Tuesday, January 26, 2010

கங்கண சூரிய கிரகணம்

ஜனவரி 15 ஆம் தேதி மத்தியானம் எல்லாரும் சூரிய கிரகணம் பார்த்திருப்போம். ரொம்ப நல்லா தெரிஞ்சது. முனியப்பனுக்குத் தோதான மதியம் 1.20 மணிக்கு முழு சூரிய கிரகணம்.

எல்லாரும் பாத்ததப் போய் ..... அப்படின்னு நௌக்கிறீங்களா

எல்லாரையும் போல் எக்ஸ்ரே வச்சு பாத்தது முனியப்பன் குடும்பம். ஆனா அவங்க வீட்ல தரைல நிழலா விழுந்தது சூரிய கிரகணம். வெள்ளை வளையம் சூரியன், கருப்பு வட்டம் சந்திரன். போட்டோ எடுத்தது அஷிவோட அண்ணன் அமர். கேமரா பானசோனிக் டிஜிட்டல்.

விண்வெளி அதிசயம் முனியப்பன் வீட்டுத் தரையிலும் தெரிந்தது தான் அதிசயம்.

Thursday, January 14, 2010

பத்து மாதம் வயித்து வலி

வித்தியாசமான நோயாளிகள் முனியப்பனைப் பார்க்க வருவார்கள்


டிசம்பர் 15, 2009 இரவு 9.15 மணிக்கு முனியப்பன் கன்சல்டிங் ரூமில் ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவசரமாக ஒரு 45 வயசுப் பெண்மணி முனியப்பனின் ரூமிற்குள் நுழைகிறார். "மகளுக்கு முதல் குழந்தை பிறந்து பத்து மாசம் ஆச்சு. இன்னும் பீரியட்ஸ் வரலை, இப்ப வயித்த வலிக்குதுங்குறா, உள்ள படுக்க வச்சிருக்கேன்" அப்படிங்கிறார்.

முனியப்பன் வேறொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததால், தனது ஆஸ்தான உதவியாளர் வள்ளியை அழைத்து என்ன என்று பார்க்கச் சொல்கிறார். வள்ளி பரிசோதிக்கப் போன வேகத்தில் திரும்பி வர்றார். வந்து "சார் மாசமா இருக்கு சார்"னு சொல்கிறார். முனியப்பன் வள்ளி கிட்ட வலிக்கு ஊசியப் போடுன்னுட்டு நோயாளியோட தாயாரைக் கூப்பிட்டு "ஏம்மா, ஒன் மக மாசமா இருக்கது ஒனக்குத் தெரியலையா? போய் லேடி டாக்டரைப் பாருங்கம்மான்னு" சொல்றார்.

வள்ளி ஊசி போட்டு வந்துர்றார். நோயாளியப் போய் "மாசமா இருக்கது ஒனக்கு எப்படி தெரியாது"ன்னு கேட்க முனியப்பன் கெளளம்பி போறார். வள்ளியும் துணைக்குப் போறாங்க. பெண் நோயாளிய ஆண் மருத்துவர் பரிசோதிக்கும் போது பெண் உதவியாளர் கூட இருக்கணும். இது தொழில் நியதி. சூடா ஒரு வார்த்தை கேட்டுட்டு பரிசோதிப்போம்னு போன முனியப்பனுக்கும், வள்ளிக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி. குழந்தையோட தலை வெளியே வந்துருச்சு, பிரசவம் ஆரம்பிச்சுருச்சு. என்ன செய்றதுன்னு தெரியாம இந்த மாதிரி மாட்டிக்கிடற சூழ்நிலைகள் வரும். பிரசவத்துக்கான உபகரணங்கள் இல்லை. பிரசவம் நடக்குது, என்ன செய்றது? மருத்துலவ ஆலோசனைக்கு 7 நோயாளிகள் வெயிட்டிங்.

சிக்கலான சூழ்நிலைல தான் முனியப்பனின் மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்யும். முனியப்பன் வள்ளியோட பிரசவம் பார்க்க ஆரம்பிச்சுர்றார். முனியப்பனுக்கு சோதனை வைக்காம பிள்ளை பிறந்திருது. 9.15க்கு வந்த பேஷண்டுக்கு 9.25க்கு பிரசவம். 10 நிமிஷத்துல பிள்ளையோட குவா குவா சத்தம் கேட்டதும், ஆஸ்பத்திரில இருந்த எல்லாருக்கும் ஒரே சிரிப்பு, ஒரு பக்கம் மனசுக்கு சந்தோஷமா இருந்தாலும், அடுத்து செய்ய வேண்டியதை யோசிச்சார் முனியப்பன். பிள்ளை பொறந்துருச்சு, இனி CORD STRUCTURES கட் பண்ணணும். PLACENTA வெளிய வரணும். பிறந்த குழந்தய MECONIUM சுத்தம் பண்ணணும்.

முனியப்பன் வெளில நின்ன ஒரு ஆட்டோல ஏறி பக்கத்துல இருந்த lady டாக்டர் கிட்ட போய் சொன்ன உடனே, அவங்க ஒரு உதவியாளரை அனுப்புனாங்க. முனியப்பன் இல்லாம தாயும் பிள்ளையோட வள்ளி தனியா. வள்ளிக்கு இது புது அனுபவம். முனியப்பன் 7 நிமிஷத்துல ஆளோட திரும்பி வந்துர்றார். அதுக்குள்ள மொபைல்ல வள்ளி "சார் கொடி கழுத்தச் சுத்தி இறுக்கமா இருக்கு", முனியப்பன் "ஒரு வெரல வச்சு அழுத்தமா பிடி" வள்ளி "பயமாயிருக்கு" முனியப்பன் "பயப்படாத" இப்படி வேற calls.

வள்ளியும் அந்த உதவியாளரும் சேர்ந்து தாயையும், பிள்ளையையும் சுத்தம் பண்ணி, எல்லா வேலையும் முடிஞ்சுருது. தாயும், பிள்ளையும் நலம். இரவு மணி 10.20, 9.10க்கு வயித்த வலியோட வந்த பொண்ணு 10.20க்கு கைல குழந்தையோட. தாயையும், பிள்ளையையும் பேறு காலத்துக்கான அடுத்த கட்ட மருத்துவ கண்காணிப்புக்கு அதே lady டாக்டர்கிட்ட அனுப்பிர்றார் முனியப்பன்.

இதுக்கிடைல, முனியப்பன் கிளினிக் பக்கத்துல உள்ள வீட்டுக்காரங்க, அந்தப் பொண்ணோட சொந்தக்காரங்க அப்படின்னு ஒரு கூட்டம் சேந்துருது. எல்லாரும் அந்தப் பொண்ணோட தாயாரை வைறாங்க "மக வயிறு வீங்கியிருக்கு, மாசமா இருக்கது ஒனக்கு எப்படி தெரியாம போச்சு"ன்னு.

இதுக்கெல்லாம் காரண கர்த்தா அந்தப் பொண்ணோட ஆம்படையான் இப்ப வர்றான். கோவிலுக்கு மாலை போட்டிருக்கான். முனியப்பன் அவனைக் கோபமாகவே கேட்கிறார், "ஏம்ப்பா ஒன் பொண்டாட்டி மாசமா இருக்கது ஒனக்கு எப்படிப்பா தெரியாம போச்சு" அதுக்கு அவன் "சாமி, நான் ஒண்ணும் செய்யலை, மாலை போட்ருக்கேன் சாமி" அப்படின்றார். முனியப்பனுக்கு கடுப்பாயிருது "எலேய் நீ இப்ப தாண்டா மாலை போட்ருக்கே " அப்படின்றார்.

ஒரு பொண்ணு மாசமாயிருக்கது அந்தப் பொண்ணுக்கோ, தாயாருக்கோ, வீட்டுக் காரனுக்கோ எப்படி தெரியாம இருக்கும் ? முழு கர்ப்பத்தை எப்படி மறைக்க முடியும் ?.

பொங்கல் வாழ்த்து

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Friday, January 1, 2010

இலவச அறிவிப்பு - நன்மை தீமைகள்

மக்களை மயக்கும் இலவச அறிவிப்புகளும், நன்மை தீமைகளும்

மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் நன்றாக இருந்தால் தான் அரசு நன்றாக இருக்கும்.

"வரப்புயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயரக் கோன் உயரும்" - இது சங்க காலத்திலிருந்து இன்று வரை உள்ள நடைமுறை. தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதுக்கும் உள்ள உண்மை. மக்களின் அடிப்படைத் தேவைகளை உணராத, கவனிக்காத அரசுகள் வீழ்ந்தது, வீழ்வது கண்கூடு.

மற்ற நாடுகளில் எல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனித்து, மக்கள் தாமே முன்னேற வழி செய்கின்றனர். தமிழகத்தில் மட்டும் ஏன் இவ்வளவு இலவசங்கள் அரசியல்வாதிகளால் வாரி வழங்கப்படுகின்றன.. ? ஆட்சிக்கு வரவேண்டும், கிடைத்த ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் - இது அரசியல்.

இலவசங்கள் இல்லாத இடமே இல்லை எனும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் இலவசம். அவ்வளவு இலவசங்கள். எனக்குத் தெரிந்தவரை உள்ள இலவசங்களையும் அவற்றின் நன்மை தீமைகளையும் அலசி இருக்கிறேன்.

I. கல்விக்கான இலவசங்கள்

பெருந்தலைவர் காமராசர் தமிழக முதல்வராக இருந்த பொழுது, பள்ளி நேரத்தில் வெளியே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை "ஏன்பா படிக்கப் போகலையா ?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவன் "படிக்கப் போனா சாப்பாடு யார் போடுவாங்க ?" என்று காமராசரிடம் திருப்பிக் கேட்டிருக்கிறான் அந்த சிறுவன். பிள்ளைகள் பள்ளிக் கூடங்களில் சேர்வதற்கு முன்வராத காரணம் சாப்பாடு பிரச்சினைதான் என்று உணர்ந்த காமராசர், பிள்ளைகள் படிக்க,
பள்ளிக்கூடத்துக்கு வந்து கல்வியறிவு பெற வேண்டும், எல்லோரும் கல்வியறிவு பெரும்பொழுது நாடு முன்னேறும் என்பதற்காக ஆரம்பித்த திட்டம் தான் அரசுப் பள்ளிக் கூடங்களில் இலவச மதிய உணவு. இலவச கல்வி, இலவச தங்கும் விடுதி ஆகியவற்றை மாணவர்கள் படித்து கல்வியறிவு பெற காமராசர்
ஆரம்பித்தார்.

சத்துணவு :

முதலில் சாதம், குழம்பு, கீரை, ஒரு காய் என எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் வளர்ச்சியடைந்து தற்பொழுது சத்துணவாக
வழங்கப்படுகிறது. சாதம், பயறு, வாரம் மூன்று முட்டை மற்றும் வாழைப்பழம் என சத்துணவு. இலவசங்களில் இது தான் முக்கியமானது. கல்வி வளர்ச்சி தான் இத் திட்டத்தின் குறிக்கோள். சத்துணவு மேல்நிலை வகுப்பு வரை வழங்கப்படுகிறது.

புத்தகம், நோட்டு :

அரசுப் பள்ளிகள், அரசு மானியம் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள், நோட்டு இலவசம்.

ஸ்லேட் :

1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் சிறார்களுக்கு இலவசமாக ஸ்லேட் வழங்கப்படுகிறது.

இலவசச் சீருடை :

அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை இலவசம்.

பஸ் பாஸ் :

மதிய உணவுத் திட்டத்தைப் போன்றே மிகவும் சிறப்பான திட்டம். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குப் போக்குவரத்துத் துறை மூலம் இலவச பஸ் பாஸ். எந்த ஊரில் இருந்து வேண்டுமானாலும் படிக்கும் பள்ளி உள்ள ஊருக்கு, பள்ளிக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் ஏறிக்கொள்ள, இறங்கிக்கொள்ள பஸ்
பாஸ் இலவசம். கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களில் வந்து படித்துச் செல்லும் மாணவர்களுக்கான சிறப்பான திட்டம். நகரில் உள்ள மாணவர்களும், புறநகரில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று இத் திட்டத்தால் பயனடைகிறார்கள்.

இலவச சைக்கிள் :

11 ஆம் வகுப்பு மாணவர்கள் 11, 12 ஆம் வகுப்பு படிக்க பள்ளிக்குச் சென்றுவர அரசு, அரசு மானியம் பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மிகப்பெரிய குறைபாடு 11 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு முடிந்தபின் அல்லது முடியும் தருவாயில் சைக்கிள் வழங்கப்படுவது தான். ஏற்கனவே வீடுகளில் சைக்கிள் உள்ளவர்கள் இதை ஒரு எக்ஸ்ட்ரா சைக்கிளாக வைத்துக் கொள்கிறார்கள். பிள்ளைகள் படித்து முடித்தபின் அவர்கள் வீட்டு வசதிக்குப் பயன்படுகிறது.

சைக்கிள் தேவை இல்லாதவர்கள் அரசு இலவசமாகக் கொடுக்கும் சைக்கிளை விற்பதும் உண்டு. அவ்வாறு விற்கப்படும் சைக்கிளின் விலை ரூ. 600-800.

கல்வி உதவித் தொகை

ஸ்காலர்ஷிப் எனப்படும் கல்வி உதவித் தொகையும் வருமானம் குறைந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தங்கும் விடுதி

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதி திராவிட மாணவர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவம்.

விளையாட்டு உபகரணங்கள்

நல்ல விளையாட்டு மாணவர்களை ஊக்குவிக்க அந்த மாணவர்கள் சார்ந்த விளையாட்டுக்கான பயிற்சிகள், உபகரணங்கள் இலவசம். ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் எனத் தனியாக விளையாட்டுத் துறையில் மாணவர்களுக்கான விடுதி, விளையாட்டுப் பயிற்சி, உபகரணங்கள், உணவு இலவசம்.

இலவச மடிக்கணிணி

இந்த வருடம் செயல்படுத்தப்பட்ட திட்டம். பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறும் முதல் 1000 மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி.

II. பெண்களுக்கான திட்டங்கள்

பெண்கள் நாட்டின் கண்கள். அவர்களுக்கு இலவசத் திட்டங்கள் இல்லையென்றால் எப்படி ? ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், சூலுற்ற பெண்களுக்கான திட்டம், இரு பெண் குழந்தைகளுக்கான உதவித் திட்டம்.

திருமண உதவித் திட்டம்

மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டம், ஏழைப் பெண்களுக்குரியது. திருமணப் பத்திரிக்கை, மணப்பெண், மணமகன் கையெழுத்து போட்டு மனு
கொடுக்கணும், கிடைக்கும் திருமண உதவி ரூ. 20,000. இந்த 20 000 ரூபாய் வாங்க கிராம நிர்வாக அலுவலர், ஆர்ஐ, தாசில்தார் வகை செலவு ரூ. 2000.

சூலுற்ற பெண்களுக்கு

கர்ப்பமாயிருக்கும் பெண்களுக்கானது இந்த நலத்திட்டம். கருவுற்ற நாளிலிருந்து மருத்துவப் பராமரிப்பு, மாத்திரைகள், பிரசவம் உள்ளிட்ட அனைத்தும் முறையோடு நடக்கிறது. கர்ப்ப கால உதவித்தொகையாக ரூ. 6000 வழங்கப்படுகிறது. அதுக்கு வங்கிக் கணக்குக்கு ரூ. 500. அப்புறம் கிராம நிர்வாக அலுவலர் ரூ.100.

இரு பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 15,200

ரெண்டு பொம்பளப் பிள்ளைக பிறந்து தாய் கருத்தடை பண்ணியிருக்கணும். அந்த பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அரசு நடைமுறையில் உள்ள
திட்டம் இது. ஒரு பெண் குழந்தைக்கு ரூ. 15,200 வீதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ரூ. 30, 400 வங்கியில் வைப்பு நிதியாக பாதுகாப்பாக
வழங்கப்படுகிறது. முதிர்வு காலம் முடிந்தவுடன் பெண் குழந்தைகளின் மேல் படிப்புக்கு அல்லது திருமணச் செலவுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ள
நல்ல திட்டம்.

இந்தத் தொகையைப் பெறுவதற்குச் செலவாகும் தொகை கிராம நிர்வாக அலுவலர் ரூ. 100, காசோலை வந்தவுடன் ரூ.400, சேமிப்பு பத்திரம் பதிய ரூ. 500. ஜெராக்ஸ் வாங்க ரூ.100 ஆக மொத்தம் ரூ.1100 செலவாகும்.

III. அரிசி

தமிழக மக்களோட அடிப்படை உணவு அரிசி. அதுல இலவசம் இல்லைன்னா எப்படி ?

1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி

1 ரூபாய்க்கு 3 படி போடுவோம்னு ஆட்சியைப் பிடித்த கழகத்திலிருந்து வந்த கிட்டத்தட்ட என்ன, இலவசம் தான் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி. 40 வருஷமாச்சு 1 ரூபாய்க்கு 3 கிலோ அரிசி இன்னும் போட முடியலை. அந்தத் தாக்கம் உள் மனசுல இருந்ததால இந்த 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி. இந்த இலவசத் திட்டம் என்ன பாடுபடுது பாருங்க ?

இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்படற அரிசில பாதிய கடத்திர்றாங்க. ரேஷன் கடைல இந்த 1 ரூவா அரிசிய, 6 ரூவாக்கு வாங்கி, ரைஸ்மில்ல பாலீஷ் ஏத்தி வெளிமார்க்கெட்ல 16 ரூவாய்க்கு விக்கிறாங்க. இது தான் அதிகமா நடக்குது. லாரில பிடிபடுற கடத்தல் ரேஷன் அரிசியெல்லாம் சும்மா கண்துடைப்பு.

சரி 1 ரூபா அரிசி வாங்குற ஆளுக என்ன செய்றாங்க ?

1 ரூபா அரிசிய வச்சு சாப்பிட்டு உயிர் வாழ்ற மக்கள் கிராமப்புறங்கள்ல ஏராளம். நகர்ப்புறங்கள்ல, நல்ல அரிசியா இருந்தா சாப்பாடு, இல்லைன்னா ஆடு, மாடு, கோழி, நாய் எல்லாம் எதுக்கு இருக்கு? இந்த 1ரூபாய்க்கு 1 கிலோ அரிசிய வாங்குற பாதிப்பேர் மாட்டுக்கும், கோழிக்கும் உணவாப் போடுறாங்க. 1 ரூபா அரிசி சாப்பிடுற மாடு பால் நெறைய குடுக்குதுன்றாங்க, அது ஒரு ஆராய்ச்சிக்கான விஷயம். நகர்ப்புறங்கள்ல 1 ரூபா அரிசி சாப்பிட்டு கொழு கொழுன்னு இருக்க
நாய்கள் அதிகம். நாய்க்கு 1 ரூவா அரிசி, மனுஷனுக்கு 15 ரூவாய்க்கு மேல உள்ள அரிசி. நம்ம மக்கள் எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க.

முதியோருக்கு இலவச அரிசி

சமுதாயத்தில் வாழும் புறக்கணிக்கப் படுகின்ற முதியோர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டம். மாதம் 10 கிலோ அரிசி இலவசம். மாதம் பொறந்த உடனே ரேஷன் கடைல 4 கிலோ அரிசிய மூன்றரை கிலோவாக் குடுத்துருவாங்க. மீதி 6 கிலோ அரிசிய மாசக் கடைசில வாங்கிக்க பெருசும்பாங்க. மீதி 6 கிலோ அரிசிய எப்படி போடுவாங்க? அவ்வளவு தான். அந்த மீதி 6 கிலோ அரிசி எங்க போகுதுன்னு ரேஷன் கடைக் காரங்களுக்குத்தான் தெரியும்.

IV. உதவித்தொகை

வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு ஆரவற்ற முதியோருக்கு, விதவைப் பெண்களுக்கு, ஊனமுற்றோருக்கு, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, வயது 50ஐக் கடந்து திருமணமாகாத பெண்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித் தொகை மாதம் ரூ. 400.

வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிந்து வைத்திருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் 150 ரூபாயும், பட்டதாரிகளுக்கு 400 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதற்கு கையூட்டு கிடையாது. படித்து வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இது பாக்கெட் மணி - கைச்செலவுக்கு.

ஊனமுற்றோர்

இவர்கள் கண்டிப்பாக உதவித்தொகை வழங்கப்பட வேண்டியவர்கள்

விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை

நமது சமுதாயத்தில் விதவைகள் மறுமணம் ஆகாதவர்களாகத் தான் இருக்கிறார்கள். இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலை, இளவயது, நடுத்தரவயது மரணங்கள் அதிகரிப்பதால் விதவைகள் எண்ணிக்கையும் அதிகம். இவர்கள் உதவிக்கரம் நீட்டி ஆதரிக்கப்பட வேண்டியவர்கள்.

நாகரீக உலகில் கட்டின பொண்டாட்டிய குழந்தை குட்டியோட விட்டுட்டு, இன்னொரு பொண்ணோட எஸ்கேப் ஆகிறவங்க அதிகரிப்பதால், இவர்களும்
பராமரிக்கப்பட வேண்டியவர்கள். உதவிப் பணம் பெற செலவாகும் தொகை 100-500 ரூபாய்.

வயது 50 ஆகியும் திருமணம் ஆகாத பெண்கள்

முதிர் கன்னியாகியும், இல் வாழ்க்கை அமையாத இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் மட்டுமல்ல, உதவிக்கரம் நீட்டப்பட வேண்டியவர்கள். உதவித்தொகை பெற செலவாகும் தொகை கிராம நிர்வாக அலுவலர் வகைக்கு ரூ. 100 - 500வரை.

ஆதரவற்ற முதியோர் உதவித் தொகை

இக் கால நிலையில் வீட்டிலுள்ள முதியோரை கவனிப்பவர்கள் மிகவும் குறைவு. அதிக பட்ச முதியோர்கள் பிள்ளைகள் ஆதரவின்றி தனியாகத்தான் குடி இருக்கிறார்கள். அப்படியே வீட்டில் இருந்தாலும், புறக்கணிக்கப் பட்டவர்களாக பிள்ளைகளின் வசவு மழையில் நனைந்த வண்ணம் தான் வாழ்க்கையை
ஓட்டுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை ஆதரவு இல்லாத, பரிதாபகரமானது.

வேலை செய்ய முடியாமல் உடல் தளர்ந்து இருப்பவர்களை, அரசாங்கம் உதவித் தொகை கொடுத்து உயிரோடு வைத்திருக்கிறது. அரசின் இலவசங்களில் மதிய உணவுக்கு அடுத்து மிகச் சிறப்பான திட்டம் இது தான்.

இந்த 400 ரூபாயை வைத்து சாப்பிடும் முதியோர் ஏராளம். அவர்கள் உயிர் இந்த 400 ரூபாயில் தான்.

இந்த மாதம் 400 ரூபாயை வாங்க நகர்ப்புறங்களில் கிராம நிர்வாக அதிகாரி வகைக்கு ரூ. 100லிருந்து ரூ.500 வரை செலவாகிறது. கிராமப்புறங்களில்
பஞ்சாயத்து தலைவரும், கிராம நிர்வாக அலுவலரோடு கூட்டணி வைத்துக் கொள்கிறார். செலவாகும் தொகை ரூ. 500 முதல் ரூ.2000 வரை.

V. வீடு

மக்கள் குடியிருக்க வீடு வேண்டுமல்லவா. அங்கும் இலவசங்கள் இல்லைன்னா எப்படி ?

1. இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்
2. ஏழைகள் கான்கிரீட் வீடு கட்ட ரூ. 72000 இலவசமாக வழங்கப்படுகிறது.

3. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற ரூ. 100000 (ஒரு லட்சம்) வழங்கப்படுகிறது. இலவசமாக. குடிசைகள் இல்லாத நகர்ப்புறமாக மாற்ற இந்த இலவசம்.

இந்த 72000 ரூபா, 100 000 ரூபா வாங்க வழக்கம் போல ஒரு தொகை செலவழிக்கணும். ரூ 4000 முதல் ரூ. 8000 வரை செலவாகும்.

VI. நிலம்

1. நிலமில்லாத ஏழை விவசாயிக்கு இரண்டு ஏக்கர் தரிசு நிலம் இலவசம். நிலத்தைப் பதிந்தும் பட்டா போட்டும் கொடுத்து விடுவார்கள். அந்த தரிசு நிலத்தை மேம்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றியும் கொடுத்து விடுவார்கள்.

2. விதைகள், உரங்கள், ஆழ்துளை கிணறு, சொட்டு நீர்ப் பாசனம் எல்லாம் மிக அதிகமான மானிய விழுக்காட்டுடன் விவசாய நிலம் விலைக்கு வாங்க ஆதி
திராவிடப் பெண்களுக்கு அந்த நிலத்துக்கான தொகை முழுவதும் இலவசம்.

VII. இலவச மின்சாரம்

மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் இடங்கள் 1. விவசாயம் 2. ஏழைகளின் வீட்டுக்கு ஒரு பல்பு. பயன்படுத்தப்படும் மின்சாரத்தைக் கணக்கிட மீட்டர்
கிடையாது .

விவசாயத்திற்கு

விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்ட திட்டம். முதலில் விவசாயிகள் மின்சாரத்திற்கு மீட்டருக்கு ஏற்ப பில் கட்ட வேண்டும்.
மின்சாரம் கிணற்றிலிருந்து நீர் எடுக்க, ஆழ்துளை கிணறு மூலம் நீர் எடுக்கப் பயன்படுகிறது. அப்படி எடுக்கப்படும் நீர் பாசனத்திற்குப் பயன்படுகிறது.

விவசாயிகளாக 70 சதவிகிதம் இருந்த மக்கள், பின்னர் படிப்படியாக கல்வி அறிவு வரவும், மற்ற வேலை வாய்ப்புகளுக்காகவும் விவசாயத்திலிருந்து விலக ஆரம்பித்தனர். விவசாயத்தை நம்பி இருப்போர், விவசாயம் பண்ணுவோர் எண்ணிக்கை குறையவே, இருக்கும் விவசாயிகளை ஊக்குவிக்க வழங்கப்பட்டது
தான் இலவச மின்சாரம்.

வீட்டுக்கு ஒரு பல்பு

கிராமப் புறங்களில் உள்ள மக்கள் சிலர் வீடுகளில் மின் இணைப்பு கொடுக்க முடியாமல் அதற்கான பொருளாதாரம் இல்லாததால் அவர்களுக்கு மின் இணைப்பு கொடுத்து ஒரு பல்பு (விளக்கு) எரிக்கப் பயன்படும் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது.

ஒரு விளக்கு, ஒரே விளக்காக இருக்குமா? பல இடங்களில் தவறாகப் பயன்படுத்தப்படும் இலவசம்.

VIII. பொங்கல்

தமிழர் பண்டிகை. பொங்கலை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கலாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் தமிழர்கள். வாழ்க்கைல முக்கியமானதாச்சே, இலவசம் இல்லாம எப்படி?

வேஷ்டி சேலை

முதலில் வயதான முதியோருக்குக் குடும்ப அட்டைக்கு இலவசமாக வேஷ்டி சேலை வழங்கப்பட்டது. பிறகு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரேஷன் கடைல பொங்கலுக்காக வேஷ்டி சேலை குடுக்கறாங்க.

சேலையக் கட்டுறாங்க பெண்கள். வேஷ்டியத்தான் என்ன செய்றாங்கன்னு தெரியலை.

பொங்கல் வைக்க

வேஷ்டி, சேலைய வச்சு பொங்கல் கொண்டாட முடியுமா?

பொங்கல் எப்படி வச்சு சாப்பிடுறது ? அதுக்கும் இலவசம் இருக்கே ! தமிழக மக்கள் பொங்கல் வச்சு கொண்டாடி மகிழ பச்சரிசி, பாசிப் பருப்பு, வெல்லம், நெய், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் அடங்கிய பொங்கல் பரிசு இலவசம்.

IX. வீட்டு உபயோகத்திற்கு

வீடு, நிலம், அரிசி, மின்சாரம் இலவசமா கொடுக்கும் போது அரிசிய எப்படி சமையல் பண்றது? அதுக்கு இலவச எரிவாயு, அப்புறம் அறிவ வளக்க, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி,

இலவச சமையல் எரிவாயு இணைப்பு

இந்த இலவசத்திற்கு தகுதியானவங்களுக்கு அரசால் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு, ஸ்டவ், லைட்டர் மற்றும் ஒரு சிலிண்டர் இலவசம். முதல்
சிலிண்டர் மட்டும் இலவசம். அடுத்தாற் போல் வாங்கும் சிலிண்டர்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி

போன சட்டமன்றத் தேர்தல்ல தேர்தல் அறிக்கைல பரபரப்பான முழக்கம் இரண்டு இலவசங்கள். அதுல ஒண்ணு 1 கிலோ அரிசி 2 ரூபாய்க்கு. இந்த 2
ரூபாய்க்கு 1 கிலோ தான் இப்ப 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு. அடுத்த கவர்ச்சி தான் ஏழைகளுக்கு அவர்கள் அறிவை மேம்படுத்த இலவச வண்ணத்
தொலைக்காட்சிப் பெட்டி.

இந்த அறிவிப்பு தேர்தல்ல ஜெயிச்சு வந்த உடனே அமுலுக்கு வந்துருச்சு. ஏழை, எளிய மக்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது. இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டு விட்டன. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள்
தமிழகத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்த திட்டம் ஏழை மக்கள் அறிவு மேம்பட, நல்லது தான். தொலைக்காட்சி பெட்டி நிகழ்ச்சிகள் தெரிய கேபிள் இணைப்பு கொடுக்க வேண்டும். கேபிள் இணைப்புக்கு மாத சந்தா செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் நோக்கம் ஏழைகளின் அறிவு மேம்பட தொலைக்காட்சி இலவசம். அதில் நிகழ்ச்சிகள் தெரிய பணம் கட்ட வேண்டும்.

ஏற்கனவே தொலைக்காட்சிப் பெட்டி உள்ள இடங்களில் இந்த இலவசம் ஒரு இணைப்பு.

X. ஊக்கத்தொகை

இரண்டு வகையினருக்கு அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

1. படிப்பு 2. விளையாட்டு

படிப்பு

பள்ளிகளில் நல்ல மதிப்பெண் பெற்று சிறப்புக் கல்வியினைத் தொடர முடியாமல் தவிக்கும் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதற்கான முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இந்த இலவச ஊக்கத்தொகையைப் பெறலாம். ஐ.ஏ.எஸ் படிக்க ரூ. 1 லட்சம் வரை ஊக்கத்தொகை கிடைக்கிறது.

விளையாட்டு

இந்த பிரிவில் வருபவர்களுக்கு விளையாட்டுக்களில் தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் சாதனை படைத்தால் மட்டும் ஊக்கத்தொகை
கிடைக்கிறது. கிடைக்கும் தொகை ரூ. 10000 முதல் ரூ. 30 லட்சம் வரை.

XI. நல வாரியங்கள்

பல்வேறு தொழில்களைச் செய்துவரும் மக்களுக்கு உதவிகள் செய்ய உருவாக்கப்பட்ட வாரியங்கள் எண்ணிக்கை 26. உதாரணம் கட்டிடத் தொழிலாளர் நல
வாரியம்.

அந்தந்த தொழில்களுக்கான இலவசங்கள், மானியங்கள், இந்த வாரியங்கள் மூலமாக வழங்கப்படுகிறது. தொழிலுக்கான உபகரணங்கள் இலவசமாகவோ,
மானியத்துடனோ வழங்கப்படுகிறது.

XII. மருத்துவம்

மருத்துவம் அரசு மருத்துவமனைகளில் ஆரம்ப காலம் முதல் இன்று வரையிலும் இலவசம் தான். அனைத்து மருத்துவப் பிரிவுகளிலும் மருத்துவம் இலவசம். மருந்துகளும் இலவசம்.

1.மருத்துவத் துறையின் மிகச்சிறந்த திட்டங்கள் பள்ளிகளில் உள்ள மாணவர்களைப் பரிசோதித்து நோய்களைக் கண்டறிதலும், அதற்கான பரிந்துரைகளும்.

2. வருமுன் காப்போம் - பல்வேறு பொது இடங்களில் நடத்தப்படும் மருத்துவ முகாம் மூலமாகப் பொதுமக்களை மருத்துவப் பரிசோதனை செய்து அவர்களுக்கான மருத்துவப் பரிந்துரைகள்.

3. மருத்துவத்தில் உள்ள ஒரே ஒரு சிறிய குறை, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வசூலிக்கப்படும் மிகக்குறைந்த தொகை. உள் நோயாளிகளுக்கு ஒரு தொகையும், வெளி நோயாளிகளுக்கு ஒரு தொகையும் ரசீது போட்டு பெறப்படுகிறது.

உயர் மருத்துவத்துக்கான உயிர் காப்பீட்டுத் திட்டம்

சாதாரண வியாதிகள் வந்த காலம் போய் இப்பொழுது விதவிதமான வியாதிகள் மக்களை வாட்டி எடுக்கின்றன.

உயர்ந்த செலவு செய்து உயர்தரமான மருத்துவ சிகிச்சைகள் பெற வேண்டி உள்ளது. இது சாதாரணமான மக்களால் முடியாது. எனவே தான் உதயமானது இந்த திட்டம். இந்த திட்டத்துக்கான பிரீமியத்தை அரசே செலுத்தும். முதலில் 1 கோடி மக்களை இந்தத் திட்டத்தின் கீழ் உயர் மருத்துவத்துக்காகப் பதிவு
செய்கிறார்கள்.

XIII. மலைவாழ் பழங்குடிகள்

சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி முற்றிலும் இல்லாமல் வாழ்ந்து வரும் பழங்குடி மக்கள் அதிகம். அவர்கள் நலனை, முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்.

கல்வி வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, பாதுகாக்கப் பட்ட குடிநீர் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து மற்றவர்களுக்கு உள்ள இலவசங்களும் உண்டு.

100% மானியம் உள்ள விவசாயத் திட்டங்களும் மலைவாழ் பழங்குடிகளுக்கு உண்டு.

XIV. ஈமக் கிரியைகளுக்காக

சூலுற்ற நாளிலிருந்து ஆரம்பிக்கும் இலவசம் செத்தாலும் உண்டு. ஏழைகள் இறந்தால் அவர்கள் கடைசி செலவான ஈமக் கிரியைகளுக்கு அரசாங்கத்தின் உதவித் தொகை ரூ. 500. இந்த தொகையைப் பெற சுகாதார ஆய்வாளருக்கு கொடுக்க வேண்டிய தொகை ரூ. 50 முதல் 100 வரை.

XV. அன்னதானம்

குறிப்பிட்ட மிகப்பெரிய கோவில்களில் தினசரி மதியம் அன்னதானம் இலவசம், அரசாங்கம் முழுப்பொறுப்பு எடுத்தாலும் தனியாரும் ரூ. 15000 செலுத்தி தாங்கள் விரும்பும் நாளில் அன்னதானம் செலுத்தலாம்.

ரூ. 15000 வைப்புநிதியாக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை இந்தத் திட்டத்திற்கு இப்படிப்பட்ட புரவலர்கள் மிகவும் குறைவு. ஆகவே, முழுக்க முழுக்க அரசாங்கத்தின் இலவசம் இந்த அன்னதானம்.

இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய குறைபாடு அன்னதானம் கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்களுக்கு கிடைப்பதில்லை. மாறாக கோவிலைச் சுற்றி உள்ள,
கோவிலில் உள்ள சிலருக்கு மட்டும் பயன்படுகிறது.

XVI. ஊனமுற்றோர்

உடல் ஊனமுற்றோரின் நலத்துக்காகப் பல திட்டங்கள் உள்ளன. கல்வியில் ஆரம்பித்து, பல உதவிகள,

மூன்று சக்கர சைக்கிள், குறைந்த வட்டியில் கடன்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமையாக இட ஒதுக்கீடு, பேருந்து மற்றும் ரயில்களில் பயணத்திற்கான இலவசமும், சலுகையும், முன்னுரிமையும்.

XVII. நரிக்குறவர்கள்

இவர்களுக்கும் பல இலவசங்கள் உண்டு.

XVIII. சுயஉதவிக் குழுக்கள்

பெண்கள் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்டவை. குறைந்த வட்டியில் கடன், சுலபமாக செலுத்த வசதி, மானியங்கள் தெரியவில்லை.

XIX. பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம்

இது அறிவிப்போடு நிற்கிறது. இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

XX. விவசாயம்

விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு நகர்ப்புறங்களில் குடியேறுகிறார்கள். இருக்கக் கூடிய விவசாயிகளை, விவசாயம் பண்ணுவதற்கு தக்கவைக்க இந்த இலவசங்கள், மானியங்கள்.

இலவச மின்சாரம்

கிணற்றிலிருந்து, ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர்ப் பாசனத்திற்கு எடுக்கப்படும் தண்ணீருக்குண்டான மின்சாரம் முற்றிலும் இலவசம். மின்சாரத்தினை அளவிட மீட்டர் கிடையாது.

கடன்தொகை தள்ளுபடி

விவசாயிகள் கூட்டுறவு சொசைட்டிகளிலும், வங்கிகளிலும் வாங்கியிருந்த கடனை அரசே செலுத்தி, மக்களைக் கடனிலிருந்து காப்பாற்றியிருக்கிறது.

இலவச நிலம்

ஏழைகளுக்கு ஆளுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசம். பழங்குடி மற்றும் ஆதி திராவிடப் பெண்களுக்கு விவசாய நிலம் வாங்க முழு இலவசத் தொகை. உச்சபட்சமான தொகை ரூ. 1.5 லட்சம்.

மானியங்கள்

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து வழங்கும் விவசாய மானியங்கள் வேளாண்மை சிறக்க, இது கிட்டத்தட்ட இலவசம் தான். நெல், சிறு தானியங்கள்,
விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

தீவிர அரிசி சாகுபடி

சிஸ்டமிக் ரைஸ் இன்டென்ஸிபிகேஷன் (SRI) - இலவச பயிற்சி, மானிய விலையில் விதைகள், உரங்கள்.

ஐ.எஸ்.ஓ.பி.ஏ.எம்.

இத் திட்டத்தின் கீழ் மக்காச் சோளம், எண்ணெய் வித்துக்கள், உயிர் உரங்கள், நுண்ணுயிர்ச் சத்துக்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அரசே
விதைகளைத் தருகிறது. அதைப் பெருக்கி கொள்முதலும் செய்கிறது. மானியம் 50%

மகளிர் விவசாயம்

பணப்பயிர் செய்யும் விவசாயப் பெண்களுக்கு டான்வாட் திட்டத்தின் மூலமாக மானியங்கள்

தோட்டக்கலை

பழவகைச் செடிகள் வளர்க்க ஏக்கருக்கு ரூ.6,000 முதல் ரூ.6,500 வரை, செடி நாற்றுகள், உரங்களுக்கு வழங்கப்படுகிறது.

பிரிசிஷன் •பார்மிங் (Precission Farming)

90% மானியம், ஒரு எக்டேருக்கு ரூ. 65000 மானியமாகத் தரப்படுகிறது. சொட்டுநீர்ப் பாசனம், டிஷ்யூ கல்சர் பயிற்சி, சொட்டு நீர்ப் பாசனம் மூலமாக உரங்கள் 1 எக்டேருக்கு 1 கிலோ உரம். இதில் விளைச்சல் அமோகம்.

பூந்தோட்டக்கலை

பலவகை பூச்செடிகள் பயிர் பண்ண 50% முதல் 75% வரை மானியம்.

கால்நடைத் துறை

செயற்கை முறை கருவூட்டல் இலவசம். மேற்கு மலைத்தொடர்ச்சி மக்கள் முன்னேற்றத்திற்காக கிடாரிக் கன்றுகள் 50% மானியத்தில் தரப்படுகிறது. கிரிராஜா கோழிகள் 50% மானிய விலையில். கால்நடை, கோழித் தீவணங்களும் மானிய விலையில் 50%.

பொதுப்பணித்துறை

நிலத்தடி நீருக்காக ஏ.ஆர்.எஸ் எனப்படும் நிலத்தடி நீரை வளமாக்க ஏக்கருக்கு ரூ. 4000 மானியம், வறண்ட நிலங்களுக்கு இலவச ஆழ்துளைக் கிணறு,
விவசாய மக்கள் ஒருங்கிணைந்து 50 ஏக்கர் நிலம் சேர்ந்தால் 12 ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதிக்கு 1 ஆழ்துளைக் கிணறு வீதம் 4 ஆழ்துளைக் கிணறு,
மோட்டார், மின்சாரம் இலவசம்.

மாடல் பண்ணை

தீவனப்புல், மாடு, ஆடு, விவசாயம் ஆகியவற்றை ஒருங்கிணைத்தால் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ. 50, 000 மானியம். தென்னங்கன்று 50% மானிய விலையில்.

செரிகல்சர்

பட்டுப்பூச்சி வளர்க்க மானியங்கள்.

மல்பெரி செடிகள் வளர்க்க 50% மானியம். பட்டுப்பூச்சி வளர்ப்புக்கு ஷெட் அமைக்க 50% மானியம்.

மீன் வளர்ப்பு

IAMWARM திட்டத்தின் மூலமாக இலவசமாக மீன் குஞ்சுகள் பஞ்சாயத்து யூனியனுக்கு வழங்கப்படுகிறது. வண்ண மீன்கள் வளர்ப்புக்கு முழு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

பயிர் கடன்கள்

மிகக் குறைந்த வட்டியில் கூட்டுறவு சொசைட்டி மூலம், வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை பின்னால் தள்ளுபடி செய்யப்படும் வாய்ப்பு அதிகம்.

பயிர்ப்பாதுகாப்பு

INAIS என்ற தேசிய விவசாய இன்சூரன்ஸ் திட்டம் மூலமாக விளைவிக்கப்படும் பயிருக்கு பாலிசி எடுக்கும் பொழுது 50% பிரீமியம் தொகையை அரசு செலுத்துகிறது.

XXI. தியாகிகள், மொழிப்போர் தியாகிகள்

இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கே போராடியவர்கள் தியாகிகள். இவர்கள் சுதந்திர தினத்தன்று அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால், கெளரவிக்கப்படுகிறார்கள். சுதந்திர தின விழாவில் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தும் தியாகிகளுக்கு அன்றைய தினம் வழங்கப்படுவது ரெண்டு சாக்லேட் மட்டும்.

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் போராடி சிறை சென்றவர்கள் மொழிப்போர் தியாகிகள்.

தியாகிகள், மொழிப்போர் தியாகிகளுக்கு அரசால் பல சலுகைகள் உண்டு. இலவச பஸ் பாஸ், இலவச அரிசி, மற்றும் மாதந்தோறும் பென்ஷன் தொகையாக ரூ. 3000 (மூன்றாயிரம்) வழங்கப்படுகிறது.

XXII. காணாமல் போன இலவசங்கள்

இலவச கண் கண்ணாடி

கண்ணில் கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்யும் முதியோர்களுக்கான இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்ட திட்டம் இன்று இல்லை.

இலவசக் காலணிகள்

பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காலணிகள் வழங்கப்பட்டது இப்பொழுது இல்லை.

இலவசக் கழிப்பிடம்

கழிப்பிடங்கள் இல்லாத இடங்களில், பொதுமக்கள் வசதிக்காகக் கட்டப்பட்டவை கழிப்பிடங்கள். இன்று அந்த கழிப்பிடக் கட்டடங்களையே காணோம்.

தாலிக்குத் தங்கம்

ஏழைப் பெண்களுக்கு அவர்கள் திருமணத்தின் போது தாலிக்கு அரை பவுண் தங்கம் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டது. இன்று அந்த திட்டம் இல்லை.

மேற்கூறிய நான்கு இலவச திட்டங்களும் நடைமுறையில் இருந்து பின்னர் கைவிடப்பட்டவை.

இலவசப் பல்பொடி

ஏழை மக்களுக்காக அறிவிக்கப்பட்ட இலவச பல்பொடி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்டு 15 ஆண்டுகள் ஆயிற்று.


XXIII.இலவசங்கள் பட்டியல்

நாம் இதுவரைப் பார்த்த இலவசங்களின் பட்டியல்

1. கல்விக்கான இலவசங்கள்

2. பெண்களுக்கான திட்டங்கள்

3. அரிசி

4. உதவித்தொகை

5. வீடு

6. நிலம்

7. இலவச மின்சாரம்

8. பொங்கல்

9. வீட்டு உபயோகத்திற்கு

10. ஊக்கத் தொகை

11. 26 நல வாரியங்கள்

12. மருத்துவம்

13. மலைவாழ் பழங்குடிகள்

14. ஈமக் கிரியைகளுக்காக

15. அன்னதானம்

16. ஊனமுற்றோர்

17. சுயஉதவிக் குழுக்கள்

18. விவசாயம்

19. தியாகிகள், மொழிப்போர் தியாகிகள்

20. காணாமல் போன இலவசங்கள்


XXIV. இலவசங்களின் நன்மையும் தீமையும் ஒரு பார்வை

கல்விக்கான இலவசங்கள் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டது. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படை கல்வி. ஆகையால் கல்விக்கான இலவசங்களால் நன்மைகள் தான். ஒரே ஒரு குறை, இலவச சைக்கிள் வழங்கப்படும் காலம் +1 அரையாண்டுத் தேர்வும், முடிவுறும் சமயம் அல்லது முடிந்த பின்.

பெண்களுக்கான திட்டங்கள் சூலுற்ற பெண்களுக்கு ரூ. 6000, திருமண உதவித் திட்டம் ரூ. 20,000, பெண்குழந்தைகளுக்கு ரூ. 15200 ஆகியன. இந்த திட்டங்களுக்கான உதவித்தொகை பெற வருவாய்த்துறையினருக்கு கப்பம் கட்ட வேண்டி உள்ளது.

இலவச அரிசி, 1 ரூபாய் அரிசி, திட்டங்கள் சரி தான், அதன் நோக்கம் நிறைவேறுகிறதா? இல்லை. 1 ரூபாய் அரிசியைச் சாப்பிடப் பயன்படுத்துவோர் மிகவும் குறைவு. அரிசி கடத்தலுக்கும், ஆடு, மாடுகள், நாய்களுக்கும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

முதியோர் உதவித் தொகை உருப்படியான திட்டம். ஆனால், இதைப் பெறுவதற்கும் ஒரு தொகை செலவு செய்ய வேண்டும்.

இலவச நிலங்கள் பெரும்பாலும் புறம்போக்கு நிலங்கள், விவசாயத்தின் பலன் கேள்விக்குறி தான்.

விவசாயத்திற்கு, ஒரு பல்பு எரிக்க இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை கணக்கிட மீட்டர் கிடையாது. ஒரு பல்பு பல பல்புகளாக எரிவது நடைமுறை.

பொங்கல் தமிழர் திருநாள். அதை அரசாங்க இலவசத்துடன் கொண்டாடுவது சிறப்புதானே.

வீட்டு உபயோகத்திற்கு இலவச சமையல் எரிவாயு, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் சிறப்பான திட்டம் தான்.

விளையாட்டு வீரர்கள், மேல்படிப்பு படிக்க மாணவர்களுக்கான ஊக்கத்தொகை நியாயமானது.

26 நல வாரியங்கள் எப்படி செயல்படுகின்றன என்ற முழு விபரம் சரியாகக் கிடைக்கவில்லை.

மருத்துவம் ஆரம்ப காலம் முதல் இலவசம். சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க பணம் வசூலிப்பதை நிறுத்தினால் சிறப்பாக இருக்கும்.

மலைவாழ் பழங்குடிகளின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் சரியானவையே.

ஏழைகளுக்கான ஈமக்கிரியைகளுக்கான உதவித் தொகை, அதை வாங்குவதற்கு உண்டான செலவு இல்லாமல் இருந்தால் நல்ல திட்டம்.

கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பயன்படுகிறது.

ஊனமுற்றோர் கண்டிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியவர்கள்

விவசாயத்துக்கான இலவசங்கள், மானியங்கள் அனைத்தும் இருந்தால் தான் விவசாயம் நீடிக்கும். இல்லையென்றால் விவசாயத்தை நம்பி வெகு சிலரும் வேறு தொழிலுக்கு மாறிவிடுவார்கள்.

தியாகிகளுக்கான இலவசங்கள் நியாயமானதே.

முதலில் இலவசமாக வழங்கப்பட்டு இப்பொழுது காணாமல் போன இலவசங்களையும், நாம் கவனிக்க வேண்டும். இலவச மூக்குக் கண்ணாடி, இலவச
காலணிகள், இலவசக் கழிப்பிடம், தாலிக்குத் தங்கம், இலவச பல்பொடி ஆகிய இலவசங்கள் அமலில் இருந்து பிறகு காணாமல் போனவை.

ஆகையால் இப்பொழுது உள்ள எத்தனை இலவசங்கள் காலச் சூழலில் காணாமல் போகும் என்பது பின்னால் தான் தெரியும்.

வரப்பு உயர்ந்து, நெல் உயர்ந்து, குடி உயர்ந்து, கோன் உயர வேண்டும். மாறாக இங்கே அரசு கட்டில், ஆட்சி நிலைப்பதற்காக போட்டி போட்டு இலவசங்களை அமல் படுத்த வேண்டியிருக்கிறது.

ஒரு அப்பட்டமான உண்மை. மக்கள் யாரும் இலவசங்களைக் கேட்க வில்லை. இலவசங்களுக்காகப் போராட வில்லை. சட்டமன்றத் தேர்தல் நேரங்களில் வெளியிடப்படும் இலவசங்கள் மக்களின் ஓட்டுகளைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காக மட்டுமே.

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற இப்போதைய நிலைமையை முழுவதும் மாற்றினாலே நிதி நிர்வாகம் சீரடையும்.

இலவசங்கள் மக்கள் மனதை வசப்படுத்தி அவர்கள் ஓட்டுகளைக் கைப்பற்ற நடக்கும் முயற்சியே தவிர, மக்களின் முன்னேற்றத்தின் மேல் உள்ள
அக்கறையினால் அல்ல.

கல்வி, மருத்துவம், விவசாயம், முதியோர் உதவித் தொகை, ஊக்கத்தொகை ஆகியவை நியாயமானவை. மற்ற இலவசங்கள் எல்லாம் தேர்தலில் மக்களிடம் ஓட்டு வாங்க, ஓட்டுகளைக் குறி வைக்கும் திட்டங்கள் என்றால் அது மிகையல்ல.

XXV. நிறைவாக ...

மக்கள் தாமாகவே முன்னேற திட்டங்களை வகுப்பதை விட்டுவிட்டு இப்படி இலவசங்களை வாரிவழங்குதல் முறையல்ல. இப்படி இலவசங்களை வாரி
வழங்கினால் அடிப்படைத் திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும் ? உணவுப் பொருட்கள், மின்சாரம், தண்ணீர், எரிபொருள் ஆகியவை தட்டுப்பாடு
இல்லாமல் கிடைப்பதற்குத் திட்டங்கள் வகுப்பது தான் முறை. இப்படி இலவசங்களை அள்ளித் தெளித்தால் கஜானா காலியாவதைத் தடுக்க முடியாது.
அரசு இப்பொழுது நடப்பதே டாஸ்மாக் வருமானத்தை வைத்துத் தான் என்றால் அது பொய்யல்ல.

மக்கள் தாமே உயர வழி செய்ய வேண்டும் அரசு. அவர்கள் உயர, உயர, அரசுக்குக் கிடைக்கும் வரிப்பணம் உயரும். அதை வைத்து மேலும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியும்.

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்