Friday, March 20, 2009

முனியப்பனும் மோகினிப் பேயும்

முனியப்பன் மருத்துவம் படிச்ச ஒடனே கிளினிக் வச்சுட்டார். நெல்லைல இருந்து 26 கி.மீ.ல தாமிரபரணி ஆத்துக் கரைல ஆராம்பண்ணை கிராமம். முஸ்லிம் மதத்தினர் பெருமளவில் வசிக்கும் கிராமம். அங்க எடம் பாக்கப்போனா, "முத்தவ்லியப் பாருங்க" அப்படின்னாங்க. முத்தவ்லிங்கிறது முஸ்லிம் சமுதாயத்துல ஒரு பொறுப்பான பதவி.

முத்தவ்லி கருங்குளத்துல இருக்கார். தாமிரபரணி ஆத்துல இடுப்பளவு தண்ணில எறங்கி கருங்குளத்துக்குப் போனார் முனியப்பன். கிராமத்துல ஆஸ்பத்திரிங்கவும் முத்தவ்லி சந்தோஷப் பட்டு, முஸ்லிம் ட்ரஸ்ட்டுக்குச் சொந்தமான எடத்த முனியப்பனுக்குக் கிளினிக் நடத்த குடுக்கறார்.

ஒரு காலத்துல பள்ளிக்கூடம் நடந்த எடம் அது. ஒரு செவ்வகக் கட்டடம். அதுல "ட"னா சைஸ்ல பள்ளி நடந்த வகுப்புகள். அடுத்த "ட"னா கட்டி முடிக்கப் படாத கட்டடம். அதுல கடைசில ஹெட் - மாஸ்டர் ரூமா இருந்ததை நம்ம முனியப்பனுக்குக் கிளினிக் நடத்தக் குடுத்தாங்க. கட்டி முடிக்கப் படாத எடத்துல கருவேல முள்ளு. கட்டடத்துக்குப் பின்னாலயும் கருவேல முள்ளு. கட்டடத்துக்கு சைட்ல தாமிரபரணி ஆத்துல தண்ணி எடுக்கப் பெண்கள் போவாங்க.

முனியப்பன் கிளினிக் டைம் 4.30 to 8.30. கேஸ் 6.30 வரை வரும். அப்புறம் வராது. "இப்பத்தான ஆரம்பிச்சிருக்கோம், இன்னும் கொஞ்ச நாள்ல கேஸ் பிக்அப் ஆயிரும்"னு முனியப்பன் மனசைத் தேத்திக்கிடுவார். கிளினிக் பையனும் 6.30க்கு ஓடிப்போயிருவான். ஒரு மாசத்துல மக்கள் கொஞ்சம் freeஆ பேசப்பழகிட்டாங்க. முனியப்பன் ரூம்ல ஒரு 60 வாட்ஸ் பல்ப், கட்டடத்தை விட்டு வெளிய ரோட்டுக்கு வரணும்னா 70 அடி வரணும். இப்படி ஒரு சூழ்நிலைல 6.30க்கு மேல case வராததுக்குக் காரணமா ஒரு குண்டைப் போட்டாங்க பாருங்க.

பள்ளிக்கூடமா இருந்த கட்டடம் ரொம்ப நாளா சும்மா கெடந்ததால அங்க மோகினிப் பேய் குடியேறிருச்சாம், அதுனால தான் அங்க யாரும் வரலைன்னாங்க.

முனியப்பனுக்கு டர்ராயிருச்சு. படிக்கிற காலத்துல டிராகுலா (இரத்தக் காட்டேரி) படம் அதிகமா பாக்குற ஆளு. சந்திரமுகில வடிவேலு ரஜினியக் கேப்பாரு பாருங்க ஒரு கேள்வி "அப்பா பேய் இருக்கா? இல்லையா?". அதே கேள்விய தனக்குத் தானே கேட்டுக்கிட்டார் முனியப்பன், 27 வருஷத்துக்கு முன்னால. கருவேல முள்ளு ஆடுனா, சும்மா காத்து வீசுனா, கதவு ஆடுனா முனியப்பனுக்கு லேசா ஒரு திக் வரும். முனியப்பன் வீரம் வெளஞ்ச மண்ணுக்காரர் - சொந்த ஊர் M.கல்லுப்பட்டி. 7 மணி ஆயிருச்சுன்னா ரூம விட்டு வெளிய வந்து தில்லா நிப்பார், ஆள் நடக்கற மாதிரி, ஆவியா ஒரு உருவம் மாதிரி கட்டி முடிக்கப்படாத கட்டடத்துல தெரியும். மோகினிப்பேய் வரும். ஒத்தைக்கு ஒத்தை மல்லுக்கட்டலாம்னு, முனியப்பன் ரெடியாயிருந்தார். 2 மாசம் போச்சு ஒண்ணும் நடக்கலை.

'டாக்டர் பயப்படாம ஒக்காந்திருக்கார், நம்மளும் அவர்கூட இருப்போம்'னு, கிளினிக் பையன் முனியப்பன் கூட 8.30 வரை இருக்க ஆரம்பிச்சான். கொஞ்ச நாள்ல 6.30க்கு மேலயும் நோயாளிகள் வர ஆரம்பிச்சாங்க. நெல்லைக்கு 8.30க்கு பஸ். நோயாளிகள் இருந்தா, முனியப்பனுக்காக அந்த பஸ்ஸை நிப்பாட்டி வச்சிருவாங்க.

மோகினிப் பேய் பயம் ஊர் மக்கள்கிட்ட இருந்து ஒரு வழியா போயிருச்சு. முத்தவ்லி சந்தோஷமா முனியப்பன்கிட்ட சொன்னார். "நீங்க பயப்படாம இருந்தீங்க, அதுனால வீடுகட்டி மக்களைக் குடிவைக்கப் போறோம்". அந்த ஊர் ஜமாத்ல இருந்து பள்ளி அறைகளை வீடாக்கி வாடகைக்கு விட்டாங்க. நுழைஞ்ச ஒடனே மொத வீடு நம்மாளு முனியப்பனுக்குத் தான்.

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' அப்படிம்பாங்க. பேய்ங்கிறது ஒரு பிரம்மை.