Friday, January 9, 2009

எரியிற வீட்டில் ...

முனியப்பன், December 21 - 2008, போலியோ

போலியோங்கறது, இளம்பிள்ளை வாதம், சின்னப் பிள்ளைகளைத் தாக்கக்கூடிய ஒரு வைரஸ் வியாதி, ஒரு பக்க கால் நல்லா நடக்க முடியாம போயிடும். இந்த வியாதி, தடுப்பு மருந்துகள் மூலம் தடுக்கப்படக்கூடிய ஒன்று.

இந்தியாவுல போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட இந்திய அரசாங்கம் வருடத்திற்கு ஒருமுறை, இந்தியா முழுவதும் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு45 நாள் இடைவெளியில் 2 தடவை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் கொடுக்கிறார்கள்.

2008 டிசம்பர் 21ல ஒரு முகாம் நடந்துச்சு, போலியோ சொட்டு மருந்து கொடுத்தாங்க. அதுலஒரு குழந்தை செத்துப் போய்ட்டதா திருப்பி, திருப்பி TVல FLASH பண்றாங்க. என்ன ஆகும்? சின்னப்பிள்ளைங்க இல்லையா.. எல்லா ஊர்லயும் தாய்மார்கள் பதறிப்போய் அவங்கவங்க பிள்ளைய தூக்கிட்டு பக்கத்துல இருக்க அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்குப் பறக்கறாங்க.

முனியப்பன் அவர் கிளினிக்ல சாயங்காலம் 5.30 மணிக்குத் தொழில ஆரம்பிக்கிறார். ஒண்ணொண்ணா பிள்ளையத் தூக்கிட்டு வர ஆரம்பிக்கிறாங்க. "போலியோ சொட்டு மருந்து கொடுத்தோம், பிள்ளை நல்லா இருக்கான்னு செக் பண்ணுங்க".

முனியப்பன் TV என்னைக்காவது பாக்குற ஆளு, அதுனால TVல தனிப்பட்ட ஆதாயத்துக்காக Flash பண்ண News அவருக்குத் தெரியாது. பிள்ளையத் தூக்கிட்டு வர்றவங்க தான் சொல்றாங்க "TV ல சொல்றாங்க. அந்த ஊர்ல போலியோ சொட்டு மருந்து கொடுத்து ஒரு பிள்ளை செத்துப்போச்சு, ஒங்க பிள்ளைய பக்கத்துல இருக்க டாக்டர்கிட்ட காமிச்சுக்குங்கன்னு சொல்றாங்க."

முனியப்பன் உடனே அவருடைய நண்பர் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் டாக்டர்.சம்பத்-ஐ தொலைபேசியில் ஆலோசனை கேட்கிறார். டாக்டர். சம்பத், போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால் எதுவும் வராது என்று பதட்டத்துடன் வரும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கும்படி சொல்கிறார்.

பொன்மேனில 2 பிள்ளை செத்துப்போச்சு, மாப்பாளையத்துல 5 பிள்ளை செத்துப்போச்சு, ஆரப்பாளையத்துல 2 பிள்ளை செத்துப்போச்சு இப்படியான புரளி தகவலுடன் முனியப்பனிடம் கூட்டம். முனியப்பன் அவரிடம் வரும் பிள்ளைகளைப் பரிசோதித்து பெற்றோரிடம் "பிள்ளை நல்லா இருக்கு, பயப்படாதீங்க" அப்படின்னு சொல்லி அனுப்புறார்.

இந்த தலைப்புல எழுதக் காரணம் இருக்கு. Flash பண்ணிய TV தனிப்பட்ட ஆதாயத்துக்காக, அது அரசியல். அது நமக்குத் தேவையில்லை. தமிழ்நாடு முழுவதும் நடந்த இந்த சம்பவத்தால், அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமல்ல, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் போலியோ சொட்டுமருந்து கொடுத்த பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு பெற்றோர்கள் குவிந்தனர்.

அரசு ஆஸ்பத்திரிகளில் ஆலோசனை இலவசம். பல தனியார் மருத்துவர்களும் இலவசமாக ஆலோசனை வழங்கினர். சில தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆலோசனைக்குக் கட்டணம் வாங்கினர். தனியார் என்று வரும் பொழுதே ஆலோசனைக்குக் கட்டணம் தான். அதில் தவறில்லை.

கொடுமையான விஷயம், ஒரு சில தனியார் மருத்துவமனைகளில், "மாற்று மருந்து போடுகிறோம்னு" சொல்லி ஊசி போட்டு பணம் பறித்தனர். இவர்களை சக மருத்துவர் என்று சொல்லவே வெட்கமாயிருக்கிறது. அது ஒரு அவசரமான சூழ்நிலை. அன்னைக்கு சமூக கடமையாற்றாமல் மக்களை ஏமாற்றி சுரண்டியது எந்த வகையில் சேரும் என்று புரியவில்லை. "எரியற வீட்டில் புடுங்கியது ஆதாயம்" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

நம்மாளு முனியப்பன் என்ன செஞ்சிருப்பார். அவர் தான் பொழைக்கத் தெரியாத ஆளாச்சே. ஒருத்தர் கிட்டயும் பணம் வாங்கவில்லை. அவர் போலியோ சொட்டு மருந்து ஆலோசனை வழங்கியது 210 பேருக்கு.