Thursday, October 9, 2008

நீங்கள் சந்திக்காத மனிதர்கள்

இந்தத் தலைப்பு நிச்சயமா நீங்கள் கடந்து வராத மனிதர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்கு.

தவசித்தேவர்

விருமாண்டி மாதிரி முரட்டுத்தனமான ஆள் கெடையாது.

ரொம்ப அமைதியான, பழய காலத்து காங்கிரஸ்காரர், 80 வயதை தாண்டிய இளைஞர். மடிச்சுக்கட்டின வேட்டி, முழங்கை வரை வர்ற சட்டை, தோள்ல ரெண்டுபக்கமும் தொங்கும் நீளமான துண்டு அவர் முழங்காலுக்கு கொஞ்சம் மேல வரைக்கும் வரும்.

காலைல மதுரை பைபாஸ் ரோட்ல வாக்கிங்வரும் அவர் காலில் செருப்பு அணிவது கிடையாது. முனியப்பன் அவரிடம் என்னய்யா கால்ல செருப்பு இல்லாம நடக்குறீங்க ? அப்படின்னதுக்கு அவரோடு பதில் 'அப்பேர்ப்பட்ட மனுன் காந்தியே மதுரைல வந்து மக்களை பாத்து சட்டையை கழட்டிட்டு இனிமே சட்டை போட மாட்டேன்னுட்டார். நம்மளுக்கு எதுக்கு கால்ல செருப்பு' அப்படின்னார். கிட்டத்தட்ட 40 வருஷமா கால்ல செருப்பு போடாம நடக்கிறார். அவர் பேரன் பேத்திகள்லாம் தேசிய அளவுல உலக அளவுல இந்தியாவுக்காக செஸ் விளையாட்டு விளையாடுறவுங்க. அவங்களை அவர் செஸ் விளையாட அழைச்சிட்டு போயிருக்கார். அப்பவும் செருப்பு போட்டதில்ல டெல்லில குளிர்காலத்துல கூட அவர் கால்ல செருப்பு போட்டதில்லை.

அவர் சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் 'விருவீடு' எனும் ஊருக்கு அருகில் உள்ள விராலிமாயன்பட்டி.

மதுரையில தனது மகன்கள், மகள்களுடன் வசித்து வருகிறார். அவர்தான் கோடாங்கி. தை பொங்கலுக்கு அடுத்த நாளும், மாசி பச்சையிலும் (மகா சிவராத்திரி) கையில் சூலாயுதத்துடன் ஊரில் சாமியாடுவார்.

அவர் மகள் வயிற்றுப் பேரன் தான் தீபன் சக்கரவர்த்தி. செஸ்ஸில் இந்தியாவின் 14வது கிராண்ட் மாஸ்டர்.

ஒரு வாலிப வயோதிகர்

ஒரு வாலிப வயோதிகர்

நெறய பேர் வயசானாலும் வாலிப நினைப்போடயே திரியறானுவ முனியப்பனோட நண்பர் ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டர், ரபேல் நாடல் மாதிரி முக்கால் பேண்ட் போட்டுக்கிட்டு திரியறார். ஆஸ்பத்திரிக்கு போகும் போது மட்டும் பேண்ட்டு சட்டை போடுவார்.

அவருக்கே தெரியும், வயசாயிருச்சுன்னு, ஆனாலும் அதை ஒத்துக்கிட மாட்டார்.

முடி வெட்டப் போனவர் முடி வெட்டியாச்சு, அப்ப அவரோட உச்சந்தலையில பேன் காத்து அடிக்குது. தலய தடவிப்பாக்கிறார். தலையில சொட்டை ஆரம்பிச்சிருச்சு.

இப்பல்லாம் அவர்கிட்ட ஊசி போடற சின்னப் புள்ளைகல்லாம் அவரை தாத்தான்னு கூப்பிட ஆரம்பிச்சிருச்சு. அவருக்கு கோபம் வரும், ஆனாலும் கோபத்தை கட்டுப்படுத்திக்கிடுவார்.டாக்டர் எக்ஸ்

டாக்டர் எக்ஸ்

முனியப்பனோட நண்பர் டாக்டரை இனிமே எக்ஸ்னு கூப்பிடுவோம்.

டாக்டர் எக்ஸ் கிளினிக்ல ஒரு பேஷண்டை சீரியசா இருக்குன்னு கூப்பிட்டு வந்தாங்க. பேஷண்டை உள்ளே படுக்கப்போட்ட புது நர்ஸ் ட்ரெய்னீ, பேண்டை பாத்துச்சு.

டாக்டர் கிட்ட வந்து சார் டெம்பரேச்சர் நார்மல், பிபி பாக்க முடியலன்னுச்சு.

டாக்டர் பேஷண்டை பாத்தார், அது டெட்பாடி, செத்துப்போன ஆள் தூக்கிட்டு வந்திருக்காங்க.

செத்துப்போன பேஷண்ட்டுக்கு பல்ஸ், டெம்ப்பரேச்சர், பாத்திருக்க அப்படின்னு டாக்டர் சொன்னவுடனேயே அந்த டிரெயினிங் நர்ஸ் நடுங்குன நடுக்கம் சூப்பர் நடுக்கமாம்.


உலகத்தரம் - தமிழ் சினிமா

உலகத்தரம் - தமிழ் சினிமா

2008 ஆகஸ்ட் மாதம் முடிய வந்த தமிழ்படங்களில் நன்றாக ஓடியது எத்தனை படம். நாலே நாலுதான் 1) அஞ்சாதே, 2) சந்தோஷ் சுப்ரமணியம் 3) தசாவதாரம், 4) சுப்ரமணியபுரம்

'உலகை உலுக்கிய உலக நாயகன்' - இது தசாவதாரத்துக்கான விளம்பரம், டெக்னிக்கலா மிகச்சிறந்த படம், கதை ரொம்ப பலவீனமானது. படத்தோட கதை ரொம்ப பேருக்கு புரியலை. படம் பாத்தவனும் ஒரே படத்துல பத்து கமல பாக்கத்தான் போனாங்க.

ஆக 2008 ஜீலை வரைக்கும் வந்த படங்கள்ல தமிழ் நாட்ல ஓடுனது 4 படம் தான்.

ரஜினியோட குசேலன் 2) வாரப்படமா படுத்திருச்சி, விஷாலோட சத்யம் அவுட், தமிழ் நாட்லேயே தமிழ்படம் ஓட மாட்டேங்குது அப்புறம் எப்படிப்பா உலகத்துல போட்டி போடப் போறீங்க. கதை கெடையாது தம்பி, டெக்னாலஜிய மட்டும் வச்சு என்னப்பா செய்வ?

இந்த நிலை மாறாதா, அப்படின்னு நெனக்காதீங்க, நிச்சயமா மாறும். புதிய சிந்தனை, புதிய பரிணாமம், உள்ள படைப்பாளிகள் வரும்போது, உலகத்தை மிரட்டும் தமிழ்ப் படங்கள் வரும்.


டாஸ்மாக்

டாஸ்மாக்
கள்ளச் சாராயத்தால் ஏற்படும் உயிர்ப்பலிகளை தடுக்க தமிழக அரசால் தமிழக குடிகாரர்கள் மது குடிக்க ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்தான் டாஸ்மாக், கள்ளச்சாராயம் கிட்டத்தட்ட இல்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதம் போல, எல்லை தாண்டிய கள்ளச்சாராயம்தான் எங்காவது அடுத்த மாநிலத்துடனான எல்லை அருகில் கிடைக்கிறது..

2003ம் ஆண்டு நவம்பர் மாதம் டாஸ்டிமாக் சில்லரை விற்பனை தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்களில் குடிப்பவர்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் தமிழக அரசே நேரடி விற்பனை செய்ய ஆரம்பித்தது. மதுவை விற்க ஒரு கடைக்கு ஒரு மேற்பார்வையாளரும் 3 விற்பனை ஊழியரும் அரசு வேலையில் பணியில் அமர்த்தப்பட்டனர். குடி, குடியைக் கெடுக்கும் என்ற வார்த்தைகள் மது பாட்டில்களிலும், கடை பெயர்ப்பலகைகளிலும் இடம் பெற்றன.

கடை மட்டும் இருந்தா போதுமா, ஒக்காந்து குடிக்க இடம் வேணாமா? அரசு சார்பிலேயே மது அருந்தும் இடம் (பார்) தொடங்கப்பட்டது. 01.02.2004ல் யார் ஊத்திக் குடுக்கறது?. மதுக்கடையையும் திறந்து மதுவை ஊத்தி கொடுத்த அரசே பார் ஊழியர்களை நியமித்தது. "ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு இப்ப உலகம் சுத்துதடி பலரவுண்டு". தமிழக குடி மக்கள் தரமான சரக்கு சாப்பிட ஆரம்பித்தார்கள். சுண்டல். சோடா, கலர், ஸ்நாக்ஸ், மட்டும் தனியார் வசம். இதற்கு முன்னால இருந்த தனியார் மதுக்கடையில் போலி மதுபாட்டில்கள் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டது ஊரறிந்த ரகசியம்.

அரசாங்கம் ஏற்று நடத்தும் இடங்களில் முறைகேடுகள் நடப்பது சகஜம்தானே. ஊத்திக் கொடுக்கும் இடங்களில் மிகப்பெரும் அளவில் முறைகேடுகள் நடக்க ஆரம்பித்தவுடன், மதுவிற்பனையோடு மட்டும் அரசாங்கம் நிறுத்திக் கொண்டது. ஊத்திக் கொடுக்க நியமிக்கப்பட்ட ஊழியர்கள், மதுக்கூட்ங்களில், போலி மது விற்பனையாகிறதா, கள்ளச் சாராயம் நடமாடுகிறதா, என்ற கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குடி, குடியைக் கெடுக்கும் என்ற எச்சரிக்கை வார்த்தைகளோடு ஏன் அரசாங்கமே மக்களுக்கு மது குடிக்க கடைகள் திறக்கிறது? இது ஒரு நியாயமான கேள்வி. துமிழக அரசின் பொருளாதாரமே டாஸ்மாக்கில் இருந்து கிடைக்கும் வருவாயை நம்பி இருக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது. டாஸ்மாக்கின் மிகப்பெரிய வருமானம் தமிழக அரசின் நிதிநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது என்றால் அது மிகையல்ல.

சும்மா ஜாலியா குடிக்கிறது, கம்பெனி குடுக்க குடிக்கிறது, சந்தோஷத்துக்கு குடிக்கிறது, சோகத்துக்கு குடிக்கிறது, ஒடம்பு அலுப்புக்கு குடிக்கிறது, வாரலீவுக்கு குடிக்கிறது. விசேஷ வீட்ல, கேத வீட்ல குடிக்கிறது. இப்படி குடிக்கிறதுக்கு ஏகப்பட்ட வாயப்புகள், காரணங்கள்.

மது குடிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அளவோடு மது குடியுங்கள். மதுவுக்கு அடிமையாகாதீர்கள்.

ராஜதர்மம்

ராஜதர்மம்

ராஜாவே இல்லை, அப்பறம் எதுக்கு ராஜதர்மம்கிறீங்களா? இந்த தலைப்புல ராஜாங்கிறது கார்ப்பரேட் தலைவனை, தலைவனாகக் கூடியவனை, அவன் எப்படி இருக்கணும் அப்படின்னு பார்ப்போம்.

அரசன் திக்குப்பாலகர் சொரூரூபம், ஆதலால் அனைவரையும் அடக்கி ஆளும் சக்தி அவனுக்கு உண்டாயிற்று. கார்ப்பரேட் தலைவன், எல்லாரையும் அன்பால் அடக்கி ஆளணும்.

அரசன் காரியா காரியங்களையும், காலங்களையும் எண்ணி, அடங்கியும் பலமுள்ளபோது உயர்ந்தும் வருவான், கார்ப்பரேட் நிறுவனத்தை ஆரம்பித்து, அதைப்பலப்படுத்தி அதை பயன்பாட்டுக்கு கொண்டு வரும்வரை மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்து, நல்ல முறையில் நிறுவனம் செயல்பட ஆரம்பித்ததும் புதிய பலம் பெற்று உயர்வான்.

இந்திரியத்தை அடக்கிய அரசனை உலகம் வணங்கும். உலகம் அரசனுக்கு வசப்படும். காமத்தை அடக்கி ஆளச் சொல்றாங்க. கண்டபடி மேயாம, ஒரு பொண்டாட்டி மட்டும் போதும், பெண்ணாசைல தவறு பண்ண ஆரம்பிச்சா கம்பெனி காலியாயிரும், அதைத்தான் இந்திரியத்தை அடக்கி ஆள் அப்படிங்கிறாங்க.

காமத்தால் உண்டான வேட்டையாடல், சூதாடல், குடித்தல், வீண் அலைச்சல், துரோகம், பொறாமை, பிறன் குணத்தைச் சகியாமை, ஒருவன் பொருளை அபகரித்தல் இதெல்லாம் அரசன்கிட்ட, அதாங்க கார்ப்பரேட் தலைவன்கிட்ட இருக்கக்கூடாது.

பொருளை விருத்தி செய்பவரையும், ஞானமுள்ளரையும், பலம், சாமர்த்தியம் உள்ளவர்களை அருகில் விலகாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பத்தாங்க கம்பெனி டெவலப் ஆகும்

தேச விசாரணை, பொக்கிஷம், முதலியவற்றைத் தன் ஆதீனத்திலும் சண்டை செய்வதும், சமாதானமாவதும் ஆகிய இரண்டையும் தூதனிடத்தும் நியமிக்க வேண்டும். கம்பெனியில் ஏற்படும் பிரச்சினைகளை விசாரிப்பதும், முடிவெடுப்பதும் தலைவன் கையில்தான் இருக்க வேண்டும். பணம் பெரிய விஷயம், நிதி நிர்வாகம் தலைவன் கையில் இருக்க வேண்டும். இல்லைன்னு வச்சிக்குங்க, இடைல உள்ளவங்க சாப்பிட்ருவாங்க, பணத்தை மட்டுமல்ல, தலைவனையும் சேத்து தான்.

சண்டை செய்வதும், சமாதானமாவதும், இது ரெண்டும் வக்கீல் பாத்துக்கிடுவார், லீகல் அட்வைசர் கண்டிப்பா வேணும்.

தன் பட்டணத்திற்கு சமீபத்தில் பல உபகிராமங்களை ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே இருக்கும் தலைமையகத்திற்கு அருகில் நிறுவனம் சார்ந்த கிளைகள் அல்லது உபநிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும். விரிவாக்கம்.

தனக்காக பல அரண்கள் உள்ள கோட்டைகளையும், மனையையும் கட்டிக் கொள்ள வேண்டும். வீட கட்டிரலாம், இங்க அரண்கள் கொண்ட கோட்டைங்கிறது தலைவனோட பாதுகாப்பு பற்றியது. பாதுகாப்புக்கு பாதுகாவலர்கள் போக, துப்பாக்கி உரிமமும் வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனம்னா மிகப்பெரிய தொழில் நிறுவனம்னு எடுத்துக்குங்க. மிகப்பெரிய நிறுவனத்தை உண்டாக்கி நடத்துற தலைவன், அரசனுக்கு சமமானவன்.

எல்லோருக்கும் மிகப் பெரிய நிறுவனம் நடத்தணும், அதுல 500 பேர், 1000பேர் வேலை பாக்கணும் அப்படிங்கற எண்ணம் இருக்கும் அவங்களுக்கான பக்கம்தான் இது.

இதுக்கெல்லாம் மேல தலைவனுக்கு, கல்வி அறிவு, தொலை நோக்கு, சுய சிந்தனை, துணிவு, நாவடக்கம், பண்பு, முடிவெடுக்கும் திறமை, சரியான திட்டமிடல், காலம் தவறாமை, மன உறுதி ஆகியவையும் வேண்டும்.
எங்க ..., ராஜாவாக கௌம்பிட்டீங்களா.