Sunday, May 24, 2009

நக்காரணர்

நக்காரணர்...கேள்விப்படாத பேரா இருக்கா. பழந்தமிழர்கள் கையாண்ட வார்த்தை இது.

பழந்தமிழர்கள் 'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்று பல தேசங்களுக்கு கடல் மார்க்கமாக சென்று வணிகம் செய்தனர். முக்கியமாக, ரோம், சீனா, மலேசியா, ஜாவா, சுமத்ரா,

வங்காளவிரிகுடா மார்க்கமாக அவர்கள் பயணம் செய்யும் பொழுது அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக செல்லும் பொழுது மனிதனை தின்னக் கூடிய ஆதிவாசிகளை கடந்திருக்கின்றனர். அவர்களை 'நக்காரணர்' என்றழைத்தனர். இன்று ஜாரவாஸ், சென்டினல்ஸ் எனப்படும் பூர்வீக குடிகள். அவர்களில் இன்று ஜாரவாஸ் திருந்தியிருக்கின்றனர். இன்னும் சென்டினல்ஸ் குடிகள் அதே குணத்தோடு தான் இருக்கின்றனர். அவர்களை தொந்தரவு பண்ணாமல் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் மாறாமல், கண்காணிப்பில் இந்திய அரசாங்கம் வைத்திருக்கிறது.

ஜாரவாஸ், சென்டினல்ஸ் இந்த இரு பூர்வீக குடிகளும் இன்னும் ஆடை அணியும் பழக்கமில்லாதவர்கள். ஜாரவாஸ் மட்டும் மற்ற மனிதர்களோடு பழகத் தொடங்கியிருக்கின்றனர். சுனாமியை மறந்திருக்க மாட்டீர்கள். அப்பொழுது சென்டினல்ஸ் வசிக்கும் தீவை பார்வையிடச் சென்ற இராணுவ ஹெலிகாப்டரை ஆடையில்லாத சென்டினல்ஸ் பழங்குடி ஒருவர் கையில் உள்ள மிக நீளமான ஈட்டியால் துரத்துவது படம் பிடிக்கப்பட்டு, ஆங்கில நாளேடான ஹிந்துவில் பிரசுரமாகியிருந்தது. அந்த பழங்குடியின் ஆக்ரோஷம் 21ம் நூற்றாண்டில் இப்படி இருக்கும் போது பண்டைய காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்.

வியாபார நிமித்தம் கப்பலில் செல்பவர்கள் அந்த பக்கம் போக வேண்டாம் என்று சிலப்பதிகாரத்திலும் குறிப்பிருக்கிறது. நக்காரணர்களிடம் மாட்டி தப்பித்து வந்தவர்களின் கதைகளும் சொல்லப்படுகிறது.

பழந்தமிழரின் வணிகம், மனிதனை சாப்பிடும் பூர்வீக குடிகளை பற்றிய அவர்களது அனுபவம், நக்காரணர் என்று அவர்களுக்கு பெயர் சூட்டியது, இன்னும் அந்த பூர்வீக குடிகள் அங்கே இருப்பது. அதை காலச் சுவட்டில் பதிவு செய்தது, பழந்தமிழர்களுக்கு ஒரு சல்யூட்

Tuesday, May 12, 2009

பேப்பர் சீனிவாசன் - எதுக்குன்னு புரியலை

பேப்பர் சீனிவாசன். பேப்ர் போடுறவன். 32 வயசு. பேப்பர் ஏஜென்சி எடுத்து நாளிதழ்கள், வார இதழ்கள், வீடுவீடாப் போடுறவன். பெட்டிக் கடை வச்சிருக்கான். அதுலயும் நாளிதழ், பத்திரிகைகள். பெட்டிக்கடை வச்சா சிகரெட், மிட்டாய் விக்கணும்ல, உண்டு. மெயின் தொழில் பேப்பர், புக்.

மொதல்ல வீடு வீடா பேப்பர் போடுறதுக்கு சீனிவாசன்ட்ட ரெண்டு பயலுக சம்பளத்துக்கு இருந்தாய்ங்க. 5 லைன், அதுல 4 லைன்ல பயலுவ பேப்பர் போடுவாய்ங்க. சீனிவாசன் 1 லைன் பேப்பர் போடுவான். இப்பத்தான் வேலைக்கு எல்லா இடத்துலயும் பயலுக கெடைக்க மாட்டேன்கிறாங்களே. சீனிவாசன்கிட்ட ஒரு வரு\மா பயலுக பேப்பர் போடுறதுக்கு இல்லை. அதுனால அவனே 5 லைன்லயும் பேப்பர் போடுறான். கடின உழைப்பாளி.

தலைப்புக்கான விஷயத்துக்கு வருவோமா ... எல்லா எடத்துலயும் மொத மாசம் போட்ட பேப்பருக்கு பில்லைப் போட்டுக் காசை வாங்கிடுவான் சீனிவாசன். முனியப்பன்கிட்டயும் மொதல்ல பேப்பர் காசை வாங்கிக்கிட்டிருந்தவன் இப்ப பேப்பர் போடுறதுக்குள்ள ரூபாயை வாங்காம பேப்பர் போட்டுக்கிட்டிருக்கான் 5 வருஷமா. "என்னப்பான்னா ?" "இந்தா வாங்கிக்கிடுறேன் சார்" அப்படிம்பான் அவ்வளவு தான்.

முனியப்பன் கிளினிக்ல தான் இப்படின்னா, முனியப்பன் அம்மாகிட்டயும் பேப்பர் ரூவா வாங்க மாட்டேங்கிறான். அடுத்த வீட்ல பில் போட்டு ரூவா வாங்கிக்கிட்ருப்பான். முனியப்பன் அம்மா "சீனிவாசா, இங்க வந்து ரூவா வாங்கிட்டுப் போ" அப்படிம்பாங்க. அங்கயும் "இந்தா வாரேம்மா" அப்படிம்பான். முனியப்பன் அம்மா வீட்டுக்குள்ள போயி நரூவா எடுத்துட்டு வருவாங்க.சீனிவாசன் escape ஆயிருப்பான். இதுவரைக்கும் சீனிவாசன், முனியப்பன்கிட்டயும் முனியப்பன் அம்மாக்கிட்டயும் தினத்தந்தி, ஹிண்டு, தினமணி நாளிதழ்கள் போட்டதுக்கு வாங்க வேண்டியது ரூ 12,000 (பனிரெண்டாயிரம்).

ஏன் வாங்காம இருக்கான்னு அவன்கிட்டயும் கேட்டுப் பாத்தாச்சு. சிரிச்சிட்டு ஓடிருவான் சீனிவாசன். அதுக்கான காரணம் புரியலை. 1. அவன் கல்யாணத்துக்குப் பணம் சேக்குறானா 2. பேங்க விட முனியப்பன், முனியப்பன் அம்மாகிட்ட பணம் இருக்கது பாதுகாப்பானதுன்னு நெனக்கிறானா ? 3. முனியப்பனுக்கு இலவசமா பேப்பர் போட வேற யாரும் பணம் கட்டுறாங்களா ? (சான்ஸே இல்லை).

இப்படி முனியப்பன் மனசுக்குள்ள பல கேள்விகள். இது வரைக்கும் விடை கிடைக்கலை. ஒங்க மனசுல ஏதும் தோணுதா.... ?

Friday, May 8, 2009

Case Sheet (முனியப்பனும் 'தல' யும்)

முனியப்பன் மதுரையில் ஒரு பொது மருத்துவர். அவரிடம் ஒரு விநோதமான கேஸ்.

மாலை 7 மணி இருக்கும். முனியப்பனின் பரபரப்பான ஆலோசனை நேரம். ஒரு பெண்ணை, 30-32 வயசு இருக்கும். ஒருத்தர் சிகிச்சைக்காகக் கூப்பிட்டு வர்றார். அந்தப் பொண்ணு கிடுகிடுன்னு நடுங்குது, பேச்சு வரல. என்னன்னு கேட்டா ... கூப்பிட்டு

வந்த ஆளும் சரியா சொல்ல மாட்டேங்கிறார். முனியப்பன் பரிசோதிச்சுப் பாத்துட்டு "இவங்க அதிர்ச்சில (shock) இருக்காங்க" னு சொல்லிட்டு, ஊசி போட்டு மாத்திரை கொடுத்து அனுப்புறார்.

ஒரு மணி நேரம் கழிச்சு அந்தப் பெண்ணோட அதிர்ச்சிக்கு காரணம் தெரிய வருது.

அந்தப் பொண்ணு வீட்ல இருந்த கெளம்பி ஒரு விஷேஷத்துக்கு போறதுக்காக மெயின் ரோட்ல நடந்து கிட்டு இருக்கு, நடந்து வரும் போது குனிஞ்சு பாக்காம நடக்குதா... ஒரு பொருளை கால்ல எத்திருது. வித்தியாசம இருக்கே .... என்னத்த எத்தினோம்னு குனிஞ்சு பாக்குது. அந்தப் பொண்ணு எத்தினது மனித 'தல'. அப்புறம் எப்படி shock அடிக்காம இருக்கும் ....... ?

பழிக்குப் பழியா நடந்த கொலை சம்பவம் அது. ஒரு எடத்துல கொலய பண்ணிட்டு, ஏற்கனவே 2 வருஷத்துக்கு முன்னால கொலை நடந்த எடத்துல, தலய மட்டும் கொண்டு வந்து வச்சி, கணக்க நேர் பண்ணிட்டாங்க ........... !

Monday, May 4, 2009

சண்டையும் சமாதானமும்

உன் குத்துக்கள்
என்னைப் பதம் பார்க்கின்றன
எட்டி உதைக்கும் உன்கால்கள்
என்னில் வலியைச் சேர்க்கிறது

முறைத்துப் பார்த்து
முகம் திருப்புகிறாய்
ஏனிந்த கோபம்
என்னிடம் உனக்கு

காரணம் தெரியாமல் தவித்தபின்
காரணம் தெரிகிறது
என்னிடம் தான் தவறு
உன்னிடம் அல்ல என்று

தங்கைமகன் அமரே
தவச் செல்வனே
உன் கோபம் போக்க
என்னிடமா இல்லை வழிகள்

மன்னிப்புக் கேட்டவுடன்
மயங்கி மறப்பாய் உன் கோபத்தை....