Tuesday, April 27, 2010

400 ரூபா - Bell's Palsy

மீனாட்சி சுந்தரம் மதுரை TVSல வேல பாத்து ரிட்டயர் ஆயிர்றாரு. அவருக்கு 3 மகன்ங்க. அவர் சம்பாதிச்ச 25 லட்ச ரூபா வீட்டை மகன்க 3 பேருக்கும் எழுதி வச்சுர்றார். மகன்களோட அதே வீட்ல குடியிருக்கார். சாப்பாடு மகன்க வீட்ல.

தமிழக அரசால் மாதாமாதம் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகையான ரூ.400 அவர் காபி செலவுக்கு. திடீர்னு அவருக்கு Bell's Palsy எனும் தலையிலுள்ள நரம்பு தாக்கம் ஆகுது. வாய் கோணிக்கிது, எச்சி ஒழுகுது. ஒரு கண்ணை மூட முடியல.

மகன் 4 நாள் அவரை TVS ஆஸ்பத்திரில கூப்பிட்டுக் கொண்டு போய் 4 கரண்ட் (Faradic Stimulation) வச்சு விடுறார். அதுக்கப்புறம் கூப்பிட்டுப்போக மாட்டேங்கிறார்.ஏன்னா, அவருக்கு வைத்தியத்துக்கான உச்ச வரம்பு ரூ.5000 மட்டும். அப்பனுக்குப் பாத்தா, பிள்ளைகளுக்கு ஒண்ணுன்னா என்ன செய்யறது?

மகன் கைவிட்டாச்சு, மீனாட்சி சுந்தரம் என்ன செய்வார்? முனியப்பன் கிட்ட வர்றார். நெலமைய சொல்றார். முனியப்பன் "பெரிய ஆஸ்பத்திரிக்கு போகலாமில்ல". மீனாட்சி சுந்தரம் அழுக ஆரம்பிச்சுர்றார். பெரிய ஆஸ்பத்திரிக்குப் போக பஸ்ஸூக்கு காசு வேணும்ல, சும்மாவா ஏத்திட்டுப் போவாங்க.

அவரோட நெலமையப் பாருங்க, பெத்த பிள்ளைங்க 3 பேரு, வீடு குடுத்திருக்காரு, சோறு மட்டும் போடுவாங்க, அதோட நிப்பாட்டிக்கணும்.

கலி காலமய்யா .... !

Monday, April 19, 2010

நீங்கதான் சொன்னீங்களாம்ல ...?!!!

முனியப்பனுக்கு நேரும் நோயாளி அனுபவங்கள் வித்தியாசமா இருக்கும்.

20 நாளைக்கு முன்னால ஒரு பாட்டிக்கு வயித்தால ஓடுது. பெரிய இடத்துப் பாட்டி - 80 வயசு. முனியப்பன் வள்ளிய அவங்க வீட்டுக்கு அனுப்பி, வயித்தால நிக்கிறதுக்கு ஊசி போட்டு, மாத்திரை குடுத்து அனுப்பியும் வயித்தால ஓடுது, நிக்கல.

முனியப்பன் பாட்டிய பெட்ல சேத்து ட்ரீட்மெண்ட் பாக்க சொல்றார். பதிலே இல்லை. 4 நாள் கழிச்சு பாட்டிய பாக்க கூப்பிட்டு விடுறாங்க, வள்ளி போய் பாட்டிய பாத்தா Dead.

அப்புறம் ஒருநாள் கழிச்சு அந்த பெரிய இடத்துக்கு போய்ட்டு வர்ற ஆள் ஒருத்தர் ட்ரீட்மெண்டுக்கு வர்றார், அவருக்கான வைத்தியம் முடிஞ்சவுடனே பாட்டிய பத்தி பேசுனார். அப்ப ஒரு குண்டத் தூக்கி போட்டார் பாருங்க 'பாட்டி பொழைக்காது, ட்ரீட்மெண்ட் பாக்காதீங்கன்னு நீங்கதான் சொன்னீங்களாம்ல' அப்படின்னு.

பாட்டிய வைத்தியம் பார்க்க மனசில்லாம, போக விட்டுட்டு அதுக்கு ஒரு சப்பைக்கட்டு. பார்த்தீங்களா கொடுமையை.

Tuesday, April 6, 2010

மொட்டை- லட்சன்

நான் ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா ? - லட்சன்

முனியப்பன் மக்களிடம் வெகு நெருக்கமாகப் பழகக்கூடியவர். வயது வித்தியாசமின்றி அவரது நட்பு வட்டாரம் பரந்தது. அப்படி நெருக்கமானவன் லட்சன் ஆதித்யா. வயது 7.

லட்சன் துறுதுறு பையன். அவனோட தாத்தாவுக்கு Pet. தாத்தா ராமலிங்கமும் லட்சன் மேல் உயிரானவர். 39 வயதான லட்சனின் தந்தை திடீரென ஹார்ட் அட்டாக்கில் உயிரிழக்கிறார். குடும்பத்துக்கே அதிர்ச்சி.

சிறிதுநாள் கழித்து முனியப்பனிடம் ட்ரீட்மெண்டுக்கு வந்த லட்சன் முனியப்பனிடம் சொன்னது நான் "ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா? எங்கப்பா செத்துப்போயிட்டார்"

லட்சனைத் தேற்ற வார்த்தைகள் இல்லாமல் முதுகில் தட்டிக் கொடுத்தார் முனியப்பன்.