Friday, December 4, 2009

பகல்ல முத்து, நைட்ல ராமகிருஷ்ணன்

வில்லங்கமான தலைப்பா இருக்கா?

முனியப்பனின் நண்பர்களில் ஒருவர், பேராசிரியர் ராமகிருஷ்ணன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக துறைத்தலைவராக இருந்த பணி மூப்படைந்தவர்.

முனியப்பனின் மருத்துவ பராமரிப்பில் ராமகிருஷ்ணனின் தாயார் லஷ்மியம்மா இருந்தார். மொதல்ல நியூரோபயான் ஊசி, சுகர் மாத்திரை மட்டும். அப்புறம் வயசாகுதுல்ல சுகர் கூடுது, இன்சுலின் ஊசி, ஹார்ட் வீக்காகுது, ஹார்டுக்கு மாத்திரை, வீட்டுக்குள்ளயே நடமாடுவாங்க கொஞ்சம் சமையல் பண்ணுவாங்க .

அப்புறம் ஒரு காலகட்டத்துல ரொம்ப தளர்ந்திர்றாங்க நடமாட்டம் கொறைஞ்சுடுது. பெட்ரூம்ல படுத்திருப்பாங்க, ஹால்ல கொஞ்ச நேரம் ஒக்காந்திருப்பாங்க அவ்வளவுதான்.

இந்த சூழ்நிலைல ஒரு நாள் கட்டில்ல இருந்து தவறி கீழ வீழுந்துர்றாங்க லஷ்மியம்மா. வீட்டுக்கு வந்து எக்ஸ்ரே எடுத்தாச்சு இடது கைல Humerus எலும்பு நடுவுல ஒடைஞ்சிருக்கு. ஆப்பரேஷன் பண்ணி ஒடைஞ்ச எலும்பை ஒட்டி வைக்க முடியாத அளவுக்கு வீக்கான ஹார்ட். சுகரும் Erratic. அதனால எலும்பு டாக்டரை வீட்டுக்கு வர வைச்சு தொட்டில் கட்டு மட்டும் போடுறாங்க.

லஷ்மி பாட்டியால ஒண்ணும் செய்ய முடியலை. கட்டில்தான் வாழ்க்கைன்னு ஆயிடுச்சு . அப்ப அவங்களை கவனிக்க ஆள் வேணுமில்ல. காலை 8 மணிலருந்து நைட் 8 மணி வரைக்கும் பாட்டிய கவனிக்க ராமகிருஷ்ணன் ஒரு செவிலிய உதவியாளரை ஏற்பாடு பண்ணினார். அவுங்க பேரு பாத்தி முத்து லஷ்மி பாட்டிக்கு சகலமும் பாத்தி முத்துதான்.

இப்படியே ஒரு வருஷம் ஓடுது. பாட்டியோட கடைசி நாளைக்கு மொத நாள். முனியப்பன் லஷ்மி பாட்டிக்கு ட்ரீட்மெண்ட் பாக்க போறார். அப்ப ராமகிருஷ்ணன் சார்கிட்ட கேட்டார். பகல்ல பாத்திமுத்து பாத்துக்கறாங்க. நைட்ல? ராமகிருஷ்ணன் சார் கண் கலங்கி சொல்றார். பகல்ல முத்து, நைட்ல ராமகிருஷ்ணன்.

பகல்ல பாத்தி முத்து லஷ்மி பாட்டிக்கு என்ன சேவைகள் செஞ்சாங்களோ, அதே சேவைகளை தனது தாயாருக்கு ராமகிருஷ்ணன் சார் நைட்ல ஒரு வருஷம் பாத்திருக்கார். அடுத்த நாள் லஷ்மி பாட்டி இறைவனடி சேந்துர்றாங்க.

பாத்தி முத்து முஸ்லீம், ராமகிருஷ்ணன் அய்யங்கார். மத நல்லிணக்கம் பாருங்க.