Sunday, September 2, 2012

சாவிய எடுக்கங்குள்ளவாழ்க்கைல வித்தியாசமான நிகழ்வுகள் என்னைக்காவது வரும். 20.06.12ல முனியப்பனுக்கு அப்படி ஒரு சம்பவம்.

முனியப்பன் படிக்கிற காலத்துல 11க்கு அப்புறம் பியூசி. +2 கிடையாது. மதுரை ‡ நாகமலை எஸ்விஎன் காலேஜ்ல முனியப்பன் பியூசி படிச்சார். ஹாஸ்டல் ரூம் நம்பர் 16.

அன்னைக்கு மதியம் அஷூ, அமருக்கு டெய்ரி மில்க் வாங்க ஒரு கடைக்கு வாங்கப் போனார் முனியப்பன். வாங்கிட்டு திரும்பறப்ப டூ வீலர்கிட்ட ஒருத்தர் வந்தார். நீங்க முனியப்பன் தான... வந்தவர் கேக்கவும், முனியப்பன் ஆமான்னார். டாக்டர் தான...அதுக்கும் ஆமாம். என் பேர் ராமசாமி நான் ஒங்க கூட படிச்சேன்னார்.

முனியப்பன் எங்கன்னு கேட்ட ஒடனே நாகமலை காலேஜ்ல ... பியூசி ஹாஸ்டல்ல இருந்தோம் அப்படின்னார். முனியப்பன் ... நான் 16ம் நம்பர் ரூம், நீங்கன்னார்... அதுக்கு ராமசாமி 24 ன்னார். அப்புறம் பரஸ்பர விசாரிப்புகள். தொடர்ந்து ஒன்னச் சொல்லி மிரட்டிட்டார் ராமசாமி.

நீங்க வண்டிய நிப்பாட்டிட்டு போகும் போதே பாத்துட்டேன். வண்டியிலயே சாவிய விட்டுட்டுப் போய்ட்டீங்க. சாவிய எடுத்துட்டு ஒங்க கூட பேசலாம்னு வந்தா, சாவிய எடுக்கங்குள்ள திரும்பிட்டீங்கனன்னார்.... கிசும்புக்கார அன்பு.

ரெண்டு பேரும் சந்திச்சது 40 வரு­ம் கழிச்சு. அதுல முனியப்பன் மூஞ்ச வச்சு கண்டுபிடிச்சது பெரிய விசயம். அந்த நேரமும் சாவிய எடுத்து வச்சுக்கிட்டு பேச நினைச்ச கிசும்பைப் பாருங்க.

Monday, July 16, 2012

பெருச்சாளி தான் கட்டிலை ஆட்டுதுன்ணு - குமார்

11.04.2012ல மதியம் 2 மணிக்கு இந்தோனேசியாவில பூகம்பம்.

அதே சமயத்துல நம்ம மதுரைல பாருங்க ...

குமார் நம்ம முனியப்பன்ட்ட 20 வரு­மா இருக்க ஆளு. மத்தியானம் அவர் வீட்ல கட்டில் ஆடியிருக்கு. கட்டில பெருச்சாளி தான் பிடிச்சு ஆட்டுதுன்ணு நம்ம குமார் நௌச்சுட்டார்.

நடராஜன் ... நம்ம முனியப்பன் கிளினிக்குக்கு அடுத்த வீட்ல இருக்கவர். அவர் வீட்லயும் கட்டில் ஆடியிருக்கு. கட்டிலுக்கு அடியில யாரோ இருக்காங்கன்ணு நௌச்சுட்டார்.

குருவம்மா ... நம்ம செல்வியோட பாட்டி. அவங்க வீட்ல தரையில படுத்திருக்காங்க... தாலாட்டுற மாதிரி ஒரு சொகம்.

இவங்கள்லாம் மதுரைல ஏற்பட்ட நில அதிர்வை வித்தியாசமா உணர்ந்தவங்க.

இந்தோனேசியாவில பூகம்பம், சுனாமி வரப் போகுது, மதுரைல நில அதிர்வு அப்படின்ணு டிவில பாத்து அபார்ட்மெண்ட்ல கட்டில் ஆடின உடனே, வீட்டை விட்டு ஓடி வந்து, அபார்ட்மெண்டுக்கு வெளியே வந்து நின்னவங்க எஸ்.எஸ்.காலணி மற்றும் எல்லீஸ் நகர்ல.

இவங்க அனுபவம் பாருங்க ... வேற மாதிரி ஒரு பயம்... ஒரு பாதுகாப்பு நடவடிக்கை.

குமார், குருவம்மா, நடராஜன் எல்லாம் லைஃப கேசுவலா எடுத்துக்கிறவங்க.

Saturday, May 26, 2012

முனியப்பனின் காதல் கவிதைகள்

ரிட்டயர் ஆகப் போற வயசாச்சு, நம்ம முனியப்பன் கிசும்பைப் பாருங்க ... கவிதை மேடை

தொறந்திருச்சு. காதல் கவிதையா

ஊத்தெடுத்து வருது. கலி காலம்டா சாமி ... கலி காலம்.

காதலுக்கு வயசில்லை சாமியோவ், மனசு தான் எளிமையா இருக்கணும்கிறார் நம்ம

முனியப்பன்.

அவர லூசு பட்டியல்ல சேத்திருவோமா .... ?உன் நினைவுகள்

நாளெல்லாம் உன் நினைவுகள்
நினைக்கும் பொழுதும் சரி

நினைக்காத பொழுதும் சரி
அதிலும்

அதிகாலையில் உன் நினைவுகள்
அற்புதம் அபாரம்
நான் மட்டும்
உன்னை நினைத்து ஏங்க
என்னை நீ அழகாய்
ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்ஏன் வஞ்சிக்கிறாய் ... ?

என் நெஞ்சை
கொள்ளை கொண்டாய்
ஏன் என்று
உனக்குத் தெரியும்
இருந்தும்
பட்டும் படாமல்
இருக்கிறாய் ....

வஞ்சித்து விடாதே வஞ்சியே
வஞ்சித்தாலும் வாழ்வேன்
உன் நினைவோடு ....


கவிதை மடை

கவிதை மடையை திறந்த
களவாணி சிறுக்கியே
கவிதைகள்
காட்டாறாய்ப் பாயப் போகின்றன
கவிதைகள் உனக்காக - உன்
கன்னத்தில் விழும் உனக்காக
ஏமாற்றிப் பார்க்காதே
ஏமாற்றவும் விட மாட்டேன்

கவிதையில் உன்னை
கவிழ்த்தி விடுவேன்
கண்டிப்பாக நீ என்
கவிதை வலையில் வீழ்வாய்
கவிதையால் உன்னை
கட்டிப் போடுவேன் உறுதியாக ....


கிட்ட வா

உன் கண்ணில் ஒரு நாணம்
உன் உதட்டில் ஒரு கோணம்
உன் முகத்தில் ஒரு பாவம்
உன் கழுத்தில் ஒரு வெட்டு
தள்ளி நின்று
தவிக்க விடுகிறாய்
எட்ட நின்று
ஏங்க வைக்கிறாய்
கிட்ட வா
கட்டிக்க அல்ல
உன் அருகாமை
என் உள்ளத்திற்கு
எனக்கு சார்ஜ் ஏற்ற
என்று வரப் போகிறாய்...?


உன் பதில் என்ன ...?

சொல்ல வேண்டியதை
சொல்லியாச்சு
உன் மனமறிந்துதான்
கவிதை மழை
உன் பதில்
என் வாழ்வை வளமாக்கிடும்
நல்ல பதில் வரும் வரை
நான் விடுவதாயில்லை
கவிதை மழை பொழிய
காற்றாய் கரையும் உன் மனசு


தூக்கமில்லை உன்னால்

இரவெல்லாம் உன் நினைப்பு
இரவினில் தூக்கமில்லை
உருண்டு புரண்டாலும்
உருள உருள உன் நினைப்புத் தான்

கண் அயரும் போது
காலை 4 மணி
கண் முழிக்கும் போது
காலை 5 மணி
காரணம் என்ன ?
கண்டுபிடிக்காமல் விடுவதா
யோசிக்க யோசிக்கப் புரிந்தது
இராத் தூக்கம் தொலைந்தது
இரவு நேரத்து கொசுக்கடி


என் தேவை

என் கண்ணில் தெரியும்
உன் முகம்
என் நெஞ்சில் தெரியும்
உன் இதயம்
உனக்குத் தெரியாதா ...?
உண்மையான என் அன்பு
தெரிந்தும்
தெரியாதது போல்
புரிந்தும்
புரியாதது போல்
நீ நடிக்கும்
நாடகத்தை நிறுத்து நங்கையே

தேவைகள் எனக்கு
தேவதையே அதிகமில்லை
சின்ன சின்ன டச்சிங்
சில பொழுதுகள் மட்டும்
உன் விரல்களில் ... என் விரல்கள்
உன் இடுப்பில்
என் கை இப்பொழுது

இதுபோதும்
ஏங்க வைக்காதே என்னை
என் உயிரே என் உயிரே

Sunday, May 20, 2012

ஹெல்மெட் தொடர்ச்சி .....

கண்ணப்பன் மதுரை கமிஷனரா இருந்தவர். பிப்ரவரி, 2012ல மதுரைல டூவீலர் ஓட்டுற போலீஸ் எல்லாரும் தலைல ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்ட விட்டார். பிப்ரவரி 29ல இருந்து ஹெல்மெட் போடாம டூவீலர் ஓட்டுற பொது ஜனத்தை பிடிச்சு ஃபைன் போட ஆரம்பிச்சாங்க. மார்ச் 5ந் தேதிக்குள்ள மதுரைல டூவீலர் ஓட்டுற எல்லாரும் தலைல ஹெல்மெட் மாட்டிட்டாங்க.

எங்க பாத்தாலும் ஹெல்மெட் தலை தான். ஹெல்மெட் போடலைன்னா போலீஸ் பிடிக்கும்... அப்புறம் ஃபைன் ... இப்படியே ஏப்ரல் 15 வரைக்கும் ஓடுச்சு. கண்ணப்பன் ஐபிஎஸ் மதுரைல இருந்து டிரான்ஸ்பர் வாங்கிட்டுப் போனார். இப்ப யாரும் ஹெல்மெட் போடுறது இல்ல. போலீசும் பிடிக்கிறது இல்ல. எல்லாமே LAW ENFORCING AUTHORITYய பொறுத்துத் தான்.

Friday, May 11, 2012

நீ மட்டும் ஏன் ஹெல்மெட் போட மாட்டேங்குற - அமர்

இப்ப தலையில ஹெல்மெட் மாட்டிக்கிட்டுத் தான் டூவீலர் ஓட்டணும்னு ஒரு ரூல் போட்டு, பிப்.29ம் தேதில இருந்து ஹெல்மெட் போடாம டூவீலர் ஓட்டுறவங்களை பிடிச்சு ஃபைன் போடுறாங்க.

நம்ம முனியப்பன் ஹெல்மெட் போடாம டூவீலர்ல போற ஆள். பயண தூரம் 1 கி.மீ. தான். அதுக்குப் போய் எதுக்கு ஹெல்மெட்டு. பிடிக்கிற போலீஸ் சரக (லோக்கல்) போலீசா இருந்தா முனியப்பன் டூவீலர்ல வந்தா விட்டுருவாங்க. பிடிக்கிற போலீஸ்ல இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, ஏட்டையா இல்லன்னா பிசி இப்படி முனியப்பன்கிட்ட ட்ரீட்மெண்ட் பாக்க வர்றவங்க.

டிராஃபிக் போலீஸ் டீமா வந்து பிடிப்பாங்க. அப்புறம் முனியப்பன் ஹெல்மெட் போடமாட்டார். சைட் ரோட்ல போயிடுவார். நேரா போயிரலாம். அப்புறம் அவுக கிட்ட நிக்கணும்.

இப்ப காலைல டென்னிஸ் வெளையாட அமர், அஷுவை முனியப்பன் எட்வர்ட் ஹாலுக்கு கூப்பிட்டுப் போறார். வழக்கம் போல ஹெல்மெட் போடாமத் தான். எல்லாரும் தலைல ஹெல்மெட் மாட்டிக்கிட்டு டூவீலர்ல போறாங்க. இவன் மட்டும் ஹெல்மெட் போடாம ஓட்டுறான் அப்படின்னு அமர் மனசுக்குள்ள இப்படி ஒரு சிந்தனை ஓடியிருக்கு. இன்னைக்கு முனியப்பனை நேராவே கேட்டுப்புட்டான் அமர்.

நீ மட்டும் ஏன் ஹெல்மெட் போட மாட்டேங்குறேன்னு. சின்னப் பையன் கேட்டா ... அவனுக்கு சிம்பிளா பதில் சொல்லணும். முனியப்பன் ஒரே வரில சொல்லி முடிச்சிட்டார். இப்ப ரோட்டுல விக்குற ஹெல்மெட் எல்லாம் வித்து முடிஞ்ச பிறகு யாரையும் போலீஸ் பிடிக்காது அப்படின்னு.

இப்படி ஹெல்மெட் கட்டாயம் போடுங்கறதும், அப்புறம் வேணாங்கிறதும் இன்னக்கி நேத்தா நடக்குது. எம்ஜிஆர் காலத்துல இருந்து 30 வரு­மா இந்த கேலிக்கூத்து நடக்குது.     

Thursday, April 12, 2012

காலை 5 மணி குளியல் - அஷூ

நம்ம அஷூக்குட்டி தூங்கும் போது கூட சட்டை போட்டுத் தான் தூங்குவார். இதுல பொத்திக்கிறதுக்கு கம்பளி வேற.

முனியப்பன் காலைல 6 மணிக்கு அஷூ, அமர எழுப்புறதுக்கு மாடிக்குப் போயிருவார், டென்னிஸ் விளையாடத் தான். இப்ப முழுப் பரீட்சை ஆரம்பிச்சிருச்சு. அதுனால டென்னிஸ் கிடையாது.

இன்னைக்கு 7 மணிக்கு எழுப்பப் போனார், அப்ப அஷூவோட அம்மா, அதான் முனியப்பன் தங்கச்சி சிரிச்சிட்டே சொல்லுச்சு, அஷூ காலைல 5 மணிக்கு குளிச்சிட்டு தூங்குதுன்னு.

அஷூ எந்திரிச்சி வந்த ஒடனே கேட்டப்ப, அஷூவுக்கு குளிச்ச ஞாபகம் இல்லை. மதியம் ஸ்கூல் முடிச்சு வந்த உடனே கேட்டப்ப எனக்கு தெரியாதுன்னு சொல்லி முடிச்சிட்டார்.

இப்பல்லாம் பவர்கட் காலைல 6 மணியில் இருந்து இரவு 12 மணிக்குள் 7 - 8 மணி நேரம். இரவு 12 மணியில் இருந்து காலைல 6 மணிக்குள்ள 3 தடவை 3 மணி நேரம். பகல்ல கரண்ட் கட்டானா வெக்கையத் தணிக்க இளநீர், தண்ணீர் பழம், ஐஸ் கிரீம் இப்படி சாய்ஸ்ல நிறைய இருக்கு.

இரவு பவர் கட்ல வெக்கை தாங்கமுடியாம அஷூ என்ன செய்வார்? அவருக்குத் தெரிஞ்ச ஐடியா குளியல்.

தமிழ்நாட்ல உள்ள பிள்ளைகளோட தவிப்பு இது.

Thursday, March 15, 2012

டேய் தம்பி - ஹாட் சிப்ஸ்ல் அமர்

அமர் டென்னிஸ் விளையாட ஆரம்பிச்சு 10 மாசம் ஆகுது. அமர் 10 வயசு 6 மாச பையன் தான். நடு நடுல மேட்ச் ஆட போயிருவார். அவர் படிக்கிற ஸ்கூலுக்காக 3 மேட்ச் ஆடியிருக்கார். ஓபன் டோர்னமெண்ட் 2 ஆடுனார். இப்ப ஸ்டேட் ரேங்கிங் டோர்னமெண்ட் 2 ஆடிட்டார். பொங்கல் டயத்துல சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ, இப்ப 25, 26ல சென்னை ஜெயின் காலேஜ்ல.

அமருக்கு மேனேஜர், பாடி கார்டு நம்ம முனியப்பன் தான். ஸ்டேட் ரேங்கிங் டோர்னமெண்ட் ஆடுறதுல ஒரு சிறப்பம்சம், வெளையாட வர்ற பயலுவ 3 வரு­மாவது ஆடுற பயலாத்தான் இருப்பான். அவனுகளோட மேட்ச் விளையாடும் போது தான் விளையாட்டு நல்லா ஷேப் ஆகும். அமர் சின்னப் பையன்கிறதால முனியப்பன் அமர்கிட்ட சொல்லியிருக்கார். 2012 பூரா தோத்தாலும் பரவாயில்லை, ஸ்கோர்ல முட்டை மட்டும் வாங்கக் கூடாது. பாயிண்ட் எடுத்துத் தான் தோக்கணும். இப்ப ஜெயின் காலேஜ்ல 3 - 8, 5 - 8னு தான் அமர் தோத்திருக்கார். அமர் விளையாடுற category அண்டர் 12 மற்றும் அண்டர் 14.

இப்ப ஜெயின் காலேஜ் டோர்னமெண்ட் விளையாட போனப்ப, பிப்.24, 25, 26, 27ல சாப்பாடு காரப்பாக்கம் ஹாட் சிப்ஸ் ஹோட்டல்ல தான். மொத தடவை சாப்பிடப் போறப்ப, அமர் அவர் உடம்பை நெளிச்சு ஆடிக்கிட்டே போய் சாப்பாடு டேபிள்ல உட்கார்ந்தார். அதப் பாத்து அந்த ஓட்டல்ல டேபிள் கிளீன் பண்ற பொம்பள பிள்ளை சிரிச்சுகிட்டு அமர் பக்கத்துல வந்திருச்சு.

"அக்கா, அந்த டேபிளை கிளீன் பண்ணுங்க" அப்படின்னு சொன்னதும், பக்கத்து டேபிளை கிளீன் பண்ணிட்டு அமர் கூட பேச ஆரம்பிச்சிருச்சு. அமர் கூட இன்னொரு பையன் பிரின்சும் முனியப்பன் கூட வந்திருந்தார். பிரின்சும், அமரும், அந்தப் பிள்ளையும் பேசுனாங்க. இந்தப் பிள்ளை பேசுதுன்னு இன்னும் ரெண்டு பிள்ளைகளும் அந்தக் கலாய்ப்புல கலந்துகிட்டாங்க.

3 கிளீனர்களும், அமரும், பிரின்சும் அங்க சாப்பிடப் போறப்ப எல்லாம் சிரிப்புத் தான். 3 பிள்ளைகளும் அமர டேய் தம்பின்னு தான் கூடும். அமர், பிரின்ஸ், 3 பிள்ளைக சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கும் போது முனியப்பன் அவங்களை தொந்தரவு பண்ண மாட்டார். அக்கா - தம்பி பாசம் 3 நாளு பொங்கி வழிஞ்சிச்சு. 26ம் தேதி நைட் சாப்பிடப் போனப்ப அமர், நாங்க 27ம் தேதி கிளம்புறோம்னு சொல்லவும் 3 பிள்ளைகளுக்கும் தாங்க முடியல.

டேய் நாளைக்கு நாங்க லீவுடா, அன்னைக்கு நைட் சாப்பிட்டு கெளம்பினப்ப 3 பிள்ளைகளும், ஒன்னா நிண்ணு அமர், பிரின்சுக்கு டாடா சொல்லிச்சுக. அதுல ஒரு பிள்ளை டேய் தம்பி நாளைக்கு எனக்கு லீவுன்னாலும், உன்னைப் பாக்க காலைல வருவேன்னு சொல்லி, அதே மாதிரி 27ந் தேதி காலைல அமர், பிரின்ச பாக்க வந்துருச்சு.

சமுதாயத்தில் அடித்தட்டு மக்களோட பாசம் அலாதியானது. அந்தப் பிள்ளைக நாங்க கஸ்டமர் யார்க்கிட்டயும் பேசமாட்டோம்மா, ஒங்கிட்டதான் இப்படி சிரிச்சுப் பேசறம்னு அமர்கிட்ட சொல்லுச்சுக. Machine மாதிரி ஓடிட்டிருந்த 3 பிள்ளைகளுக்கும் முகத்துல ஒரு மலர்ச்சி அமரப் பாத்து.

பாசம்கிறது காசு குடுத்து வாங்குறது இல்ல. இந்த மாதிரி தன்னால வரணும்.