படி இருக்கும் ? வகுப்பு அழகி அழுததைப் பாக்கணும் அன்னைக்கு, அவங்க கண்ணீரைத் தொடச்சி விட அவங்க தோழி, பந்து பொறக்கி போட வருவாங்களே ரெண்டு பேரு, அவங்க ரெண்டு பேரும் முனியப்பனை எகிறித் தள்ளிட்டாங்க "எப்படிடா தோக்கலாம்னு".

அடுத்த நாள் அந்த இளம் ஜோடி முனியப்பனுக்கு நன்றி சொன்னாங்க. ஜெயிச்சிருந்தா கெடைச்சிருக்கக் கூடிய சந்தோஷத்தை விட, அந்த ஜோடி சொன்ன நன்றி முனியப்பனுக்கு மிகப் பெரிய வெற்றி.

காலேஜ்ல மட்டும் TT வெளையாண்டா போதுமா? Inter College டோ ர்னமெண்ட் வேண்டாமா? அதெப்படி அங்க போகாம இருக்க முடியுமா ?

3 வருஷம் நெல்லை மருத்துவக் கல்லூரிக்காக Table Tennis வெளையாண்டார் முனியப்பன். TT வெளையாட்டெல்லாம் சீரியஸா வெளையாடுறது இல்ல. படிக்கணும்ல, முனியப்பனும், அவங்க டீமும் மேட்சுக்கு முன்னால 10-20 நாள் practice பண்ணுவாங்க. அதுக்கப்புறம் மேட்ச், மேட்ச் முடிஞ்ச ஒடனே படிப்பு.

மொதமொத முனியப்பன் TT மேட்ச் வெளையாட நிக்கிறார். எதிர் அணி மதுரை மருத்துவக் கல்லூரி. எடமும் அதே மதுரை மெடிக்கல் காலேஜ் தான். முதல் எதிராளி மதுரை யுனிவர்சிடி கேப்டன். சிங்கத்தை சிங்கத்தோட கோட்டையில சந்திச்சார் முனியப்பன். வேற என்ன செய்ய? ஸ்ட்ரெய்ட் setல தோல்வி தான்.

முனியப்பனை ஈஸியா ஜெயிச்சரலாம்னு slowவா வெளையாண்ட கேப்டன் எதிர்பார்க்காம முனியப்பன் shot அடிச்சார். Shot அடிச்சுப் பாயிண்ட் எடுத்த ஒடனே TT batஅ TT டேபிள்ல வச்சுட்டு clap பண்ணார் பாருங்க. வேடிக்கை பாக்க வந்த மதுரை மெடிக்கல் மாணவர்கள் அதிர்ந்து, பெறகு சுதாரிச்சு அவங்களும் கைதட்டினாங்க. முனியப்பனை லேசா எடை போட்ட கேப்டன், பெறகு சீரியஸா வெளையாண்டு ஜெயிச்சார். பாய்ண்ட்டே எடுக்க முடியாது அவ்வளவு தான்னு நெனச்ச முனியப்பன் ஒவ்வொரு setலயும் 10,10 பாய்ண்ட் எடுத்தார். முனியப்பன் shotக்கு மக்கள் கைதட்டுனாங்க. எதிராளி கோட்டைல ஒரு ஒரு மறக்க முடியாத கலக்கல்.

படிப்புல கவனம் செலுத்துனதால முனியப்பன் வெளையாட்டுல சீரியஸா எறங்கல. 3 வருஷம் நெல்லை மருத்துவக் கல்லூரிக்காக முனியப்பன் வெளையாண்ட Inter Collegieate மேட்ச் 9. அதுல 3 வின், 6 தோல்வி. ஆனா படிப்புல, 2 பாடத்துல university ஃபர்ஸ்ட்.

1978 - 1980ல டேபிள் டென்னிஸ் வெளையாண்ட ரூமை 1992ல முனியப்பன் பாத்தபோது எடுத்த photo. பசுமையான TT நாட்கள்.