Saturday, July 11, 2009

அப்பா உன்னிடம் படித்தது

பாடத்தில் படிக்காமல்
பழக்க வழக்கங்களை உன்னிடம் படித்தேன்.

செய்தி வாசிக்க
சொல்லிக் கொடுத்தாய்
உடல் நலத்துக்கும் உறுதியான
உடம்புக்கும் உன் குறிப்புகள்
உணவுக்கும் உன் குறிப்புகள்
உடை, உடல் சுத்தத்துக்கும் உன் குறிப்புகள்

மன உறுதிக்கும் மன மகிழ்ச்சிக்கும்
மன நிறைவுக்கும் உன் குறிப்புகள்
ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தாய்
ஒழுக்கத்தால்

அன்பு, அறிவு, பண்பு
அனைத்தும் கற்றுக் கொடுத்தாய்
சாதி பார்க்காமல்
சமத்துவம் பழகியவன் நீ

பெரியவர்களை மதிக்க வைத்தாய்
பெருந்தன்மையுடன் நடக்க வைத்தாய்
அடுத்தவனை அடக்கி ஆளாமல்
அனைவரையும் மதிக்கப் பழகினாய்

அகந்தை ஆணவம்
அண்டவிட வில்லை நீ
யாருக்கும் அடி வருடாமல்
எவருக்கும் அஞ்சாமல்
தவறு செய்யாமல் வாழ
தலைநிமிர்ந்து நடக்க வைத்தவன் நீ

சுதந்திரக் காற்றை சுவாசிக்க
சுதந்திரமாக உலா வர
சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுத்தாய்
சுடர் விளக்கான நீ

தியாகத்தையும் உன்னிடம் கற்றேன்
தியாகத்தை நீ எங்கே கற்றாய் .......... ?