Thursday, April 30, 2009

வழக்கொழிந்த பழக்கங்கள்

தமிழர்கள் பண்பு மிக்கவர்கள் பெருந்தன்மையானவர்கள், இன்று தமிழன் நிச்சயமாக சுயநலவாதியாய் மாறிவிட்டான், வெகு சிலரைத் தவிர.

இன்றைக்கு நடைமுறையில் சாத்தியமில்லாத பழக்கங்கள் கிட்டத்தட்ட 60-70 வருடங்கள் முன்கூட பழக்கத்தில் இருந்தன.

ஒரு சில தாய்மார்கள் தன் பிள்ளைக்கு குடுத்தது போக மிச்சம் தாய்ப்பால் இருக்கும். அதை வீணாக்காமல் வேறொரு பிள்ளைக்கு குடுப்பார்கள், இது கிராமங்களில் இருந்த வழக்கம்.

பிரசவத்தில் தாயை இழந்த பிள்ளைகளை வேறொரு தாய், தாய்ப்பால் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். இந்த பழக்கம் அக்காலத் தாய்மார்களின் சிறந்த பண்பை பறைசாற்றுகிறது.

பிள்ளைச்சோறு இது கிராமங்களில் பெரிய வீடுகளில் ( பெரிய வீடுன்னா, 'முக்கியமான' அப்படின்னு எடுத்துக்குங்க) மதியம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு, தங்கள் வீடுகளில் மதிய உணவு இலவசமாக சோறு, குழம்பு கொடுப்பார்கள். 20-30 வருடங்கள் முன்பு வரை இருந்த பழக்கம் இன்று எங்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை.

Saturday, April 25, 2009

முத்தம் ஒண்ணு கொடுத்தாய் ... (Case Sheet)

இளமைங்கிறது வாழ்க்கைல ஒரு வசந்தம். பாலியல் கவர்ச்சி, ஈர்ப்பு உள்ள காலம். காதல் வசப்பட்டவங்களுக்கு முத்தத்தைப் பத்தி ஆர்வம் உள்ள காலகட்டம். உணர்ச்சி வசப்பட்டவங்களுக்கு முத்தம் எப்படி குடுக்குறதுன்னு பல சிந்தனை, அதுல ஒரு கிளுகிளுப்பு.

பிரிட்டிஷ் காரன் மொதல்ல லேடி கையப் பிடிச்சு, அந்தக் கைல ஒரு kiss அடிப்பான். பிரெஞ்சுக் காரன் லிப் டூ லிப் French kiss. நம்மாளுக உம்மா கன்னத்துல தான் அதிகம்.

லிப் கிஸ் அடிச்சு நோயாளியா ரெண்டு case முனியப்பன் பாத்திருக்கார். ஒருத்தன் 10 வருஷத்துக்கு முன்னால, இன்னொருத்தன் சமீபத்துல.

அவனுக்கு வயசு 24. Fax, Xerox, STD கடை வச்சிருந்தான். அங்க STD பண்ண வந்த ஒரு லேடி அவனுக்குப் பிக்அப் ஆயிருச்சு. உணர்ச்சி வசப்பட்டு kiss அடிக்கிறாங்க. நம்மாளு கீழ் ஒதட்டுல லேடியோட பல்லு பட்டு ரத்தம் வருது. வாய்ல கர்ச்சீப்பை வச்சி பிடிச்சிக்கிட்டு ரெண்டு பேருமே முனியப்பன் கிட்ட வந்துர்றாங்க. முனியப்பன் கிழிஞ்சு போன ஒதட்டுல தையலப் போட்டு ரத்தத்தை நிப்பாட்டி ட்ரீட்மெண்ட் குடுத்து அனுப்பி வச்சுர்றார்.

இவனுக்கு வயசு 20. இந்தியா சார்பா உலக நாடுகள்ல ஒரு வெளையாட்டுல கலந்துக்கிர்றவன். அப்படி ஒரு வெளிநாட்டுக்குப் போனப்ப, ஸ்டார் ஹோட்டல்ல தங்கியிருக்கப்ப, ஒரு ஹேண்ட்ஸம் வெளிநாட்டு லேடியப் பாக்குறான். அண்ணனும் நோக்கினான். அவளும் நோக்கினாள். அப்புறம் என்ன ...? ப்பசக் தான். கொஞ்சம் வெளையாட்டு. அதுக்கப்புறம் போக நம்ம பயலுக்கு பயம், ஓடி வந்துர்றான்.

அவனோட 4 வயசுல இருந்து, முனியப்பனும் அவனும் பிரண்ட்ஸ். Kiss மேட்டர் அவனுக்குள்ள ஒரு பயத்தை உண்டாக்கிருச்சு. இந்தியாவுக்கு வந்து, மதுரைக்கு வந்த ஒடனே முனியப்பன் கிட்ட வந்துட்டான். மேட்டரச் சொன்னான். "ஒண்ணுமில்லை. பயப்படாதப்பா" அப்படின்னு சொன்னாலும் convince ஆக மாட்டேங்கிறான். வேற வழியில்லாம HIV டெஸ்ட் பண்ணிப் பாத்து நெகடிவ்னு சொன்னப்புறம்தான் அவனுக்கு நிம்மதி.

ரெண்டு பேருக்கும் முனியப்பன் சொன்ன அட்வைஸ், முத்தம், Sex எல்லாம் வாழ்க்கைத் துணையோட மட்டும் தான்.

Saturday, April 11, 2009

தமிழீழ வெற்றிக்கு வாழ்த்துக்கள்

தொப்புள் கொடி உறவுகள்
கைகொடுக்கும் எனக் காத்திராமல்
தமிழக அரசியல்வாதிகள்

தமிழினப் பற்றை அறிந்தபின்
தானே சிலிர்த்தெழுந்த
தமிழீழ மக்களே.........

உங்கள் உணர்வுக்கும்
உங்கள் துடிப்புக்கும் வணக்கம்.

உள்நாட்டில் வேதனையுறும்
உடன் பிறப்புகளுக்காக
அயல் நாட்டில்
ஆர்ப்பரிக்கும் சிங்கங்களே


உலகை உலுக்கும்
உங்கள் போராட்டத்தின் வெற்றிக்கு
என்னால் முடிந்த வாழ்த்துக்கள் மட்டுமல்ல
என்னைப் போன்ற பலரின் வாழ்த்தும் உண்டு

காலம் கற்பிக்கப் போகும் பாடம்
கண்டிப்பாக உண்டு ராஜபக்சேக்கு

வேதனைகள் தீரும்
விடியல் உண்டு
தமிழினம் மீளும்
தமிழீழம் மலரும்

Tuesday, April 7, 2009

குழந்தை வேலும் டெல்லி லெட்டரும்

குழந்தை வேலு அப்ப 85 வயசுக்காரர். தன் வாயால பெருமையடிக்கிறது அவருக்குப் பிடிக்காத விஷயம். அவருக்குப் பெருமையா உள்ள விஷயங்களை அடுத்தவங்களை சொல்ல வச்சு அவர் நெஞ்சுக்குள்ள சந்தோஷப் பட்டுக்கிடுவார்.

அவர் பேரன் ஒருத்தன் ஸ்கூல் டூர்ல டெல்லி போயிருந்தான். டெல்லிலருந்து ஒரு போஸ்ட் கார்டுல அவருக்கு ஒரு லெட்டரைப் போட்டுட்டான். இது நடந்தது 38 வருஷத்துக்கு முன்னால. அந்தக் காலத்து லெட்டர் எப்படி இருக்கும் ? "மகா ள ள ள ஸ்ரீ கனம் பொருந்திய தாத்தா அவர்களுக்கு உங்கள் பேரன் எழுதிக் கொண்டது. நான் இப்பொழுது டெல்லியில இருக்கிறேன். நேற்று ஆக்ராவில் தாஜ்மஹால் பார்த்தோம். ஊர் நல்லா இருக்கு. ஊரில் அனைவரும் நலமாக இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு உங்கள் பேரன் .........."

குழந்தைவேலுக்கு பேரன் டெல்லிலருந்து லெட்டர் போட்டது பெருமை பிடிபடலை. "பேரன் தாஜ்மஹால் பாத்திருக்கான், இதை ஊர் பூராம் கொட்டடிக்காம இருக்கதா, டெல்லிக்குக் கல்லுப்பட்டில இருந்து யார் போயிருக்கா ?". நம்மாளு குழந்தைவேலு டெக்னிக்கலான ஆளாச்சா, அவர் தேர்ந்தெடுத்த டெக்னிக் "சொல்லாமலே''

வீட்ட விட்டு வெளியே கெளம்பும் போது பேரனோட லெட்டர எடுத்து அடுத்தவங்க கண்ல பட்ற மாதிரி அவரோட சட்டைப் பைக்குள்ள வச்சிக்கிடுவார். அதைப் பாக்குறவங்க "அது என்ன லெட்டர்"னு கேப்பாங்க. குழந்தைவேலு 1886ல பிறந்தவர். அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. "பேரன் டெல்லிலருந்து லெட்டர் போட்ருக்கான். இத என்னன்னு படிப்பா" அப்படின்னு அவுங்க கைல குடுத்துருவார். நாலு நாள்ல கல்லுப்பட்டி பூரா, குழந்தை வேலு பேரன் தாஜ்மஹால் பார்த்து, டெல்லில இருக்கது தெரிஞ்சு போச்சு. நாலு நாளுக்கப்பறம் போஸ்ட் கார்டை வீட்டுல வச்சுட்டார்.

குழந்தைவேலு டெக்னிக் எப்படி? கிராமப்புற பெருசுகளுக்கு பேரன், பேத்தின்னா அவ்வளவு உசிரு. அவங்க நல்லா இருக்கது அவங்களுக்குக் கூடக் கொஞ்சம் சந்தோஷம். குழந்தைவேலு பேரன் வேற யாரு, சாட்சாத் நம்ம முனியப்பன் தான்.

Thursday, April 2, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (கு.வேலுசாமி B.A., B.L).

கு.வேலுசாமி B.A., B.L.

இவர் நீதிமான். தமிழக நீதித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று இறைவனை சேர்ந்துவிட்டார் கடமை உணர்வுள்ளவர். நீதித்துறையால் முறையான பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டவர்.

இவர் பதவி ஆரம்பம் திருவண்ணாமலையில. அப்போது பாரதப் பிரதமர் நேரு தமிழகம் வந்த போது அவருக்கு திமுகவினாரால் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது திருவண்ணாமலையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர் ப.உ.சண்முகம் உள்ளிட்ட திமுகவினர். தமிழகம் முழுவதும் சென்னை நீதிமன்றத்தில் தீர்ப்பு சொன்ன பிறகு நாமும் தீர்ப்பு சொல்வோம் என்று மற்ற நீதிபதிகள் காத்திருக்க அதிரடியாக கைதுசெய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார் மு. வேலுசாமி. இதைப் பாராட்டி தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்கள் ஹோம் லேண்ட் பத்திரிகையில் எழுதியுள்ளார் என்றால், அன்றைய சுழ்நிலை-1957ல் எப்படி இருந்திருக்கும் பாருங்கள்.

பரமக்குடில வேலுசாமி B.A., B.L. நீதிபதியா பணிபுரிந்தார். அவர் டென்னிஸ் விளையாடுவார். அப்ப நீதிமன்றத்துக்கு பக்கத்திலேயே டென்னிஸ் மைதானம். அவருடைய விளையாட்டுத் தோழர் உலக நாயகனின் வக்கீல் சகோதரர் ரெண்டு பேரும் சாயங்காலம் ஒண்ணா வெளயைடுவாங்க. காலைல வக்கிலுக்கு எதிரான தீர்ப்பு வழக்குல இருக்கலாம். மறுபடியும் சாயங்காலம் ரெண்டு பேரும் ஒண்ணா டென்னிஸ் விளையாடுவாங்க தொழில் வேறு நட்பு வேறு கு .வேலுசாமி எங்க இருக்கார் பாருங்க கொள்கைல.

நெல்லைல கு. வேலுசாமி B.A., B.L., பணில இருக்கப்ப நீதிமன்ற பணியாளர்கள் தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செஞ்சாங்க. கோர்ட் சாவிய மொத நாளே கோர்ட் MC நம்ம நீதிபதிகிட்ட கொடுத்துடுறார். வேலை நிறுத்தம் அன்னைக்கு நீதிபதி வேலுசாமி நீதிமன்றக் கதவைத் தானே திறந்து அன்னைக்கு கோர்ட்ட நடத்துறார். One Man Showவா கோர்டட் பூட்டி சாவிய வீட்டுக்கு கொண்டு வந்துர்றார்.

நீதிபதி கு. வேலுசாமி B.A., B.L. நேர்மையானவர். மேலதிகாரிகள் inspection (ஆய்வு)க்காக அவர் நீதிமன்றத்துக்கு வரும் போது அவங்க பின்னாடி சுத்தமாட்டார். வேலுசாமி அப்பயும் court நடத்திகிட்டு இருப்பார். வந்த உயர்நீதிபதிகள் அவங்களா எல்லா ரிக்கார்டையும் செக் பண்ணிட்டு வேலுசாமி கிட்ட வந்து எல்லாம் நல்லா இருக்கு சார்னு சொல்லிட்டு போவாங்க. அவங்களுக்கு டீ காபி டிபன் எதும் வாங்கி கொடுக்க மாட்டார். அவ்வளவு நேர்மை. அதனால பயமின்மை.

சரி கு. வேலுசாமி B.A., B.L. யார்னு கேக்கறீங்களா நம்ம முனியப்பன் தோப்பனார் தான்.