Friday, January 30, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (டாக்டர் நர்கீஸ் பானு)

முனியப்பன் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1982ல் முதுநிலை பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்த நேரம், 3 மாதம் அவர் இருந்த unitல் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்தார் டாக்டர் நர்கீஸ் பானு. அறிவிலும், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் தேர்ந்தவர். அவர் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்த 1 வருடமும் முனியப்பனின் நண்பராக இருந்தார். அவர் பயிற்சிக் காலம் முடிந்து அவர் நாகர்கோவிலுக்குச் சென்றார்.

1986 ஜனவரியில் நாகர்கோவிலில் நடைபெற்ற டாக்டர் நர்கீஸ் பானுவின் திருமணத்திற்கு முனியப்பனுக்கு அழைப்பு வந்தது. முனியப்பன் டாக்டர் நர்கீஸ் பானுவின் திருமணத்தில் கலந்து கொண்டார். மணமகன் டாக்டர். அப்துல் சுபான்.

1989ம் வருடம் காயல்பட்டினம் KMT மருத்துவமனையில் டாக்டர். நர்கீஸ் பானு பணிபுரிந்து கொண்டிருந்த பொழுது, முனியப்பன் அவரைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். ஒரு ஆண் குழந்தை இருப்பதாக டாக்டர். நர்கீஸ் பானு மகிழ்ச்சியுடன் சொன்னார்.அதன்பிறகு டாக்டர்.நர்கீஸ் பானுவுடன் தொடர்பு கொள்ள முனியப்பனுக்கு நேரம் கிடைக்கவில்லை. காலம் உருண்டோடியது.

முனியப்பன் தினத்தந்தி, ஹிண்டு நாளிதழ்களை காலையில் வாசிக்கும் வழக்கம் உள்ளவர். அதில் தினத்தந்தியில் போட்டோவுடன் வரும் டாக்டர் பற்றிய விளம்பரத்தைக் கண்டிப்பாகப் பார்ப்பார். அதிகமாக வெளிநாடு சென்று திரும்பும் டாக்டர்கள் போட்டோவுடன் கூடிய விளம்பரங்கள் தான் இருக்கும்.

01.01.09 அன்று தினத்தந்தியில் ஒரு டாக்டர் போட்டோ செய்தி வந்திருந்தது. டாக்டர் பேரைப் பார்த்தார் முனியப்பன். டாக்டர் அப்துல் சுபான் என்றிருந்தது. மேலே வபாத்தானார் என்றிருந்தது. அதிர்ச்சியடைந்த முனியப்பன் விளம்பரத்தின் கீழே பார்த்தார். Dr. நர்கீஸ் பானு என்றிருந்தது. உடனே ஆத்தூரில் இருக்கும் Dr. முத்துக் கிருஷ்ணனை தொடர்பு கொண்டார் முனியப்பன்.

மஞ்சள் காமாலையால் Dr. அப்துல் சுபான் மரணத்தைத் தழுவியதாகவும், முதல்நாளே இறுதிச் சடங்குகள் முடிந்ததாகவும், திருச்செந்தூர் கிளை (IMA) இந்திய மருத்துவக் கழக டாக்டர்கள் அனைவரும் இறுதிச்சடங்கில் பங்குகொண்டதாகவும், Dr. முத்துக் கிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.

முஸ்லீம் மதமாதலால் கணவனை இழந்த பெண்கள் 40 நாட்கள் ஆண்களை பார்க்கக் கூடாது என்ற தகவலும் முனியப்பனுக்குக் கிடைத்தது. 14.01.09ல் முனியப்பன் தன் தங்கை, தங்கை கணவர், தங்கை பிள்ளைகளுடன் காயல்பட்டினம் சென்றார். அவருக்கு வியப்பான விஷயம் அங்கு காத்திருந்தது. Dr. நர்கீஸ் பானு ஆலோசனை அறையில் பெண் நோயாளிகளுக்கு மட்டும் அவர் மருத்துவ சிகிச்சை அளிப்பதாகச் சொன்னார்கள். முனியப்பனின் தங்கை Dr. நர்கீஸ் பானுவைச் சந்தித்துத் துக்கம் விசாரித்து விட்டு வந்தார்.

முனியப்பனுடைய தங்கையிடம் Dr. நர்கீஸ் பானு அவருடைய கணவர் Dr. அப்துல் சுபானின் தங்கை கணவர் மாடியில் இருப்பதாகவும், முனியப்பனை அவரைச் சந்தித்து விட்டு போகச்சொன்னார். Dr. அப்துல் சுபானின் மைத்துனரை அனைவரும் சந்தித்தனர்.

Dr. நர்கீஸ் பானுவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். முதல் பையன் இரண்டாம் ஆண்டு மருத்துவமும், இரண்டாவது பையன் பிளஸ் டூவும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகள் இரண்டு பேரும் வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில், அவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகின்ற நேரம். இந்த நேரத்தில் கணவரின் மறைவு Dr. நர்கீஸ் பானுவை எந்த அளவு பாதித்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

கணவர் இறந்த பத்து நாட்களில், அவர்களுடைய நோயாளிகளின் நலனுக்காகவும், அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும், குடும்பத்திற்காகவும், ஆலோசனை அறையில் அமர்ந்த Dr.நர்கீஸ் பானு வீரப்பெண்களின் வரிசையில் இணைக்கப்பட வேண்டியவர்.

Monday, January 26, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (வள்ளி)

என்ன பித்தளயக் குடுக்கறீங்க ..... ?

நம்ம முனியப்பனோட பெண் உதவியாளர் ஒருத்தர் இருக்கார். வெளிஉலகம் அதிகம் பார்த்திராதவர். பெயர் சண்முக வள்ளி. வள்ளி ஜோக்ஸ்ன்னு சொல்லி ஒரு புக் போடலாம். அந்தளவுக்கு திடீர் ஜோக்ஸ். முனியப்பன் கிளினிக்ல டெட்பாடிக்குப் பல்ஸ் பார்த்தாரே அவரே தான். நோயாளிகளை ஒழுங்கா பாத்திருவார். அதுல correct.

முனியப்பன் cell phoneஅ சார்ஜ் போட வயரை சொருகிருவார் வள்ளி, ஆனா switchஅ ஆன் பண்ண மாட்டார். இந்த மாதிரி எதாவது செஞ்சி சிரிக்க வச்சிருவார்.

இப்ப, அவர் வீட்டுக்காரருக்கு ஒரு பேங்க் செக் குடுக்குறாங்க. அவர் அதை மாத்த நேரமில்லாம என்ன செய்றாரு; நம்ம வள்ளிக்கிட்ட குடுத்து "பேங்க்ல போய் செக்கக் குடுத்து ரூவா வா புள்ள"ன்னு சொல்லிர்றார். வள்ளிக்கு பேங்க் நடைமுறைலாம் தெரியாது. வள்ளி நேரா கிளம்பி பேங்க்ல போய் செக்கக் குடுக்குறாங்க. அந்த பேங்க் காலைல 8 மணியிலிருந்து சாயங்காலம் 8 மணி வரை உள்ள பேங்க். வள்ளி அங்க போன டைம், மாலை 4.30 மணிக்கு. செக்ல வள்ளிக்கிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டு பித்தளை token குடுக்கிறாங்க.

வள்ளிக்கு அதிர்ச்சியாயிருது. என்னடா நம்ம செக்கக் குடுத்தோம், இந்த ஆளு ரூவா குடுக்காம என்னத்தயோ குடுக்குறாரு. ஒடனே செக்க பேங்க்ல யார்கிட்ட குடுத்தாரோ அவர்கிட்ட நேராவே கேட்டுர்றாரு. "என்ன ரூவா குடுக்காம பித்தளயக் குடுக்கறீங்க?". பேங்க் ஊழியர் அசந்துர்றார். "திருப்பி ஒரு தடவை சொல்லுங்க"ன்னு வள்ளியக் கேக்குறார். வள்ளி டென்ஷன்ல இருக்காங்கள்ல, மறுபடியும் ஒருதட்வை அதே மாதிரி "என்ன ரூவா குடுக்காம பித்தளயக் குடுக்கறீங்க"ன்றார். வள்ளிக்கு 'Voice Box' லவுட் ஸ்பீக்கர் மாதிரி. அவுங்க சொல்றது பேங்க்ல வேல பாக்குற எல்லாத்துக்கும் கேக்குது. பேங்க்ல கூட்டம் வேற இல்லையா, பேங்க்ல உள்ள எல்லாரும் அவங்களை மறந்து சிரிச்சுர்றாங்க.

"பேங்க்ல குடுத்தது token, அது உள்ள நம்பர் படி கூப்பிடுவாங்க. அப்ப cash counterல ரூவா தருவாங்க"ன்னு வள்ளிக்குச் சொல்லிக் குடுக்குறாங்க. அதுபடி வள்ளி ரூவாய வாங்கிட்டு வர்றாங்க.

சில சமயம் எதிர்பாக்காத நேரம் ஜோக் வெடிக்கும். வள்ளி ஒரு ஜோக் வெடி, திடீர்னு சுத்தி இருக்கவங்களைச் சிரிக்க வச்சிருவாங்க. அடுத்தவங்களச் சிரிக்க வைக்கிறது மிகப்பெரிய வரம்.

Case Sheet

காயங்களும் காரணங்களும்

முனியப்பன்கிட்ட அடிபட்டு காயத்தோட வைத்தியத்துக்கு வர்றவங்களும் உண்டு. சைக்கிள், Two wheeler accidentனா ஒடம்பெல்லாம் சிராய்ப்பு இருக்கும். எலும்பு முறிவு இருக்கலாம். சைக்கிள், Two wheelerல இருந்து skid ஆகி வருவாங்க.

பல் பட்ருச்சு, பாய்ஸன் ஆகாம ஊசி போடுங்கன்னு வருவாங்க. சின்னப் பிள்ளைக அடுத்த பிள்ளைய கடிச்சு வச்சிரும். நம்மாளுக, சண்டையில அடுத்தவனை கடிச்சு வச்சிருவாங்க.

சின்னப் பிள்ளைக சைக்கிள்ல ஒக்காந்து போகும் போது சைக்கிளுக்குள்ள, காலை விட்ரும். எலும்பு முறிவு ஆகாது. இரத்தக்காயம் தான் இருக்கும். புண் முழுசா ஆற 21 நாள்ல இருந்து 42 நாள் வரைக்கும் ஆகும். சைக்கிள், two wheeler ஓட்டிப் பழகும் போது விழுந்து எந்திரிச்சுக் காயத்தோட வருவாங்க.

வேல பாக்குற எடத்துல மேலே இருந்து கீழே வந்துருவாங்க. மெஷினுக்குள்ள கைய விட்ருவாங்க. காயம் வெரலக் கேட்ரும், இல்ல சும்மா லேசான கட்டா இருக்கும். இதெல்லாம் வழக்கமா நடக்குறது தான்.

புருஷன் பொண்டாட்டி சண்டைல கெளப்பிருவாங்க. சண்டைல காயமாயிரும். வைத்தியத்துக்கு வர்றவங்க முட்டிட்டேன், இரும்பு சாமான் விழுந்துருச்சு அப்படின்னு எதாவது பொய்க்காரணம் சொல்வாங்க. புருஷன் அடிச்சு மூஞ்சியெல்லாம் வீங்கி ரத்தம் கன்னிப்போயிருக்கும் (contusion), உண்மையச் சொல்ல மாட்டாங்க. அழுதுகிட்டே இருப்பாங்க. நம்மளா புரிஞ்சிக்கிட வேண்டியது தான். முனியப்பன் service ஆன ஆளு இல்லையா, பாத்த ஒடனே என்ன நடந்திருக்கும்னு தெரியும். வைத்தியத்தை மட்டும் பாத்து அனுப்பி வச்சிருவார்.

உண்மையான காரணத்தைச் சொல்லாம செத்துப்போன ஒரு நோயாளிய முனியப்பன் இன்னைக்கும் மறக்க முடியாம இருக்கார்.

10 வருஷத்துக்கு முன்னால முனியப்பனுக்கு நல்லா தெரிஞ்சவர் ஒருத்தர், ஒரு நோயாளியக் கூப்பிட்டு வந்தார். "கார் ஓட்டும் போது sudden brake போட்டதுல steering wheel வயித்துல இடிச்சுருச்சு, வயிறு வலிக்குது பாருங்கன்னார்." நோயாளி வாயத் திறக்க மாட்டேங்கறான். முனியப்பன் அவனப் படுக்க வச்சு பரிசோதிக்கிறார். வயித்தை எங்க தொட்டாலும் கல்லு கணக்கா இருக்கு (Abdominal Rigidity). வயித்துக்கு x - ray, ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறார் முனியப்பன். Plain x ray. Abdomenல Air under diaphragm. ஸ்கேன்ல intra abdominal haemorrage. ஒடனே மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அந்த நோயாளிய அனுப்பி வைக்கிறார். அங்க ஒடனே அவசர அறுவை சிகிச்சை பண்றாங்க, ரத்தம் ஏத்துறாங்க. நோயாளி தீவிர சிகிச்சை பண்ணியும் பலன் இல்லாம 2 நாள்ல இறந்துர்றான்.

அந்த நோயாளியக் கூப்பிட்டு வந்தவர், அவரோட சேந்தவங்க எல்லாம் அந்த treatment சம்பந்தமான record எல்லாத்தையும் தீ வச்சு கொளுத்திர்றாங்க. அவனுக்கு வயித்துல இரத்தம் கசிஞ்சதுக்குக் காரணம், இவங்க அவனை ஊமை அடியா அடிச்சது தான். நோயாளியும் இவங்களுக்குச் சாதகமா கடைசில சாகிற வரைக்கும் வாயால எதையும் சொல்லாம செத்துப் போய்ட்டான்.

இன்னும் காட்டுமிராண்டித் தனமான வாழ்க்கை நடைமுறையில் உள்ளது. மனிதன் நாகரீகம் அடைந்து விட்டான் என்று யார் சொன்னது ?

Sunday, January 18, 2009

முனியப்பனின் யானைக் கனவுகள்

கனவுகளும், பலன்களும்

இது எந்த அளவுக்கு உண்மை ?

முனியப்பனுக்கும், யானைக்கும் எந்த பிறவில, என்ன தொடர்போ தெரியலை. முனியப்பன் கனவுல யானை வரும். பொதுவா அதிகாலை கனவு தான். சின்னப் பிள்ளைல இருந்தே முனியப்பன் கனவுல யானை வரும். அப்பல்லாம் அதுக்கு அர்த்தம் தெரியாது. இப்ப ஒரு 15 வருஷமாத்தான் அந்த யானைக் கனவுகளை அலசிப் பாக்குறார் முனியப்பன்.

யானை கனவுல வரும், லேசான கனவா என்ன ? யானை முனியப்பனை ஓட ஓட வெரட்டும். சமயத்துல, பயத்துல முனியப்பன் தூக்கம் கலைஞ்சு எந்திரிச்சு கூட ஒக்காந்திருவார். அப்ப ஹார்ட் படக்படக்னு துடிக்கும். படக் படக் நிக்கிறதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். அவ்வளவு பயங்கரமா கனவு இருக்கும்.

சமயத்துல ஒத்த யானை வெரட்டும். சில சமயம் ஒரு யானைக் கூட்டமே முனியப்பனைக் கனவுல வெரட்டும். கனவுல யானை துரத்த, முனியப்பன் ஓட, சும்மா செம thrillஆ இருக்கும். Hollywood படமே எடுக்கலாம். செம chase.

இப்படித்தான் 1995 கடைசில, கனவுல, யானை & யானைக் கூட்டம் முனியப்பனை துரத்துச்சு. ஒரு மூணு மாசம் அப்பப்ப துரத்தும். தினசரி கெடையாது. 1996 பிப்ரவரி வரைக்கும். 1996 பிப்ரவரி 16ந் தேதி முனியப்பனோட ரோல்மாடல், அவுக அப்பா K.வேலுச்சாமி B.A., B.L. தமிழக அரசு நீதித்துறை நீதிபதி (ஓய்வு) மரணத்தைத் தழுவுறார்.

அப்புறம் கனவுல யானையக் காணோம். மறுபடியும் 1999ல யானை கனவுல வருது, ஒரு மூணு மாசம் அப்பப்ப gap விட்டு.1999 ஏப்ரல் 14ந் தேதி முனியப்பனோட பெரியப்பா போய்ச் சேந்துர்றார். அப்பத்தான் முனியப்பன் யானைக் கனவை அலசி, ஆராய்ஞ்சு பாக்குறார். "யானை கனவுல வந்தா, நம்ம வீட்டு ஆளு ஒண்ணு அவுட்ரா."

அப்புறம் யானைக் கனவக் காணோம். 2002 ல மறுபடியும் யானைக் கனவு. இந்த தடவை யானை என்ன செய்யுது ? முனியப்பன் வீட்டுக்குள்ள வந்து ஹால்ல ஒக்காந்துக்குது. முனியப்பனுக்கு ஒரே நடுக்கம். என்ன ஆகுமோன்னு பயம். பயந்தது மாதிரியே மே 11ந் தேதி அவரோட அன்புத்தம்பி மூர்த்தி இறந்துர்றார்.

மறுபடி 2005ல யானைக் கூட்டம் முனியப்பனைக் கனவுல துரத்துது. முனியப்பன் என்ன செய்வார் ? அவரும் ஓடுறார். 2003 மார்ச்ல முனியப்பனோட சித்தப்பா அவுட்.

07.01.09 மதியம் மறுபடியும் முனியப்பன் கனவுல யானை. ஒரு யானை முனியப்பன் வீட்டு முன்னால வந்து நின்னுக்கிட்டு "நீ வீட்டை விட்டு வெளிய வா பாப்பம்"னு முனியப்பனுக்கு சவால் விட்டுக்கிட்டிருக்கு. என்ன ஆகப் போகுதோன்னு முனியப்பனுக்குக் கவலை. இந்தத் தடவை பகல் கனவு. பகல் கனவு பலிக்காதும்பாங்களே, அப்படின்னும் ஒரு யோசனை, முனியப்பன் மனசுக்குள்ள ஓடுது. இருந்தாலும் கனவுல யானை, அதான் பயம். நெனச்ச மாதிரியே 09.01.09ந்தேதி முனியப்பன் அப்பாவோட தங்கச்சி அவுட். இந்தத் தடவை ரொம்ப speed. கனவு வந்த ரெண்டு நாள்ல result.

கனவுல யானை வெரட்டுனா முனியப்பனோட தந்தை வழி உறவுல ஒரு இறப்பு நிச்சயம். இது அனுபவப்பூர்வமான உண்மை.

இளவயது மரணங்கள்

தாய்தந்தை வளர்த்த பின்
தானே வளர்ந்து
ஒரு வேலை கிடைத்து
ஒரு வழியாக செட்டில் ஆகும் சமயம்

அனைவரும் ஆவலோடு அவன் வளர்ச்சியை
அவனை ஆசையாய் எதிர்பார்க்கும் நேரம்
அவன் மரணம் இளவயதில்
அது அனைவர் உள்ளத்தையும் உருக்குகிறது

உயிரை இழக்கும் அவன்
உயிரை எடுக்கும் காலன் கொடியவன்

முப்பது வயது முருகானந்தம்
மூளையில் புற்று நோய்
அன்பான காதலியையும்
அத்துடன் குடும்பத்தையும்
மரணத்தால் தவிக்க விட்டவன்

இருபத்தேழு வயது முருகேசனுக்கு
இடியோபதிக் திராம்போ சைட்டோ னிக் பர்ப்யூரா
மூளையில் கட்டுப்படுத்த முடியாத இரத்தக் கசிவு
முடிவில் மரணம்

முப்பது வயது மகேந்திரன்
மூளையில் கட்டி
மனைவி மகளை
மரணத்தால் பிரிந்தான்

24 வயது ராஜேஸ்வரியை மரணத்தால்
இரு பிள்ளைகளிடமிருந்து பிரித்த Blood Cancer

மாடியில் இருந்து தவறிவிழுந்து
மரணத்தைத் தழுவிய ராம்குமார் I yr B.com

மேல்நாட்டில் வேலைக்குச் சென்று
மேல்உலகம் சென்ற மோகன் குமார், கார்த்தி, வினோத்

சொல்லிக் கொண்டே போகலாம்
சொல்ல முடியாத இளவயது மரணங்கள்
என்ன பிழை செய்தார்கள் இவர்கள்
எதற்காக இறைவா இளம்வயதில் பறிக்கிறாய் ?

இது போன்ற இளவயது மரணங்களால்
இறைவா உனக்கு என்ன அல்ப சந்தோஷம்

படைப்பவனும் நீ
பாதியில் அழைப்பவனும் நீ
இனி இந்த விளையாட்டு போதும்
இதயங்கள் நொறுங்காமல் குடும்பங்கள் சிதையாமல்
காப்பது உன் வேலை
கலங்க வைக்காதே இனி ........

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் சிவனாண்டி

நீங்கள் சந்திக்காத மனிதர்கள்
சிவனாண்டியும் நாட்டுக்கோழி முட்டையும்

சிவனாண்டினா ... உடனே சின்னப்பையன்னு நெனச்சுராதீங்க. இவர் 80 வயசு பெருசு. மதுரைல பைபாஸ் ரோட்ல ஒரு எடத்துக்கு காவல்காரரா ரொம்ப வருஷமா இருக்கார். இந்த வயசுலேயும் தானே பொங்கிச் சாப்பிட வேண்டிய சூழ்நிலை

அவரோடது. அடுத்தவங்க செய்ற சின்ன சின்ன உதவிகள்ல அவர் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு. சிவனாண்டி ஒடம்புக்கு சுகமில்லைன்னா நேரா கெளம்பி முனியப்பன் கிட்ட வந்துருவார். முனியப்பன் அவருக்கு வைத்தியம் பாத்து அவர் பீஸ் குடுத்தா வாங்கிக்குவார். பீஸ் குடுக்கலைன்னாலும் விட்ருவார். சிவனாண்டி பீஸ் குடுத்தாலும் 10 ரூபா தான் குடுப்பார். இப்ப கொஞ்ச நாளா அந்த 10 ரூபாவும் குடுக்கிறது இல்லை. இப்ப ஒருநாள் சிவனாண்டி ட்ரீட்மென்ட்டுக்கு வந்தார்.

வைத்தியம் பாத்து முடிச்சிட்டு கெளம்பும் போது நேரா முனியப்பன்கிட்ட வந்தார் சட்டைப் பைக்குள்ள கைய விட்டார். ஒரு Carry bag; அதை எடுத்தார். அந்த Carry bagல நாலு முட்டை, "நாட்டுக்கோழி முட்டை சின்ன வெங்காயம் சேத்து, ஆம்லேட் போட்டு சாப்பிடுங்க"ன்னார். முனியப்பன் ஒரு நொடி அசந்துட்டார். நம்ம மேல பெருசு இவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு.

இப்ப முனியப்பன் வீட்ல நாட்டுக்கோழி முட்டை ஆம்லேட்; சிவனாண்டி வந்துட்டார்னா. கிராமத்து மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமே தனி.

Tuesday, January 13, 2009

பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Friday, January 9, 2009

எரியிற வீட்டில் ...

முனியப்பன், December 21 - 2008, போலியோ

போலியோங்கறது, இளம்பிள்ளை வாதம், சின்னப் பிள்ளைகளைத் தாக்கக்கூடிய ஒரு வைரஸ் வியாதி, ஒரு பக்க கால் நல்லா நடக்க முடியாம போயிடும். இந்த வியாதி, தடுப்பு மருந்துகள் மூலம் தடுக்கப்படக்கூடிய ஒன்று.

இந்தியாவுல போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட இந்திய அரசாங்கம் வருடத்திற்கு ஒருமுறை, இந்தியா முழுவதும் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு45 நாள் இடைவெளியில் 2 தடவை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் கொடுக்கிறார்கள்.

2008 டிசம்பர் 21ல ஒரு முகாம் நடந்துச்சு, போலியோ சொட்டு மருந்து கொடுத்தாங்க. அதுலஒரு குழந்தை செத்துப் போய்ட்டதா திருப்பி, திருப்பி TVல FLASH பண்றாங்க. என்ன ஆகும்? சின்னப்பிள்ளைங்க இல்லையா.. எல்லா ஊர்லயும் தாய்மார்கள் பதறிப்போய் அவங்கவங்க பிள்ளைய தூக்கிட்டு பக்கத்துல இருக்க அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்குப் பறக்கறாங்க.

முனியப்பன் அவர் கிளினிக்ல சாயங்காலம் 5.30 மணிக்குத் தொழில ஆரம்பிக்கிறார். ஒண்ணொண்ணா பிள்ளையத் தூக்கிட்டு வர ஆரம்பிக்கிறாங்க. "போலியோ சொட்டு மருந்து கொடுத்தோம், பிள்ளை நல்லா இருக்கான்னு செக் பண்ணுங்க".

முனியப்பன் TV என்னைக்காவது பாக்குற ஆளு, அதுனால TVல தனிப்பட்ட ஆதாயத்துக்காக Flash பண்ண News அவருக்குத் தெரியாது. பிள்ளையத் தூக்கிட்டு வர்றவங்க தான் சொல்றாங்க "TV ல சொல்றாங்க. அந்த ஊர்ல போலியோ சொட்டு மருந்து கொடுத்து ஒரு பிள்ளை செத்துப்போச்சு, ஒங்க பிள்ளைய பக்கத்துல இருக்க டாக்டர்கிட்ட காமிச்சுக்குங்கன்னு சொல்றாங்க."

முனியப்பன் உடனே அவருடைய நண்பர் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் டாக்டர்.சம்பத்-ஐ தொலைபேசியில் ஆலோசனை கேட்கிறார். டாக்டர். சம்பத், போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால் எதுவும் வராது என்று பதட்டத்துடன் வரும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கும்படி சொல்கிறார்.

பொன்மேனில 2 பிள்ளை செத்துப்போச்சு, மாப்பாளையத்துல 5 பிள்ளை செத்துப்போச்சு, ஆரப்பாளையத்துல 2 பிள்ளை செத்துப்போச்சு இப்படியான புரளி தகவலுடன் முனியப்பனிடம் கூட்டம். முனியப்பன் அவரிடம் வரும் பிள்ளைகளைப் பரிசோதித்து பெற்றோரிடம் "பிள்ளை நல்லா இருக்கு, பயப்படாதீங்க" அப்படின்னு சொல்லி அனுப்புறார்.

இந்த தலைப்புல எழுதக் காரணம் இருக்கு. Flash பண்ணிய TV தனிப்பட்ட ஆதாயத்துக்காக, அது அரசியல். அது நமக்குத் தேவையில்லை. தமிழ்நாடு முழுவதும் நடந்த இந்த சம்பவத்தால், அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமல்ல, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் போலியோ சொட்டுமருந்து கொடுத்த பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு பெற்றோர்கள் குவிந்தனர்.

அரசு ஆஸ்பத்திரிகளில் ஆலோசனை இலவசம். பல தனியார் மருத்துவர்களும் இலவசமாக ஆலோசனை வழங்கினர். சில தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆலோசனைக்குக் கட்டணம் வாங்கினர். தனியார் என்று வரும் பொழுதே ஆலோசனைக்குக் கட்டணம் தான். அதில் தவறில்லை.

கொடுமையான விஷயம், ஒரு சில தனியார் மருத்துவமனைகளில், "மாற்று மருந்து போடுகிறோம்னு" சொல்லி ஊசி போட்டு பணம் பறித்தனர். இவர்களை சக மருத்துவர் என்று சொல்லவே வெட்கமாயிருக்கிறது. அது ஒரு அவசரமான சூழ்நிலை. அன்னைக்கு சமூக கடமையாற்றாமல் மக்களை ஏமாற்றி சுரண்டியது எந்த வகையில் சேரும் என்று புரியவில்லை. "எரியற வீட்டில் புடுங்கியது ஆதாயம்" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

நம்மாளு முனியப்பன் என்ன செஞ்சிருப்பார். அவர் தான் பொழைக்கத் தெரியாத ஆளாச்சே. ஒருத்தர் கிட்டயும் பணம் வாங்கவில்லை. அவர் போலியோ சொட்டு மருந்து ஆலோசனை வழங்கியது 210 பேருக்கு.

Tuesday, January 6, 2009

CASE SHEET (நச்சுக்கொடி)

முனியப்பனும் நச்சுக்கொடியும்

பிரசவ நேரத்துல மொதல்ல தண்ணிக்குடம் உடையும், அடுத்து பிள்ளை பிறக்கும். கடைசியா நச்சுக்கொடி என்ற நஞ்சுக்கொடி (Placenta) வெளியேறும். இது Normal Procedure. சமயத்துல நச்சுக்கொடி வெளியேறாமா நச்சுக்கொடி உள்ளேயே இருந்துக்கிடும். Retained Placenta. அதை வெளியேத்தணும். ஆச்சா, இதுல நம்ம முனியப்பன் எங்க வர்றார் பாருங்க ...

முனியப்பன் அப்ப இளம் மருத்துவர். அப்பத்தான் மருத்துவம் படிச்சு முடிச்சு Private practice ஆரம்பிக்கிறார். எடம் நெல்லை மாவட்டத்துல ஆராம்பண்ணை கிராமம். Note பண்ணிக்குங்க, நம்மாளு ஒரு கிராமத்துல 3 வருஷம் மருத்துவம் பாத்திருக்கார். கிராமப்புற மருத்துவம்.

அந்த கிராமம் முஸ்லீம் சமுதாயத்தினர் பெருமளவு வசிக்கிற கிராமம். மிகவும் பக்தியான Orthodox முஸ்லீம் கிராமம். அப்ப ஒருநாள் அங்க ஒரு பொண்ணுக்கு டெலிவரி. பிரசவம் அரசு ஆஸ்பத்திரில உள்ள உதவி செவிலியர் பாக்குறாங்க. பிள்ளை பிறந்துருச்சு, நச்சுக்கொடி வரலை. எவ்வளவு முயற்சி பண்ணியும் வரலை. "என்ன செய்யலாம், முனியப்பனைக் கூப்பிடு". முனியப்பனைக் கூப்பிட்டு விடுறாங்க.

முனியப்பன் உபகரணங்களோட அவங்க வீட்டுக்குப் போனா 100 - 120 பேர் வீட்டுக்கு வெளியே, வீட்டுக்கு உள்ள 20 - 30 பெண்கள். முனியப்பன் நெல்லை மருத்துவக் கல்லூரில படிச்சவர் இல்லையா, தொழில்ல, ஜகஜ்ஜால கில்லாடி. ரெண்டு நிமிஷத்துல நச்சுக்கொடிய (Placenta) வெளியே எடுத்து அவங்க கைல குடுத்துட்டு வந்துர்றார். அவங்களுக்கு பரம திருப்தி.

அந்தக் கிராமம் தான், முனியப்பனுக்கு கிராமத்து மக்களோட பாசத்தையும், அன்பையும் சொல்லிக் கொடுத்தது. இன்னைக்கு 24 வருஷம் கழிச்சும், அங்க போய்ட்டு வர்றார் முனியப்பன்.

O&G பிரசவம் பாக்கறதுல கெட்டிக்காரர்கள் ஆண் மருத்துவர்கள் தான்.

ஆதி காலத்து Dr. நோபிள் அப்புறம் G.பழனிச்சாமி, பாஸ்கர் ராவ், Dr. பழனிவேல் இப்பொழுது Dr.கோபிநாத், Dr.ரத்தினகுமார், Dr.ஸ்ரீராம்குமார், Dr.குரியன் ஜோசப்

CASE SHEET (ஸ்டார்ட்டிங் டிரபிள்)

Two வீலர்ல ஸ்டார்ட்டிங் டிரபிள் வரும். Four வீலர்ல வரும். Lifeலயும் வரும்.
எப்ப... ?

வாழ்க்கைல முக்கியமான விஷயம் கல்யாணம். கல்யாணம் முடிஞ்ச உடனே பர்ஸ்ட் நைட். அங்க வர்ற ஸ்டார்டிங் ட்ரபிள்தான் இந்த டாபிக். எல்லாருக்கும் இது வராது. ஏன்னா மன்மதக் கலை சொல்லித் தெரிவதில்லை. ஒரு சிலருக்குத் தான் இது.

அதுல ஒரு சிலர் முனியப்பன்கிட்ட கல்யாணத்துக்கு அடுத்த நாளே வந்துருவாங்க. சார், அண்ணே அவங்களுக்கு எப்படி பிடிக்குதோ அப்படி கூப்பிடுவாங்க. வீர விளையாட்டுல்ல, அதுல ஃபெயில் ஆனா எப்படி இருக்கும் ...? மானப் பிரச்சனை.

பொதுவா பயம், செயல்படுறதுல குறைபாடு, அறியாமை இதுல ஒண்ணு தான் இருக்கும். கொஞ்சம் பயத்தைப் போக்கிட்டோ ம்னா போதும். அன்னைக்கே கரெக்டாயிரும். சுருங்கிப்போய், பதறிப்போய் வந்த மூஞ்சி, அடுத்து வரும் போது புன்னகையோடு மலர்ந்திருக்கும் பாருங்க, கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். இமயத்தில் கொடி நாட்டிய சந்தோஷம்.

Monday, January 5, 2009

மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள்

முனியப்பனின் நெல்லை மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள்

ஆரம்ப காலத்திலிருந்து முனியப்பனுக்கு
அமர்க்களமான ஆசிரியர்கள்
தண்டபாணி கற்றுத்
தந்த Physiology

பத்மா ராமமூர்த்தி - மாணவர்கள் மிரளும் பெண்புலி
படிக்க வைத்த Biochemistry
கனகாம்பாள் Pharmacology
கண்டிப்பான ஆசிரியை
கலகலப்பான TC
சுலபமாக சொல்லித் தந்த Forenzic Medicine

வகுப்பெடுக்கும் போது புகைபிடிக்கும் (Cigarette)
வழக்கம் உள்ள விழி நிபுணர் வேதாந்தம்
மருத்துவம் சொல்லிக் கொடுத்த
மகத்தான சைலபதி, சுந்தரராஜன்
விடிய விடிய சொல்லிக் கொடுத்த
வேணுகோபால் M.சீனிவாசன்

அறுவை சிகிச்சைக்கு
அதிரடியான DKP
அவரைக் கண்டால்
அலறி ஓடும் அரைகுறை மாணவர்கள்
கரகர குரல் வளம்
கருத்தான பாடம் DKPயிடம்

முறுக்கு மீசை R.Hariharan, அவர் முன்
முறுக்கிய அரும்பு மீசையுடன் முனியப்பன்
மகப்பேறு மருத்துவம் பற்றி
மணியாக சொல்லிய காந்திமதி, விஜயலெட்சுமி
எலும்பு முறிவுக்கு
எடுப்பான முருகேசன்

இளைய தலைமுறை அக்னஸ்ன்
இனிமையான பாட நாட்கள்
வயிற்றில் குத்தி, தோளில் கைபோட்டு
வளர்த்த ஸ்டீபன் சுவாமிதாஸ்

அவசரமான அறுவை சிகிச்சைக்கு, முனியப்பனை
அழைக்கும் அன்பான T.M.வைகுண்டராமன்
அமைதியான S.ராமகிருஷ்ணன், பாலஸ் D. பிரகாஷ்
அவர்களிடமிருந்த அருமையான நாட்கள்
இவர்கள் வார்ப்பில் உருவான முனியப்பன்
இன்றும் அவர்களை நினைக்கிறான் நன்றியுடன்

Thursday, January 1, 2009

CASE SHEET (தாய்-மகன்)

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை இன்னைக்கும் மக்கள் பயப்படுற வியாதி. மஞ்சள் காமாலை வந்தா பாதிப்பேர் என்ன, முக்காவாசிப் பேர் நாட்டு மருந்து சாப்பிடப் போயிருவாங்க.

புதுத் தாமரைப் பட்டில கண்ணுல மருந்து ஊத்துவாங்க. அச்சம்பத்துல தலைல பத்து போடுவாங்க, காரைக்குடில உள்ளுக்கு மருந்து கொடுத்து "வயித்தால (Diarrhoea) போகும். பயப்படாத" அப்படின்னு சொல்லி அனுப்புவாங்க. உசிலம்பட்டி பக்கத்தில முன் கைல (Forearm) wrist-க்கு பக்கத்துல வட்டமா சூடு போடுவாங்க.

ஆங்கில வைத்தியம் தனி. முனியப்பன் பாத்த தாயும் மகனும் அசத்திட்டாங்க. தாய்க்கு வயசு 80, மகனுக்கு வயசுக்கு 60. ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல மஞ்சள் காமாலை. இரத்தத்தில பிலிருபின் அளவு அதிகமாக இருக்கறதால ரெண்டு பேரையும் பெட்ல அட்மிட் பண்றார் முனியப்பன். ரெண்டு பேருக்கும் எதிர் எதிர் ரூம்.

மஞ்சள் காமாலைக்கு முக்கியமா ரெஸ்ட் தேவை, அதுனால முனியப்பன் ஸ்ட்ரிக்டா ரெண்டு பேருக்கும் சொல்லிட்டார். ஒருத்தரை ஒருத்தர் பாக்காம, அவங்கவங்க ரூம்லயே இருக்கணும்னு. தாய்-மகன் எதிர் எதிர் ரூம். அப்படியிருந்தும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாக்காம 10 நாள் ஓடுது. இரத்தத்துல ரெண்டு பேருக்குமே பிலிருபின் 10க்கு மேல, மஞ்சள் காமாலை டூமச். அதுனால தான் ஒருத்தரை ஒருத்தர் பாக்க தடா, அப்புறம் ரெண்டு பேருக்கும் சுகமாச்சு, அப்பத்தான் ரெண்டு பேரையும் ஒருத்தரை ஒருத்தர் பாக்க விட்டார் முனியப்பன்.

முனியப்பன் டூமச் கண்ட்ரோலா இருக்கக் காரணம் தாய்-மகன், ரெண்டு பேரும் நல்லபடியாகனும்னு தான். அதே மாதிரி தாய் மகன் ரெண்டு பேரும் முனியப்பன் பேச்சை இம்மி பிசகாம கடைப் பிடிச்சு நல்லா சுகமா வீட்டுக்குத் திரும்பினாங்க.

தாய்ப்பாசம், பிள்ளைப் பாசம் ரெண்டையும் தாண்டி, தாய் மகன் ரெண்டு பேரும் இருந்தது ரொம்பப் பெரிய விஷயம்.

நீங்கள் சந்திக்காத மனிதர்கள்

ஒரு ரூபாய் டாக்டர்

ஒத்த ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரை குடுக்க முடியுமா ? குடுத்தார் 1980களில் ஒரு டாக்டர். அவர் பேரே ஒரு ரூபா டாக்டர், அவர் மருத்துவத் தொழில் பாத்தது மேலப்பாளையம் திருநெல்வேலி. அவர் பேரு டாக்டர் சாகுல் ஹமீது.

திருநெல்வேலில எல்லா டாக்டரும் அந்த காலகட்டத்துல 3 ரூபாய் அல்லது 5 ரூபாய்க்கு ஊசி போட்டுக்கிட்டிருந்த நேரம், இவர் மட்டும் 1 ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரை கொடுப்பார். அப்ப சிறப்பு மருத்துவர் கூட பீஸா 10 ரூபாய் தான் வாங்கிட்டிருந்தாங்க. கைல காசு இல்லைன்னா .... ஃப்ரியா ஊசி போட்டு, கைல செலவுக்கும் காசு குடுப்பார்.

முனியப்பன் நெல்லைய விட்டு வந்து 25 வருஷமாச்சு. இப்ப டாக்டர் சாகுல் ஹமீது எப்படியிருக்கார்னு விசாரிச்சுப் பாத்தா, டாக்டர் மேற்படிப்பா MS படிச்சு ஆபரேசன் பண்ணிகிட்டு நல்லா இருக்கார்னு சொன்னாங்க.

இப்ப திருநெல்வேலி பேட்டைல அவர் இருக்கார்.