Saturday, December 19, 2009

என்னை ஏன் மீண்டும் சந்தித்தாய் ?

25 வருடங்களுக்கு முன் ...

இருகரம் கோர்த்து அலைந்தோம்
இடைவெளி இல்லாத
இனிய கல்லூரி பயணம்
குறும்புகள் சிரிப்பலைகள்
குதூகலமான நாட்கள்

சேட்டைகளுக்கும் குறைவில்லை
சேட்டை செய்யும் வாலிப வயது
முடிந்தது பிணைப்பு
இடியால் அல்ல

நீ ஒரு பக்கம்
நான் ஒரு பக்கம்
வாழ்க்கை அலையில்
வாழப் புறப்பட்டோ ம் தனித்தனியாக
வருடங்கள் ஓடின
இருவருக்கும் தொடர்பில்லாமல்

நீ எங்கே
இருக்கும் இடம் கூட
இருவருக்கும் தெரியாது
உலகம் உருண்டையானது என்பது
உள்ளன்புள்ளவர்கள் மீண்டும் சந்திக்க
உன் குரல் அலைபேசியில் திடீரென
இன்பமாக இருந்தது அந்த நாள்

25 வருடம் சென்றாலும்
இருவருக்கும் இன்பமான பொழுது
மருத்துவம் படிக்க உன் மகனை
மதுரைக்கு கொண்டு வந்தாய்
சந்தித்தோம் பல காலம் கழித்து
சந்திப்பில் கல்லூரி நாட்கள் நினைவுகள்
உணவருந்தி உரையாடும் பொழுது
உனக்குள்ள வியாதிகளைப் பட்டியலிட்டாய்

BP, சுகர் அத்துடன்
AORTIC ANEUERYSM அதுவும்
AORTIC ARCH அருகில்
அறுவை சிகிச்சையும் ஆபத்தானது
ஓடும் வரை ஓடட்டும் என
ஓடிக் கொண்டிருந்தாய்
மூன்று மாதங்கள் தான் உன்னை
மீண்டும் பார்த்து, அதற்குள்
முடிவு உன்னை முத்தமிட்டு விட்டது.

AORTIC ANEURYSM வெடித்து
அற்புதமான உன் உயிரைப் பறித்து விட்டது.
அன்பு நண்பா அபு முகம்மது
ஆற்ற வொண்ணா சோகம்
உன் குடும்பத்துக்கு மட்டுமல்ல
உன் நண்பர்கள் எங்களுக்கும் தான்

மாப்ளை உன்னை ...
மறக்க முடியுமா மாப்ளை

Friday, December 4, 2009

பகல்ல முத்து, நைட்ல ராமகிருஷ்ணன்

வில்லங்கமான தலைப்பா இருக்கா?

முனியப்பனின் நண்பர்களில் ஒருவர், பேராசிரியர் ராமகிருஷ்ணன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக துறைத்தலைவராக இருந்த பணி மூப்படைந்தவர்.

முனியப்பனின் மருத்துவ பராமரிப்பில் ராமகிருஷ்ணனின் தாயார் லஷ்மியம்மா இருந்தார். மொதல்ல நியூரோபயான் ஊசி, சுகர் மாத்திரை மட்டும். அப்புறம் வயசாகுதுல்ல சுகர் கூடுது, இன்சுலின் ஊசி, ஹார்ட் வீக்காகுது, ஹார்டுக்கு மாத்திரை, வீட்டுக்குள்ளயே நடமாடுவாங்க கொஞ்சம் சமையல் பண்ணுவாங்க .

அப்புறம் ஒரு காலகட்டத்துல ரொம்ப தளர்ந்திர்றாங்க நடமாட்டம் கொறைஞ்சுடுது. பெட்ரூம்ல படுத்திருப்பாங்க, ஹால்ல கொஞ்ச நேரம் ஒக்காந்திருப்பாங்க அவ்வளவுதான்.

இந்த சூழ்நிலைல ஒரு நாள் கட்டில்ல இருந்து தவறி கீழ வீழுந்துர்றாங்க லஷ்மியம்மா. வீட்டுக்கு வந்து எக்ஸ்ரே எடுத்தாச்சு இடது கைல Humerus எலும்பு நடுவுல ஒடைஞ்சிருக்கு. ஆப்பரேஷன் பண்ணி ஒடைஞ்ச எலும்பை ஒட்டி வைக்க முடியாத அளவுக்கு வீக்கான ஹார்ட். சுகரும் Erratic. அதனால எலும்பு டாக்டரை வீட்டுக்கு வர வைச்சு தொட்டில் கட்டு மட்டும் போடுறாங்க.

லஷ்மி பாட்டியால ஒண்ணும் செய்ய முடியலை. கட்டில்தான் வாழ்க்கைன்னு ஆயிடுச்சு . அப்ப அவங்களை கவனிக்க ஆள் வேணுமில்ல. காலை 8 மணிலருந்து நைட் 8 மணி வரைக்கும் பாட்டிய கவனிக்க ராமகிருஷ்ணன் ஒரு செவிலிய உதவியாளரை ஏற்பாடு பண்ணினார். அவுங்க பேரு பாத்தி முத்து லஷ்மி பாட்டிக்கு சகலமும் பாத்தி முத்துதான்.

இப்படியே ஒரு வருஷம் ஓடுது. பாட்டியோட கடைசி நாளைக்கு மொத நாள். முனியப்பன் லஷ்மி பாட்டிக்கு ட்ரீட்மெண்ட் பாக்க போறார். அப்ப ராமகிருஷ்ணன் சார்கிட்ட கேட்டார். பகல்ல பாத்திமுத்து பாத்துக்கறாங்க. நைட்ல? ராமகிருஷ்ணன் சார் கண் கலங்கி சொல்றார். பகல்ல முத்து, நைட்ல ராமகிருஷ்ணன்.

பகல்ல பாத்தி முத்து லஷ்மி பாட்டிக்கு என்ன சேவைகள் செஞ்சாங்களோ, அதே சேவைகளை தனது தாயாருக்கு ராமகிருஷ்ணன் சார் நைட்ல ஒரு வருஷம் பாத்திருக்கார். அடுத்த நாள் லஷ்மி பாட்டி இறைவனடி சேந்துர்றாங்க.

பாத்தி முத்து முஸ்லீம், ராமகிருஷ்ணன் அய்யங்கார். மத நல்லிணக்கம் பாருங்க.

Saturday, November 7, 2009

வாத்தியார் அஷூ

"ஆச்சீய் உங்க பையன் ரொம்ப தொல்லை பண்றான், அவனைக் கண்டிச்சு வைங்க" என்று முனியப்பனைப் பற்றி கம்ப்ளைண்ட் பண்ணும்

அஷூக்குட்டி இப்ப எடுத்திருக்கும் அவதாரம் வாத்தியார்.

யுகேஜி படிக்கும் அஷூ வாத்தியார். அவரோட ஸ்டூடண்ட்ஸ் 4 வது படிக்கும் அமரும், முனியப்பனும்.

"6th லெஸன ஒப்பிங்க" அப்படிம்பார் அஷூ, அமர் தத்தக் பித்தக்குன்னு எதையாவது சொல்வார், வெரிகுட் அப்படிம்பார் அஷூ.

முனியப்பன் அதே போல் சொன்னவுடனே தப்புன்னுவார் அஷூ.

ஹோம்ஒர்க் எழுதி அமருக்கும் முனியப்பனுக்கும் குடுப்பார் அஷூ. அமர் எழுதுறதுக்கு டிக் பண்ணி ஸ்டார் ஒட்டிருவார்.

முனியப்பனுக்கு இண்ட் போட்டு "ஒன் பேரண்ட்ஸ கூப்பிட்டு வா"ம்பார். பேரண்ட்ஸ் வந்தது மாதிரி "ஒங்க பையன் படிக்கவே

மாட்டேங்கிறான். வீட்ல டிவி முன்னாலேயே ஒக்காந்துருக்கானா" அப்படிம்பார்.

இதுக்கிடைல முனியப்பனுக்கு அஷூவோட டோ ஸ் வேற, "என்ன படிக்கிற ம்ம்"

அமர், முனியப்பனுக்கு மார்க் போடுவார் அஷூ. அமருக்கு 10/10. முனியப்பனுக்கு பத்துக்கு முட்டை, அதுவும் பெரிய

முட்டையாம். சொல்லிட்டு சிரிப்பு வேற.

சிறு பிள்ளையோடு சிறு பிள்ளையாய் நாமும் மாறி விளையாடும் சுகம் தனி.

Monday, October 26, 2009

ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம்

ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீனமும்I. புகுமுன் உங்களோடு ...ஈழம் என்னும் நிலப்பகுதி தமிழர்களுடையது. இலங்கையும் தமிழ்ச்சொல். இலங்கை முழுவதும் பரவியிருந்த தமிழர்கள் அங்கு ஆட்சி செலுத்தினர்.

காலப்போக்கில் அவர்களது ஆட்சி எல்லை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டும் உள்ளதாக மாறியது.ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கை நாளாவட்டத்தில் சிங்களர் தம் குடியேற்றம் மற்றும் அடக்கு முறையால், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் ஈழமாகச் சுருங்கியது. சோழ அரசன் ராசராசன் மெய்கீர்த்தியில் முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டிலமும் என்று தமிழர் பகுதிகளையும்

சிங்களர் பகுதிகளையும் வரையறுத்திருக்கிறது.சிங்களர்களின் வரலாற்று நூலான மகாவம்சத்தின் கூற்றுப்படி பார்த்தாலும் சிங்களர்கள் இலங்கையில் வந்து குடியேறியவர்களே. சிங்களர்களின் முதல் அரசன் ஒரு கப்பலில் இலங்கையில் வந்து குடியேறியதாகக் குறிப்பிடப்படுகிறது.ஈழத்து உணவும் என வரும் பட்டினப்பாலை வரிகள் சோழ அரசன் முதலாம் கரிகாலன் காலத்தைச் சேர்ந்தது. முதலாம் கரிகாலனுடைய ஆட்சிக் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு. முதலாம் கரிகாலன் ஈழத்தில் நாட்டிய வெற்றிகள் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட வில்லை. எனவே சிங்களரின் இலங்கை குடியேற்றமும், மகாவம்சமும் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பது தெளிவாகிறது.வெளியில் இருந்து வந்து இலங்கையில் குடியேறிய சிங்களர்கள் நாளாவட்டத்தில் தமிழர்களை விரட்டியடித்து அவர்கள் பரப்பைச் சுருக்கினார்கள். இலங்கையின் விடுதலைக்குப் பின்னர் தமிழர்கள் மேல் வன்முறையையும், காழ்ப்புணர்ச்சியையும் கட்டவிழ்த்து விட்டு ஈழத்திலிருக்கும் 30 லட்சம்

தமிழர்களையும் ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுச்சாம் என்ற வார்த்தை சிங்களக் காடையர்களுக்கு நிச்சயமாகப் பொருந்தும்.ஈழத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் சிங்களருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த சிங்கள அரசு சமீப காலமாகத் தமிழர்களை அழிக்கும் இன ஒழிப்பில் ஈடுபட்டுள்ளது.இந்த இன ஒழிப்பை, ஈழத்தமிழர் தம் அடிமைத்தளையை மாற்றப் பிறந்தது தான் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம்.இந்த உரிமைப் போராட்டத்தை வரலாற்றுக் காலத்திலிருந்து பார்ப்போம். அதன்பின் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தை அதன் பலம், பலவீனத்தை

ஆராய்வோம்.II. ஈழம் ... சரித்திரச் சான்றுகள்எந்த ஒரு நாட்டுக்கும் தனி வரலாறு உண்டு. ஈழத்துக்கும் உண்டு. ஈழத்தில் தமிழ் வரலாற்றுச் சான்றுகள் நிறைய உண்டு.ஈழத் தமிழகத்துக்கும் தனித் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு வரலாற்றுக் காலத்துக்கும் முற்பட்டது. ஐராவதம் மகாதேவன், தொல்பொருள் ஆய்வாளர்.மெகாலித்திக் சான்றுமனித வரலாற்றைச் சொல்லும் பொழுது வரும் காலங்களில் ஒன்று மெகாலித்திக் காலம். இந்தக் காலங்களில் இறந்த மனிதர்களை அடக்கம் செய்வதில் சில முறைகளைக் கையாண்டார்கள். தமிழர்களின் முதுமக்கள் தாழி பிரசித்தி பெற்றது.யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள அனகோடையில் உள்ள புதையல் இடத்தில் எடுக்கப்பட்ட வெள்ளி முத்திரை முக்கியமானது. C14 அளவீடு மூலம்

பழங்காலத்தை அளவிடுகிறார்கள். தமிழர்களின் மெகாலித்திக் சான்றுகளை C14 மூலம் 1050 கி.மு. முதல் 500 கி.மு. வரை அளவிடுகிறார்கள்.அனக்கோடையில் கிடைத்த வெள்ளி முத்திரையில் உள்ள எழுத்து கோ வே தா என்ற தமிழ் எழுத்து.பானையில் தமிழ் எழுத்துதமிழ் பிராமி எழுத்துக்களைக் குகைகளிலும், பானைகளிலும் ஆரம்ப காலத்தில் பொறித்தார்கள். காலம் கி.மு. 200க்கு முன்னால். யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறித்த உடைந்த மண் பானைகள் ஏராளம். அவற்றில் ஒன்றில் பொறிக்கப்பட்ட வார்த்தை வேலன்.ஈழத்தில் வெளியிடப்பட்ட தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட காசுகள்ஒரு நாடு நாகரீகம் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே பொருளாதாரத்துக்காகக் காசுகள் வெளியிட முடியும். ஈழத்தில் தமிழர் ஆட்சி சீரும் சிறப்புமாக இருந்ததை அங்கு அரசாண்ட தமிழ் மன்னர்கள் வெளியிட்ட தமிழ் பொறித்த 200 கி.மு. காலத்தை ஒட்டியுள்ள மூன்று ஈயக் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் முறையே மகா கட்டன், கபடி கட்டன் மற்றும் உத்திரன்.இவை ஈழத்தில் வெளியிடப்பட்ட தமிழ் மன்னர்களின் காசுகள், கண்டுபிடிக்கப்பட்ட இடம் இலங்கையின் தென் கிழக்கே உள்ள திசாமகரம.பாண்டியர் காசுகள்பாண்டியர்கள் தான் ஈழத்தோடு நட்போடும் சுமூகமான உறவோடும் இருந்தார்கள். சங்க காலப் பாண்டியர் கால செப்புக் காசுகள் 4 ஈழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மன்னன் விசயன்முதல் ஈழத்தமிழ் மன்னனாய் அறியப்படும் விசயனின் காலம் புத்தர் நிர்வாணமாகிய கி.மு. 478. விசயன் பாண்டியர் குலப் பெண்மணியை மணந்தானென்றும், தன் மாமனாகிய பாண்டியனுக்குப் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தானென்றும் வரலாறு சதாசிவப் பண்டாரத்தார்இதே விசயனைத்தான் சிங்களத்தின் முதல் மன்னன் என்று மகாவம்சம் வரலாற்றைத் திரித்துக் கூறுகிறது.குகை கல்வெட்டுக்கள்தமிழன் முதலில் தன் தமிழை எழுத்தாகக் குகைகளில் தான் பொறித்தான். தமிழனுடைய குகை கல்வெட்டுக்கள் ஈழத்தில் நிறைய உண்டு. ஈழத்தில் உள்ள குகைக் கல்வெட்டுக்கள் அனைத்தும் தமிழருடையதே என்று கூறுகிறார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பார்க்கர்.இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பம்பரகஸ்தவலாவில் உள்ள குகைக் கல்வெட்டுக்களில் தமிழனின் எழுத்து சிறப்பாக உள்ளது. தமிழனுக்கே

உரிய ல அங்கு இடம் பெறுகிறது.ஈழத்தில் இருந்தவர்கள் தமிழர்கள், ஆகவே அங்கு அவர்கள் எழுத்துத் தானே இருக்கும். இலங்கையில் உள்ள குகை கல்வெட்டுக்களின் காலம் கி.மு. 2ம் நூற்றாண்டு.தமிழ் மன்னர்களும் ஈழமும்கடலுக்கப்பாற் பட்ட தலைத் தமிழகத்துக்கும் இலங்கைத் தமிழகத்துக்கும் இடையே உள்ள சங்ககால உறவு, பெரும்பாலும் சோழர், சேரர், படையெடுப்பாக இருந்துள்ளது . பாண்டிய நாட்டுத் தொடர்பு மன்னர் நேசத் தொடர்பாகவும் அத்துடன் மன்னர் மக்கள் மண உறவுத் தொடர்பாகவும் இருந்துள்ளது.சோழர் ஈழப்போர் பாடல்கள்1. ஈழமும் தமிழ்க்

கூடலும் சிதைத்து - பராந்தகச் சோழன்2. தென்னன் நாடும்

ஈழமும் கொண்ட திறல் - கண்டராதித்த சோழன் - 9ம் திருமுறை3. மதுரைத் தமிழ்ப் பதியும்

ஈழமும் கொண்ட

இகலாளி - குலோத்துங்கச் சோழன் - உலா4. ஈழம் எழுநூற்றுக்

காவதமும் சென்று எறிந்து - ராசராச சோழன் உலா5. முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டலமும் - ராசராசன் மெய்கீர்த்திமுக்கியமான வரிகள். ராசராசன் போர் செய்தி தான் ஈழத்தில் எழுநூற்றுக் காத தூரம் சென்று , முரண் தொழில் சிங்களர் ஈழமண்டலமும். சிங்களர் ஈழ மண்டலம் என்று ராசராசன் காலத்தில் தமிழ் ஈழத்தையும், சிங்களர் ஈழ மண்டலத்தையும் பிரிக்கிறார்கள் பாருங்கள். அத்துடன் நிற்காமல் முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டலம் என்று அவர்களுடைய தவறான தொழிலையும் சொல்கிறது இந்த வரிகள்.சிங்களரின் நூலான மகாவம்சத்தில் கரிகாலன் (கி.மு. 3 ம் நூற்றாண்டு) ஈழத்தை வென்றதைக் குறிப்பிடவில்லை. அதற்குப் பின் வந்த மற்ற இலங்கை

வரலாற்று நூல்கள் சோழன் கரிகாலனின் வெற்றியைக் குறிப்பிடுகின்றன.ஆக, மகாவம்சம் என்பது இன்றைய தொலைக்காட்சிகளைப் போல தனக்கு வேண்டியதை, பாசிட்டிவாக உள்ளதை மட்டும் எழுத்தாக்கியிருக்கிறது. சில

தொலைக்காட்சிகளைப் போல பொய்கள் நிறைய கலந்திருக்கிறது.பாண்டியன் நெடியோன்சங்க காலத்திலேயே பழங்காலப் பாண்டியருக்கு முற்பட்ட பாண்டியனாக நெடியோன் விளங்குகிறான். அவனது தலைநகர் ப·றுளி ஆற்றின் கரையில்

அமைந்திருந்தது.ப·றுளியாற்றுடன் பன்மலை படுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள - சிலப்பதிகாரம்நெடியோன் காலத்துக்கு அப்பால் இலங்கைத் தமிழகமும், தலைத் தமிழகமும் கடலால் பிரிவுற்று வேறு வேறு நிலப்பகுதிகளாயின.மெகஸ்தனிஸ்கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய வருகை காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. வரலாற்றுப் பதிவாளர்.இவர் இந்தியாவைப் பற்றி பல குறிப்புகள் எழுதி வைத்துள்ளார். அதில் முக்கியமான ஒன்று தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு ஆறு

ஓடிக்கொண்டிருந்தது. ஆக தலைத் தமிழகமும், ஈழத் தமிழகமும் கடலால் பிரிக்கப்படுமுன் ஒன்றாகத்தான் இருந்தன.தலைத் தமிழகத்தையும் ஈழத்தமிழகத்தையும் பிரித்த கடல்கோள் கிமு 69ல் என்று குறிப்பிடப்படுகிறது.கெளதம புத்தர்அரசராயிருந்து, திருமணம் செய்து மகனையும் பெற்றெடுத்த பின்னர் துறவியானவர் சித்தார்த்தர்.கயா எனும் நகரில் போதி மரத்தடியில் 12 ஆண்டுகள் ஆழ்ந்த தியான நிலையில் இருந்தார். அப்பொழுது ஒரு நாள் இனிய ஞானம் கிடைக்கப்பெற்றார். அக்கணத்திலிருந்து புத்தர் என்றும் சாக்கிய முனி என்றும் அழைக்கப்பட்டார்.புத்தருடைய போதனைகள் அகிம்சையையும், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுவதையும் அடிப்படையாகக் கொண்டவை. புத்தருடைய காலம் கி.மு. 567 - கி.மு. 487அசோகர்மெளரிய அரசர்களுள் மிகச் சிறந்தவராகக் கருதப்படுபவர் அசோகர். தலைநகரம் பாடலிபுத்திரம். கயாவிற்கு அருகில்.முதலில் சிவனை வழிபட்டவர், கிமு261 ல் நடைபெற்ற கலிங்கப்போரில் மக்கள் இறந்ததை காயமுற்றதை அடுத்து மனம் மாறி பெளத்த மதத்தைத் தழுவினார்.புத்த சமயம் பரப்ப அசோகர் பெரும்பாடு பட்டார். பல நாடுகளுக்கு புத்த துறவிகளை அனுப்பி வைத்தார்.அசோகர் தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பி புத்த சமயக் கொள்கைகளை பரப்பினார். அசோகருடைய காலம் கிமு273 / கிமு232.அசோகருடைய கல்வெட்டுக்களில் தமிழகத்தை ஆண்ட பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.பொலந்தருவாஇங்கு உள்ள புத்த விகார் தான் இலங்கையில் உள்ள பழமையான புத்த மத அடையாளம். இதனுடைய காலம் 2000 ஆண்டுகள்.கண்டி புத்தரின் பல்புத்தரின் பல் இருக்கும் கண்டி நகர் இலங்கையில் புத்தர்களின் புனித இடமாக உள்ளது. புத்தரின் பல் இலங்கை வந்தடைந்த ஆண்டு கி.பி. 4ம் நூற்றாண்டு.III. தமிழகத்தில் ஈழம் பற்றிய குறிப்புகள்மதுரைக்கு அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலையில் உள்ள குகைக் கல்வெட்டு காலம் கிபி 3ம் நூற்றாண்டு.எருகோ டூர் ஈழகுடும்பிகன் போலாலயன்

செய்தா ஆய்ச்சயன் நெடு சாத்தன்ஈழத்திலிருந்து வந்து ஈழகுடும்பிகன் கல் படுக்கை செய்ய பொருளுதவி செய்திருக்கிறான்.ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலைபட்டினப்பாலையின் காலம் சோழ மன்னன் முதலாம் கரிகாலனுடைய கி.மு. 3ம் நூற்றாண்டு.IV. ஈழவர்கள்கேரளாவில் தென் திருவாங்கூரிலும், மத்திய திருவாங்கூரின் சில பகுதிகளிலும் இருக்கின்றனர். ஈழத்தை சேர்ந்தவர்கள் இவர்கள். ஈழம் இலங்கைக்குரிய

தொன்மையான பெயராகும். ஈழத்திலிருந்து புறப்பட்டே ஈழவர்கள் முதன்முதலாக மலபாரை வந்து அடைந்ததாகக் கருதுகின்றனர்.ஈழவர்கள் கேரளாவின் மேற்குக் கடற்கரையில் வந்து குடியேறியதாகவும் ஒரு வழக்கு வழங்கி வருகிறது. ஈழவர்கள் என்ற பட்டத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேளாளர் சிலர் தரிப்பதும் குறிப்பிடத்தக்கது.கிபி 824ல் உள்ள ஒரு பட்டயத்தில் (வரலாற்றுச் சான்று ஆவணம்) ஈழவர்களின் பணி தரிசு நிலங்களில் மரங்களை நடுவதே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.V. சேரன் செங்குட்டுவன் கிபி 2ம் நூற்றாண்டுபிந்தைய கால சேர அரசர்கள் பெளத்த மதத்தை ஆதரித்ததாகச் சொல்லப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்துச் சிறப்பித்ததாகவும், அப்படி நடந்த ஒரு விழாவில் சிங்கள மன்னன் கயவாகு கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆக, ஈழவர்கள் ஈழத்திலிருந்து கேரளாவின் மேற்குக் கரையோரம் குடியேறியது கயவாகுவின் காலத்திற்குப் பின்தான்.ஈழவர்கள் தான் முதன்முதலாக ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள். அவர்களும் முரண் தொழில் சிங்களரின் வன்முறையால் புலம்பெயர்ந்ததாக எண்ண இடமுண்டு.VI. சங்கமித்திரை - மணிமேகலைஇருவரும் சரித்திர காலப் பெண்டிர். சங்கமித்திரை பேரரசர் அசோகரின் மகள். மணிமேகலை சிலப்பதிகாரக் கோவலனின் மகள்.சங்கமித்திரை இலங்கையில் காலடி வைத்தது புத்த மதத்தைப் பரப்ப, காலம் சுமார் 240 கிமு. சங்கமித்திரை இலங்கையில் கால்பதித்த இடம் மணிபல்லவம் துறைமுகம். அங்கு அவளை இலங்கை அரசன் தேவனாம்பிரிய தில்ஸன் வரவேற்றதாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது.மணிபல்லவம் ஈழத்தின் யாழ்ப்பாணத்துக்கு வடகோடியில் உள்ள ஒரு சிறு தீவு. தமிழ் நாட்டில் இருந்து கிழக்கே கடல் மார்க்கமாக நெடுந்தூரம் போகிற கப்பல்கள் வந்து தங்கி குடிநீர் எடுத்துக்கொள்ளும் இடமாகவும் இருந்தது. இங்கு மகாவம்சத்தால் பொய்யாக உரைக்கப்பட்டது. சங்கமித்திரையை

தேவானம்பிரிய தில்ஸன் வரவேற்றது. தேவானம்பிரியன் என்பது பேரரசர் அசோகரது இன்னொரு பெயர். சங்கமித்திரை வருகைக்குப் பின் புத்தமதப் பீடிகை அமைக்கப்பட்டது. அமைத்தவர்கள் அசோகரால் அனுப்பப்பட்ட புத்த பிக்குகள்.கோவலன் மகள் மணிமேகலை பெளத்த மதத்தைத் தழுவிய பின்னர், மணிபல்லவஞ் சென்று அங்கிருந்த புத்த பாத பீடிகையை வணங்கி மீண்டும் தன் ஊருக்குத் திரும்பி வந்தாள்.யாழ்ப்பாணத்தை ஆண்ட வளைவாணன் மகள் பீலிவனையைப் பற்றியும் மணிமேகலை காவியம் குறிப்பிடுகிறது.சங்கமித்திரைக்கு 150 வருடங்கள் பிந்தியது. மணிமேகலை காவியம். அதில் புத்தபாத பீடிகையைக் குறிப்பு இருக்கிறது. ஈழத்தமிழ் மன்னனைப் பற்றிய

குறிப்பிருக்கிறது. மணிபல்லவம் பற்றி எழுதியிருக்கிறது. சிங்களனை ஏன் மணிமேகலை குறிப்பிடவில்லை? மகாவம்சத்தைப் போல பொய்யுரைக்க

மணிமேகலைக்குத் தெரியவில்லை.VII. பொய்யுரைகள் நிறைந்த மகாவம்சம் - கி.பி. 500மகாவம்சம் எனும் இலங்கையின் வரலாற்றை விளக்கும் நூல் எழுதப்பட்ட காலம் கிபி 5ம் நூற்றாண்டு. எழுதியவர் மகானமபொய்யுரைகளால் தமிழர் வரலாற்றை மறைத்து எழுதப்பட்டது இந்த நூல்.சங்க காலத்துக்கும் முந்திய ஈழத்தமிழர்களை, அதற்கடுத்த ஈழத்தமிழர்களை வந்தேறிகளாகக் காட்டும் கபடநூல் அது.கி.மு. 478 ல் ஈழத்திலிருந்த தமிழ் மன்னன் விசயன், சிங்களரின் முதல் மன்னனாம் புத்த மதத்தைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அசோக சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்திரையை மணிபல்லவம் துறைமுகத்தில் கி.மு. 240 - கி.மு. 230 ல் வரவேற்றது சிங்கள அரசன் தேவனாம்பிரிய தில்ஸனாம்.சங்கமித்திரை இலங்கையில் கால் வைத்த பிறகுதான் புத்தமதம் இலங்கைக்குள் கால் வைத்தது. தேவனாம்பிரியன் என்பது அசோகரது பெயர். மணி பல்லவம் ஈழத்தமிழ் அரசர்கள் ஆண்ட பகுதி.துட்டகமுனு - ஏலாரன், போருக்குப் பின் தான் ஈழத்தைப் பற்றியே சிங்களருக்குத் தெரியும். இந்தப் போரின் காலம் கி.மு. 1ம் நூற்றாண்டு அல்லது கி.மு. 1ம் நூற்றாண்டின் பின் பகுதி. இன்றும் ஈழத்தின் நிலப்பரப்பு இலங்கை ராணுவத்திற்கு முழுமையாகத் தெரியாது.ஆக, விசயன் சங்கமித்திரையை தேவானம்பிரிய தில்ஸன் வரவேற்றது ஆகியன மகாவம்சத்தின் பொய்யுரையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.இன்னும் எத்தனை பொய்யுரைகள் மகாவம்சத்தில் அடங்கியிருக்கின்றன என்பது கிபி 5ம் நூற்றாண்டில் எழுதிய மகானமக்குத் தான் தெரியும்.VIII. ஈழத்தமிழர் சரித்திரம் - ஒரு ஆய்வுரத்தினச் சுருக்கமாக, ஈழம் தொன்று தொட்டு இருந்து வரும் தமிழர் பூமி. சிங்களர்கள் அவர்களது மகாவம்சத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட படி வந்தேறிகள். எங்கிருந்து இலங்கைக்கு வந்தார்கள் என்பது இன்னும் நிச்சயிக்கப்பட வில்லை.சங்கமித்திரை புத்த மதத்தைப் பரப்புவதற்கு இலங்கை வந்தாள். புத்த மதமம் ஈழத் தமிழர்கள் மனதை மாற்றி மதம் மாற வைக்கவில்லை.சங்கமித்திரை பின் வந்த மணிமேகலையிலும் சிங்கள அரசர்கள் குறிப்பு இல்லை.துட்டகமுனு தான் முதலில் தமிழர் பகுதிக்கு வந்த சிங்கள மன்னன். காலம் கி.மு. முதல் நூற்றாண்டு.சங்கமித்திரை, மணிமேகலைக்கு காலத்தால் பிந்தியவன் துட்டகமுனு.டச்சுக் காரர்கள் போர் புரிந்தது ஈழத்தமிழ் மன்னனான பண்டார வன்னியனுடன்.டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்களுக்குப் பின் இலங்கையை ஆண்ட இங்கிலாந்துக் காரர்கள் இலங்கையைச் சுதந்திர நாடாக அறிவித்த போது தமிழர்கள் அவர்கள் உரிமையை மறந்து சிங்களர்களிடம் இலங்கையை ஒப்படைத்தார்கள். அதன் விளைவுகளை, சிங்கள வெறியை, தமிழ் இன ஒழிப்பை இப்போதும்

காண்கிறோம்.ஈழத் திருநாட்டில் நாணயங்களை வெளியிட்டு ஆண்ட தமிழினம் இன்று ஒடுக்கப்பட்டு விட்டது.IX. தமிழர் மீதான சிங்களர் இனவெறிதமிழர்கள் மீதான இனவெறி சிங்களர்களுக்கு என்றும் மாறாது.சிங்களர்களின் வெறியால் முதலில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தது, இன்றைய கேரளாவில் இருக்கும் ஈழவர்கள்.அடுத்து இல்லத்துப் பிள்ளைமார் என்று தமிழகத்தில் அழைக்கப்படும் ஈழத்துப் பிள்ளைமார் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தனர்.அடுத்து 1983 கறுப்பு ஜீலையில் சிங்களரின் வெறியாட்டத்தால் உலகெங்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள்.இலங்கையின் ஆட்சி மொழியாக, ஒரே மொழியாக, சிங்களரின் மொழி சிங்களம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆண்டு 19561958ல் தமிழர்கள் மீதான சிங்களக் காடையர்களின் இனவெறித் தாக்குதல் நடந்தது.அடுத்து மிகப்பெரிய அளவில் தமிழர்கள் மீதான சிங்கள வெறியர்களின் இனவெறித் தாக்குதல் நடைபெற்ற ஆண்டு 1977.யாழ்ப்பாணத்திலுள்ள நூலகம் தமிழர்களுக்கானது. ஈழத்தமிழர்கள் தங்கள் தாய்மொழி தமிழிலான நூல்களைப் படித்து வந்தனர். தமிழர்கள் தமிழைப் படிப்பதா? சிங்களர்களுக்கு எப்படிப் பொறுக்கும் ? நூலகம் சிங்களர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தீயில் எரிந்த நூல்கள் 90,000. ஆண்டு 1981.ஈழப்போர் என்று சிங்கள இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்ட இனவெறி அடக்குமுறை அனைவரும் அறிந்ததே.X. மறக்க முடியாத கறுப்பு யூலை 1983ஈழத்தமிழர்கள் மனதில் ஆறாத வடுவாக இன்றும் இருப்பது 1983ல் ஜூலை மாத இறுதியில் நடந்த ஈழத்தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரமான தாக்குதல். ஜூலை 24ந் தேதி ஆரம்பித்து ஒரு வாரம் இலங்கை முழுவதும் தமிழர்கள் மீது நடந்த வெறித்தாக்குதல்.சிங்கள வெறியர்கள் நடத்திய இந்தத் தாக்குதலை இலங்கை அரசும் இலங்கை காவல் துறையும் அடக்க முயற்சிகள் எடுக்கவில்லை. தமிழர் உயிர்கள்,

தமிழர் உடைமைகள் பறிக்கப்பட்டன. இலங்கை அரசு வெளியிட்ட இறந்த தமிழர்களின் எண்ணிக்கை 3000. உண்மையில் 10,000 பேருக்கு மேல்

கொல்லப்பட்டனர்.வெளிக்கடை சிறையில் கைதிகளாக இருந்த 54 தமிழர்கள் சிங்கள சிறைத்துறையினரின் உதவியால் சிங்களக் கைதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு

உயிரிழந்தனர்.தமிழ் ஆடவர்களை சிங்களக் காடையர்கள் நிர்வாணமாக்கி அழகு பார்த்த கொடுமையும் நடந்தது. ஈழத்தமிழ்ப் பெண்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள் ?ஈழத்தமிழர்களின் மீதான இனஒழிப்பு இலங்கையின் சிங்கள அரசின் துணையுடன் நடந்தேறியது.கருப்பு ஜீலையால் ஈழத்தமிழர்கள் இலங்கையில் இனி வாழ முடியாது என்ற சூழ்நிலை உருவானது. அந் நிலையில் சாரைசாரையாக ஈழத்தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறினார்கள். இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப் பட்டனர். இன்னும் அகதிகள் முகாம்களில் தான் இருக்கிறார்கள்.இலங்கையை விட்டு வெளியேறி, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து, அய்ரோப்பாவில் சுவிஸ், நார்வே, டென்மார்க், யேர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அங்கு குடியேறி அந்த நாடுகளில் கிடைத்த வேலையைப் பார்த்து அங்கேயே குடியுரிமை பெற்று தாய்த் தேசத்தின் மேல் உள்ள பற்றால் ஈழ விடுதலைக்காக ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தாயகத்துக்காக, தாயகத்தை நினைத்து கண்ணீர் விடுபவர்கள் இவர்கள். இவர்கள் கண்ணீர் ஈழத்தில் தமிழனுக்கு சம உரிமையைப் பெற்றுத் தருமா?XI. தனித்தமிழ் ஈழம் பிரகடனம்மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் சொந்த மண்ணில் சிங்கள அரசாங்கத்தால், சிங்களக் காடையர்களால் அடிமையாக, உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழ்வதைப் பொறுக்காத ஈழத் தமிழர் தலைவர் செல்வநாயகம் அவர்கள் தான் தனித்தமிழ் ஈழம் அடைவோம் என்ற வார்த்தையை பொதுக்கூட்டத்தில் மக்கள் ஆரவாரத்துக்கிடையில் கூறினார்.XII. புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், பிரபாகரனும்விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலம். சென்னை, தமிழகம், இலங்கை என்று விடுதலைப் புலிகள் அலைந்து கொண்டிருந்த நேரம்.பிரபாகரன் அப்பொழுது முதல்வராயிருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்திக்க நேரம் கேட்கிறார். சந்திக்கிறார்கள். கதைக்கிறார்கள்.உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்கிறார்? எங்களுக்கு ஆயுதம் வாங்க நிதி உதவி வேண்டும் என்கிறார் பிரபாகரன். எம்ஜிஆர் எவ்வளவு தொகை ? பிரபாகரன் 2 கோடி ரூபாய் எம்ஜிஆர் நாளைக்கு வாங்கஅடுத்த நாள் பிரபாகரனும் பாலா அண்ணன் & மற்றைய தலைவர்களும் எம்ஜிஆரைச் சந்தித்து 2 கோடி ரூபாய் பெற்றுக் கொள்கிறார்கள். அப்பொழுது எம்ஜிஆர் நீங்கள் விடக்கூடாது, எதிரிகளுடன் போராட வேண்டும். ஆயுத உதவி எல்லாம் செய்கிறேன் என்று சொல்கிறார்.இந்த சம்பவத்தைப் பிரபாகரனே பேட்டியாக சொல்லியிருக்கிறார். யூ ட்யூப்பில் இப்பொழுதும் பார்க்கலாம்.பிரபாகரன் இந்த நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டு 2 கோடி ரூபாய்ங்கிறது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய தொகை, அதை வச்சுத்தான் எங்கள் இயக்கம் வலுவானது.XIII. இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடல்புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திரைப்படப் பாடல் ஒன்று "அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா" அதில் வரும் வரி

"தாயகம் காப்பது கடமையடா"விடுதலை உணர்வைத் தூண்டும் இந்தப் பாடலை ஒலிபரப்ப சிங்கள இனவாத அரசு தடைவிதித்துள்ளது.விடுதலைப் புலிகள் இந்தப் பாடலை அப்படியே வைத்து காட்சிகளை மட்டும் விடுதலைப் புலிகள் தொடர்பான காட்சிகளாக வைத்துக் காணொளியாக

வைத்திருக்கிறார்கள்.XIV. விடுதலைப் புலிகள்ஈழத்தமிழர்களை அவர்களின் அடிமை நிலையை உலக அரங்கில் வெளிச்சம் போட்டு காட்டியவர்கள் விடுதலைப் புலிகள்.தமிழனைத் தொடாதே தொட்டால் புலிகள் வந்து அடிப்பார்கள் என்ற பயத்தைச் சிங்களர்களிடம் உண்டாக்கி வைத்திருந்தவர்கள் விடுதலைப் புலிகள்.நான்கைந்து நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் ஆயுதம் ஏந்திய போராளி இயக்கமாக உருவானது. 30 வருடங்கள், சிங்கள இலங்கை அரசின்

கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருந்த இயக்கம்.உலகிலேயே வான்வழித் தாக்குதல் நடத்திய ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் அமைப்பு தான்.தலைமைக்குக் கட்டுப்பட்ட போராளிகள், இவர்களின் சிறப்பம்சம் சீருடை & உயிரிழந்த போராளிகள் தினமாக நினைவு கூறப்படும் மாவீரர் நாள்.இவ்வளவு சிறப்பம்சம், பொருளாதார உதவிகள் இருந்தும் தங்கள் குறிக்கோளை எட்ட முடியாததற்கு காரணங்களாக பல உள்ளன.முதலில் இயக்கத்தில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் ஒழிக்கப்பட்டனர். ஆலோசனை சொன்னவர்கள் அழிக்கப்பட்டனர்.அடுத்து, மற்ற போராளிக் குழுக்களை இயக்கத்தினர் அரவணைத்துச் செல்லவில்லை.1990க்குள் மற்ற போராளி இயக்கங்களை, அதில் உள்ளவர்களை அழித்து ஒழித்தனர்.1990 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து 28000 முஸ்லீம்களை வெளியேற்றியது இயக்கத்தினர் செய்த மிகப்பெரிய தவறு.அடுத்து செய்த தவறு முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை. மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதால் இந்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க தமிழக அரசியல்வாதிகளால் முடியாமற் போனது.இவை எல்லாவற்றையும் விட இயக்கத்தினர் சரிவைச் சந்தித்தது கருணாவின் பிரிவிற்குப் பின்பு தான். இயக்கமே சிறிது உடைந்தது. கருணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வித்திட்டது.கருணாவை, காட்டிக் கொடுத்த கருணா என்று கூட சொல்லலாம். சந்திரிகா காலம் வரை விடுதலைப் புலிகளை அவர்களது இடங்களைப் பற்றி சிங்கள அரசுக்கு எதுவும் தெரியாது.கருணா பிரிவுக்குப் பின் கருணா இலங்கை அரசின் கைக்கூலியாக மாறிய பின் தான் போராளி இயக்கத்தினர் பின்னடைவைச் சந்தித்தனர். ஈழப்போர் IV ன் கடைசிக் கட்டத்தில் கூட கருணா சொல்றார், தலைவர் தப்பித்துப் போக மூன்று இடங்கள், வழிகள் உள்ளன என்று. இயக்கத்தினரின் பேரழிவிற்குக் காரணம் கருணாவின் ஸ்கெட்ச்.கருணாவுக்கு இயக்கத்தில் உரிய இடம் கொடுக்கப்படாததால் தான் அவர் அங்கிருந்து விலகினார் என்று என்ன இடமிருக்கிறது.ஆயத பலம், தொடர்பு சாதனங்கள், படை பலம் இருந்தும் போராளிகள் இயக்கம் தங்கள் இலக்கை அடையாத காரணங்கள்மற்றவர்களை அரவணைத்துச் செல்ல வில்லை.சகிப்புத்தன்மையுடன் செயல்படாதது.மிகவும் வருந்தத்தக்க விடயம், விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட, துரத்தியடிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதிகம்.XV. முள் வேலிக்குள் 3 லட்சம் பேர்ஈழப்போர் iv ன் விளைவாக உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்தோர் 3 லட்சம் பேர். இவர்கள் முள் வேலியால் சுற்றி வளைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடுமையான கட்டுக் காவலில் இருக்கும் இவர்களில் பலரை இனவெறி சிங்கள அரசு இன ஒழிப்பு செய்கிறது.இந்த 3 லட்சம் பேரை அவர்களது சொந்த இடத்திலேயே மீண்டும் குடியமர்த்துவதாகக் கூறும் சிங்கள அரசு அதை இன்னும் முழுமையாகச் செயல்படுத்த

வில்லை. எனவே இலங்கை சிங்கள அரசுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.XVI. இனவெறி சிங்கள அரசுக்கு உதவிகள்பசுத்தோல் போர்த்திய புலியாக உலக நாடுகளிடம் வேஷம் போடும் இனவெறி பிடித்த அரசுக்கு உதவி செய்ய உலக நாடுகள்30 வருடங்கள் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் புணர் நிர்மாணத்துக்கு உதவி கேட்கிறது சிங்கள அரசு. அப்படி உதவியாக வரும் தொகை சிங்கள

பூமியை வளமாக்கச் செலவழிக்கப்படுமே தவிர ஈழத்துக்காகச் செலவழிக்கப் படுவது மிகவும் குறைவான தொகையாக இருக்கும். கண் துடைப்பு நாடகமாக இருக்கும்.XVII. ஈழப் போராட்டத்தின் பலவீனம்1. அரசியலமைப்பு

2. ஜனத்தொகை

3. காவலர்கள், இராணுவம்

4. ஈழப் போராட்டத்தில் மக்கள்

5. ஒற்றுமை இல்லை

6. கருணா & கிழக்கு மாகாணம்

7. தொப்புள் கொடி உறவுகள்

8. பொருளாதாரம்அரசியலமைப்புஅரசியல் ரீதியாக தலைத் தமிழகமும் ஈழத்தமிழகமும் பிரிந்திருக்கிறது. இந்தியாவிற்குள் தமிழகம் மாநிலமாக வருகிறது. ஈழத் தமிழகம் இலங்கையின்

பகுதியாக வருகிறது.ஆக, ஒரு நாடு என்ற அளவில் தான் பார்க்கிறார்களே ஒழிய, மொழி ஒன்றாக இருந்தும் நாடுகளால் பிளவு பட்டு நிற்கும் ஒரே மொழி மக்களாகப்

பார்க்கவில்லை, பார்க்க மாட்டார்கள்.ஜனத்தொகைஇலங்கையின் மக்கள் தொகையில் 74 சதவிகிதம் சிங்களர்கள். அதுவே அவர்களுக்கு மிருகத்தனத்தைக் கொடுக்கிறது.தமிழர்கள் சதவிகிதம் 15 தான். குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அதுவே அவர்களுக்குப் பயத்தையும் பலவீனத்தையும் கொடுக்கிறது.இஸ்லாமியர் ஜனத்தொகை 7 லிருந்து 8 சதவிகிதம். 1990 அக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து 28,000 முஸ்லீம்கள் தமிழ்ப் போராளிகளால்

வெளியேற்றப் பட்டனர். ஆக, ஒட்டு மொத்த முஸ்லீம் மக்கள் ஆதரவும் தனி ஈழத்துக்குக் கிடையாது.காவலர்கள், இராணுவம்இலங்கை அரசின் காவல்துறையும், இராணுவமும் முழுக்க முழுக்க சிங்களர்களுக்கானதே. தமிழர்களுக்கு இலங்கை அரசின் காவல்துறையிலும்,

இராணுவத்திலும் வேலை கிடையாது. இது இன வெறிக்கு ஒரு எடுத்துக்காட்டு.தற்பொழுது கருணா பிரிவினருக்குக் காவல் துறையில் வேலை கொடுத்திருப்பதாக ஒரு செய்தி, அதுவும் அடிமட்ட வேலை, இது எந்த அளவுக்கு உண்மை ?ஈழப்போராட்டத்தில் மக்கள்ஈழத்துக்கான போராட்டத்தில் ஈழ மக்கள் ஈடுபடவில்லை. பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றனர்.மக்கள் போராடும்போது தான் அந்தப் போராட்டம் வெற்றி பெறுகின்றது. ஈழப்போராட்டத்தில் இதுவரை போராடியவை அமைப்புகளும், போராளிகளும் தான்.மக்கள் அமைதியான வாழ்க்கையைத் தான் விரும்புகிறார்கள். ஆயுதங்கள் வாங்குவதற்குச் செலவிட்ட பணத்தை, போராளிகள் மக்கள் நலனுக்காக

செலவிட்டிருந்தால், மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு ஈழத் தமிழர்களுக்கான சம உரிமைகள் கிடைத்திருக்கும்.ஈழ மக்கள் மனதில் ஈழத்துக்கான எண்ணம் இருக்கிறது, எழுச்சி இல்லை.ஒற்றுமை இல்லைபோராளிகளிடம் சம உரிமைக்கான ஈழப் போராட்டத்துக்கு ஒற்றுமை இல்லை. 1948 முதல் இதுவரை 38 போராளி அமைப்புகள் எதாவது ஒரு வகையில் ஈழ மக்களுக்காகப் போராடி இருக்கின்றன.இத்தனை அமைப்புகள் உண்டாகியும், அமைப்புகள் உருவான நோக்கம் நிறைவேறியதா? ஏன்? போராளி அமைப்புகள் அனைத்தும் தங்களை முன் நிறுத்தவே முயன்றன.போராளி அமைப்புகள் அனைத்தும் ஓரணியில் ஒன்று திரளவே இல்லை.கருணா & கிழக்கு மாகாணம்விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்தது ஈழத் தமிழர்களுக்கு, தனி ஈழம் என்ற போராட்டத்துக்கு பின்னடைவு என்றால் அது மிகையல்ல.வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது இது இந்தியாவில் வட மாநிலங்கள் வளமாகவும், தென் மாநிலங்கள் வளம் குறைவாக இருப்பதைக் குறித்து அரசியலில் பேசப்படும் வார்த்தை. தமிழகத்திலும் இதே போன்ற வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது சூழ்நிலை உள்ளது.ஈழத்திலும் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் என்ற பிரிவு இருப்பது வேதனைக்குரிய விஷயம். இது எந்த அளவுக்கு உண்மை என்பது புரியவில்லை.போராளிகளுக்கு எதிரான போரில் இராணுவத்துக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது கருணா என்பது முக்கியமான விடயம்.தொப்புள்கொடி உறவுகள்தலைத் தமிழகத்து தமிழர்களை ஈழத் தமிழர்கள் குறிப்பிடும் வார்த்தை தொப்புள்கொடி உறவுகள்.தமிழகத்திலிருந்து ஆதரவுக்குரல் மட்டும் தான் கொடுக்க முடிகிறதே தவிர ஆதரவுக் கரம் நீட்ட முடியவில்லை.ஈழத்திலிருந்து உதவிக்குரல் கேட்கும் போது விரைந்து செல்ல பாண்டியனோ, சேரனோ இன்று இல்லை. காரணம் ஆதிகாலத்து மண உறவுகள், அரசியல் உறவுகள் தற்போது இல்லை.இந்த தொப்புள் கொடி உறவை நினைத்து ஏங்கும் ஈழத் தமிழர்களை தலைத் தமிழகத்தில் எப்படி நடத்துகிறார்கள் ? ஒரு உதாரணம்.இலங்கை அகதிகளுக்கான பி.ஏ.பி.எல். சட்டப் படிப்பு முடித்த ஒரு இளைஞர் வக்கீல் தொழில் நடத்த அனுமதி இல்லை. வயிற்றுப் பாட்டுக்கு இப்பொழுது

கல் உடைத்துக் கொண்டிருக்கிறார்.ஈழப் போராட்டத்துக்காக இங்கே மேடையில் முழங்கும் அரசியல் வாதிகள், திரை உலகினர் உண்மையில் ஈழத் தமிழரின் சம உரிமைக்காக என்ன

செய்கிறார்கள் ? ஈழப் பிரச்சனை குறித்து அவர்களது காரசாரமான பேச்சுகள் அவர்கள் சுயலாபத்துக்காகவா ? அல்லது உண்மையிலேயே உள்

மனத்திலிருந்தா ?தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் ?தொப்புள் கொடி உறவுகளான தமிழகப் பொது மக்களுக்கு ஈழப் போர் IV க்குப் பின்தான் ஈழத் தமிழர்களைப் பற்றிய கவனம் திரும்பியிருக்கிறது. அது பண்டைய கால உறவாக தோள் கொடுக்க உருவாகுமா ?பொருளாதாரம்ஈழத் தமிழர்களின் பொருளாதாரம் மிகவும் கவலைக்குரியது. பல்வேறு இன ஒழிப்பு நடவடிக்கைகளால் அவர்களது பொருளாதாரம் முடங்கி உள்ளது.அவர்களுக்கான அடிப்படையான கட்டமைப்பு உருக்குலைந்து கிடக்கிறது. சம உரிமைக்காக, பிரதிநிதித்துவத்துக்காக போராட அவர்களது பலவீனமான

பொருளாதாரம் இடம் கொடுக்காது.தீவிரவாத முத்திரைஈழத்துக்கான போராட்டத்துக்கு, சம உரிமைக்கான நடவடிக்கைக்குத் தீவிரவாத, பிரிவினை முத்திரை குத்தப்பட்டு உள்ளது.ஈழப் போராளிகளுக்கு தடை விதித்துள்ள நாடுகளின் எண்ணிக்கை 32. ஒரு இனத்துக்காக, மொழி சார்ந்த இனத்துக்கான சமஉரிமைப் போராட்டம் உலக

நாடுகளால் தீவிரவாதமாக, பிரிவினையாக எண்ணப்படுகிறது.XVIII. ஈழப் போராட்டத்தின் பலம்1. பூர்வீக பூமி

2. புலம் பெயர்ந்த தமிழர்கள்

3. அரசுக்குப் போராளிகள் மீதான பயம்

4. மீள் உருவாக்கம் (அ) மீள் எழுச்சி

5. கலையப் போகும் நல்லவன் வேஷம்பூர்வீக பூமிஈழத்தமிழர்களின் ஒரே பலம் இது தான்.சிங்களர்கள் தான் இலங்கையில், வெளியிடத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள்.ஈழத் தமிழர்கள் ஈழத்தின் பூர்வீகக் குடிகள், குடியமர்த்தப் பட்டவர்கள் அல்ல.துட்டகமுனு (கி.மு. 49) காலத்திலிருந்து சிங்களர்கள் அவ்வப் பொழுது ஈழத்தைக் கைப்பற்றுவதும் பிறகு அங்கிருந்து தமிழர்களால் விரட்டியடிக்கப்

படுவதுமாகத் தான் இருந்திருக்கிறது.ஆங்கிலேய அரசு செய்த வரலாற்றுப் பிழையால் சிங்களவர்களின் இனவெறி; ஈழத் தமிழர்களை சம உரிமை இல்லாமல், உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் ஈழத் தமிழர்களை அடக்கி வைத்திருக்கிறது.சொந்த மண்ணில் அடிமையாய் வாழும் ஈழத் தமிழர்களை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்கப் போராளிகள் எடுத்த முயற்சி, பல காரணங்களால்

நிறைவுபெற வில்லை.ஆனாலும் சரித்திரத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, ஈழத் தமிழர் வாழ்க்கை மீண்டும் வலுப்பெற்று உயிர் பெறும். அது காலத்தின் கட்டாயம்.புலம் பெயர்ந்த தமிழர்கள்கண்ணீரும் கம்பளையுமாக ஈழத்தை விட்டு 1983 இனக் கலவரத்தில் வெளியேறியவர்கள் இவர்களுடைய பங்களிப்பினால் தான் போராளிகளின் பொருளாதாரம் 1984-85ல் சீரடைந்தது.ஈழத் தமிழர்களின் சம உரிமைப் போராட்டம் நிறைவேறுவது இவர்கள் கையில் தான் இருக்கிறது.தாயகத்திற்காகத் தங்களை வருத்தி நிதி உதவி செய்யும் இவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.ஈழத்தைச் சுற்றியே உலவும் இவர்களது மனம் தான் ஈழப் போராட்டத்துக்கான மூலதனம் & பலம்.சமீபத்தில் ஈழ மக்களுக்கு இவர்கள் அனுப்பிய 800 டன் நிவாரணப் பொருட்கள் வணங்காமண் (கேப்டன் அலி) கப்பல் மூலம் சென்று பல பிரச்சினைகளைச் சந்தித்துத் தற்சமயம் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் விநியோகிக்கப்படுகிறது.அரசுக்குப் போராளிகள் மீதான பயம்அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். ஈழப்போர் IV முடிவுக்கு வந்த பிறகும், ராஜபக்சே கூட்டத்திற்கு எந்த இடத்தில் இருந்து

போராளிகள் தாக்குவார்களோ என்ற பயம் விலகவில்லை.எனவேதான் முள் வேலிக்குள் அடைபட்டிருக்கும் 3 லட்சம் பேரில் பலர் போராளி என்ற முத்திரையில் காணாமல் போகிறார்கள். வெள்ளை வேனும் இன ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது.உள் நாட்டில் போராளிகளைத் தேடும் சிங்கள அரசு, வெளி நாடுகளிலும் போராளிகளைத் தேடுகிறது. இது போராளிகளை ஒழிக்க என்று சொல்லப்பட்டாலும், போராளிகள் மீதான பயம் சிங்கள அரசை விட்டு அகலவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.மீள் உருவாக்கம் (அ) மீள் எழுச்சிஅடிமைத் தளையை அகற்ற அறவழியிலான ஈழத் தமிழர்களின் போராட்டம் உருவாகும். சில காலம் ஆகும்.அடுத்த கட்ட அறவழிப் போராட்டம் உலக நாடுகளின் ஆதரவைப் பெறும். சிங்களர்களின் இனவெறியைத் தோலுரிக்கும். மக்களின் எழுச்சியாக மீள்

உருவாக்கம் பெறும். சம உரிமை, பிரதிநிதித்துவத்துக்கான போராட்டம் சிங்கள அரசை வீழ்த்தும்.ஈழத் தமிழர்களின் மகிழ்ச்சி, மீள் எழுச்சியின் மூலம் மீள் உருவாக்கம் பெறும்.கலையப் போகும் நல்லவன் வேஷம்உலக நாடுகளில் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள நல்லவன் வேஷம் போடும் சிங்கள அரசின் வேஷம் காலத்தினால் அழிக்கப்படும். அவர்களே அவர்கள் வேஷத்தை அழிப்பார்கள்.அவர்களது இனவெறி பிடித்த ஜேவிபி அமைப்பு மீண்டும் தன் சுய உருவத்தைக் காட்டும். ஜன நாயகப் பாதையில் பயணிப்பது சிங்களவர்களுக்குப் பிடிக்காது.அகிம்சையையும், அமைதியையும் போதிக்கும் புத்த மதத்தில் உள்ள சிங்களர்களுக்கு அமைதி, அகிம்சை பிடிக்காது. அதுவரை காத்திருந்து பார்ப்போம்.XIX. நிறைவுரைஈழம் தமிழர் பூமி. சிங்களவர்கள் வந்தேறிகள். இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது சிங்களர்களிடம் ஆட்சியை இங்கிலாந்து அரசு கொடுத்தது வரலாற்றுப் பிழை. சிங்களரின் இனவெறி என்றும் ஓயாது. இத்தனை இடர்பாடுகளைத் தாண்டி தமிழ் ஈழ மக்கள் சம உரிமை அனுபவிக்க, சுதந்திரமாக காலம் கனிய வேண்டும். ஈழத் தமிழர்களும், அறவழிப் போராட்டத்தில் இழந்த சம உரிமைகளைப் பெற்று மீள் எழுச்சியடைய வேண்டும். தமிழ் ஈழம் மீள் உருவாக்கம் பெற வேண்டும். அதற்கான காலம் கனியும்.

Friday, October 16, 2009

ஞாயிற்றுக் கிழமை கலைஞர் டிவியில் முனியப்பன்

நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை கலைஞர் டிவியில் வருகிறார் முனியப்பன். இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இது ரோஸ் நேரம் நிகழ்ச்சியில் முனியப்பன் வருகிறார். நண்பர்கள் பார்த்து தங்கள் கருத்துக்களைப் பதிவில் தெரிவிக்கவும். நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Thursday, October 8, 2009

கலைஞர் டிவியில் முனியப்பன்

முனியப்பனைப் பதிவில் தேடிய நண்பர்களுக்கு நன்றி

முனியப்பன் கலைஞர் டிவியில் சனிக்கிழமை இரவு இந்திய நேரப்படி 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இது ரோஸ் நேரத்தில் வரும் தொடரில் (10.10.09) அல்லது 24.10.09 சனிக்கிழமை இரவு வருகிறார். நேரம் கிடைப்பவர்கள் பார்த்து, முனியப்பன் கருத்துக்களுக்குப் பதிவில் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

Wednesday, September 16, 2009

குற்றாலத்தில் அஷூக்குட்டி

முனியப்பன் வருடத்திற்கு ஒரு முறை தங்கை, தங்கை கணவர், அமர், அஷூவுடன் குற்றாலம் செல்லும் வழக்கம் உள்ளவர்.

குற்றாலத்தில் குளிக்க மே 15 முதல் ஜீன் 15க்குள் போயிருவார். ஏன்னா, அப்பத்தான் கூட்டம் இருக்காது. அமர், அஷூ சந்தோஷமா குளிக்கத் தோதாயிருக்கும். டென்த், பிளஸ்டூ ரிசல்ட் வந்து, எல்லாரும் காலேஜ், ஸ்கூல் அட்மிஷன்னு பரபரப்பாயிருப்பாங்க. குற்றாலம் கூட்டமில்லாம ஃப்ரீயா இருக்கும்.

குற்றாலம் ஃப்ரீயா இருந்தா குளிக்க அருவியில தண்ணி வேணும்ல. தண்ணி நல்லா அருவில விழுகிறத கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டுத்தான் குற்றாலம்.

ஹிண்டு பேப்பர்ல சாட்டிலைட் படத்துல கேரளாவையும், கன்னியாகுமரியையும் தழுவிக்கிட்டு மேகக்கூட்டம் இருக்கணும். மதுரைல காலை 8 மணி வரைக்கும் வெயில் வரக்கூடாது. மதுரைல காத்து அடிக்கணும், அடிக்கிற காத்துல மரத்துல இருக்குற கிளையெல்லாம் டான்ஸ் ஆடணும். அப்படின்னா குற்றாலம் நல்லா இருக்கும். எதுக்கும் குற்றாலத்துல உள்ள நண்பரையும் போன் பண்ணி கன்ஃபார்ம் பண்ணிக்கிடுவார்.

குற்றாலம் போயாச்சு, குளிக்க எல்லா அருவிலயும் தண்ணி இருக்கு. மெயின் பால்ஸ், ஐந்தருவி, பழைய குற்றால அருவி, இது மூணுலயும் குளியல். ஒவ்வொரு எடத்துலயும் கொறைஞ்சது ஒண்ணுலர்ந்து ஒன்றரை மணி நேரம் குளியல். குற்றாலத்துல வெயில் சுள்ளுனு அடிச்சா மதியம் 11-3, முனியப்பன் பக்கத்துல கேரளாவுக்குள்ள பாலருவிக்குப் போயிருவார். குற்றாலத்துல இருந்து 25 கிலோ மீட்டர்ல கேரளாவுல பாலருவி.

இந்த ஜீன் 11 குற்றால போட்டோஸ்

குற்றால சிறுவர் பூங்காவில் ஊஞ்சலாடும் அஷூ அப்பா

குற்றாலம் சிறுவர் பூங்கா - சறுக்கு விளையாடும் அமர், அஷூ, அப்பா

குற்றாலம் சிறுவர் பூங்கா - சிறு குன்றில் ஏறும் அஷூ

குற்றாலம் சிறுவர் பூங்கா - பாம்புகளை அப்பாவுடன் பார்வையிடும் அஷூ

கேரளா - பாலருவி செல்லும் வழியில் ஆற்றில் விழுந்து கிடந்த மரத்தின் மேல் அஷூ

பாலருவி தேக்குமரக் காட்டில் அஷூ

அஷூ எடுத்த போட்டோக்கள்

குற்றால குரங்குகள்

குற்றால சிறுவர் பூங்கா - பாம்பு

குற்றால சிறுவர் பூங்கா

கேரளா - ஆரியங்காவுக்கு முன்னால் உள்ள வியூ பாய்ண்ட்.

பாலருவி தேக்கு மரங்களுக்கிடையில் அஷூவின் அப்பா, அம்மா.

பாலருவிக்கு முன்னால் உள்ள ரயில் ஓடும் பாலம்

பாலத்தில் போகும் ரயில்

சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் எந்திர வாழ்க்கையில் இருந்து சிறிது மாற்றம் தேவை. இது வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தொடர மிகவும் அவசியம்.

Friday, September 4, 2009

கொடியவளே ... !

படர்வது கொடி மட்டும் அல்ல என்மேல்
படரும் நீயும் தான்
கொடியிடையாளே
கொடிபோல் சுருள்பவளே
பாரியின் தேரில் படர்ந்த முல்லைக்கும்
படர்ந்த என் தோளில் படரும் உன் தொல்லைக்கும்
பல ஒற்றுமை உண்டு

படரும் முடிவில்லாத பந்தம்
மணம் வீசும் பூங்கொடியே
சினம் நிறைந்த பூ விழியே உன்
கோபம் என்மேல் படரும்வரை மட்டும்

கோபமும் படரும் ஒரு கொடிதான்
கொடியில் இல்லாத ஒன்று
கொடியிடையாள் உன்னிடம் உண்டு
புன்னகை அதுவும்
மெல்லிய புன்னகை......

Monday, August 24, 2009

நிர்வாண சாமியார் - முனியப்பன்

முனியப்பன் நெல்லை மருத்துவக் கல்லூரில படிக்கும் போது ஒரு கலக்கல் பார்ட்டி. கலக்கல்லயும் அதிரடிக் கலக்கல் தான். அந்தக் கலக்கல்ல ஒண்ணு தான் நிர்வாண சாமியார்.

Dr. பரதன் குமரப்பா, Dr. திவாகர், Dr. அல்போன்ஸ் செல்வராஜ்னு ஒரு Mega மாணவர் கூட்டணி. அவங்க நெல்லை மருத்துவக் கல்லூரி விழாக்கள்ல நாடகங்கள் போடுறதை வழக்கமா வச்சிருந்தாங்க. நாடகம் முழுக்க நையாண்டி மேளம் தான். ஒரே கேலியும் கிண்டலும் தான். பொதுவா ராஜா காலத்து நாடகம், அதுல அந்தக் காலகட்டத்துல உள்ள சமூக நிகழ்ச்சிய கலந்து கலக்கிருவாங்க.

அந்தக் கால கட்டத்துல 1978 - 80ல், நிர்வாண சாமியார்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தாங்க. குரூப்பா, இல்லைன்னா தனித்தனியா வருவாங்க. அவங்க போற எடம் பூராம், போலீஸ் பாதுகாப்பு. ஏன்னா ? நிர்வாணம்.

நம்ம டாக்டர் மாணவர்கள் கூட்டணி இதை விடுவாங்களா ? அந்த நிர்வாண சாமியாரை அவங்க நாடகத்துல ஒரு கதாபாத்திரமா அவங்களோட நாடகத்துல சேத்துக்கிட்டாங்க. Character ரெடி. Actor யாரு ? எல்லாரையும் கேட்டுப் பாக்குறாங்க, "யாருப்பா நடிக்கிறது ?" கதாபாத்திரத்தைக் கேட்ட ஒடனே தலை தெறிக்க ஓடுறாங்க நான் இல்ல, நீ இல்லன்னு. College function அதுல நிர்வாண சாமியாரா stageல வரணும். எப்படி இருக்கும்?, ஒரு பயலும் மாட்டேங்கிறான்.

நம்மாளு முனியப்பன் கலக்கல்ல இருந்து ஒதுங்கி முழுமூச்சா படிச்சிக்கிட்டிருந்த நேரம். அந்த Mega மாணவர் கூட்டணியிடம் அன்பான தொடர்புள்ளவர். அவங்க யோசிச்சுப் பாத்து முனியப்பனை அன்பால நடிக்கச் சம்மதிக்க வச்சுர்றாங்க. முனியப்பன் நிர்வாண சாமியார் வேஷம் கட்ட ரெடியாயிர்றார். ரிகர்சல் நடக்குது. அந்த நேரத்துலயே சிரிப்பை control பண்ண முடியாம எல்லாரும் சிரிச்சு உருள்றாங்க. அந்த நாளும் வருது. கல்லூரி விழா. Stage performance.

மேடைல ராஜாவோட தர்பார் ஹால். ராஜா seatல இருக்கார். மந்திரி, சேனாதிபதி, எல்லாம் இருக்காங்க, சேவகன் "பராக், பராக்" போடுறான். "நிர்வாண சாமியார் வர்றார் பராக், பராக்" Audience அதிர்றாங்க, சிரிப்பலை, சிரிப்பு அடங்குது. Audienceக்கு ஒரு ஆவலான எதிர்பார்ப்பு, மூவர் கூட்டணி ஏமாத்திடுவாங்களா என்ன? ரெண்டு பேரு மடிச்ச 4 முழ வேஷ்டியை வச்சு மறைச்சுக்கிட்டு, முனியப்பனோட இடுப்புக்கு மேல, பாதி தொடைலருந்து தெரியற மாதிரி முனியப்பனை நடுவில வுட்டு அழைச்சு வர்றாங்க. வேஷ்டிக்குப் பின்னால முனியப்பன் கவர்ச்சி நடிகையை விட கம்மியான காஸ்ட்யூம்ல, அரங்கமே அதிருது சிரிப்பால்.
Audience பூராம் குலுங்கி குலுங்கி சிரிக்கறாங்க. இதுல விசில் சத்தம் வேற. மூவர் கூட்டணி எதிர்பார்த்தது இது தான். அவங்க கதாபாத்திரத்துக்கான வெற்றி கெடைச்சுருச்சு. சிரிச்சுக்கிட்டே இருக்காங்களே ஒழிய சிரிப்பலை நிக்க மாட்டேங்குது. Audience சிரிச்சது பத்தாதுன்னு Stage ல் உள்ள ராஜா, மந்திரி, சேனாதிபதி வேற சிரிக்க ஆரம்பிச்சுர்றாங்க. ஆம்பிள சிங்கமா Stageக்குள்ள நுழைஞ்ச முனியப்பன், கழுத்துல மாலயப் போட்டு வெட்டுறதுக்கு ஆட்டை கூப்பிட்டுப் போவாங்கள்ல, பலிகடா, அந்த மாதிரி Portionக்குப் போயிர்றார். எல்லாருடைய சிரிப்புக்குக் காரணமான காட்சிப் பொருள் முனியப்பனுக்குப் பேச வேண்டிய வசனம் மறந்து போயிருது. இதுக்கு இடைல ஒரு பயம் வேற, வேஷ்டியப் பிடிச்சிக்கிட்டு இருக்கவங்க வேட்டியைக் கீழே விட்டுட்டா ?

சிரிப்ப நிப்பாட்டி நாடகத்தைப் பாக்க எல்லாரும் தயாராகுறாங்க. Prompter முனியப்பனுக்கு வசனத்தை எடுத்து விடுறார். சீன் களை கட்டுது. வீரபாண்டிய கட்டபொம்மன், ஜாக்சன் துரை மாதிரி வசனம்

ராசா : என்னவே இப்படி வந்திருக்கீரு ?

நி.சா. : டிரஸ்ஸக் கழட்டுனா நீரும் இப்படித்தான்வே.

அரங்கம் சிரிப்பலையால் அதிர்கிறது. சரிப்பலை அடங்கிய பிறகு,

ராசா : வீட்டை விட்டு வெளியே வந்தா கொஞ்சமாவது துணி வேண்டாமாய்யா ?

நி.சா. : பிறந்ததுல இருந்தே ஆடையில்லாதவன்யா நான்

தலையில் அடித்துக் கொள்ளும் ராசா,

ராசா : ஆமா, ஒத்த ஆளாத்தான் வந்தீராவே ?

நி.சா. : இல்ல ராசா, இன்னம் 23 பேர் வாரவ

அரங்கத்தில் சிரிப்பு, ராசா சுதாரித்துக் கொண்டு,


ராசா : உம்ம வருகையின் நோக்கம் என்னய்யா

நி.சா. : எம் கொள்கையைப் பரப்ப வந்திருக்கோம்யா

ராசா : ஒம்ம மாதிரி திரியறுதுக்கா ?

சிரிப்பலை

நி.சா. : அது ஆரம்பம்

ராசா : ஆரம்பமே சரியில்லையேய்யா, சேனாதிபதி ...

சேனாதிபதி : ராசா,

ராசா : இந்த ஆளைத் தூக்கிக் கொண்டு போய் நாட்டின் எல்லையைத் தாண்டி வீசிவிட்டு வாரும்

சேனாதிபதி, சேவகர்கள் பிடிக்க வர, நிர்வாண சாமியார் முனியப்பன் நேரா மேக்கப் ரூமுக்குப் பறந்து போயிட்டார், அவ்வளவு ஸ்பீடு.

அரங்கமே அதிர்ந்தது.

அதுக்கப்புறம் ஒரு வாரம் காலேஜ்ல முனியப்பன் படாத பாடு பட்டுப் போனாரு. சீனியர் மாணவர்கள் "என்னடே" அப்படின்னு சிரிப்பாங்க, ஜூனியர் மாணவர்கள் 'சார்.....ர்' ஒரு நமுட்டுச் சிரிப்பு, மாணவிகள் தலையைக் குனிஞ்சு சிரிச்சுகிட்டுப் போயிருவாங்க.

இப்ப Dr. பரதன் குமரப்பா நிலக்கோட்டைல இருக்கார், Dr. திவாகர் சிவகங்கைல இருக்கார், Dr. அல்போன்ஸ் செல்வராஜ் சென்னைல இருக்கார். அவங்க மூணு பேரும் காலேஜ்ல நாடகங்கள் போட்டு கலக்குனது - அப்பா, செம கலக்கல் நாட்கள்.

Thursday, August 13, 2009

சிக்ஸ் பேக் அப்

இந்த வார்த்தை, இப்ப தமிழ் சினிமாவை வச்சு தமிழ்நாட்ல மீடியா மூலமா பிரபலமா இருக்கு.

சத்யம் படத்துல விஷாலோட சிக்ஸ் பேக் அப், வாரணம் ஆயிரம் படத்துல சூர்யாவோட சிக்ஸ் பேக் அப், இப்ப தனுஷ்ம் சிக்ஸ் பேக் அப் முயற்சில இருக்கிறார்னு ஒரு சினிமா பத்திரிகை நியூஸ்.

சிக்ஸ் பேக் அப்புக்குன்னு தனி எக்சர்சைஸ், டயட் கண்ட்ரோல் அப்படின்னு சொல்றாங்க.

நம்ம ஊர்ல ஒவ்வொரு கிராமத்துலயும் குறைஞ்சது 5 பேராவது சிக்ஸ் பேக் அப்ல தான் இருக்காங்க. டவுண்ல லோடுமேன்களப் பாருங்க, நெறய பேர் சிக்ஸ் பேக் அப் தான். கடின உழைப்பாளிகள் கிட்ட சிக்ஸ் பேக் அப், கண்டிப்பா பார்க்கலாம். அளவான சாப்பாடு, அதிக உழைப்பு ..... இதான் சிக்ஸ் பேக் அப் ரகசியம்.

சிக்ஸ் பேக் அப்னா என்ன ?

ஜிம் காரன் கிட்ட கேட்டா ... அப்டாமினல் கட்ஸ் அப்படிங்கிறாங்க .... அதாவது வயித்துல இருக்கிற கட்டான அமைப்புகள்.

முனியப்பன் கிட்ட கேட்டா .... மருத்துவ ரீதியான பதிலைச் சொல்றார். நெஞ்சையும் (Xiphisternum) அடிவயிற்றையும் (Pubis) இணைக்கும் சதை ரெக்டஸ் அப்டாமினஸ் (Rectus Ubdominis). தொப்புளுக்கு அது வலது பக்கமும், இடது
பக்கமும் தனித்தனியாக மொத்தம் இண்டு உள்ளன. ஒவ்வொன்றும் மூன்று திரட்சியான பகுதியைக் கொண்டிருக்கிறது. அப்படி 2x3 = 6 ... இது தான் சிக்ஸ் பேக் அப் (Six Pack Ab). இந்த இரண்டு பக்க சதை தான் நம் வயிற்றுக்கு (abdomen)
security guard.

எது எப்படியோ, சிக்ஸ் பேக் அப் உள்ள ஆண்களைத் தான் பெண்கள் விரும்புவதாக ஒரு கருத்துக் கணிப்பு.

Tuesday, July 21, 2009

பேரன் பொறந்தாச்சு - V

V - மதுரைல TNSTC அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர். மதுரை to சென்னை பஸ் ஓட்டுறது TNSTC டிரைவர்களுக்கு ஒரு கெளரவம். மதுரை - சென்னை டூட்டி பாக்குற டிரைவர்கள்ல நம்மாளு Vயும் ஒருத்தர்.

முனியப்பன், முன்னால சென்னைக்குப் போகும்போது V- டூட்டில போவார். போற வழில டிரைவர் கண்டக்டருக்கு ஓட்டல் சாப்பாடு ஃப்ரீ. முனியப்பன் V கூடப் போறதால டிரைவர் கண்டக்டர் பகுதில ஒக்காந்து அவங்களோடு சாப்பிடுவார். முனியப்பன் மதுரை ரிட்டர்னும் V கூடத்தான். முனியப்பன் தங்கியிருக்க ரூமுக்கே வந்து முனியப்பனைக் கூப்பிட்டுப் போவார் V.

Vக்கு வாரத்துக்கு 2 டூட்டி. மதுரைலருந்து சென்னை போக ஒரு நாள். நைட்ல பஸ்ஸ ஓட்டிட்டுப் பகல்ல தூக்கம். ஒரு டூட்டிங்கறது 2 நாள். Vக்கு வாரத்துக்கு 2 டூட்டி - 4 நாள் வேல. மீதியெல்லாம் ரெஸ்ட். நடுவுல வேற ஏதாவது ஒரு வண்டி OT (Over Time) பாப்பாரு. வண்டிலருந்து டூட்டிய முடிச்சு மதுரைல எறங்கிட்டா தண்ணி தான். டூட்டில தண்ணிய தொடமாட்டாரு.

தண்ணி அடிக்கிறதுக்கு ஏதாவது வரணுமில்ல. Vக்கு சுகர் வந்துருச்சு. "தண்ணிய நிப்பாட்டுங்க. Diabetesக்கு ஆகாதுன்னு" முனியப்பன் என்ன சொன்னாலும் கேக்க மாட்டாரு V. தலை வெடிச்சுரும்ல. 200ல ஆரம்பிச்ச Blood Sugar 400க்குப் போயிருச்சு.

வாழ்க்கை எப்பயும் ஒரே மாதிரி ஓடிக்கிட்டிருக்காது. Twist & Turn வரும்ல. அது Vக்கும் வந்துச்சு. V மகனுக்குக் கல்யாணம் முடிஞ்சு பேரன் பொறந்தாச்சு. பேரன் சென்னைல. V மதுரைல. சென்னைக்கு டூட்டில போற V, பேரனைப் பாக்காம எப்படி வருவாரு? பேரனைப் பாத்து கொஞ்சிட்டுத்தான் வருவார்.

ரொம்ப நாள் கழிச்சு V முனியப்பனைப் பாக்க வந்தாரு. V யோட மூஞ்சி தெளிவாயிருந்துச்சு. "என்ன திடீர்னு மாற்றம்" அப்படின்னு கேட்டதுக்கு V சொல்றாரு - "இப்பல்லாம் தண்ணியடிக்கறதுல அளவைக் கொறைச்சாச்சு. பேரனப் பாக்கப் போகும் போது சிகரட்டும் அடிக்கிறதில்ல."

6 மாசப் பேரனுக்கு தண்ணி வாட, சிகரட் வாட ஆகாதாம். ஆளப் பாருங்க, இளம் தளிரின் வரவு Vக்குள்ள எவ்வளவு மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கு பாருங்க... பேரனுக்காகத் தண்ணிய, சிகரட்ட V கொறைக்க ஆரம்பிச்சிருக்காரு. சீக்கிரமா totalஆ நிப்பாட்டிருவாருன்னு நம்புவோமாக.

Saturday, July 11, 2009

அப்பா உன்னிடம் படித்தது

பாடத்தில் படிக்காமல்
பழக்க வழக்கங்களை உன்னிடம் படித்தேன்.

செய்தி வாசிக்க
சொல்லிக் கொடுத்தாய்
உடல் நலத்துக்கும் உறுதியான
உடம்புக்கும் உன் குறிப்புகள்
உணவுக்கும் உன் குறிப்புகள்
உடை, உடல் சுத்தத்துக்கும் உன் குறிப்புகள்

மன உறுதிக்கும் மன மகிழ்ச்சிக்கும்
மன நிறைவுக்கும் உன் குறிப்புகள்
ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தாய்
ஒழுக்கத்தால்

அன்பு, அறிவு, பண்பு
அனைத்தும் கற்றுக் கொடுத்தாய்
சாதி பார்க்காமல்
சமத்துவம் பழகியவன் நீ

பெரியவர்களை மதிக்க வைத்தாய்
பெருந்தன்மையுடன் நடக்க வைத்தாய்
அடுத்தவனை அடக்கி ஆளாமல்
அனைவரையும் மதிக்கப் பழகினாய்

அகந்தை ஆணவம்
அண்டவிட வில்லை நீ
யாருக்கும் அடி வருடாமல்
எவருக்கும் அஞ்சாமல்
தவறு செய்யாமல் வாழ
தலைநிமிர்ந்து நடக்க வைத்தவன் நீ

சுதந்திரக் காற்றை சுவாசிக்க
சுதந்திரமாக உலா வர
சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுத்தாய்
சுடர் விளக்கான நீ

தியாகத்தையும் உன்னிடம் கற்றேன்
தியாகத்தை நீ எங்கே கற்றாய் .......... ?

Sunday, July 5, 2009

ஒத்த யானையும் 70 பேரும்

முனியப்பனின் பாட்டையா, தாத்தா மூணார்ல பொழைச்சவங்க. அப்ப எடம் வாங்கிப் போட்டு ஏலக்கா தோட்டம் உண்டாக்குனாங்க. அந்தக் காலத்துல மூணாறுக்குப் பஸ் வசதி கெடையாது. போடிலருந்து நடந்தே போகணும். அப்படி மலைல, காட்டு வழியா போகும்போது யானைய cross பண்ண வேண்டிய சூழ்நிலைகள் வரும். முனியப்பன் சின்னப்பிள்ளையா இருக்கறப்ப, முனியப்பனின் அப்பா யானைக்கதை சொல்லுவார்.

தாத்தா சம்பாதிச்ச ஏலக்கா தோட்டத்துல முனியப்பனுக்கு ஒரு பங்கு இருக்கு. அதப் பாக்க வருஷத்துக்கு ஒரு தடவை மூணார் trip உண்டு. அப்படிப் போகும் போது காட்டு யானையப் பாக்க, முனியப்பன் கெளம்பிப் போயிருவார். மூணார்ல, காட்டு யானைய கண்டிப்பா பாக்க சான்ஸ் உள்ள எடம்; மாட்டுப்பட்டி டேமுக்கு மேல, எக்கோ (ECHO) பாயிண்டுக்கு முன்னால, டைம் - காலைலன்னா 7 மணிக்குள்ள சாயங்காலம்னா 5.30 மணிக்கு மேல. இந்த டைம்ல டேம்ல தண்ணி குடிக்க யானை வரும். அந்த டயத்தை கணக்குப் பண்ணி முனியப்பன் அங்க போயிருவார்.

போனவருஷம் அங்க போனப்ப, ஒரு நல்ல சைஸ் ஆண் யானை தனியா நின்னு புல்லு தின்னுகிட்டிருந்துச்சு. ஒத்த யானை.. அந்த வழியா ரோட்ல ஜீப்ல, கார்ல போனவங்கள்லாம் "டேய், யானை நிக்குதுடா"ன்னு வேடிக்கை பாக்க கூடிட்டாங்க. வேடிக்கை பாத்த 70 பேர்ல முனியப்பன் அமர், அஷீவோட இருக்கார். யானை பள்ளத்துல இருக்கு ! வேடிக்கை பாக்க வந்த மக்கள்லாம் மேட்ல, ரோட்ல யானைக்கும் மக்களுக்கும் 100 மீட்டர் இடைவெளி.

வேடிக்கை பாக்க வந்த எளவட்டப் பயலுக 6 பேர், கொஞ்சம் கீழே எறங்கி "உஸ்"னு சவுண்டு கொடுத்தாங்க. அமைதியா மேஞ்சிகிட்டிருந்த யானை, சத்தம் கேட்ட ஒடனே disturb ஆயிருச்சு. ஒத்த யானை, அதுவும் ஆம்பளப் பய கொஞ்சம் கோபப்பட்டு, 4 ஸ்டெப் எடுத்து வச்சுச்சு. அவ்வளவு தான். கீழே எறங்கி நின்ன 6 பேரும் திடுதிடுன்னு மேல ஏறிட்டாங்க. வேடிக்கை பாத்த மக்கள்லாம் ஜீப், கார்னு ஏறிப் பறந்துட்டாங்க. முனியப்பனும் அஷீ, அமர கூப்பிட்டுகிட்டு மேல ஏறி கார் கதவத் தெறந்து எஸ்கேப் ஆக ரெடியாயிட்டார். எல்லாம் கண நேரத்துக்குள்ள (fraction of a second).... 55 பேர காணோம்.

ஆட்கள்லாம் ஓடின ஒடனே யானை அமைதியாகி மறுபடியும் புல்லு திங்க ஆரம்பிச்சிருச்சு. மறுபடியும் பிள்ளைகளுக்கு யானைய காமிச்சிட்டு கெளம்புனாரு. ஒத்த யானையோட காணொளி 3 பிரிவா இருக்கு. 1. புல்லு திங்கற யானை 2. 4 ஸ்டெப் வக்கிறது 3. அமைதியாகி நிக்கிறது. 4 ஸ்டெப் வைக்கும் போது யான மொகத்துல தெரியற கோபத்தப் பாருங்க.யானை மனுஷனைப் பாத்தா 3 விதமான policyய கடைப்பிடிக்குது. 1. Safe zone 2. Attack zone 3. Ready zone 4. Safe zone; இதுல மனுஷன் நம்மள ஒண்ணும் செய்ய மாட்டான்னு யான அமைதியா அது வேலயப் பாத்துக்கிட்டிருக்கும். Attack zoneல மனுஷன் பொல்லாதவன் அவனைப் பிச்சிப்புடுவோம்னு attack பண்றது. Ready zoneல மனுஷன் நம்மகிட்ட வந்தாலும் வருவான், எதுக்கும் attack பண்ண ரெடியா இருப்போம்னு மனுஷன் மேல ஒரு கண்ண வச்சிக்கிட்டு புல்லு திங்கறது.

வேடிக்கை பாத்த 70 பேரையும் ஒத்த யானை attack பண்ண ready ஆகி, பெறகு பொழைச்சு போகட்டும்னு விட்டுருச்சு. Close Shave அப்படிம்பாங்களே Narrow escape - அது மாதிரி இல்லைன்னாலும் ஒரு பயம் கலந்த யானை அனுபவம் புதுமை.

Sunday, June 28, 2009

கொடியவள் நீ ...

காதல் என்றால் என்ன என்றவனை
காதல் வலையில் வீழ்த்தி காதலுக்கு
முகவுரை எழுதியவளும் நீ
முடிவுரை எழுதியவளும் நீ

கரம்பற்றி கைகோர்த்தது
கைவிடவா....?

நீ கவிழ்த்தது கப்பலை அல்ல
என் இதயத்தை
சிதறு தேங்காய் போல்
சிதறியது என்மனக் கோட்டைகள்

நீ வளர்த்த காதலை
நீயே தகர்த்த கொடியவள் நீ

என் இதயத்தை
ஏன் ரணகளமாக்கினாய் ... ?

காதலிக்க ஒருவன்
கைப்பிடிக்க ஒருவன்
நீயும் ஏன்
பத்தோடு பதினொன்றாகிப் போனாய்....?

Monday, June 22, 2009

Table Tennis காலங்கள்

முனியப்பன் டேபிள் டென்னிஸ் விளையாடப் பழகுனதே ஒரு தற்செயலான நிகழ்ச்சி. முனியப்பன் காலேஜ்ல இருந்து ஒதுக்கி வச்சிருந்தாங்க. சேட்டைக் காரனை என்ன செய்வாங்க. Suspension தான். அப்ப சும்மா இருக்க காலத்துல, காலேஜ் டேபிள் டென்னிஸ பிளேயர் ஒருத்தர் அடிஷனல் ஸ்டூடண்டா இருந்தாரு. ரெண்டு பேரும் பிரண்ட்ஸா, பொழுது போகணும்ல முனியப்பனுக்கு Table Tennis விளையாட சொல்லிக்குடுத்தார்.

அப்ப நெல்லை மருத்துவக் கல்லூரில, ஸ்போர்ட்ஸ் டே வந்துச்சு, inter class தான். முனியப்பன் அவர் classmateடோ ட கல்லூரி விளையாட்டு விழாவுக்காக கொஞ்சம் seriousஆ அதிக நேரம் பிராக்டிஸ் பண்ணாங்க. லேடிஸ் வேற Table Tennis வெளையாடலாம்னு முடிவு பண்ணி அவங்களுக்கும் போட்டின்னு அறிவிச்சாங்க.

முனியப்பனே அரைகுறை. இதுல அவர் பேட்ச் லேடி ஒருத்தருக்குTable Tennis வெளையாட பழகிக் கொடுத்தார். எல்லா கிளாஸ்லயும் miss world மாதிரி ஒரு அழகி இருப்பாங்கள்ல, "clean beauty" வகுப்பு அழகி அவங்க தான். முனியப்பன் கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டாங்க.

வகுப்பு அழகியோட முனியப்பன் Table Tennis வெளையாடுற நியூஸ் மாணவர்கள் மத்தில தீயாப் பரவிருச்சு. ரெண்டு பேரும் எப்படா வெளையாடுவாங்கன்னு தேடி வந்து பாக்க ஒரு குரூப். வகுப்பு அழகிய பின் தொடர்பவர்கள் (followers) ஒரு குரூப். One side love (ஒரு தலைக் காதல்) உள்ளவங்க ரெண்டு பேர், அவன்ங்களுக்கு தொணைக்கு 2 பேர், நாலு பேரும் முனியப்பன் வகுப்பு அழகி வெளையாடும் போது, பந்து பொறக்கி போட வந்துருவாய்ங்க.

ஒரு 15 நாள், செம ஜாலி "முனியப்பன் நேரத்தைப் பாருடா"ன்னு அவிங்களுக்கு முனியப்பன் மேல பொறாமை வேற. அவனுகளைப் பாக்கப் பாக்க முனியப்பனுக்கு சிரிப்பா வரும். சிரிப்ப அடக்காம முனியப்பன் சிரிச்சிருவார். அவனுகளுக்கு ஒரு மாதிரி ஆயிரும். ஒரு lady முன்னாடி nose cut பண்ணா feeling அவனுகளுக்கு வந்துரும்.

Sports dayம் வந்துருச்சு. முனியப்பனும் அவர் நண்பரும் ஆண்கள் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று வின்னர். முனியப்பன் நண்பர் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தோல்வி. மகளிர் பிரிவில் நம்ம வகுப்பு அழகி இரண்டாவது சுற்றில் தோல்வி.

இரட்டையர் கலப்பு பிரிவில் (mixed doubles) என்னாச்சு ? நம்ம முனியப்பனும் வகுப்பு அழகியும் இறுதி ஆட்டத்தில். இறுதி ஆட்டம்(Finals)னாலே பரபரப்பு தான். ஆட்டத்தைப் பார்க்க ரெண்டு வகுப்பைச் சேந்த 60 பேர் சுத்தி இருக்காங்க. எதிர் தரப்பு ஒரு காதல் ஜோடி. அப்பத்தான் சீரியஸான காதல் ஆரம்பம். முனியப்பனுக்கு எதிர்தரப்பு ஜோடி நெருங்கிய நண்பர்கள். முனியப்பனுக்கு எளகின மனசு. அப்புறம் என்ன நடக்கும் ? போராடி தோக்குற மாதிரி முனியப்பன் தோத்துட்டார்.

60 பேர் முன்னால இறுதி ஆட்டத்துல தோத்தா எப்படி இருக்கும் ? வகுப்பு அழகி அழுததைப் பாக்கணும் அன்னைக்கு, அவங்க கண்ணீரைத் தொடச்சி விட அவங்க தோழி, பந்து பொறக்கி போட வருவாங்களே ரெண்டு பேரு, அவங்க ரெண்டு பேரும் முனியப்பனை எகிறித் தள்ளிட்டாங்க "எப்படிடா தோக்கலாம்னு".

அடுத்த நாள் அந்த இளம் ஜோடி முனியப்பனுக்கு நன்றி சொன்னாங்க. ஜெயிச்சிருந்தா கெடைச்சிருக்கக் கூடிய சந்தோஷத்தை விட, அந்த ஜோடி சொன்ன நன்றி முனியப்பனுக்கு மிகப் பெரிய வெற்றி.

காலேஜ்ல மட்டும் TT வெளையாண்டா போதுமா? Inter College டோ ர்னமெண்ட் வேண்டாமா? அதெப்படி அங்க போகாம இருக்க முடியுமா ?

3 வருஷம் நெல்லை மருத்துவக் கல்லூரிக்காக Table Tennis வெளையாண்டார் முனியப்பன். TT வெளையாட்டெல்லாம் சீரியஸா வெளையாடுறது இல்ல. படிக்கணும்ல, முனியப்பனும், அவங்க டீமும் மேட்சுக்கு முன்னால 10-20 நாள் practice பண்ணுவாங்க. அதுக்கப்புறம் மேட்ச், மேட்ச் முடிஞ்ச ஒடனே படிப்பு.

மொதமொத முனியப்பன் TT மேட்ச் வெளையாட நிக்கிறார். எதிர் அணி மதுரை மருத்துவக் கல்லூரி. எடமும் அதே மதுரை மெடிக்கல் காலேஜ் தான். முதல் எதிராளி மதுரை யுனிவர்சிடி கேப்டன். சிங்கத்தை சிங்கத்தோட கோட்டையில சந்திச்சார் முனியப்பன். வேற என்ன செய்ய? ஸ்ட்ரெய்ட் setல தோல்வி தான்.

முனியப்பனை ஈஸியா ஜெயிச்சரலாம்னு slowவா வெளையாண்ட கேப்டன் எதிர்பார்க்காம முனியப்பன் shot அடிச்சார். Shot அடிச்சுப் பாயிண்ட் எடுத்த ஒடனே TT batஅ TT டேபிள்ல வச்சுட்டு clap பண்ணார் பாருங்க. வேடிக்கை பாக்க வந்த மதுரை மெடிக்கல் மாணவர்கள் அதிர்ந்து, பெறகு சுதாரிச்சு அவங்களும் கைதட்டினாங்க. முனியப்பனை லேசா எடை போட்ட கேப்டன், பெறகு சீரியஸா வெளையாண்டு ஜெயிச்சார். பாய்ண்ட்டே எடுக்க முடியாது அவ்வளவு தான்னு நெனச்ச முனியப்பன் ஒவ்வொரு setலயும் 10,10 பாய்ண்ட் எடுத்தார். முனியப்பன் shotக்கு மக்கள் கைதட்டுனாங்க. எதிராளி கோட்டைல ஒரு ஒரு மறக்க முடியாத கலக்கல்.

படிப்புல கவனம் செலுத்துனதால முனியப்பன் வெளையாட்டுல சீரியஸா எறங்கல. 3 வருஷம் நெல்லை மருத்துவக் கல்லூரிக்காக முனியப்பன் வெளையாண்ட Inter Collegieate மேட்ச் 9. அதுல 3 வின், 6 தோல்வி. ஆனா படிப்புல, 2 பாடத்துல university ஃபர்ஸ்ட்.

1978 - 1980ல டேபிள் டென்னிஸ் வெளையாண்ட ரூமை 1992ல முனியப்பன் பாத்தபோது எடுத்த photo. பசுமையான TT நாட்கள்.

Wednesday, June 17, 2009

அஷுக்குட்டியின் முதல் ஃபோட்டோ

4 வயசு அஷுவுக்கு ஒரு கேமரா வாங்கிக்கொடுத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்லிக்கொடுத்தார் முனியப்பன். அஷுவுக்குப் பொதுவான instructions தான். அஷு மனதுக்குப் பிடித்த மாதிரி அவனாக எடுத்த ஃபோட்டோஸ்.

அஷுவோட அப்பா, அம்மா, அண்ணன் அமர்

அஷுவோட மீன்கள்


அஷுவோட எலக்ட்ரிக் பைக்

அமர்நாத், அஷுவின் அண்ணன் மீனுக் குட்டியுடன் (பூனை)

அஷுவின் பீரோ

அஷுவின் TV, கார்டூன் நெட்வொர்க்

அஷுவின் ஆச்சி (முனியப்பன் அம்மா)

அஷு, எடுத்தது அண்ணன் அமர்

சிறு வயதிலேயே குழந்தைகளை ஆர்வமூட்டி வளர்க்கும் பொழுது பிற்காலத்தில் அவர்கள் சிறப்பாக வருவார்கள் தங்கை பிள்ளைகள் வளர்ப்பில் முனியப்பனின் டெக்னிக் இது.

Sunday, June 7, 2009

DIABETIC RETINOPATHY - ஏட்டையா

முனியப்பன் clinic வச்சிருக்க ஏரியால ஒரு ஏட்டையா (Head Constable) . மதுரை S.S.காலணி போலீஸ் ஸ்டேஷன்ல வேல பாத்துக்கிட்டிருந்தார். நீரிழிவு (Diabetes) வியாதிக்காரர்.

ஒரு நாள் முனியப்பன் அவரை ரோட்ல கிராஸ் பண்ணும் போது பாக்குறார். ஏட்டையா ரொம்ப மெலிஞ்சிருந்தார். முனியப்பன் டூ வீலரை நிப்பாட்டி ஏட்டையாவ clinic வரச் சொன்னார். டெஸ்ட் பண்ணிப் பாத்தா ரத்தத்துல சுகர் கண்டபடி எகிறியிருக்கு. TB வியாதி வேற நுரையீரலத் தாக்கியிருக்கு. சுகருக்கு இன்சுலின் போட்டு, TBக்கும் ஊசி, மாத்திரை குடுத்து முனியப்பன் ஏட்டையாவ சுகமாக்கிர்றார். ஒரே ஒரு அட்வைஸ் ஏட்டையாவுக்கு. தண்ணி அடிக்கக்கூடாது. ஏன்னா, ஏட்டையா சூப்பர் தண்ணி பார்ட்டி.

தண்ணி அடிக்காதன்னா யாராவது கேப்பானா...? ஏட்டையா ஊத்துறார். போலீஸ் யூனிஃபார்ம்லேயே எங்கயாவது flat ஆகி ரோட்ல கூட படுத்துக்கிடப்பார். யாராவது தெரிஞ்ச ஆள் அவரத் தூக்கிக்கொண்டு போய் அவர் வீட்ல விட்ருவாங்க.

முனியப்பன் கிட்ட ஏட்டையா அப்பப்ப வருவார். ரத்தத்துல சுகர் 300க்கு கொறையாது. முனியப்பன் சத்தம் போடுவார். ஏட்டையாவா கேக்குற ஆளு. 'அவன் கெடக்கான் டாக்டரு'ன்னு அவர் மனசுக்குள்ளயே வச்சிக்கிருவார். டெய்லி தண்ணி தான்.

ஒரு தடவை விராட்டிபத்து போலீஸ் செக்போஸ்ட்ல 150 ஃபுல் பாட்டிலோட ஒரு ஆட்டோ வ நிப்பாட்டிர்றாங்க. பாண்டிச்சேரிலருந்து கடத்திக்கிட்டு வந்த சரக்கு. ஆட்டோ வ விட்டுட்டு அதுல வந்த மூணு பேரும் எறங்கி ஓடுறானுவ. செக் போஸ்ட்ல நம்ம ஏட்டையாவும் டூட்டில இருக்கார். ஏட்டையாவ பாட்டில பாத்துக்கிட சொல்லிட்டு SI யும் ரெண்டு கான்ஸ்டபிளும் ஓடுறவங்களைப் பிடிக்க ஓடுறாங்க. எவன் பிடிபடுவான் ... ? மூணு பேரும் எஸ்கேப். SI திரும்பி வந்து பாத்தா, அந்த நாலுல ஒரு பாட்டில ஓபன் பண்ணி முக்காவாசியக் குடிச்சி முடிச்சிட்டார் நம்ம ஏட்டையா. எவ்வளவு சின்சியரான டூட்டி பாருங்க...?

குடியும் சுகரும் பிரண்ட்ஸ். குடிக்க குடிக்க சுகர் கொறையாது. இது நடைமுறை, குடிய நிப்பாட்டுனா சுகர் கொறையும். நம்ம ஏட்டையாவா குடிய நிப்பாட்டுற ஆளு.

டெய்லி குடிக்கறதுக்கு எதாவது நடக்கணும்ல. அதெப்படி நடக்காம இருக்கும். ஏட்டையாவுக்கு கைல, கால்ல வெரல்ல புண்ணு வர ஆரம்பிச்சது. வெரல் அழுகி (Diabetic Gangrene) ஏட்டையா கைலயும், கால்லயும் 6 வெரல கட் பண்ணி எடுத்தாச்சு.

வெரல் போனா என்ன...? குடிய நிப்பாட்ட முடியுமா? ஏட்டையா குடிச்சிகிட்டே இருக்கார். கண்ல பார்வை கொறைய ஆரம்பிக்குது. தமிழ்நாட்ல உள்ள எல்லா கண் ஆஸ்பத்திரிலயும் காட்டுறார். சுகரக் கண்ட்ரோல் பண்ணாததால (Uncontrolled Diabetes) பார்வைக்கு வாய்ப்பில்லை. லேசர் தான் வைக்க முடியும், மேஜிக் மாதிரி எதுவும் செய்ய முடியாது அப்படின்னு சொல்லிர்றாங்க. கண்ணோட கதை முடிஞ்சிருச்சு.

டூ வீலர்ல முனியப்பன்கிட்ட தானே வந்தவர், கொஞ்ச நாள் கழிச்சு நடந்து வர்றார் (கண் பார்வை கொறையுதுல்ல...). நடந்து வந்தவர், அப்புறம் அதுவும் முடியாம ஆட்டோல வர்றார். ஒரு நிதானத்துல வீட்டுக்கு பக்கத்துல இருந்த கடைக்குப் போய்க்கிட்டிருந்தார். இப்ப அதுவும் முடியாம வீட்டுக்குள்ளேயே மொடங்கிக் கெடக்குறார். வீட்டுக்குள்ள நடக்கிறதுக்கே யாராவது help பண்ணனும்.

கண் கெட்ட பெறகு சூர்யநமஸ்காரம்பாங்க. கண் பார்வை முழுசா போன பெறகு இப்ப நம்ம ஏட்டையா இப்ப குடிக்கறதில்லை.

Tuesday, June 2, 2009

Boxing 11 ரவுண்டு - Ashu

4 வயசு Ashuக் குட்டி முனியப்பன் தங்கச்சி மகன். அவனும் அவன் அண்ணன் 7 வயசு அமரும் முனியப்பனைப் பாடாப் படுத்திருவானுக. இரவு 10.30க்கு நைட் ரவுண்ட்ஸ் டூ வீலர்ல. Ashu கையக் காட்டுற பக்கம் எல்லாம் வண்டிய ஓட்டிட்டுப் போகனும் (ஆளுக, போக்குவரத்து குறைவான பகுதி தான்). ரவுண்ட்ஸ் முடிஞ்ச உடனே வெளையாட்டு.

இப்ப ரெண்டு நாளா Boxing நடக்குது. 4 வயசு Ashuவும் முனியப்பனும் மோதுவாங்க. எடம் முனியப்பனின் படுக்கை. 7 வயசு அமர் நடுவர். Boxing 11 ரவுண்ட், 1 ரவுண்டுக்கு 1 பாயிண்ட். அதுல யார் ஃபர்ஸ்ட் 6 ரவுண்ட் ஜெயிக்கிறாங்களோ, அவங்க தான் வின்னர். குத்துச் சண்டை வீரர்கள் குதிக்கிற மாதிரி Ashuவும் முனியப்பனும் குதிப்பாங்க. போட்டிக்கு முன்னால Ashu கையவும், முனியப்பன் கையவும் பிடிச்சு Shake Hands குடுக்க வைப்பார் அமர். போட்டி துவங்கறப்ப மொதல்ல இப்பிடி வர்ணனை குடுப்பார் அமர். "இப்ப டாக்டர் முனியப்பனும் டாக்டர் Ashuவும் சண்டை போடப் போகிறாங்க, Action"ம்பார்.

Actionன உடனே Ashuவும் முனியப்பனும் குத்துக்களை விட ஆரம்பிச்சிருவாங்க. Ashu குத்தின ஒடனே முனியப்பன் கீழே விழுந்துருவார். Ashu 1 பாயிண்ட். அடுத்து முனியப்பன் Ashuவைக் கீழே தள்ளிவிட்ருவார், முனியப்பன் 1 பாயிண்ட். Ashu 2 முனியப்பன் 2 வந்த ஒடனே Ashu கண்ணு கலங்கிரும். அடுத்த ரவுண்ட்ல எல்லாம் Ashu குத்துக்கு முனியப்பன் கீழே விழுந்துருவார். 6 பாயிண்ட் Ashu எடுத்துருவார். நடுவர் அமர், "Ashu 6 பாயிண்ட் எடுத்து வின்னர் ஆயிட்டார்"னு முடிவை அறிவிப்பார்.

அப்ப Ashuவோட நடையைப் பாக்கணும். வெற்றி நடை, துள்ளல் நடை, வாயெல்லாம் சிரிப்பு, "ஹே"ன்னு ஒரு சத்தம். குழந்தைகளைக் குதூகலப்படுத்திப் பார்ப்பது தனி இன்பம்......

Sunday, May 24, 2009

நக்காரணர்

நக்காரணர்...கேள்விப்படாத பேரா இருக்கா. பழந்தமிழர்கள் கையாண்ட வார்த்தை இது.

பழந்தமிழர்கள் 'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்று பல தேசங்களுக்கு கடல் மார்க்கமாக சென்று வணிகம் செய்தனர். முக்கியமாக, ரோம், சீனா, மலேசியா, ஜாவா, சுமத்ரா,

வங்காளவிரிகுடா மார்க்கமாக அவர்கள் பயணம் செய்யும் பொழுது அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக செல்லும் பொழுது மனிதனை தின்னக் கூடிய ஆதிவாசிகளை கடந்திருக்கின்றனர். அவர்களை 'நக்காரணர்' என்றழைத்தனர். இன்று ஜாரவாஸ், சென்டினல்ஸ் எனப்படும் பூர்வீக குடிகள். அவர்களில் இன்று ஜாரவாஸ் திருந்தியிருக்கின்றனர். இன்னும் சென்டினல்ஸ் குடிகள் அதே குணத்தோடு தான் இருக்கின்றனர். அவர்களை தொந்தரவு பண்ணாமல் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் மாறாமல், கண்காணிப்பில் இந்திய அரசாங்கம் வைத்திருக்கிறது.

ஜாரவாஸ், சென்டினல்ஸ் இந்த இரு பூர்வீக குடிகளும் இன்னும் ஆடை அணியும் பழக்கமில்லாதவர்கள். ஜாரவாஸ் மட்டும் மற்ற மனிதர்களோடு பழகத் தொடங்கியிருக்கின்றனர். சுனாமியை மறந்திருக்க மாட்டீர்கள். அப்பொழுது சென்டினல்ஸ் வசிக்கும் தீவை பார்வையிடச் சென்ற இராணுவ ஹெலிகாப்டரை ஆடையில்லாத சென்டினல்ஸ் பழங்குடி ஒருவர் கையில் உள்ள மிக நீளமான ஈட்டியால் துரத்துவது படம் பிடிக்கப்பட்டு, ஆங்கில நாளேடான ஹிந்துவில் பிரசுரமாகியிருந்தது. அந்த பழங்குடியின் ஆக்ரோஷம் 21ம் நூற்றாண்டில் இப்படி இருக்கும் போது பண்டைய காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்.

வியாபார நிமித்தம் கப்பலில் செல்பவர்கள் அந்த பக்கம் போக வேண்டாம் என்று சிலப்பதிகாரத்திலும் குறிப்பிருக்கிறது. நக்காரணர்களிடம் மாட்டி தப்பித்து வந்தவர்களின் கதைகளும் சொல்லப்படுகிறது.

பழந்தமிழரின் வணிகம், மனிதனை சாப்பிடும் பூர்வீக குடிகளை பற்றிய அவர்களது அனுபவம், நக்காரணர் என்று அவர்களுக்கு பெயர் சூட்டியது, இன்னும் அந்த பூர்வீக குடிகள் அங்கே இருப்பது. அதை காலச் சுவட்டில் பதிவு செய்தது, பழந்தமிழர்களுக்கு ஒரு சல்யூட்

Tuesday, May 12, 2009

பேப்பர் சீனிவாசன் - எதுக்குன்னு புரியலை

பேப்பர் சீனிவாசன். பேப்ர் போடுறவன். 32 வயசு. பேப்பர் ஏஜென்சி எடுத்து நாளிதழ்கள், வார இதழ்கள், வீடுவீடாப் போடுறவன். பெட்டிக் கடை வச்சிருக்கான். அதுலயும் நாளிதழ், பத்திரிகைகள். பெட்டிக்கடை வச்சா சிகரெட், மிட்டாய் விக்கணும்ல, உண்டு. மெயின் தொழில் பேப்பர், புக்.

மொதல்ல வீடு வீடா பேப்பர் போடுறதுக்கு சீனிவாசன்ட்ட ரெண்டு பயலுக சம்பளத்துக்கு இருந்தாய்ங்க. 5 லைன், அதுல 4 லைன்ல பயலுவ பேப்பர் போடுவாய்ங்க. சீனிவாசன் 1 லைன் பேப்பர் போடுவான். இப்பத்தான் வேலைக்கு எல்லா இடத்துலயும் பயலுக கெடைக்க மாட்டேன்கிறாங்களே. சீனிவாசன்கிட்ட ஒரு வரு\மா பயலுக பேப்பர் போடுறதுக்கு இல்லை. அதுனால அவனே 5 லைன்லயும் பேப்பர் போடுறான். கடின உழைப்பாளி.

தலைப்புக்கான விஷயத்துக்கு வருவோமா ... எல்லா எடத்துலயும் மொத மாசம் போட்ட பேப்பருக்கு பில்லைப் போட்டுக் காசை வாங்கிடுவான் சீனிவாசன். முனியப்பன்கிட்டயும் மொதல்ல பேப்பர் காசை வாங்கிக்கிட்டிருந்தவன் இப்ப பேப்பர் போடுறதுக்குள்ள ரூபாயை வாங்காம பேப்பர் போட்டுக்கிட்டிருக்கான் 5 வருஷமா. "என்னப்பான்னா ?" "இந்தா வாங்கிக்கிடுறேன் சார்" அப்படிம்பான் அவ்வளவு தான்.

முனியப்பன் கிளினிக்ல தான் இப்படின்னா, முனியப்பன் அம்மாகிட்டயும் பேப்பர் ரூவா வாங்க மாட்டேங்கிறான். அடுத்த வீட்ல பில் போட்டு ரூவா வாங்கிக்கிட்ருப்பான். முனியப்பன் அம்மா "சீனிவாசா, இங்க வந்து ரூவா வாங்கிட்டுப் போ" அப்படிம்பாங்க. அங்கயும் "இந்தா வாரேம்மா" அப்படிம்பான். முனியப்பன் அம்மா வீட்டுக்குள்ள போயி நரூவா எடுத்துட்டு வருவாங்க.சீனிவாசன் escape ஆயிருப்பான். இதுவரைக்கும் சீனிவாசன், முனியப்பன்கிட்டயும் முனியப்பன் அம்மாக்கிட்டயும் தினத்தந்தி, ஹிண்டு, தினமணி நாளிதழ்கள் போட்டதுக்கு வாங்க வேண்டியது ரூ 12,000 (பனிரெண்டாயிரம்).

ஏன் வாங்காம இருக்கான்னு அவன்கிட்டயும் கேட்டுப் பாத்தாச்சு. சிரிச்சிட்டு ஓடிருவான் சீனிவாசன். அதுக்கான காரணம் புரியலை. 1. அவன் கல்யாணத்துக்குப் பணம் சேக்குறானா 2. பேங்க விட முனியப்பன், முனியப்பன் அம்மாகிட்ட பணம் இருக்கது பாதுகாப்பானதுன்னு நெனக்கிறானா ? 3. முனியப்பனுக்கு இலவசமா பேப்பர் போட வேற யாரும் பணம் கட்டுறாங்களா ? (சான்ஸே இல்லை).

இப்படி முனியப்பன் மனசுக்குள்ள பல கேள்விகள். இது வரைக்கும் விடை கிடைக்கலை. ஒங்க மனசுல ஏதும் தோணுதா.... ?

Friday, May 8, 2009

Case Sheet (முனியப்பனும் 'தல' யும்)

முனியப்பன் மதுரையில் ஒரு பொது மருத்துவர். அவரிடம் ஒரு விநோதமான கேஸ்.

மாலை 7 மணி இருக்கும். முனியப்பனின் பரபரப்பான ஆலோசனை நேரம். ஒரு பெண்ணை, 30-32 வயசு இருக்கும். ஒருத்தர் சிகிச்சைக்காகக் கூப்பிட்டு வர்றார். அந்தப் பொண்ணு கிடுகிடுன்னு நடுங்குது, பேச்சு வரல. என்னன்னு கேட்டா ... கூப்பிட்டு

வந்த ஆளும் சரியா சொல்ல மாட்டேங்கிறார். முனியப்பன் பரிசோதிச்சுப் பாத்துட்டு "இவங்க அதிர்ச்சில (shock) இருக்காங்க" னு சொல்லிட்டு, ஊசி போட்டு மாத்திரை கொடுத்து அனுப்புறார்.

ஒரு மணி நேரம் கழிச்சு அந்தப் பெண்ணோட அதிர்ச்சிக்கு காரணம் தெரிய வருது.

அந்தப் பொண்ணு வீட்ல இருந்த கெளம்பி ஒரு விஷேஷத்துக்கு போறதுக்காக மெயின் ரோட்ல நடந்து கிட்டு இருக்கு, நடந்து வரும் போது குனிஞ்சு பாக்காம நடக்குதா... ஒரு பொருளை கால்ல எத்திருது. வித்தியாசம இருக்கே .... என்னத்த எத்தினோம்னு குனிஞ்சு பாக்குது. அந்தப் பொண்ணு எத்தினது மனித 'தல'. அப்புறம் எப்படி shock அடிக்காம இருக்கும் ....... ?

பழிக்குப் பழியா நடந்த கொலை சம்பவம் அது. ஒரு எடத்துல கொலய பண்ணிட்டு, ஏற்கனவே 2 வருஷத்துக்கு முன்னால கொலை நடந்த எடத்துல, தலய மட்டும் கொண்டு வந்து வச்சி, கணக்க நேர் பண்ணிட்டாங்க ........... !

Monday, May 4, 2009

சண்டையும் சமாதானமும்

உன் குத்துக்கள்
என்னைப் பதம் பார்க்கின்றன
எட்டி உதைக்கும் உன்கால்கள்
என்னில் வலியைச் சேர்க்கிறது

முறைத்துப் பார்த்து
முகம் திருப்புகிறாய்
ஏனிந்த கோபம்
என்னிடம் உனக்கு

காரணம் தெரியாமல் தவித்தபின்
காரணம் தெரிகிறது
என்னிடம் தான் தவறு
உன்னிடம் அல்ல என்று

தங்கைமகன் அமரே
தவச் செல்வனே
உன் கோபம் போக்க
என்னிடமா இல்லை வழிகள்

மன்னிப்புக் கேட்டவுடன்
மயங்கி மறப்பாய் உன் கோபத்தை....

Thursday, April 30, 2009

வழக்கொழிந்த பழக்கங்கள்

தமிழர்கள் பண்பு மிக்கவர்கள் பெருந்தன்மையானவர்கள், இன்று தமிழன் நிச்சயமாக சுயநலவாதியாய் மாறிவிட்டான், வெகு சிலரைத் தவிர.

இன்றைக்கு நடைமுறையில் சாத்தியமில்லாத பழக்கங்கள் கிட்டத்தட்ட 60-70 வருடங்கள் முன்கூட பழக்கத்தில் இருந்தன.

ஒரு சில தாய்மார்கள் தன் பிள்ளைக்கு குடுத்தது போக மிச்சம் தாய்ப்பால் இருக்கும். அதை வீணாக்காமல் வேறொரு பிள்ளைக்கு குடுப்பார்கள், இது கிராமங்களில் இருந்த வழக்கம்.

பிரசவத்தில் தாயை இழந்த பிள்ளைகளை வேறொரு தாய், தாய்ப்பால் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். இந்த பழக்கம் அக்காலத் தாய்மார்களின் சிறந்த பண்பை பறைசாற்றுகிறது.

பிள்ளைச்சோறு இது கிராமங்களில் பெரிய வீடுகளில் ( பெரிய வீடுன்னா, 'முக்கியமான' அப்படின்னு எடுத்துக்குங்க) மதியம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு, தங்கள் வீடுகளில் மதிய உணவு இலவசமாக சோறு, குழம்பு கொடுப்பார்கள். 20-30 வருடங்கள் முன்பு வரை இருந்த பழக்கம் இன்று எங்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை.

Saturday, April 25, 2009

முத்தம் ஒண்ணு கொடுத்தாய் ... (Case Sheet)

இளமைங்கிறது வாழ்க்கைல ஒரு வசந்தம். பாலியல் கவர்ச்சி, ஈர்ப்பு உள்ள காலம். காதல் வசப்பட்டவங்களுக்கு முத்தத்தைப் பத்தி ஆர்வம் உள்ள காலகட்டம். உணர்ச்சி வசப்பட்டவங்களுக்கு முத்தம் எப்படி குடுக்குறதுன்னு பல சிந்தனை, அதுல ஒரு கிளுகிளுப்பு.

பிரிட்டிஷ் காரன் மொதல்ல லேடி கையப் பிடிச்சு, அந்தக் கைல ஒரு kiss அடிப்பான். பிரெஞ்சுக் காரன் லிப் டூ லிப் French kiss. நம்மாளுக உம்மா கன்னத்துல தான் அதிகம்.

லிப் கிஸ் அடிச்சு நோயாளியா ரெண்டு case முனியப்பன் பாத்திருக்கார். ஒருத்தன் 10 வருஷத்துக்கு முன்னால, இன்னொருத்தன் சமீபத்துல.

அவனுக்கு வயசு 24. Fax, Xerox, STD கடை வச்சிருந்தான். அங்க STD பண்ண வந்த ஒரு லேடி அவனுக்குப் பிக்அப் ஆயிருச்சு. உணர்ச்சி வசப்பட்டு kiss அடிக்கிறாங்க. நம்மாளு கீழ் ஒதட்டுல லேடியோட பல்லு பட்டு ரத்தம் வருது. வாய்ல கர்ச்சீப்பை வச்சி பிடிச்சிக்கிட்டு ரெண்டு பேருமே முனியப்பன் கிட்ட வந்துர்றாங்க. முனியப்பன் கிழிஞ்சு போன ஒதட்டுல தையலப் போட்டு ரத்தத்தை நிப்பாட்டி ட்ரீட்மெண்ட் குடுத்து அனுப்பி வச்சுர்றார்.

இவனுக்கு வயசு 20. இந்தியா சார்பா உலக நாடுகள்ல ஒரு வெளையாட்டுல கலந்துக்கிர்றவன். அப்படி ஒரு வெளிநாட்டுக்குப் போனப்ப, ஸ்டார் ஹோட்டல்ல தங்கியிருக்கப்ப, ஒரு ஹேண்ட்ஸம் வெளிநாட்டு லேடியப் பாக்குறான். அண்ணனும் நோக்கினான். அவளும் நோக்கினாள். அப்புறம் என்ன ...? ப்பசக் தான். கொஞ்சம் வெளையாட்டு. அதுக்கப்புறம் போக நம்ம பயலுக்கு பயம், ஓடி வந்துர்றான்.

அவனோட 4 வயசுல இருந்து, முனியப்பனும் அவனும் பிரண்ட்ஸ். Kiss மேட்டர் அவனுக்குள்ள ஒரு பயத்தை உண்டாக்கிருச்சு. இந்தியாவுக்கு வந்து, மதுரைக்கு வந்த ஒடனே முனியப்பன் கிட்ட வந்துட்டான். மேட்டரச் சொன்னான். "ஒண்ணுமில்லை. பயப்படாதப்பா" அப்படின்னு சொன்னாலும் convince ஆக மாட்டேங்கிறான். வேற வழியில்லாம HIV டெஸ்ட் பண்ணிப் பாத்து நெகடிவ்னு சொன்னப்புறம்தான் அவனுக்கு நிம்மதி.

ரெண்டு பேருக்கும் முனியப்பன் சொன்ன அட்வைஸ், முத்தம், Sex எல்லாம் வாழ்க்கைத் துணையோட மட்டும் தான்.

Saturday, April 11, 2009

தமிழீழ வெற்றிக்கு வாழ்த்துக்கள்

தொப்புள் கொடி உறவுகள்
கைகொடுக்கும் எனக் காத்திராமல்
தமிழக அரசியல்வாதிகள்

தமிழினப் பற்றை அறிந்தபின்
தானே சிலிர்த்தெழுந்த
தமிழீழ மக்களே.........

உங்கள் உணர்வுக்கும்
உங்கள் துடிப்புக்கும் வணக்கம்.

உள்நாட்டில் வேதனையுறும்
உடன் பிறப்புகளுக்காக
அயல் நாட்டில்
ஆர்ப்பரிக்கும் சிங்கங்களே


உலகை உலுக்கும்
உங்கள் போராட்டத்தின் வெற்றிக்கு
என்னால் முடிந்த வாழ்த்துக்கள் மட்டுமல்ல
என்னைப் போன்ற பலரின் வாழ்த்தும் உண்டு

காலம் கற்பிக்கப் போகும் பாடம்
கண்டிப்பாக உண்டு ராஜபக்சேக்கு

வேதனைகள் தீரும்
விடியல் உண்டு
தமிழினம் மீளும்
தமிழீழம் மலரும்

Tuesday, April 7, 2009

குழந்தை வேலும் டெல்லி லெட்டரும்

குழந்தை வேலு அப்ப 85 வயசுக்காரர். தன் வாயால பெருமையடிக்கிறது அவருக்குப் பிடிக்காத விஷயம். அவருக்குப் பெருமையா உள்ள விஷயங்களை அடுத்தவங்களை சொல்ல வச்சு அவர் நெஞ்சுக்குள்ள சந்தோஷப் பட்டுக்கிடுவார்.

அவர் பேரன் ஒருத்தன் ஸ்கூல் டூர்ல டெல்லி போயிருந்தான். டெல்லிலருந்து ஒரு போஸ்ட் கார்டுல அவருக்கு ஒரு லெட்டரைப் போட்டுட்டான். இது நடந்தது 38 வருஷத்துக்கு முன்னால. அந்தக் காலத்து லெட்டர் எப்படி இருக்கும் ? "மகா ள ள ள ஸ்ரீ கனம் பொருந்திய தாத்தா அவர்களுக்கு உங்கள் பேரன் எழுதிக் கொண்டது. நான் இப்பொழுது டெல்லியில இருக்கிறேன். நேற்று ஆக்ராவில் தாஜ்மஹால் பார்த்தோம். ஊர் நல்லா இருக்கு. ஊரில் அனைவரும் நலமாக இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு உங்கள் பேரன் .........."

குழந்தைவேலுக்கு பேரன் டெல்லிலருந்து லெட்டர் போட்டது பெருமை பிடிபடலை. "பேரன் தாஜ்மஹால் பாத்திருக்கான், இதை ஊர் பூராம் கொட்டடிக்காம இருக்கதா, டெல்லிக்குக் கல்லுப்பட்டில இருந்து யார் போயிருக்கா ?". நம்மாளு குழந்தைவேலு டெக்னிக்கலான ஆளாச்சா, அவர் தேர்ந்தெடுத்த டெக்னிக் "சொல்லாமலே''

வீட்ட விட்டு வெளியே கெளம்பும் போது பேரனோட லெட்டர எடுத்து அடுத்தவங்க கண்ல பட்ற மாதிரி அவரோட சட்டைப் பைக்குள்ள வச்சிக்கிடுவார். அதைப் பாக்குறவங்க "அது என்ன லெட்டர்"னு கேப்பாங்க. குழந்தைவேலு 1886ல பிறந்தவர். அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. "பேரன் டெல்லிலருந்து லெட்டர் போட்ருக்கான். இத என்னன்னு படிப்பா" அப்படின்னு அவுங்க கைல குடுத்துருவார். நாலு நாள்ல கல்லுப்பட்டி பூரா, குழந்தை வேலு பேரன் தாஜ்மஹால் பார்த்து, டெல்லில இருக்கது தெரிஞ்சு போச்சு. நாலு நாளுக்கப்பறம் போஸ்ட் கார்டை வீட்டுல வச்சுட்டார்.

குழந்தைவேலு டெக்னிக் எப்படி? கிராமப்புற பெருசுகளுக்கு பேரன், பேத்தின்னா அவ்வளவு உசிரு. அவங்க நல்லா இருக்கது அவங்களுக்குக் கூடக் கொஞ்சம் சந்தோஷம். குழந்தைவேலு பேரன் வேற யாரு, சாட்சாத் நம்ம முனியப்பன் தான்.

Thursday, April 2, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (கு.வேலுசாமி B.A., B.L).

கு.வேலுசாமி B.A., B.L.

இவர் நீதிமான். தமிழக நீதித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று இறைவனை சேர்ந்துவிட்டார் கடமை உணர்வுள்ளவர். நீதித்துறையால் முறையான பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டவர்.

இவர் பதவி ஆரம்பம் திருவண்ணாமலையில. அப்போது பாரதப் பிரதமர் நேரு தமிழகம் வந்த போது அவருக்கு திமுகவினாரால் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது திருவண்ணாமலையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர் ப.உ.சண்முகம் உள்ளிட்ட திமுகவினர். தமிழகம் முழுவதும் சென்னை நீதிமன்றத்தில் தீர்ப்பு சொன்ன பிறகு நாமும் தீர்ப்பு சொல்வோம் என்று மற்ற நீதிபதிகள் காத்திருக்க அதிரடியாக கைதுசெய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார் மு. வேலுசாமி. இதைப் பாராட்டி தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்கள் ஹோம் லேண்ட் பத்திரிகையில் எழுதியுள்ளார் என்றால், அன்றைய சுழ்நிலை-1957ல் எப்படி இருந்திருக்கும் பாருங்கள்.

பரமக்குடில வேலுசாமி B.A., B.L. நீதிபதியா பணிபுரிந்தார். அவர் டென்னிஸ் விளையாடுவார். அப்ப நீதிமன்றத்துக்கு பக்கத்திலேயே டென்னிஸ் மைதானம். அவருடைய விளையாட்டுத் தோழர் உலக நாயகனின் வக்கீல் சகோதரர் ரெண்டு பேரும் சாயங்காலம் ஒண்ணா வெளயைடுவாங்க. காலைல வக்கிலுக்கு எதிரான தீர்ப்பு வழக்குல இருக்கலாம். மறுபடியும் சாயங்காலம் ரெண்டு பேரும் ஒண்ணா டென்னிஸ் விளையாடுவாங்க தொழில் வேறு நட்பு வேறு கு .வேலுசாமி எங்க இருக்கார் பாருங்க கொள்கைல.

நெல்லைல கு. வேலுசாமி B.A., B.L., பணில இருக்கப்ப நீதிமன்ற பணியாளர்கள் தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செஞ்சாங்க. கோர்ட் சாவிய மொத நாளே கோர்ட் MC நம்ம நீதிபதிகிட்ட கொடுத்துடுறார். வேலை நிறுத்தம் அன்னைக்கு நீதிபதி வேலுசாமி நீதிமன்றக் கதவைத் தானே திறந்து அன்னைக்கு கோர்ட்ட நடத்துறார். One Man Showவா கோர்டட் பூட்டி சாவிய வீட்டுக்கு கொண்டு வந்துர்றார்.

நீதிபதி கு. வேலுசாமி B.A., B.L. நேர்மையானவர். மேலதிகாரிகள் inspection (ஆய்வு)க்காக அவர் நீதிமன்றத்துக்கு வரும் போது அவங்க பின்னாடி சுத்தமாட்டார். வேலுசாமி அப்பயும் court நடத்திகிட்டு இருப்பார். வந்த உயர்நீதிபதிகள் அவங்களா எல்லா ரிக்கார்டையும் செக் பண்ணிட்டு வேலுசாமி கிட்ட வந்து எல்லாம் நல்லா இருக்கு சார்னு சொல்லிட்டு போவாங்க. அவங்களுக்கு டீ காபி டிபன் எதும் வாங்கி கொடுக்க மாட்டார். அவ்வளவு நேர்மை. அதனால பயமின்மை.

சரி கு. வேலுசாமி B.A., B.L. யார்னு கேக்கறீங்களா நம்ம முனியப்பன் தோப்பனார் தான்.

Monday, March 30, 2009

யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி

எனது பதிவான "டேய் மரத்தை வெட்டதடா"வை தனது இணையதள listல் சேர்த்து எனது பதிவுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த யூத்ஃபுல் விகடனுக்கு எனது நன்றி. இந்த தகவலை எனது பதிவில் வந்து சொல்லிய வண்ணத்துப் பூச்சியாருக்கும் நன்றி.

Friday, March 27, 2009

குடும்பத்துல இருக்கது .... தெரியாத வார்த்தை

கூட்டுக் குடும்பம், தனிக்குடித்தனம் பற்றிய வார்த்தை இல்ல இது. கிராமப்புற, அடித்தட்டு மக்கள்கிட்ட முனியப்பன் கேட்ட வார்த்தை இது.

முனியப்பன் படிப்பு, உலக நிகழ்ச்சிகள் தவிர நடைமுறை வாழ்க்கைப் பழக்கத்துல இல்லாதவர். மொதல்ல இந்த வார்த்தையக் கேட்ட முனியப்பனுக்குப் புரியலை. அந்த வார்த்தையச் சொன்ன நோயாளிகிட்ட "குடும்பத்துல இருக்கது, இருந்தா" அப்படிங்கிற வார்த்தைக்கு விளக்கம் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டார்.

அந்த வார்த்தையின் அர்த்தம், கணவன் - மனைவிக்கிடையே உள்ள உடலுறவு. எவ்வளவு நாகரீகமா சொல்றாங்க பாருங்க. கிராமத்துப் பெண்கள் சிலரும் "குடும்பத்துல இருக்க" பிரச்னைகளுக்காக முனியப்பனிடம் ஆலோசனைக்கு வந்திருக்காங்க.

கிராம மக்கள், அடித்தட்டு மக்கள்கிட்ட நாம தெரிஞ்சிக்கிட வேண்டியது நெறைய இருக்கு. அவங்க நடைமுறை வாழ்க்கைய வாழறவங்க. அவங்க வாழ்க்கை ஏற்றமோ, எறக்கமோ ஓடிருது. நாமதான் கணக்குப் போட்டு, கற்பனைல உலாவி, வாழ்க்கைய தொலைச்சிர்றோம்.

Tuesday, March 24, 2009

முனியப்பனும் கட்டு விரியனும்

முனியப்பன் தொழில் ஆரம்பிச்ச புதுசுல வீட்லயும் கேஸ் பார்ப்பார். ஒரு நாள் சாயங்காலம் 5 மணி இருக்கும் 7,8 பேர் வந்தாங்க. பாம்பு கடிச்சிருச்சுன்னாங்க. கடிபட்டவன் கடிபட்ட எடத்துக்கு மேல கால்ல துணிய டைட்டா கட்டியிருக்கான் ஒரு transparent பிளாஸ்டிக் பைய தூக்கி முனியப்பன் டேபிள்ல போட்டாங்க. அதுக்குள்ள குட்டி பாம்பு. 11/2 அடி நீளம் தான்.
கட்டு விரியன் (Russels viper). கடிச்ச பாம்ப சும்மா விடுவாங்களா, கொன்னுதான் கொண்டு வந்தாங்க.

முனியப்பன் பல்ஸ், BP பார்த்து ஒரு TT போட்டு லேட் பண்ணாம ஒடனே மதுரை இராசாசி மருத்துவமனைக்கு கட்டு விரியன் குட்டியோட மருத்துவமனைக்கு கட்டு விரியன் குட்டியோட அனுப்பி வச்சுர்றார். அங்க ஒடனே அட்மிட் பண்ணி கட்டுவிரியன் விஷத்துக்கு மாத்து மருந்து போட்டு ஒரு வாரம் பெட்ல வச்சிருந்து காப்பாத்தி அனுப்புனாங்க.

பாம்புக்கடிய பாத்த ஒடனே முனியப்பனுக்கு "ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே" பழைய நினைப்பு வந்துச்சு.

நாகப்பாம்பு, கட்டுவிரியன் கடின்னா ஆளை காலி பண்ணிடும். ஒடனே வைத்தியம் பாத்தா காப்பாத்திரலாம். நாகப்பாம்பு விஷம் Neurotoxic, கட்டு விரியன் விஷம் Vasculo toxic, கட்டு விரியன் கடிச்சா இரத்தம் உறையற தன்மையை (Clotting) தன்மையை எழுந்துரும்.

முனியப்பன் பயிற்சி மருத்துவரா இருக்கப்ப பாம்புகடி (கட்டிப்புடி இல்ல) வைத்தியம் நெறய பாத்திருக்கார். கட்டு விரியன் கடிச்சவங்க இரத்தத்தை sample எடுத்து கண்ணுல படுற மாதிரி testtube அ பிளாஸ்டர் போட்டு சொவத்துல ஒட்டி வச்சிருவாங்க. இரத்தம் ஒறையுதான்னு பாக்கத்தான். எப்ப clott ஆகுதோ அதுவரைக்கும் இந்த மாதிரி blood sample அ , testtbeல சுவத்துல ஒட்டி வைச்சு பாத்துக்கிட்டேயிருக்கணும். ரொம்ப விறுவிறுப்பா
இருக்கும். clott ஆனாப்புறம்தான் நோயாளி பொழைச்சான்.

பாம்பு கடிப்பட்ட ஒடனே கால்ல கட்ட போட்டுகிட்டு வந்துட்டா 100% பொழைக்க சான்ஸ். கால்ல கட்ட போடாம, வாய்ல நுரை தள்ளின பெறகு வந்தா பொழைக்கிறது 50% தான்.
கடுகு சிறுத்தாலும் காரம் கொறையாது குட்டியா இருந்தாலும் கட்டு விரியின் கட்டுவிரியன்தான்.

Friday, March 20, 2009

முனியப்பனும் மோகினிப் பேயும்

முனியப்பன் மருத்துவம் படிச்ச ஒடனே கிளினிக் வச்சுட்டார். நெல்லைல இருந்து 26 கி.மீ.ல தாமிரபரணி ஆத்துக் கரைல ஆராம்பண்ணை கிராமம். முஸ்லிம் மதத்தினர் பெருமளவில் வசிக்கும் கிராமம். அங்க எடம் பாக்கப்போனா, "முத்தவ்லியப் பாருங்க" அப்படின்னாங்க. முத்தவ்லிங்கிறது முஸ்லிம் சமுதாயத்துல ஒரு பொறுப்பான பதவி.

முத்தவ்லி கருங்குளத்துல இருக்கார். தாமிரபரணி ஆத்துல இடுப்பளவு தண்ணில எறங்கி கருங்குளத்துக்குப் போனார் முனியப்பன். கிராமத்துல ஆஸ்பத்திரிங்கவும் முத்தவ்லி சந்தோஷப் பட்டு, முஸ்லிம் ட்ரஸ்ட்டுக்குச் சொந்தமான எடத்த முனியப்பனுக்குக் கிளினிக் நடத்த குடுக்கறார்.

ஒரு காலத்துல பள்ளிக்கூடம் நடந்த எடம் அது. ஒரு செவ்வகக் கட்டடம். அதுல "ட"னா சைஸ்ல பள்ளி நடந்த வகுப்புகள். அடுத்த "ட"னா கட்டி முடிக்கப் படாத கட்டடம். அதுல கடைசில ஹெட் - மாஸ்டர் ரூமா இருந்ததை நம்ம முனியப்பனுக்குக் கிளினிக் நடத்தக் குடுத்தாங்க. கட்டி முடிக்கப் படாத எடத்துல கருவேல முள்ளு. கட்டடத்துக்குப் பின்னாலயும் கருவேல முள்ளு. கட்டடத்துக்கு சைட்ல தாமிரபரணி ஆத்துல தண்ணி எடுக்கப் பெண்கள் போவாங்க.

முனியப்பன் கிளினிக் டைம் 4.30 to 8.30. கேஸ் 6.30 வரை வரும். அப்புறம் வராது. "இப்பத்தான ஆரம்பிச்சிருக்கோம், இன்னும் கொஞ்ச நாள்ல கேஸ் பிக்அப் ஆயிரும்"னு முனியப்பன் மனசைத் தேத்திக்கிடுவார். கிளினிக் பையனும் 6.30க்கு ஓடிப்போயிருவான். ஒரு மாசத்துல மக்கள் கொஞ்சம் freeஆ பேசப்பழகிட்டாங்க. முனியப்பன் ரூம்ல ஒரு 60 வாட்ஸ் பல்ப், கட்டடத்தை விட்டு வெளிய ரோட்டுக்கு வரணும்னா 70 அடி வரணும். இப்படி ஒரு சூழ்நிலைல 6.30க்கு மேல case வராததுக்குக் காரணமா ஒரு குண்டைப் போட்டாங்க பாருங்க.

பள்ளிக்கூடமா இருந்த கட்டடம் ரொம்ப நாளா சும்மா கெடந்ததால அங்க மோகினிப் பேய் குடியேறிருச்சாம், அதுனால தான் அங்க யாரும் வரலைன்னாங்க.

முனியப்பனுக்கு டர்ராயிருச்சு. படிக்கிற காலத்துல டிராகுலா (இரத்தக் காட்டேரி) படம் அதிகமா பாக்குற ஆளு. சந்திரமுகில வடிவேலு ரஜினியக் கேப்பாரு பாருங்க ஒரு கேள்வி "அப்பா பேய் இருக்கா? இல்லையா?". அதே கேள்விய தனக்குத் தானே கேட்டுக்கிட்டார் முனியப்பன், 27 வருஷத்துக்கு முன்னால. கருவேல முள்ளு ஆடுனா, சும்மா காத்து வீசுனா, கதவு ஆடுனா முனியப்பனுக்கு லேசா ஒரு திக் வரும். முனியப்பன் வீரம் வெளஞ்ச மண்ணுக்காரர் - சொந்த ஊர் M.கல்லுப்பட்டி. 7 மணி ஆயிருச்சுன்னா ரூம விட்டு வெளிய வந்து தில்லா நிப்பார், ஆள் நடக்கற மாதிரி, ஆவியா ஒரு உருவம் மாதிரி கட்டி முடிக்கப்படாத கட்டடத்துல தெரியும். மோகினிப்பேய் வரும். ஒத்தைக்கு ஒத்தை மல்லுக்கட்டலாம்னு, முனியப்பன் ரெடியாயிருந்தார். 2 மாசம் போச்சு ஒண்ணும் நடக்கலை.

'டாக்டர் பயப்படாம ஒக்காந்திருக்கார், நம்மளும் அவர்கூட இருப்போம்'னு, கிளினிக் பையன் முனியப்பன் கூட 8.30 வரை இருக்க ஆரம்பிச்சான். கொஞ்ச நாள்ல 6.30க்கு மேலயும் நோயாளிகள் வர ஆரம்பிச்சாங்க. நெல்லைக்கு 8.30க்கு பஸ். நோயாளிகள் இருந்தா, முனியப்பனுக்காக அந்த பஸ்ஸை நிப்பாட்டி வச்சிருவாங்க.

மோகினிப் பேய் பயம் ஊர் மக்கள்கிட்ட இருந்து ஒரு வழியா போயிருச்சு. முத்தவ்லி சந்தோஷமா முனியப்பன்கிட்ட சொன்னார். "நீங்க பயப்படாம இருந்தீங்க, அதுனால வீடுகட்டி மக்களைக் குடிவைக்கப் போறோம்". அந்த ஊர் ஜமாத்ல இருந்து பள்ளி அறைகளை வீடாக்கி வாடகைக்கு விட்டாங்க. நுழைஞ்ச ஒடனே மொத வீடு நம்மாளு முனியப்பனுக்குத் தான்.

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' அப்படிம்பாங்க. பேய்ங்கிறது ஒரு பிரம்மை.

Wednesday, March 18, 2009

டேய் .... மரத்தை வெட்டாதடா

முனியப்பன் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அதுனால தோட்டக்கலை ஆர்வம் உள்ளவர். வீட்டைச் சுத்தி, இருக்க எடத்துல பலவகைச் செடிகளை வளத்துக்கிட்டிருக்கார்.

மதுரை வெயில், சும்மா சொல்லக்கூடாது, அத அனுபவிக்கக் கொடுத்து வைக்கணும். வெயிலோட கடுமை தாக்காம இருக்க முக்கியமான செடிகளை எடத்த மாத்தி வச்சிக்கிட்டே இருப்பார் முனியப்பன். வீட்டுக்குப் பின்னால மாதுளை மரம். அதுக்கடில பூந்தொட்டிய வைக்கலாம்னா ரெண்டு கெள தடுக்குது.

என்ன செய்ய? வேற வழியில்லை. அருவாள வச்சு ரெண்டு கெளயவும் வெட்டுனார். திடீர்னு பின்னால இருந்து ஒரு சத்தம் 'டேய், மரத்த வெட்டாதடா'. திரும்பிப் பாத்தா 7 வயசு அமர், முனியப்பன் தங்கை மகன்.

ஏம்ப்பான்னு அமர்கிட்ட கேட்டார் முனியப்பன். அதுக்கு அமர், "மரத்தை வெட்டிட்டா ஆக்ஸிஜன் எப்படி கிடைக்கும் ?, எப்படி மூச்சு விடுவ?"ன்னான்.

இளம் தளிரின் மனதில் இயற்கையின் தாக்கத்தைப் பாருங்கள். இவ்வளவு அருமையான கருத்து உள்ள பையனை முனியப்பன் ஒடனே கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினார். நல்ல எண்ணங்களைப் பாராட்டுவதற்கு லேட் பண்ணக் கூடாது.

மரங்கள் நாம் வாழ பிராணவாயு கொடுப்பவை என்று பள்ளியில் அமருக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியப் பெருந்தகைக்குத் தான் பாராட்டு.

Thursday, March 12, 2009

சன் (son) of தமிழன் எழுத்து

இன்னார் மகன் இன்னார்

குழந்தை பிறந்த ஒடனே தாயார் தகப்பனார் பேர் போட்டு பிறப்பு சான்றிதழ் ஸ்கூல்ல காலேஜ்ல சேரும் போது அப்ளிகேஷன்ல இன்னார் மகன் இன்னார் ஸ்கூல் காலேஜ் TCல இன்னார் மகன் இன்னார் எங்க போனாலும் இதே தான். கடைசில செத்த பிறகு இறப்பு சான்றிதழ்ல கூட இன்னார் மகன் இன்னார் போட்டுதான் பதியனும்.

இது தான் தெரியுமே. அப்புறம் எதுக்குங்கிறீங்களா ? இங்க தான் தமிழன், அவனோட மொழி, அவனோட எழுத்து வருது.

தமிழன் நாகரீகம், சுமேரிய நாகரீகம், ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகங்கள் பழமையானவை எல்லா எடத்துலயும் எழுத்து இருக்கு. தமிழன் இங்கதான் ஸ்கோர் பண்றான்.

தமிழ் பிராமி எழுத்து காலத்துல இருந்து இன்றைக்கு வரைக்கும் இன்னார் மகன் இன்னார்னு பதியறாங்க. தமிழ் பிராமின்னா தமிழ் மொழிய மொத மொத எழுதுனது பிராமி முறைல. 2000 வருஷம் பழமையான எழுத்து தமிழன பாருங்க 2000 வருஷத்துக்கு முன்னாலேயே மகன் அப்படிங்கற வார்த்தைல பயன்படுத்தியிருக்கான். அன்னைக்கே தமிழ் மொழிய எழுத்துல பொறிச்சு வச்சிருக்காங்க.

1) அந்தைய் பிகன் மகன் வெண்அ
விக்கிரமங்கலம் கல்வெட்டு கிமு.2ம் நூற்றாண்டு
2) கணதிகண் கணக அதன் மகன் அதன்
அழகர் மலை கிமு முதலாம் நூற்றாண்டு கல்வெட்டு
3) இலஞ்சில் வேள் பாப்பாவன் மகன் மெயவன்
கிமு 3ம் நூற்றாண்டு அரிட்டாபட்டி கல்வெட்டு
என்ன மகன் கதையா இருக்கே அந்த காலத்து தமிழனுக்கு மக இல்லையா? கொதிக்காதீங்கப்பா கூல் டவுண்.


நல்லிய் ஊர் ஆ பிடந்தை மகள்
கீரன் கொற்றி அதிடானம்
கல்வெட்டு புகளுர்-2ம் நூற்றாண்டு கி.பி
ஆ பிடந்தை மகள் கீரன் கொற்றி

மகன் மகள் என்ற வார்த்தைகள் அந்த காலத்திலேயே வழக்கில் இருந்திருக்கிறது. அதைக் கல்வெட்டில் பதித்து மொழியை வளர்த்திருக்கிறார்கள்.

ஜராவதம் மகாதேவன், நாகசாமி இவங்கல்லாம் சீனியர் தொல்லியல் ஆய்வாளர்கள் கல்வெட்டுகளை பத்தி நெறய புக் போட்ருக்காங்க.

சன் ஆஃப், டாட்டர் ஆஃப் எல்லாம் இன்னைக்கும் இருக்கு தமிழன் தெரிஞ்சோ, தெரியாமலோ தாய் மொழி தமிழை காப்பாத்திகிட்டுருக்கான். தமிழ் நிரந்தரமானது. தமிழுக்கு அழிவில்லை. என் தாய்மொழி தமிழ் என கூறுவதில் நம் அனைவருக்கும் பெருமைதான்.

Thursday, March 5, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (வள்ளி)

சேலையா ? கொடமா ?

மதுரைல அஞ்சாநெஞ்சர் மு.க.அழகிரியோட பிறந்த நாளை, மதுரைல உள்ள தி.மு.க. உடன் பிறப்புகள் ஒவ்வொரு பகுதிவாரியா கொண்டாடுறாங்க. நலத்திட்டங்கள்னு பேர்ல, இலவச மருத்துவ முகாம், இலவசமா பொருட்கள் வழங்குறது அப்படின்னு.

முனியப்பன் கிளினிக் நேரம். அந்த நேரத்துல ஒருத்தர் வந்து வள்ளிகிட்ட அழகிரி படம் போட்ட ஒரு கூப்பனைக் குடுத்து "சேலை குடுக்குறாங்க. ஒடனே போ" அப்படின்னு சொல்றாங்க. வள்ளிக்கு 'ஆஹா. சேலை free' அப்படின்னு ஒரு ஜில். முனியப்பன்கிட்ட சொல்லிட்டு சேலை வாங்கப் போறாங்க. அங்க போய்ப் பார்த்தா ஒரே கூட்டம். ஒரு கல்யாண மண்டபம் முன்னால 2000 பேருக்கு மேல நிக்குறாங்க. முனியப்பன்கிட்ட இருக்கறதால,

அந்த கூட்டத்துல பாதிப்பேர் தெரிஞ்ச முகமாயிருக்கு, "நீ போப்பா"ன்னு, வள்ளிய முன்னால அனுப்பி விடுறாங்க. பொருள் குடுக்கற எடத்துக்கு போனா, - வள்ளிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. 'சேலைன்னு சொன்னாங்க, கொடமும் சேர்த்துக் குடுக்குறாங்க'ன்னு. வள்ளிகிட்ட அழகிரி படம் போட்ட கூப்பனை வாங்கிக்கிட்டு கொடமும் சேலையும் குடுக்கறாங்க.

சேலையும், கொடமும் வாங்கிட்டு சந்தோஷமா வள்ளி வெளிய வாராங்க. அப்ப பாருங்க கொடுமைய. வாங்கிட்டு வர்றத புடுங்கிட்டு போறதுக்கு ஒரு 40 பேர் நிக்கிறான். அவங்கள தாண்டித்தான் வரணும். வள்ளி வாங்கிட்டு வந்த சேலையப் பிடிச்சு ஒருத்தன் இழுக்கிறான். இந்த மாதிரி இக்கட்டான நேரங்கள்ல நம்ம மூளை ரொம்ப சுறுசுறுப்பா செயல்படும். ரெண்டுல ஒண்ணு-எதுன்னு முடிவு பண்ண வேண்டிய தருணம். வாழ்வா? சாவா? உயிரா? மானமா? மாதிரி இப்ப வள்ளிக்கு கொடமா? சேலையா? பிரச்சினை.

வள்ளியோட ஒடம்புல அட்ரினலின் ஓட்டம். கண நேரத்துல (fraction of a second) முடிவு பண்றாங்க. சேலை இத்துப் போகும், இல்ல கிழிஞ்சு போகும். கொடம் என்னைக்கும் இருக்கும். சேலை போனாப் போகுதுன்னு கொடத்தை இறுகப் பிடிச்சுக்கிட்டு தப்பிச்சு வந்துர்றாங்க.

Wednesday, March 4, 2009

உன் புன்னகை

கண்ணை உயர்த்தாமல்
என் முகம் பார்க்காமல்
நிலம் பார்த்து
நீ சிந்தும் புன்னகை

என்முகம் நேராகக் கண்டவுடன்
உன்முகம் திருப்பி ஒரு புன்னகை
என் முன்னால் நடந்தாலும்
பின்னால் திரும்பி ஒரு புன்னகை
தொலைவில் நின்றாலும்
தொல்லை கொடுக்கும் புன்னகை
சும்மா இருந்தாலும் சிங்காரமாய்
சீண்டும் புன்னகை .......

என் கிண்டலுக்கும் புன்னகை
என் சீண்டலுக்கும் புன்னகை
பொய்க் கோபத்திலும்
நிஜமான புன்னகை
இதழ் மூடியும் புன்னகை
இதழ் திறந்தும் புன்னகை
பல் வரிசை பளபளக்க
பளிச்சிடும் புன்னகையும் உண்டு

என் வருகை கண்டவுடன்
உன் முகத்தில் புன்னகை
என் அருகில் வந்தவுடன்
உன் அழகிய புன்னகை
தென்றலாய் என் தோளில் நீ
துவளும் போது ஆனந்தப் புன்னகை
ம்ம்ம்... முத்தத்தில் திளைக்கும்
மோகனப் புன்னகை
முத்தத்திற்குப் பின்னர் மீண்டும்
முத்தம் கேட்கும் ஒரு புன்னகை
வெட்கத்திலும் புன்னகை
வேட்கையிலும் புன்னகை

களம் புகுந்தபின் கணக்காய்
இதழ் கோடியில் புன்னகை
போர்க்களத்தின் நடுவில்
மயக்கத்தில் புன்னகை
மோகத்தில் புன்னகை
முனகலில் புன்னகை
மோகத்தில் திளைத்த பின்
முகத்தை மூடி ஒரு புன்னகை

உன் புன்னகை
நினைவுகளைக் குறித்திருக்கிறேன்
குறிக்க மறந்திருந்தால்
குற்றம் சாட்டாதே
உன் புன்னகையால் .............

Wednesday, February 25, 2009

ஆஸ்கார் - A.R. ரகுமான் - கமல்

ஆஸ்கார் - A.R. ரகுமான் - கமல்

உலக திரைப்பட விருதுகளில் முதன்மையானது அமெரிக்காவில் வழங்கப்படும் Academy விருதான OSCAR. இந்தியாவிற்கு அந்த விருதை பெற்றுத்தந்த A.R. ரகுமானுக்கு முதலில் நம் வாழ்த்துக்கள். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் 2 ஆஸ்கார் விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். 1. Original music 2. Original song இந்த இரண்டிலும் அவர் வெற்றிவாகை சூடியிருக்கிறார்.

A.R. ரகுமான் ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்திலேயே இசைக்காக தேசிய விருது பெற்றார். அவர் இசையுலகில் அவரது 12 வயதிலேயே அடியெடுத்து வைத்தவர். "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று கடவுளுக்கு நன்றி சொல்லும் A.R. ரகுமான் தாய்ப்பாசம் மிக்கவர்.

இந்த வேளையில் நமது கமலைப் பற்றியும் சில விஷயங்களை மன வருத்தத்தோடு பகிர்ந்தாக வேண்டும். பால்ய வயதிலேயே திரை உலகில் அடி எடுத்து வைத்தவர் நமது கமல். அவர் நடிப்பாற்றல் மிக்கவர். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

"Oscar கதவைத் தட்டுபவர்" என்று கமலைப் பற்றி பத்திரிகைச் செய்திகள் அவரைத் திருப்திப் படுத்தவா ?, அவருடைய பில்ட் அப்பா? "உலக நாயகனே" .... கடைசியாக வெளிவந்த கமலோட தசாவதாரப் பாடல். உலக நாயகன்கிற வார்த்தை யாரை ஏமாற்ற கமலையா ? அவரது ரசிகர்களையா ?

கொஞ்ச காலத்துக்கு முன்னால இந்தியாவுக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கலை அப்படிங்கிற ஒரு கேள்விக்கு கமல் சொன்ன பதில் "அமெரிக்கர்களுக்கு அமெரிக்கர்களால் வழங்கப்படும் விருது Oscar". அவங்களை இங்க வரச்சொல்லி நாம அவங்களுக்கு விருது கொடுப்போம்னு விரக்தியா சொல்லியிருந்தார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் இந்தியாவில் தயாரான படம். எட்டு Oscar விருதுகளைப் பெற்றுள்ளது. அதில் 4 விருதுகளைப் பெற்றவர்கள் இந்தியர்கள், ரகுமானுக்கு 2, பாட்டு எழுதிய குல்சாருக்கு 1, ஒலிக்கலவைக்கு கேரளாவின் பூக்குட்டிக்கு 1. இது போக டாக்குமெண்டரி படத்துக்காக உதடு பிளவுபட்ட கருத்தை வைத்து எடுத்த படத்துக்கும் 1 Oscar விருது. ஆக மொத்தம் இந்தியர்கள் மூலமாக இந்த வருடம் பெற்ற Oscar விருதுகளின் எண்ணிக்கை 5.

நடிப்புக்காக வழங்கப்படும் 4 விருதுகளில், 3 விருதுகள் அமெரிக்கர் அல்லாதோர் பெற்றுள்ளனர். Oscar விருது அமெரிக்கர்களுக்காக வழங்கப்படும் விருது என்று கமல் கூறியது இங்கு நினைவுக்கு வருகிறது. மொத்தம் உள்ள 24 ஆஸ்கார் விருதுகளில், 4 விருதுகள் இந்தியர்களுக்கும் 1 விருது இந்தியச் சிறுமியை வைத்து எடுக்கப்பட்ட Documentaryக்கு (short film) ஒரு Oscar விருது, இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் விதமாக அமைந்துள்ளது 2009 ஆம் வருட அமெரிக்க Academy விருதுகள் (Oscar).

A.R. ரகுமான் 2 Oscar விருது வாங்குனதுக்கு திரை உலகில் உள்ளவர்கள் பேட்டி குடுக்கறாங்க. சூர்யா சொல்றார் "+2 பாஸ் பண்ண சந்தோஷம்"கிறார். டைரக்டர் சங்கர் சொல்றார். "A.R. ரகுமான் ஞாயிற்றுக்கிழமை கூட work பண்ணுவார். ஓய்வுங்கறது ரொம்ப ஆபூர்வம்". இப்ப நம்மாளு கமல் என்ன சொல்றார் "தமிழராயிருக்கது மட்டுமில்ல, தகுதிய வளத்துக்கிட்டார்."

இப்ப கமலுக்கு ஒரு கேள்வி, நீங்க ஏன் Oscarக்கான ஒங்க தகுதிய வளத்துக்கிடலை?. கமல் ஒங்களை நெறைய கேள்வி கேக்கலாம்? இங்கிலாந்து ராணி queen எலிசபெத்தை வச்சி பூஜை போட்டீங்களே 'மருதநாயகம்'. அது என்ன ஆச்சு? இப்ப கூட ஒங்க மர்மயோகிய காணோம்.!

கமல், ஒங்களுக்கு ஒரு வேண்டுகோள். "உண்மையிலேயே Oscar விருதுக்கான ஆசை உங்களுக்கு இருந்தால் " அதுக்கான தகுதிய வளத்துக்குங்க, முயற்சில எறங்குங்க. சும்மா ஒலக நாயகன்கிற வார்த்தையை use பண்ணாதீங்க. நீங்க நடிப்பாற்றல் மிக்கவர். Oscar விருதைக் கைப்பற்றும் திறமை உங்களுக்கு உண்டு. நீங்கள் Oscar விருது பெறும் நாளை தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

என்ன, முனியப்பன் கமல் மேல காட்டமாய்ட்டார்னு பாக்கறீங்களா? இது ஒரு வகையான அன்பு, அப்படித்தான் சொல்ல முடியும். முனியப்பன் பரமக்குடில spm காலணில 8ம் நம்பர் வீட்டில 3 வருஷம் இருந்தப்ப 1ம் நம்பர் வீட்டுக்காரர் நம்ம கமல். கமலும், முனியப்பனும் long long ago பம்பரம், பச்சைக் குதிரை, ஓடிப்பிடிச்சு, கிரிக்கெட், கிட்டி வெளையாண்டவங்க. அந்த பால்ய நட்போட ஆதங்கம் தான் இது.