Saturday, December 18, 2010

Students, Teaching GH - Dr நசீர்

முனியப்பன் திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ்ல படிச்சப்ப அவருக்கு அடுத்த batch Dr.Nazeer. நசீரும் மதுரைக்காரர்ங்கிறதால அவருக்கும் முனியப்பனுக்கும் எடைல பாசம் பொங்கி வழியும்.
காலேஜ் படிச்சு முடிச்சா தொடர்புவிட்டுப் போயிரும்ல நசீரும் முனியப்பனும் அப்புறம் பாக்கலை. முனியப்பன் மதுரைக்கு வந்த ஒடனே மதுரைல EST ஆஸ்பத்திரியில வேல பாத்த நசீர் பாக்க வந்தார்.

அப்புறம் நசீர் MS படிச்சு அரசு மருத்துவமனைகள்ல வேல பாத்தார்.

முனியப்பனும் நசீரும் ஒரு நாள் தொலைபேசில பேசுற வாய்ப்பு கெடச்சது. ரொம்ப நாள் கழிச்சு பேச்சுல்ல, ரொம்ப நேரம் பேசுனாங்க. அப்ப முனியப்பன், "ஏம்ப்பா Private Practice போடலை" ன்னு

கேட்டார். நசீர் GH, Students, Teaching அவ்வளவு போதும்.

இப்ப நசீர் மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைல அறுவை சிகிச்சை பேராசிரியர். அரசாங்க ஆஸ்பத்திரி நோயாளிகளுக்காகவும் , மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்காகவும் தனது வாழ்க்கையை

அர்ப்பணிச்சுகிட்ட ஒரு நல்ல மனித மருத்துவர். இதெல்லாம் ஒரு அபூர்வ பெறவி

Friday, November 26, 2010

மழை ஸ்கூல் அமர் அஷீ

அதிகமா மழை பெஞ்சா ஸ்கூல் பிள்ளைக கஷ்டப்படக்கூடாதுன்னு அரசாங்கமே லீவு விட்டுருவாங்க.

இப்ப மதுரைல தீபாவளிக்கப்புறம் மழை பெங்சுசிட்டேயிருக்கு.அதுலயும் இந்த 4 நாள் மழை ஊத்திக்கிட்டிருக்கு. செவ்வாய்க்கிழமை கவர்ன்மெண்ட்ல லீவு விட்டாங்க.புதன்கிழம ஸ்கூல்ல லீவு விட்டாங்க. அந்த ரெண்டு நாளும் பகல்ல மழை பெய்யல.

வியாழக்கிழம காலைல இருந்து மழை. அமரும் அஷீவும் ஸ்கூலுக்கு கெளம்பி போயிட்டாங்க. 11 மணிக்கு பிள்ளைகளை கூப்பிட்டு போங்கன்னு ஸ்கூல்ல இருந்து sms. அஷ¥வும் அமரும் ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வந்தாச்சு.

அமர் "லீவுன்னு சொல்லிட்டாங்கன்னா மழை பெய்ய மாட்டேங்குது", லீவு விடலேன்னா மழை பெய்யும்பா" அப்படின்னு சொன்னார்.

வெள்ளிக்கிழமை காலை இருந்து மழை. நம்ம ஜோக் குட்டி, "மழை பெஞ்சுகிட்டே இருந்தா, லீவு விட்ருவாங்களான்"னு அஷ¥வுக்கே உள்ள Trade mark சிரிப்ப விட்டார்.

ஸ்கூல் லீவு விடல. மழை பெஞ்சுகிட்டே இருக்கு. இப்ப அமரும், அஷ¥வும் ஸ்கூல்ல.

அமருக்குத்தான் வருத்தம் "ஸ்கூல்ல படிப்பு போயிருச்சு, எழுத முடியாது, Friends அ பார்க்க முடியாது.

மழை ஸ்கூல் லீவு அஷ¥, அமர் contrast கருத்துக்கள்

விருந்தும் மருந்தும் 3 நாளைக்குதான். School நாள்ல, School லீவு விட்டா எப்படி தாங்க முடியும் அமருக்கு.

Saturday, November 20, 2010

கல்யாணத்தை நிறுத்து - TVMC

கல்யாண மேடைல மணமகன், மணமகள், நடத்தும் அய்யர், மேடைக்கு முன்னால வாழ்த்த வந்திருக்கும் ஆட்கள், கெட்டி மேள சத்தத்தோடு அய்யர் தாலி எடுத்துக் குடுக்கும் போது தலைக்கு மேல தாய்மாமன் "உய்ய்ய்" னு பறந்து வந்து கல்யாணத்த நிறுத்துன்னா எப்படி இருக்கும் .

"ஆ" ன்னு மயக்கம் போட்ட பெண்கள், பயத்துல நடுங்கி சத்தம் கொடுத்த பெண்கள் அதிகம். பய்ப்படாத ஆண்களும் இல்லை.

இதெல்லாம் எங்கன்னு பாக்குறீங்களா.

மணமகன், மணமகள், அய்யர், தாய்மாமன் எல்லாமே எலும்புக்கூடு. இருட்டு ரூம்ல மேடைல மட்டும் வெளிச்சம். பின்னால இருந்து தலைக்கு மேல எலும்புக்கூடு, ஸ்டீரியோ எப்க்ட்ல பறந்து மேடைக்கு வந்தா எப்படி இருக்கும். அரட்டிட்டாங்க.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி - மருத்துவ கண்காட்சி 1977ல.

இந்த அமைப்பு Dr.ஜெயகர் ஜோசப், Dr.ராஜ்குமார் பண்ணது.

எலும்புக்கூடு கல்யாணம் 1977 திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி கண்காட்சில டாப் நிகழ்ச்சி.

எலும்புக்கூடு மணமகனும், மணமகளும் எலும்புக்கூடு அய்யர் எடுத்துக் கொடுக்க மால எல்லாம் மாத்துவாங்க, சிரி சிரின்னு சிரிச்சு ஆர்வமா பாத்துக்கிட்டிருந்த Audience பின்னால இருந்து தலைக்கு மேல தாய்மாமன் எலும்புக்கூடு பறந்து வந்த உடனே டர்ராயிருவாங்க.

Monday, November 15, 2010

நீ ஏன் குண்டா இருக்க தெரியுமா - அமர்

முனியப்பன தன்னோட வீட்டுக்கு Phone பண்ணா, Phone அ எடுத்து ஒரு Recorded voice மாதிரி "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்" னு ஆரம்பிச்சது, முனியப்பனுக்கு ஆச்சர்யம் "என்னடா புதுசா இருக்கேன்னு" Rcorded voice மாதிரி தொடருது "தற்சமயம் எந்திரன் படம் பார்த்துக் கொண்டிருப்பதால் சிறது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளவும்" அமர் இப்படி சொல்லிட்டு Phone அ வச்சுட்டார். முனியப்பனுக்கு பக்கத்தில் இருந்தவங்களுக்கு ஒரே சிரிப்பு

இந்த அமர்தான் முனியப்பனை பாத்து ஒரு குண்டை வீசினார், "நீ ஏன் குண்டா இருக்க தெரியுமா?"

"ஏம்ப்பா"

அமர் "நீ தின்னுட்டு ஒக்காந்துக்கிற, அப்புறம் எப்படி கலோரி வெயிட் ஏறும், சாப்பிடறத செலவழிக்கனும்"

முனிய்பபன் அப்படி ஒண்ணூம் வெயிட் கெடையாது. 60 Kg இருக்க வேண்டிய ஆள் 62 kg, அதனால ஒரு சின்ன தொந்தி அந்த excess 2 kg தொந்தி அமர் கண்ல பட்டு, முனியப்பனுக்கு advice பண்ண வச்சிருக்கு.

மாமான்னா அமர், அஷ¥வுக்கு அவ்வளவு பாசம். சிறு வயசிலயே Health Awareness வந்திருக்கு பாத்தீங்களா அது ரொம்பப் பெரிய விஷயம்.

Tuesday, November 9, 2010

புதிய பதிவர் / புதிய ஜூவா

புதிய ஜூவா / இப்ப தினமணி குடும்பத்தில் பணிபுரியறார். 20 வருஷம் தொழிலாளியா வேல பாத்துட்டு, இப்ப 6 வருஷமா தினமணி. அவர் தன்னோட தொழிலாளி ஞபாகத்தை

http://pudiyathozhilaly.blogspot.comல எழுதுறார். தன்னோட அனுபவங்கள புக்கா போடுற ideaவும் அவருக்கு இருக்கு.

புதிய ஜூவா வேற யாரும் இல்ல, முனியப்பனோட 1973/1974ல ஒண்ணா படிச்சவர். புதிய ஜூவாவின் தொழிலாளி அனுபவங்களை நாமளும் பாப்போம். வருக, வருக புதிய ஜூவா.

Saturday, October 23, 2010

I acept my defeat Dr.SR

முனியப்பன் படிச்சு முடிச்சு, ஹவுஸ் ஸர்ஜன் பண்றப்ப Surgeryல DR.S.ராமகிருஷ்ணன் ms, 4th யூனிட் chiefஆ இருந்தார்.அப்பல்லாம் Super speciality பிரிவுகள்
சென்னைல MMCல மட்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்த நேரம். DR.SR தலைல இருந்து கால் விரல் வரை உள்ள எந்த பார்ட்டா இருந்தாலும், ENT , கண் தவிர Operation
பண்றவர். அந்த காலகட்டத்துல அப்டமன் ஸ்கேன். CT ஸ்கேன். MRI ஸ்கேன் இதெல்லாம் கெடையாது. மருத்துவ அனுபவத்தை வச்சுதான் Treatment.

DR.S.R. திறமை முனியப்பனை SR பக்கம் ஈர்த்துச்சு SR யூனிட்லதான் ஹவுஸ் ஸர்ஜனா இருந்தார் முனியப்பன் . பொதுவா மருத்துவ மாணவர்கள்கிட்ட
ஆப்ரேஷன் பண்ற Surgeons தான் attraction. Surgeonsனா அவ்வளவு Craze.ஒடம்ப அறுத்து ஒட்ட வச்சு உசிர காப்பாத்தி Emergency surgeriessல தூள் கெளப்புவாங்க. அதுலயும் ரொம்பத் தெறமையான Surgeions மருத்துவ மாணவர்கள் மத்தில மிகவும் விரும்பப்படற ஆளா இருப்பாங்க.

அப்படி ஒரு Surgeonதான் Dr.S.R. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 4வது யூனிட் chief. Dr.S.R major operation பண்றத பாக்க அடுத்த Unit studentsம் வந்துருவாங்க Thyroid surgeryல மத்த எல்லா Unitலயும் Patientக்கு blood ஒரு பாட்டில் ஏத்துவாங்க.SR மட்டும் blood ஏத்தாமலே Operate பண்ணுவார். முனியப்பன் SRகிட்ட கேட்டார்,"ஏன் சார் நீங்க மட்டும் Blood போட மாட்டீங்கிறீங்க" DR SR சொன்னார், "Dont Insult me" SRக்கு அவர் மேல , அவர் Surgery மேல அவ்வளவு confidence. SR சொன்ன காரணம் " மத்தவங்கள்ளாம் Thyroid surgery யப்ப Surgical shock வந்துரலாம்னு பயந்துகிட்டு Blood போடுறாங்க , நம்ம எதுக்குப்பா பயப்படனும்?

SRன் இந்த boldness முனியப்பனுக்கு பிடிச்சுப் போக, ஹவுஸ் ஸர்ஜனா Surgeryல SR unitல 1 வருஷம் முனியப்பன் வேல பாத்தார்.சீனியர் house surgeonனா stipend கெடையாது. Fees கட்டி வேல பாக்கனும். SRகிட்ட வேல பாத்த 1 வருஷம்தான் முனியப்பனுக்கு எந்த Case ஆ இருந்தாலும் எதிர் கொள்ள தைரியத்தை குடுத்துச்சு.

Senior House Surgeon ஆ வேல பாக்க ஆரம்பிச்சு முனியப்பனுக்கு DR.SRம் அவரோட Asst. Sr ஸ்டீபனும் நல்லா பாடம் சொல்லி கொடுத்தாங்க. Operation பண்றப்ப instrumentஅ சரியா பிடிக்கலை, அவங்க கேட்டகிற கேள்விக்கு பதில் சொல்லலை அப்படின்னா முனியப்பனுக்கு அடி விழுகும், அவங்க கைல என்ன Instrument இருக்கோ அத வச்சு முனியப்பனை அடிப்பாங்க.

நாளா வட்டத்துல முனியப்பனும அவங்ககிட்ட instrument அடி வாங்காத அளவுக்கு தேறிட்டார். SRக்கு 2 Asst . Dr. ஸ்டீபன் மாறிப் போனப்பெறகு Dr.சிதம்பரம் ms & Dr பாலஸ் . இவங்க ரெண்டு பேரும் புதுசுங்கிறதால latest விஷயங்களை முனியப்பனுக்கு சொல்லிக் கொடுத்தாங்க.

Operation தியேட்டர்ல 3 டேபிள் இருக்கும். மொத டேபிள்ல SRம் ஒரு Asstம் case பண்ணுவாங்க. அடுத்த டேபிள்ல ஒரு Asst case பண்ணுவார். மூணாவது டேபிள்ல முனியப்பன் ஒரு House surgeon அ தொனைக்கு வச்சுகிட்டு Case பண்ணுவார்.
TVMCH திருநெல்வேலி medical college Hospitalல இப்ப 7 Surgical unit இருக்கு. அப்ப 4 unitதான் . அதனால 7 admission day ஒரு மாசத்துக்கு வரும். அந்த 7 நாளும் 24 மணி நேர duty. காலை 7 மணில இருந்து அடுத்த நாள் காலைல 7 மணிவரைக்கும் அந்த unitதான் பொறுப்பு. அடிபட்டு வர்ற Accident case, emergency surgery, ஏற்கெனவே உள்ள ward case அப்படின்னு 24 மணி நேரம் போறதே தெரியாது. மத்த யூனிட் chief லாம் admission day அன்னைக்கும் அவங்க rounds முடிஞ்ச ஒடனே கெளம்பிருவாங்க. ஆனா DRSR அந்த 7 நாளும் TVMC ஆஸ்பத்திரிய விட்டு வெளிய போக மாட்டார். அவசர கேஸ், accident கேஸ்ல அவர் Opinion வாங்கலாம், ரொம்ப
தேவைன்னா, emergency surgeryக்கும் வந்துருவார்.admission Day அன்னைக்கு incharge 1 asst தான் . ஆனா Chiefம் availableஆ இருக்காது SR மட்டும்தான். patient result அவருக்கு முக்கியம். அதே மாதிரி iv unitல postingல வர்ற, 3rd, 4th, final year studentsக்கு classம் நல்லா எடுப்பார். Dr Srகிட்ட எல்லா வார்டும் rounds போற ஒரே ஆளட முனியப்பன் மட்டும்தான்.

இப்படி போய்க்கிட்டிருக்கும் போது ஒரு abdomen case வயித்துல கட்டி, மேல வயித்துல, patient lady, Major operationன்னா ஒரு Asst, முனியப்பனோடதான் களம் எறங்குவார் DRSR. வயித்துல கட்டின்னு abdomenஅ oppen பண்ணா, அது ரொம்ப அபூர்வமான Cancer கட்டி operation பண்ண முடியாத அளவுக்கு Fix ஆகியிருக்கு. SR ஒரே வார்த்தைதான் சொன்னார் "I accept my defeat" எவ்வளவு பெரிய வார்த்தை மத்தவங்கள மாதிரி சப்பக் கட்டு கட்டாம தோல்விய ஒத்துக்கற மனசு யாருக்கு வரும் அதான் Dr.Sr.

Monday, October 18, 2010

ரெண்டு நாள் ஜாலியா இருப்ப அஷீ

அமர், அஷீவின் அப்பா பெர்னாட்ஷா 1995ல் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டிப் போறவர்.

பெப்ரவரி 2008 ல முனியப்பன், பெர்னாரட்ஷா, அஷீ, அமர், நாலு பேரும் தனியா இரு முடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போய்ட்டு வந்தாங்க.

அமர், அஷீ, பெர்னாட்ஷா 2008,2009, இப்ப 2010 ல October மாசம் இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போனாங்க. குருசாமி பழனிச்சாமி வாத்தியார் குரூப் போடதான் போவாங்க. Octoberல தான்.
கர்நாடகா, ஆந்திராக்காரன் கூட்டம் இல்லாம அய்யப்பன் கோவில் கொஞ்சம் free ஆ இருக்கும்

காலைல முழிச்சதுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் முனியப்பனோட இருக்கதால, முனியப்பனை பிச்சு ஆய்ஞ்சிடுவாங்க அமரும் அஷீவும்.

இப்ப 17ந்தேதி இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போகும் போது அஷீ "ரெண்டு நாள் ஜாலியா இருப்ப" ன்னு ஒரு சிரிப்பு வெடிய கொளுத்திப் போட்டுட்டு சபரி மலைக்கு கெளம்பிட்டார்.

அஷீ, அமர் இருமுடி கட்டி சபரிமலை போறது இப்ப 4 வது தடவை.

Monday, October 11, 2010

பகல் கொள்ளை

ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம். எல்லோருக்கும் பனங்காய்ச்சி மரம், பொன் முட்டையிடும் வாத்து.

முன்னால எல்லாம் ரஜினி படம் ரிலிஸாச்சுன்னா மொத 2 நாள் ரசிகர் மன்றம் show. ஒரு showவுக்கு 25000 ரூபாய் கட்டிருவாங்க. அப்புறம் சினிமா பாக்க வர்றவங்ககிட்ட அந்த Ticket எல்லாம் ஒரு தொகை வச்சு வித்து சம்பாதிப்பாங்க. ரசிகர் மன்ற ஷோ முடிஞ்சப்பிறகு அடுத்த showல இருந்து பொது மக்கள் படம் பாப்பாங்க. டிக்கெட் வெல 50 ரூபாய்க்குள்ளதான் இருக்கும்.

8 வருஷத்துக்கு முன்னால திரை உலகினர் திரண்டு போய் முதலமைச்சர்ட்ட மனு குடுக்கிறாங்க. "TV, திருட்டு சிடியால எங்க தியேட்டருக்கு ஆள் வரல, மொத கொஞ்ச நாளைக்கு டிக்கெட்ட விட கூட கொஞ்சம் வச்சு வித்துக்கிறோம்" உடனே அன்றைய முதலமைச்சர் "திரைப்படம் வெளியான 7 நாளைக்கு இஷ்டம் போல டிக்கெட்ட வெல வச்சு வித்துக்கலாம்"னு அனுமதி குடுக்கிறாங்க.

அதுலருந்து தியேட்டருக்கு ஏற்கெனவே வந்த கூட்டமும் கொறைஞ்சிருச்சு. கொறைஞ்ச டிக்கெட்டே 50 ரூபாதான். அதுவும் படத்த தியேட்டர விட்டு தூக்கந்தண்டியும் அதே ரேட்தான்.

"சினிமா பாக்க வர்றியா, கேக்கிற காச குடுத்துட்டு படத்த பாரு" அதான் இன்றைய நிலை. இப்ப வந்திருக்க ரஜினி படத்தோட ஒரு டிக்கெட் வெல எவ்வளவு இருக்கும்னு நெனைக்கிறீங்க. மொத நாள் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை . ஒரு டிக்கெட்டுக்குத்தான். ரஜினி படம் அதுவும் சூப்பர் படம்னா தொடர்ச்சியா House full ஆ ஓடும். இப்படியும் ஓடுது ஒரு showவுக்கு 300 போரோட. இப்பயும் ஒரு டிக்கெட் மினிமம் ரூ 150 எல்லா ஊர்லயும் .

சினிமா தியேட்டர்ல டிக்கெட்டுக்கு வசூலிக்கிறது கொள்ளையடிக்கிறாங்கன்னு Open fact. இதை தடுத்து நிப்பாட்ட வேண்டியது அரசாங்கம். அரசு இயந்திரம் ஏன் சும்மா இருக்கு. எந்த ஒரு தொழில்லயும் தொழிலுக்கு உள்ள மரியாதை இருக்கனும். சினிமா டிக்கெட்டுங்கிற பகல் கொள்ளை திரைப்படத் தொழிலையே நசிக்கிடும்.

Saturday, October 2, 2010

அயோத்தி தீர்ப்பு - சின்னத்தாய்

முனியப்பனின் அம்மாதான் சின்னத்தாய். படிப்பு அந்தக் காலத்து SSLC. மதுரைல OCPM & Capron hall ஸ்கூல்ல Hostelல தங்கி படிச்ச வருடங்கள் 1943 to 1949. எல்லா ஸ்கூல்லயும் Prayer நடக்கும். சின்னத்தாய் காலத்துல Prayer என்ன தெரியுமா "Long live queen victoria". பிரிட்டிஷ்க்காரன் ஆட்சில இந்தியா இருந்த நேரம்.

அந்த கால கட்டத்துல சுதந்திர போராட்டங்கள் தீவிரமான நேரம். மாணவர்கள் மத்திய சுதந்திர தாகம் அதிகம். சின்னத்தாயம்மா லீவுல போடிக்கு வர்றப்பல்லாம் சுதந்திர போராட்டங்கள் ஊர்வலங்கள்ல பங்கெடுத்துப்பாங்க. தேசம்கிறதுதான் அவங்க எண்ணம் எல்லாம். அந்தக் காலத்து தேசப்பக்தி. பொதுவா இந்தியாவுக்குள்ள என்ன நடந்தாலும் கவலைப்படுவாங்க.

இப்ப அயோத்தி பிரச்சினை அவங்களை பிடிச்சிருச்சி. தீர்ப்பு எதாவது ஒரு பக்கம் ஆயிருச்சுன்னா நாட்ல கலவரம் வெடிச்சிடுமேன்னு அவங்களுக்கு கவலை. சின்னத்தாய் வீட்டுக்காரர் கு.வேலுசாமி நீதிபதியா இருந்தார்ல. அவர் தீர்ப்பு குடுத்த ஒரு case அவங்களுக்கு ஞாபகம் வருது. முனியப்பன்கிட்ட 1963ல நடந்தத சொல்றாங்க. "அப்பா கோவில்பட்டில நீதிபதியா இருக்கப்ப ரெண்டு Partyக்கு எடைல கோர்ட்ல ஒரு dispute. கு.வேலுசாமி ரெண்டு partyயும் சந்தோஷமா ஏத்துக்க கூடிய ஒரு தீர்ப்பை courtல குடுக்கிறார்"

அந்த தீர்ப்பு ஞாபகம் இப்ப சின்னத்தாயம்மாவுக்கு வந்துருது. அயோத்திய பத்தி கவலை கூடுது."அப்பா சொன்ன மாதிரி ரெண்டு Partyயும் சமாதானமா போற மாதிரி தீர்ப்பு வந்தா நல்லாயிருக்கும்மா" அப்படின்னு பொலம்ப ஆரம்பிச்சுட்டாங்க.

தீர்ப்புநாள் வந்துருச்சு. காலைல இருந்தே "3 மணிக்கு சொல்றாங்கப்பா. பேரன் அமர்கிட்ட TVய பாத்து சொல்லு " அப்படின்னு ஒரு Request. அமர் ஆச்சிக்கு 3 மணிக்கு போன் பண்ணி இன்னம் சொல்லலை 4 மணிக்காம் போன வச்சிர்றார். முனியப்பன் clinic கெளம்பி வந்துர்றார். 5.15 க்கு சின்னத்தாயம்மாட்ட இருந்து போன் அப்பா தீர்ப்பு சொல்லிட்டாங்கப்பா. எல்லாருக்கும் பொதுவான தீர்ப்பு.

தீர்ப்பை கேட்ட பிறகுதான் சின்னத்தாயம்மாவுக்கு நிம்மதி. நாடு அவங்களுக்கு முக்கியம்.

Monday, September 27, 2010

மார்ஷல் அமர் ஸ்டார்ட்மார்ஷல் அமர் ஸ்டார்ட்

அமர், அஷீவோட அண்ணன். 9 வயசாகுது. நல்ல Photographer. அவர் எடுத்த photos பின்னால ஒரு பதிவுல வரும்.

மார்ஷல் அமரோட அண்ணன், செல்லம். மார்ஷலுக்கு வயசு 2. மார்ஷல் கன்னிங்கற வகைய சேர்ந்த வேட்டை நாய். கன்னிங்கறது திருநெல்வேலி, ராஜபாளையம், அம்பாசமுத்திரம் பகுதில உள்ள வேட்டை நாய். அவ்வளவு அறிவு, பாசம் உள்ள நாய். வீட்ல உள்ள பொருட்கள், உயிரினங்களை ஒண்ணும் செய்யாது. காவலுக்கு கெட்டிகாரன். வேற யாரும் மூச்.


முனியப்பன் வீட்ல அமருக்காக வாங்குனதுதான் மார்ஷல். கன்னிவகை. மார்ஷலை ஒருநாள் குட்டில இருந்தே வளத்து வருவது வீட்ல உள்ள எல்லோரும்தான். இருந்தாலும் மார்ஷல், அமர் நட்பு தனி. மார்ஷலும், அமரும் ஓடி பிடிச்சு விளையாடுவாங்க கொஞ்சுவாங்க.

இப்ப கொஞ்ச காலமா புது வெளையாட்ட வெளையாடுறாங்க மார்ஷலும் அமரும். அமர் காலைல குளிச்சு ஸ்கூல் யூனிபார்ம் மாட்டுன ஒடனே முனியப்பன் அமருக்கு இட்லி ஊட்டுவார். இப்ப வெளையாட்டே அந்த இட்லிய வச்சுதான்.

மார்ஷல பின்னால கட்டிப் போட்டுருப்பாங்க. "ரெடி, ஸ்டார்ட்" ன ஒடனே, அமர் வீட்ல பின்னால போய் சந்து வழியா முன்னால வருவார், இல்ல பின் பக்கமே வந்துருவார். அவர் வர்ற பக்கத்தை மார்ஷல் காட்டிக் குடுத்துரும். மார்ஷல் அமர் எந்தப் பக்கம் போறாரோ அந்தப் பக்கம் திரும்பிரும்.சே அப்படின்னு சொல்லிகிட்டே அமர் இட்லிய சாப்பிடுவார்.

இப்ப ஒரு மூணு நாளா மார்ஷல் தோத்திருது. காரணம் அமர் வளக்குற 2 பூனை. 2 பூனையும் வீட்ல பின்னால தோட்டத்துக்கு வந்துருது. மார்ஷல் அமரை பாக்குமா, பூனைய பாக்குமா. மார்ஷலோட கவனம் பூனை பக்கம் போயிர்றதால அமர் win பண்ணிர்றார். அதுவும் 50%தான். பூனை disturb பண்ணியும் மார்ஷல் 50% அமர் மேல கவனம் வச்சிருக்கும்.

மார்ஷல் முனியப்பன் வீட்ல எல்லாருக்கும் செல்லம். வீட்டுக்கு சரியான காவல்காரன் மார்ஷல். வெளி ஆள். வேற ஆள் யாரும் உள்ள enter ஆக முடியாது. அமர் மார்ஷலை அண்ணண்னுதான் கூப்பிடுவார். மார்ஷல் அமர் உறவு ஒரு தனி காவியம்

Monday, September 20, 2010

முனியப்பா கூப்பிட்டியா - சுரா

முனியப்பா கூப்பிட்டியா - சுரா


முனியப்பனின் பள்ளி நண்பர் சுரா. இப்ப சென்னைல இருக்கார். Cellல எப்ப கூப்பிட்டாலும்
எடுக்க மாட்டார். திடீர்னு ரெண்டு மாசம் கழிச்சு சுரா "முனியப்பா கூப்பிட்டியா" ம்பார். இது எதுக்கு என்னன்னு புரியலை முனியப்பனுக்கு. நேத்து தினமணி ஜீவாகிட்ட பேசிகிட்டிருக்கப்ப ஜீவா சொன்ன விஷயங்கள். சுரா எப்பவும் Cell போன silent modelல வச்சிருக்கவர். அவருடைய தொடர்புகள் அதிகம். சுரா எழுத்தாளர்ங்கிறதால அடுத்து என்ன எழுதறதுன்னு அதே சிந்தனைல இருக்கவர். அந்த சிந்தனை ஓட்டம் தடைபடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் இந்த silent mode.

urgent ஆ சுராகிட்ட பேசனும்னா அதுக்கு ஒரே வழி லேகா ரத்னகுமார்கிட்ட சொல்லிரனும். லேகா அட்வர்டைசிங் ரத்னகுமார் சுராகிட்ட சொல்வார். சுராவும் என்ன, ஏதுன்னு பேசிருவார். லேகா ரத்ன குமார் சுராவோட நெருங்கிய நண்பர், சுரா டெய்லி விசிட் பணற ஆபீஸ். இதயம் நல்லெண்ணெக்கு ஆரம்ப காலம் முதல் இன்னைக்கு வரைக்கும் Ad நம்ம லேகா ரத்னகுமார்தான்.

இப்ப சுராவ பத்தி சில வரிகள். சுரா தமிழர்னாலும் மூணார் பக்கத்துல செண்டுவாரைல வளந்தவர். ஆரம்ப கால படிப்பு கேரளாங்கிறதால மலையாளம் எழுத படிக்கத் தெரிந்தவர், சுரா. அப்புறம் High School, college- மதுரை, அப்புறம் சென்னை. கல்லூரில படிக்கிற காலத்துல கையெழுத்து பிரதி நடத்துனவர் சுரா. அப்ப இருந்தே அவருக்கு எழுத்து மோகம். சென்னைக்கு போனவர் சாவி வார இதழ்ல, அப்புறம் குங்குமம், பிலிமாலயா பத்திரிகைல பணி புரிஞ்சார். எடைல சினிமால PRO வா கால் வச்சார். அவர் மக்கள் தொடர்பாளரா பணியாற்றிய திரைப்படங்கள் 180க்கு மேல். பல நடிகர்களுக்கு PRO வா வேற இருந்தார். இவ்வளவு தூரம் இருந்தாலும் எளிமையானவர் சுரா. இன்னம் Busல, Share autoலதான் பயணங்கள்.நக்கீரன் கோபாலுக்கு நல்ல நண்பர் சுரா. நக்கீரன் பதிப்பகத்துல இருந்து வர்ற இனிய உதயம் மாத இதழ்ல இதுவரைக்கும் இவரோட மொழி பெயர்ப்பு நாவல்கள் 87 வெளிய வந்திருக்கு. சுரா சினிமா பத்திய தொடர்கள் நெறைய எழுதியிருக்கார். எல்லாப் பத்திரிகைலயும் திரை உலகம் சம்பந்தமா எழுதுவார். அப்படி ஒரு 500 கட்டுரைகள் போட்டுருக்கார். அவர் எழுத்துல வந்த புத்தகங்கள் 127.

திரை உலக புள்ளி விவரங்கள் அவருக்கு அத்துபடி. Press council மற்றும் திரை உலக PRO சங்கத்துல அவர் உறுப்பினர். எழுத்து, இலக்கிய விழாக்கள், Book fair தான் அவரோட மூச்சு.இப்ப 11.09.10ல முனியப்பன பாக்க பள்ளி நண்பர் Naval officer சங்கர் வந்திருந்தார். சுராவ பத்தி பேச்சு வந்த உடனே "அவன கூப்பிடுன்னு" சங்கர் சொல்ல முனியப்பன் "அவன் போன எடுக்க மாட்டான்பா" அப்படின்னு சொல்லிகிட்டே அரைகுறை மனதோட Cellல சுராவ கூப்பிட்டா, அதிசியம், சுரா போன attend பண்ணிட்டார்.

அப்ப சுரா சொன்ன விஷயம் இது. " இந்த வார குமுதம் பாத்தியா" அப்படின்னு கேட்ட சுரா. மதுரைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ராஜீவ் காந்தி வந்த விஷயத்தை போட்ருக்கத சொல்லி, ராஜீவ் காந்தி மதுரைக்கு ஏன் வந்தார் அப்படிங்கிறதையும் சொன்னார். சுராகிட்ட கலந்துரையாடி போடப்பட்ட செய்தி அது. திருநள்ளாறு சனீஸ்வர பகவான கும்பிட Plan பண்ண ராஜீவ்காந்திய பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல உள்ள சனீஸ்வர பகவான கும்பிட அழைச்சு வந்திருக்காங்க. ஏற்பாடு சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர் V.N.சிதம்பரம். அடுத்து சுரா சொன்ன விஷயம்தான் ஹைலைட்டே. "சிவாஜி காவடி எடுத்திருக்கார் தெரியுமா ஒனக்கு" கேட்ட சுரா detail ஆ சொல்றார். சிவாஜி கணேசன் பைலட் பிரேம்நாத் படப்பிடிப்புக்காக இலங்கைல இருக்கார். அப்ப வீட்ல பேரப்புள்ளக எல்லாம் பெண்குழந்தைகள். அப்ப சிவாஜியோட கடைசி மக தேன்மொழி மாசமா இருக்காங்க. சிவாஜி இலங்கைல உள்ள பிரசித்தி பெற்ற முருகன்
கோவில்ல வேண்டிக்கிறார். அடுத்த பேரப்பிள்ளை ஆம்பிள புள்ளயா பெறக்கும்போது ஒனக்கு
காவடி எடுக்கிறேன்னு வேண்டுதல். ஆம்பிள புள்ள பேரப்புள்ளயா பொறந்திருது.
காலங்கள் ஓடுது. இலங்கைல சூழ்நிலை சரியில்லாததால சிவாஜியால அங்க போக முடியல.
மனிதர்கள்கிட்டயே கடன் வைக்காதவர் சிவாஜி. கடவுள்கிட்ட கடன் வைப்பாரா?. அப்ப V. N.
சிதம்பரம் சிவாஜிகிட்ட சொல்றார். இலங்கை முருகன் மாதிரி பழமுதிர் சோலைல இருக்கு. காவடிய அங்க எடுக்கலாம்னு. சிவாஜி சரின்றார். காவடி எடுக்க வந்த சிவாஜிக்கு ஒடம்பு சரியில்லாம போகுது. அப்புறம் என் உயிர் போனாலும் முருகன் கோயில்ல போகட்டும்னு சிவாஜி கணேசன் காவடி எடுத்துர்றார். இந்த மேட்டர் அடுத்து வரும் குமுதம் வார இதழ்ல வருது. சுரா ஒரு தகவல் களஞ்சியம். சுரா போன எடுக்காதத பத்தி எழுத ஆரம்பிச்சு, கடைசில V.N.சிதம்பரம், சிவாஜி பத்தின செய்திகள்ளாம் பாருங்க. V.N. சிதம்பரத்த பத்தி நெறய விஷயங்கள் சொன்னார் சுரா.

சுப்பையா மகன் ராஜசேகர்தான் சுரா. சுராவும் முனியப்பனும் 1973ல எடுத்த போட்டோவும்
சுராவோட சமீபத்து போட்டோவும் இந்த பதிவுல உண்டு. ரெண்டு பேர் இருக்க போட்டோல வெள்ள சட்டை தலைல முடி நெறய இருக்கவர்தான் முனியப்பன், அடுத்தவர் சுரா.


Friday, September 17, 2010

தங்கச்சிய பாக்கனும் தங்கபாண்டி

தங்கச்சிய பாக்கனும் தங்கபாண்டி

தங்க பாண்டி மதுரைல உள்ள கட்டிட காண்ட்ராக்டர்கள்ல ஒரு பெரிய லெவல் ஆள். அவருக்கு காய்ச்சல் அடிக்குது.முனியப்பன் கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வர்றார். 102 டிகிரி. அடுத்தநாளும் வர்றார். அன்னைக்கும் 102. முனியப்பன் தங்கபாண்டிய இன்னம் 2 நாளைக்கு
Rest எடுக்க சொல்றார்.

தங்கப்பாண்டி முனியப்பனின் நண்பரும் கூட .சிரிச்சிகிட்டே தங்கப்பாண்டி "நாளைக்கு ஊருக்கு போகனும், Rest எடுக்க முடியாதுங்கிறார்". முனியப்பன் "ஒரு நாள் Rest எடுத்துட்டு அடுத்த நாள் போங்கன்றார்". தங்கபாண்டி நாளைக்கு தூத்துக்குடிக்கு வர்றதா வாக்கு கொடுத்திட்டேன். 15 வருஷமா பேசாம இருந்த தங்கச்சிப் பாக்க ஊருக்கு போறேன்றார். வர்றதா சொல்லியாச்சு போகாமா இருந்தா நல்லா இருக்காது அப்படிங்கிறார்.
கருகிய உறவு துளிர் விடும் போது அதற்கு குறுக்க நிக்க முடியுமா? நிக்கலாமா?

தமிழனின் பலமே உறவுகள்தான். அப்படிப்பட்ட உறவுகள் சிதைந்து சின்னாபின்னாமாயிருக்கும் இந்த காலகட்டத்தில் முறிந்த உறவை
மீண்டும் மலரச் செய்யும் தங்கபாண்டி மாதிரி ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள்.

Thursday, September 9, 2010

கரைச்சாச்சு என்ன செய்றது திலகம்

கண்ரமாணிக்கத்தை சேர்ந்த ராமநாதன் - திலகம் மதுரைல இருக்காங்க. ராமநாதன் மருந்துக்கடைல வேலை பாக்கிறவர். அவர் மகனும் மதுரைல ஒரு மருந்துக் கம்பெனில வேல பாக்குறான்.

ராமநாதன் 55 வயசாச்சு, முடியெல்லாம் கிட்டத்தட்ட நரைச்சிருச்சு. ஆனா dye அடிக்காம 10 வருஷமா இருக்கார். திலகத்துக்கு மூட்டு வலின்னு ட்ரீட்பெண்டுக்கு வாராங்க. அப்ப ராமநாதன் தலைமுடி full ஆ கறுப்பாயிருக்கு. என்னன்னு கேட்டா ராமநாதன் சிரிக்கிறார்.திலகம் ஒரு போடு போட்டாங்க பாருங்க முனியப்பன் அசந்துட்டார் "கரைச்சாச்சு" மீதியாய் போச்சு. அப்புறம் என்ன செய்றது?" திலகம் தலைக்கு dye அடிக்க கரைச்சது அதிகமாகவும், அதை waste பண்ணாம அவங்க வீட்டுக்காரருக்கு அடிச்சு விட்டுட்டாங்க

Thursday, August 26, 2010

எனக்கு என்ன Benefit?

முனியப்பனின் மிகவும் close ஆன நண்பர் "A".

"A" க்கு திருமணம் ஆனதிலிருந்தே அவர் மனைவியிடம் ஒத்துப் போகவில்லை. அப்படியிருக்கும் இல்வாழ்க்கையால் Aன் மனைவி தாய்மைப் போறு அடைந்தார். அவர் மனைவி நிறை மாதமாக இருக்கும் பொழுது Aன் மனைவி சொந்தங்கள் வீட்டிற்கு வந்து Aஐ தாக்கி A ன் மனைவியுடன் சென்று விட்டனர்.

A விட்டது சனியன் என்று சந்தோஷமாயிட்டார். 15 நாள் கழித்து Aக்கு ஒரு டெலிகிராம். பையன் பொறந்திருக்கான்னு. ஊருக்கு போன Aன் மனைவி தான் எங்க இருக்கேன்னு எந்த தகவலும் குடுக்கல. மொட்டையா ஒரு தந்தி. A எப்படி போவார்? ஆனாலும் மகன் பொறந்த சந்தோஷத்தை அக்கம் பக்கத்தில உள்ளவங்களுக்கு சந்தோஷமா சாக்லேட் குடுத்து அசத்திட்டார். 3 வருஷம் A க்கும் அவர் மனைவிக்கும் எந்த தகவல் பரிமாற்றமும் இல்லாம ஓடிருச்சு.தேவை இல்லாத வேலையை செய்ற முனியப்பளை மாதிரி நட்பு வட்டம் Aஐ அவர் மனைவியோட சேர்த்து வைக்கம் முயற்சில எறங்குறாங். No use.3 வருஷம் கழிச்சி பையன பாக்க A கெளம்பி போனார். போன எடத்துல ஒருத்தன் 'இங்க யாராவது வந்தீங்க கொலை விழுகும்' அப்படிங்கவும் A வம்ப வளக்காம வந்துட்டார். முனியப்பன் Aன் மனைவி தொலைபேசி நம்பர வாங்கி Aகிட்ட குடுத்து அவங்க ரெண்டு பேரயும் பேச விட்டார்.
பேசினாங்க. போன்லயும் சண்டை.அந்தம்மா சரிக்க வரல. மகன் குரல, 3 வயசு பையன் குரல, போன்ல கேட்டு சந்தோஷப்பட்டுக்குவார் A. அந்த போன் சந்தோஷத்துக்கும் வேட்டு வச்சுட்டாங்க. Aன் மனைவி அந்த எடத்த விட்டு பையனோட கெளம்பி போய்ட்டாங்க. போனவங்க போனவங்கதான் . எங்க இருக்காங்கன்னு ஒரு தகவலும் இல்லை.
Aன் அப்பாவும் அம்மாவும் மனசு ரொம்ப ஒடைஞ்சுட்டாங்க என் மகன் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன்னு புலம்பிகிட்டிருந்த A யின் அப்பா, புலம்பிகிட்டே போய்ச் சேந்துர்றார்.
Aன் அம்மா நல்லா விசாரிக்காம கல்யாணத்தை பண்ணி வச்சிட்டேனே ன்னு புலம்பிட்டிருந்தாங்க.

A மறுபடி கல்யாணம் பண்ணாம தானுண்டு, தன் வேலை உண்டுன்னு இருக்கார். இப்படியே 10 வருஷம் ஓடுது. Aன் மனைவி, A கூட வாழவும் வரல, பிள்ளையவும் Aகிட்ட காமிக்கல. அந்தம்மாவும் மறு கல்யாணம் பண்ணலை. ரெண்டு பேரும் கோர்ட்டு கேசுன்னு அலையல.
முனியப்பன் மருத்துவரில்லையா அவர்கிட்ட வந்ந ஒரு நோயாளி Aன் மனைவி இருக்கும்
எடத்தையும் போன் நம்பரையும் குடுக்கிறார். அந்த நோயாளி Aன் மனைவியோட சொந்தக்காரர். முனியப்பன் Aயின் மனைவியுடன் பேசிப்பாக்குறார். அந்தம்மா பிடி கொடுக்கல, Aகிட்ட போன் நம்பர முனியப்பன் குடுக்கிறார். Aக்கு மறுபடி ஒரு சந்தோஷம். போன் பண்றார்.பையன் லைன்ல வந்தா பேசுவார். வேற யாராவது போனை எடுத்தா, அவங்களே வச்சிருவாங்க. அப்புறம் அதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்க. Lane line cut.

அப்புறம் ஒரு 10 வருஷம் ஓடிருது. நோயாளி சொந்தக்காரர் முனியப்பன்கிட்ட Aயின் பையன்
Engineering படிக்கிறத சொல்வார். 1st Year final year ஆகி பிள்ளையாண்டான் Campus interview ல select ஆயிர்றான்.நோயாளி சொந்தக்காரர் Aன் மனைவியிடம் முனியப்பன் தொடர்பு எண்ணைக் குடுக்கிறார். Aன் மனைவி முனியப்பனிடம் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு A கூட Aயின் பையன் பேசுவான் அப்படிங்கிறாங்க.20 வருஷத்துக்கு மேல ஓடிருச்சு. பையன் பேசப் போறான். அப்படின்ன A மனசுல ஒரு சந்தோஷம். கரெக்டா ஒரு வருஷம் கழிச்சி Aன் மனைவி முனியப்பன்கிட்ட பேசி ஒரு நம்பர் குடுத்து 'இது பையன் நம்பர், அவரை பேசச் சொல்லுங்கன்னு சொன்ன உடனே, முனியப்பன் Aகிட்ட அந்த நம்பரை
குடுத்துர்றார்'

A மகன்கிட்ட பேசப் போறோம்னு சந்தோஷத்துல நம்பரை தட்டுறா¡. பையன் எடுக்கிறான். "22 வருஷமா நானா மேனேஜ் பண்ணியிருக்கேன், ஒங்க கூட பேசினா எனக்கு என்ன Benefit?". Aக்கு சாட்டையால் அடிச்ச மாதிரி ஆயிடுச்சு. முனியப்பன்கிட்ட வந்து அழுதார். ஆறுதல் சொல்லி 1 வாரத்துக்கு தூக்க மாத்திரையும் குடுத்து அனுப்பி விட்டார் முனியப்பன்.
பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களும் இருக்காங்க. அதுல ஒருத்தர்தான் இந்த A. அவர் மனைவி, கணவனை தெருவில விட்டுட்டு, பிள்ளையவும் தகப்பனை பாக்காம வளத்து, இப்படி ஒரு கேள்வி கேக்குற மாதிரி வளத்துருக்காங்க. Aயின் மனைவிய மனநோயாளிங்கிறதா?, திமிர் பிடிச்சவங்கிறதா?. கல் நெஞ்சம்கிறதா?

A நடை சோர்ந்து போய் விரக்தியாய் இருக்கார். ஆனாலும் இன்னும் அவர் பையன் அவர்கிட்ட வருவான்னு நம்பிக்கையை மட்டும் இழக்காம நாட்களை நகட்டிகிட்டு இருக்கார்.
காலம் Aக்கு ஒரு நல்ல தகவல் சொல்லட்டும்.

Sunday, August 22, 2010

உனக்கு ரெண்டு மூஞ்சி - அஷீ

டேய் குட்டிப் பையான்னு முனியப்பனை கூப்பிடும் அஷீக்குட்டி ஒரு ஜோக் குட்டி.

இப்படிதான் ஒரு நாளு அஷீக்குட்டிக்கு முதுகு அரிக்குது. முதுக சொரிஞ்சு விட சிக்குனது முனியப்பன்தான். அஷீக்குட்ட முதுக சொரிஞ்சுவிட்ட முனியப்பன் கைய எடுத்துர்றார். ஒடனே அஷீக்குட்டி "சொரிஞ்சு விட்டுகிட்டே இருடா" ங்கவும் ஒரே சிரிப்பு. சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் school லீவுங்கறதால அஷீ , அமர், முனியப்பன் மூணு பேரும் இளநீ குடிக்க போவாங்க. அஷீ ரொம்ப slow வாத்தான், அதுவும் ரசிச்சு எளநீ குடிக்கிற ஆளு. முனியப்பன் " என்ன ஒரு மணி நேரமா எளநீ குடிக்கிற" அப்படின்னா, "10 மணி நேரம் குடிப்பேன்" ஒரே அடியா போட்ருவார்.ஒரு நாள் லீவு time. அஷீவும், அமரும் ஓடிப்பிடிச்சு வெளையாண்டுக்கிட்டிருக்காங்க.மதிய நேரம். முனியப்பன் ஓய்வு எடுக்கிற நேரம், முனியப்பன் படுத்து கெடக்கிறார். திரு திருன்னு ஓடி வந்த அஷீக்குட்டி முனியப்பன் கூட தானும் படுத்து ஒரு Bed sheet அ எடுத்து முனியப்பனையும் சேத்து பொத்தி படுத்துட்டார். பெறகு "அண்ணன் வருவான், ஒனக்கு ரெண்டு மூஞ்சின்னு அவன்கிட்ட சொல்லிருன்னு சொல்லிட்டார் இப்ப முனியப்பன், அஷீ மூஞ்சி மட்டும் தெரியுது."பின்னாலயே அமர் வந்துட்டார். "அஷீ வந்தானா" "இல்ல" "அப்ப ரெண்டு
மூஞ்சி இருக்கு" "எனக்கு ரெண்டு மூஞ்சி" "ok" அப்படின்னு சொல்லிட்டு அமர் போயிர்றார். அஷீவும் முனியப்பனும் பேசாம படுத்துக் கெடக்காங்க. அமர் திரும்பி வர்றார். அதே கேள்வி, அதே பதில். இதே மாதிரி 2 தடவைக்கு அப்புறம் கட்டில்ல ஏறி பெட்ஷீட்டை தூக்கி அமர் "இந்தா இருக்கான்டா" ன்னு சொல்லவும் , அஷீ எந்திரிச்சு ஓட, அமர் பின்னால வெரட்டிக்கிட்டு ஓட, அவங்க வெளையாட்டு தொடருது. டேய் வாடா போடாங்கிறது அன்பின் மிகுதி.

Saturday, August 14, 2010

ஜீவா - சுடர்

முனியப்பன் படிக்கும் போது +2 கிடையாது. P.U.C தான் டாக்டருக்கு படிக்கனும்கிறதால 10th ,11th அப்புறம் PUCல Science group படிச்சார் முனியப்பன். 3 வருஷமும் Hostel வாழ்க்கை. அப்ப 11th ஸ்கூல்ல, PUC காலேஜ்ல. இந்த வருஷமும் முனியப்பன் கூட படிச்சவர் ராஜசேகர். இப்ப ராஜசேகர் சுரான்னு பேர வச்சுகிட்டு சென்னைல இருக்கார். சுரா ஒரு பத்திரிக்கையாளர் சினிமால PROவா இருக்கார். சுரா எழுத்தாளர் வட்டத்துல இருக்கதால எதையாவது எழுதிகிட்டே இருப்பார்.

திடீர்னு ஒரு நாள் சுரா முனியப்பனை கூப்பிடுறார் cellல. நம்ம கூட படிச்சவரு, ஜீவான்னு
பேரு, பக்கத்துலதான் இருக்கார், நீ பேசுன்னு ஜீவாவ Connect பண்ணிவிடுறார் சுரா. முனியப்பனும், ஜீவாவும் செல் போன்ல பேசுறாங்க .37 வருஷத்துக்கு முன்னால படிச்ச PUC வாழ்க்கை ரெண்டு பேரும் பேசி, நேர்ல சந்திச்சா ஞாபகம் வரும்னு ஒரு முடிவுக்கு வர்றா¡ங்க. ஜீவாவும் ஒரு பத்திரிக்கையாளர். தினமணி தமிழ் நாளிதழ், வார இதழ்ல
அவரோட பங்கு உண்டு. ஜீவா முனியப்பனை நல்லெண்ண தேச்சு Oil bath எடுக்கறத பத்தி பேட்டி எடுக்கணும்கிறார். முனியப்பனும் சரின்னு 3 நாள் time கேட்டார். அந்த 3 நாள்ல முனியப்பன் தன்னோட சொந்த oil bath அனுபவம், குழந்தைகள் சிறப்பு மருத்துவரோட கருத்து, சித்த மருத்துவர் BSMS கருத்து, பரம்பரை சித்த வைத்தியர் கருத்து, சிகை அலங்கார நிபுணர் (Hair dresser) மசாஜ் நிபுணர் கருத்து, எல்லாத்தையும் சேகரிச்சு, மேட்டர் ரெடி பண்ணிர்றார். 13-07-10ல ஜீவா முனியப்பனை தினமணிக்காக பேட்டி எடுக்கிறார். 4 நாள் கழிச்சு ஜீவாகிட்டருந்து போன் "மகளுக்கு Hemoglobin % 4gm, Hospitalல admit பண்ணியிருக்கேன்" அப்படின்னு. முனியப்பன் ஜீவாவ மகள நல்ல பாத்துகிட சொல்லிர்றார். இது 17-07-10.

2 நாள் கழிச்சு முனியப்பன் ஜீவாவுக்கு போன் பண்ணி கேட்குறப்ப ஜீவா சொல்றார். ப்ளட்ல urea லெவல் கூடிருச்சு, டயாலிஸிஸ் பண்றாங்கன்னு.Urea லெவல் 300. நார்மல் 50குள்ளதான் இருக்கனும். முனியப்பனுக்கு புரிஞ்சு போச்சு.ஜீவாவோட மகளுக்கு கிட்னி(ARF) பெய்லியர். முனியப்பன் ஜீவாகிட்ட kidneyதான் மாத்தனும்" அப்படின்னு சொல்லிர்றார். ஒரு 4 நாள் ஜீவாவும் பேசல, முனியப்பனும் பேசலை. முனியப்பனுக்கு மனசுக்குள்ள ஒரே கவ¨ல் நண்பனோட 23 வயசு மகளுக்கு இப்படி ஆயிருச்சேன்னு. நண்பனை தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு தான் முனியப்பன் 4 நாள் பேசலை.

26ந்தேதி முனியப்பன் ஜீவாவை கூப்படுறார்."மக நேத்து இறந்திருச்சின்னு" ஜீவா சொல்லவும் முனியப்பனுக்கு ஷாக். சுராகிட்ட பேசினப்ப, சுரா சொன்ன விஷயங்கள் ரொம்ப கஷ்டமாயிருக்கு. ஜீவாவுக்கு 3 பெண் குழந்தைகள். அதுல மூத்த பெண்ணுதான் இறந்தது.
வயசு 23. படிப்பு M.A,Bed. படிச்சு முடிச்சு வேல கெடைச்சு ஏற்காட்ல
teacher வேல 2 மாசம் பாத்திருக்கு. ஒரு மாச சம்பளம் வாங்கியிருக்கு.

11.07.10ல ஜீவாவும் , அவர் மனைவியும் மகள பாக்க ஏற்காடு போயிருக்கங்க, போட்டோ எல்லாம் மகளோட சேந்து எடுத்திருக்காங்க.11.07.10ல நல்லா
இருந்த பொண்ணு 25.07.10ல No more.

"இறந்த பொண்ண பாத்தேன், சிரிக்சுகிட்டே உயிரோட இருக்க மாதிரி இருந்துச்சு"ன்னு சுரா
சொல்லவும் முனியப்பனுக்கு மனசு கஷ்டமாயிருச்சு. ஜீவாவ நேர்ல பாக்கணும்னு, இன்னம் 2 வேலய சென்னைல சேத்து வச்சுகிட்டு 31-07-10 ல ஜீவா வீட்டுக்கு போறார்
முனியப்பன். வெளிய இரங்கல் போஸ்டர்ல சுடர்னு ஜீவா மக பேர். ஜீவா சொல்ல சொல்ல முனியப்பன் கண்ணு குளமாயிருச்சு. " வாழ வேண்டிய பொண்ணு போயிருச்சு வருத்தப்படாதீங்க. மனச தேத்திக்குங்க" னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியும்?
ஜீவா மகளோட 11-07-10ல எடுத்த போட்டோவ cell phone ல காமிக்கிறார். இன்னம் வேதனையாகுது.

சுடர் - குடும்பச் சுடரா இருக்க வேண்டிய பொண்ணு தெய்வச் சுடராயிட்டா.

Sunday, August 8, 2010

தினமணியில் முனியப்பன்Saturday, August 7, 2010

தினமணியில் முனியப்பன்

8-8-2010 அன்று தினமணியின் துணை இதழில் முனியப்பன் பக்கங்கள் பற்றிய கட்டுரை வெளி வர இருக்கிறது.

Thursday, July 29, 2010

ஒரிஜினல் முனியப்பன்


முனியப்பன்கிற புனை பேர்ல எழுதறது ஒரு கவர்ச்சிக்குத்தான். அப்ப முனியப்பன்!

தென் மாவட்டத்துக்கே உள்ள அடாதுடி நடவடிக்கை, மொரட்டுத்தனம், பேச்சு, மீசை உள்ளவர் ஒரிஜினல்.நம்ம முனியப்பனும் அதே மொரட்டு பகுதிங்கறதால மொரட்டுத்தனத்துல ஊறினவர். ஒரிஜினலும், நம்ம ஆளும் ஒரே பூமிங்கறதால நட்பு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிருச்சு.

ஒரிஜினல் மதுரைல ஒரு பிரபல மூன்றெழுத்து கம்பெனியோட ரப்பர் பேக்டரில வேலை பாத்ததாலயும் மிகுதியான புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதாலயும் சுவாசக் குறைபாடு COPD உள்ளவர். முனியப்பன் சிகரட் குடிக்காதய்யான்னு சொன்னா ஒரிஜினல் கேக்க மாட்டார்.

ஒரிஜினல் அப்பப்ப டூவீலர்லருந்து skid ஆகி கீழ விமுந்து எந்திரிக்கிறவர் . Hero honda பவுச்ல ஒரு துணி ரெடியா இருக்கும்காயத்துக்கு கட்டுப்போடத்தான். ஒரு தடவை திருமங்கலம் போய்ட்டு வர்ற்ப்ப நாய் குறுக்க ஓடுனதுல ஒரிஜினல் கீழ விமுந்து வேற இடத்தல அட்மிட் ஆயிட்டார்.

ஒதட்டுக்கு மேல காயம், மீசைல gap விழுந்துருச்சு. கண்ணாடில பாத்தா பாதி மீசய காணோம். ஒரிஜினல பாக்கப் போன நம்ம முனியப்பன்கிட்ட மீசை இல்லைன்னா தொங்கிருவேன்னு சொல்லி பயமுறுத்திட்டார். முனியப்பன் அவர அந்த ஆஸ்பத்திரிலருந்து கடத்திட்டு தன்னோட எடத்துக்கு கூப்பிட்டு வந்து மீசையை சரிபண்ணி விட்டார். பழயபடி மீசை வந்த ஒடனே கூடக் கொஞ்சம் அட்டாச் ஆயிட்டார் ஒரிஜினல்.

முனியப்பனுக்கு இதயத்துல ஒரு சிக்கல் வந்து அதுக்காக சென்னைல ஒரு opinion வாங்கப் போனார். ஒரிஜினல் முனியப்பனும் கூடவே போனார். ரெண்டு பேரும் சென்னைல ஒரு heart டாக்டர்கிட்ட போனாங்க. மொதல்ல ஒரிஜினல் தன்னோட COPD பிரச்சினைய consult பண்ணார்,
வெளிய போய்ட்டார். நம்ம முனியப்பன் தன்னோட consulting முடிச்சுட்டு வெளிய வந்தார். ஒரிஜினலை காணோம். முனியப்பன் கூட வந்த திருப்பதி, கார் டிரைவர் எல்லாரும் ஒரிஜினலை தேட ஆரம்பிச்சாங்க. Hospitalல எல்லா floor லயும், கீழ பார்க்கிங்லயும் தேடுனாங்க, ஒரிஜினல் சிக்கல. செல் போன்லயும் கெடைக்கல. கடைசில அந்த ஆஸ்பத்திரில ஒரு பெட்ல இருந்து ஒரு கை ஆடுது, என்னன்னு பார்த்தா முனியப்பனை ஒரிஜினல் கைய ஆட்டி கூப்பிடுகிறார். ஒரிஜினலை பெட்ல படுக்கப்போட்டு மூக்கு மேல netilaizer (நெடிலைசர்)அ வச்சு அமுக்கி வச்சதால ஒரிஜினலை கண்டு பிடிக்க முடியலை.

போன எடத்துல பாருங்க , நல்லா போன ஒரிஜினலை படுக்கப் போட்டு தேவையில்லாத வேலைய பாத்துட்டாங்க. அந்த hospital ல நெபுலைசரை பிடுங்கி போட்டுட்டு ஒரிஜினலும் முனியப்பனும் எஸ்கேப் ஆயிட்டங்க.

நம்ம முனியப்பனோட அறிவுரையை கிளீன்ஆ பாலோ பண்ணி சிகரட்ட விட்டுட்டார் ஒரிஜினல் முனியப்பன். இப்ப அவரோட COPD பிரச்சினை நல்லா இருக்கு, நல்லா மூச்சு விடமுடிகிறது அவரால.

தேவையில்லத சிகிச்சைகள் தவறான diognosis நெறய இருக்கு , பின்னால ஒரு பதிவுல வரும்.

Tuesday, July 20, 2010

தொழில் வேற நட்பு வேற

என்னதான் நட்பா close ஆக இருந்தாலும், தொழில்னு வரும் போது, அந்த தொழிலுக்கு உள்ள மரியாதையை குடுக்கனும். அப்பதான் தொழிலும் , நட்பும் நல்லா இருக்கும். இதுல முனியப்பனுக்கு நல்ல Roll Model அவர் அப்பா கு. வேலுசாமிதான்.

கு.வேலுசாமி பரமக்குடில குற்றவியல் நீதிபதியா பணியாற்றினப்ப அவரும், அந்த ஊர்ல வக்கீலா இருந்த உலக நாயகனோட அண்ணனும் சாயங்காலம் கோர்ட் முடிஞ்ச உடனே கோர்ட் காம்பவுண்ட்ல இருந்த டென்னிஸ் மைதானத்துல டென்னிஸ் வெளையாடுவாங்க. மொத நாள் சாயங்காலம் டென்னிஸ் வெளையாண்டிருப்பாங்க. அடுத்த நாள் காலைல கோர்ட்ல ஒலக நாயகன் வக்கீல் அண்ணனுக்கு எதிரான தீர்ப்பும் இருக்கும். நீதிக்கு முன்னால நட்பா?

எதிரான தீர்ப்பு வந்தாலும் அன்னைக்கும் அவங்க ரெண்டு பேரும் சாயங்காலம் டென்னிஸ் வெளையாடுவாங்க.அது அவங்க நட்போட இலக்கணம்.

முனியப்பனுக்கு வெள்ளைச்சாமின்னு ஒரு பள்ளி நண்பர். ரெண்டு பேரும் 2 வருஷம் மதுரைல ஒரு ஸ்கூல்ல வகுப்பு நண்பர்கள். வெள்ளைச்சாமி பின்னால மதுரைல Top Ten அரிசி ஆலை அதிபராயிர்றார். முனியப்பன் மருத்துவம் படிச்சிட்டு தொழில் ரீதியா மதுரைல வந்து செட்டில் ஆகுறார். முனியப்பன் ஸ்கூல்ல ஹாஸ்டல்ல இருந்து படிச்சவர். அதனால மதுரையில ஒண்னும் தெரியாது. முனியப்பன் மதுரைக்கு வந்த உடனே வெள்ளைச்சாமி நண்பனை பார்க்க வந்துர்றார். பழைய பள்ளி வகுப்பு நண்பர்களை அறிமுகப்படுத்தறார். அவங்க எல்லாரும் சேர்ந்து முனிபயப்பனுக்கு மதுரைல உள்ள இண்டு இடுக்கு எல்லாம் அறிமுகப்படுத்தி வைக்கிறாங்க.

முனியப்பன் அரிசி எங்க போய் வாங்குவார்? வெள்ளைச்சாமிகிட்டதான். முனியப்பன் அரிசி வாங்க நேரா போயிடுவார். முனியப்பனுக்கு அரிசிக்கான பில்லை போட்டு ரூபாய் வாங்கிட்டு, அரிசிய வெளிய எடுத்துட்டு போக கேட் பாஸ்ம் போடுவார் வெள்ளை சாமி. அரிசி மில்ல விட்டு அரிசிய கொண்டு போக கேட் பாஸ்.இது வெள்ளைச்சாமியின் சிஸ்டம். முனியப்பனுக்கும் அதேதான்.

தொழில் வேற நட்பு வேற.தொழில்னு வரும் போது என்னதான் நட்பா இருந்தாலும் ரெண்டுக்கும் எடைல ஒரு கோடு இருக்கனும்.முனியப்பனுக்கும் வெள்ளைச்சாமிக்கும் உள்ள நட்பின் வயது, ஜஸ்ட் 39 வருஷம்தான்.

Monday, July 12, 2010

மாதா? முனியப்பனா?

மார்ச் மாதம் பொழுது போக்குத் துறையைச் சேர்ந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும், அவர்கள் தொழில் சம்பந்தமாக மதுரைக்கு வந்தார்கள்.

அந்த ஆணை "ஆ" என்று வைத்து கொள்வோம். முனியப்பனின் நண்பர் ஒருவர் "ஆ" வுக்கு பழக்கமானவர். வேறு விஷயமாக "ஆ" மதுரை வரும் போதல்லாம் "ஆ" வை Airport ல் வரவேற்பது, வழியனுப்புவது முனியப்பனின் நண்பர்.

முனியப்பனின் நண்பருக்கு திடீரென ஒரு ஆசை. "ஆ" வையும் முனியப்பனையும் சந்திக்க வைக்க வேண்டுமென்று, பொழுது போக்குத்துறை சம்பந்தமாக "ஆ", ஒரு பெண் மற்றும் பரிவாரங்களுடன் மதுரைக்கு வந்த தருணத்தை நண்பர் பயன்படுத்தத் திட்டமிட்டார். "ஆ" வும் அந்த பெண்ணும் தங்கியிருந்தது மதுரை சங்கம் ஹோட்டல் அடுத்தடுத்த ரூமில்.

முனியப்பனின் கிளினிக் டைம். மாலை 7 மணி. நண்பரிடமிருந்து அலைபேசி, "கெளம்பி வாங்க "ஆ" வைப் பார்க்கலாம்". முனியப்பனும் கிளம்பி பேயிட்டார்.

சங்கம் ஹோட்டல்ல வெயிட்டிங் ஹால்ல "ஆ" வைப் பார்க்க 20 பேர் இருக்காங்க. "ஆ"வின் மதுரை செயலாளர், முனியப்பனிடமும், நண்பரிடமும் தலைவர் tired ஆ இருக்கார். நாளைக்கு பார்ப்போம்"னு சொல்றார்.

முனியப்பனுக்கு விஷயம் புருஞ்சு போச்சு, வந்த இடத்தில் கிடைத்த வாய்ப்பை "ஆ" பயன்படுத்திக் கொண்டார். "ஆ" முன் நின்ற கேள்வி "மாதா? முனியப்பனா?". முனியப்பனுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்.

Wednesday, July 7, 2010

நாகராஜின் சிரிப்பு. ரிப்போர்ட்டருக்கு நன்றி

அகதி மாணவன் நாகராஜின் பரிதவிப்பு தினத்தந்தி நாளிதழிலும், ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழிலும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இந்த செய்தி தமிழக முதல்வரிடம் எடுத்துச் செல்லப்பட்டது. இலங்கை அகதிகளின் குழந்தைகள் கல்வி நலனுக்காக அவர்களை பொதுப்பட்டியலில் சேர்த்து தமிழக அரசு அரசாணை (GO) பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் அகதி மாணவர்கள் பொறியியல் (BE) படிப்பிற்கான கலந்தாய்வில் (Counselling) கலந்து கொள்ளலாம். அகதி மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருந்தால் அவர்களுக்கான செலவையும் தமிழக அரசே ஏற்கும்.

அகதித் தமிழர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கும் இந்த அரசாணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அகதிகளின் அடிப்படைத் தேவைகளை மட்டும் கவனித்த தமிழக அரசு இப்பொழுது அகதி மாணவர்களின் உயர் கல்வியில் தனது முத்திரையைப் பதித்திருப்பது நல்ல நிகழ்வு. இந்த ஆரம்பம் ஈழத் தமிழர்களிடமும் தொடர வேண்டும்.

தனி ஒரு ஆளாக உயர் அதிகார்கள், அமைச்சர் வரை தன்னுடைய உயர் படிப்புக்காகப் போராடி, அகதி மாணவர்வளுக்கான கல்வி வசதியை கொண்டு
வந்த நாகராஜூக்குத்தான் இந்த பெருமை. இந்த ஆண்டு இதனால் பலன் பெறப் போவது 21 அகதி மாணவர்கள். மருத்துவம் படிக்க நாகராஜ் விரும்பியதால் ஒரு தனியார் தொண்டு நிறுவனம், நாகராஜீக்கான மருத்துவப் படிப்பபுக்கான முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டு SRM மருத்துவக் கல்லூரியில் நாகராஜிக்கு படிப்புக்கு இடம் வாங்கி சேர்த்து விட்டிருக்கிறது. ஆக அகதித் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிப் பிறந்திருக்கிறது.

Tuesday, July 6, 2010

அகதிக்கு இடமில்லை

ஈழத்தில் இடமில்லை
இங்கும் இடமில்லை
அங்கும் அடிமைதான்
இங்கும் மாற்றமில்லை
அந்நிய நாடுகளில் பலர்
அடைக்கலம் புகுந்தார்
வேலை செய்து பிழைத்தாலும்
வேற்று நாட்டில் புறக்கணிக்கப்படவில்லை
இங்கு அகதியாய் வந்தவர்
இன்னும் இன்னலில்
வக்கீலுக்கு படித்து
வழக்குரைக்க முடியவில்லை
பள்ளியில் மதிப்பெண் எடுத்த மாணவ அகதி தள்ளி வைக்கப்படுகிறான்.
தொழில் கல்வி தேர்வில் வாய்ச் சொற்களால்
அரசை வசைபாடும் சீமான்களே, புயல்களே அநத மாணவனுக்கு குரல் குடுத்தீரா?
அகதி நலனுக்கு என்ன போராடினாய்
தஞ்சம் புகுந்தவனை
தவிக்க விடும் அரசியலமைப்பே
தடைகளை தகர்த்து
தவிக்கும் அவனுக்கு இடம் கொடு
தமிழனாய்ப் பிறந்ததில் தவறில்லை
ஈழத்தின் வாரிசாய் பிறந்ததுதான் அவன் தவறு.
அதிலும் பெரும் தவறு
அவன் இங்கே தஞ்சம் புகுந்ததுதான்.

முனியப்பன் குமுறலுக்கு காரணம்
பாதிக்கப்பட்ட அகதியின் பெயர் : நாகராஜ்
வயது : 17
அகதி முகாம் : பாம்பார் அணை, கிருஷ்ணகிரி மாவட்டம்
12th Medical cut off : 197.5
Engineering cut off : 197.83
அதியமான் மேல்நிலைப் பள்ளி
மறுக்கப்பட்ட காரணம் : இலங்கை அகதி
இந்தியாவில் பிறந்தாலும் இந்திய குடியுரிமை கிடையாது

Tuesday, June 29, 2010

சங்கம் மருவிய காதல் ... இன்று

முன்னுரை

சங்க காதல் எப்படி இருந்தது ? இன்றைய காதல் எப்படியிருக்கிறது ? அருமையான தலைப்பு. இந்த ஒப்பீட்டுக்குள் செல்லும் முன், முதலில் காதல் என்றால் என்ன என்பதையும், அடுத்து சங்ககாலத்துக் காதலையும், அதன்பின் இன்றைய காதலையும் அலசி ஆராய்ந்து, பின்னர் சங்க காலத்துக் காதலையும் இன்றைய காதலையும் ஒப்பிட்டு நோக்குவோம்.

வீரமும், காதலும் தான் தமிழனின் அடையாளமாக அன்று முதல் இன்று வரை சொல்லப்படுகிறது. . காதல் காதல் வயப்படாத ஆணோ பெண்ணோ கிடையாது. இது மனிதன் தோன்றிய காலம் முதல் உள்ள மனித இனத்துக்கே உள்ள தனி இயல்பு. காதலித்துப் பின்னர் துணையைத் திருமணம் முடிப்பவர்களும், திருமணம் ஆன பின் தன் துணையைக் காதலிப்பவர்களும் உண்டு.

காதல் என்பது சுருக்கமாக ஆணோ, பெண்ணோ மனத்தால் ஒன்றுவது. இரு மனங்களின் சங்கமம். முதல் பார்வையிலேயே காதல் தோன்றலாம், நீண்ட நாட்களும் ஆகலாம். பொதுவாகக் காதல் எனும் சொல் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அரும்பும் திருமணத்திற்கு முன் உள்ள காதலையே குறிக்கும் சொல்லாக வழக்கத்தில் உள்ளது. ஆணும், பெண்ணும் காதலிக்கும் போது, பாலினங்கள் வேறாக இருப்பதால் சலன உணர்ச்சிகள் அலைபாயும். இதனடிப்படையில் காதற் காமம், காமக் காதல் என்று கூட சொல்லலாம். காதலுக்குப் பின் காமம் நியாயமானது. காமத்துக்காகக் காதல் தவறாக முடிகிறது. . சங்ககாலக் காதல் 1. சில சொற்கள்

சங்ககாலக் காதலில் வரும் சொற்கள் சிலவற்றை, முக்கியமானவைகளை இங்கு பார்ப்போம்.

தலைவன் - காதலன்
தலைவி - காதலி
களவு - காதல் சந்திப்பு
களவொழுகி - காதல் வயப்பட்ட சந்திப்பு
பகல் களவு - காதல் சந்திப்பு பகலில்
இரவு களவு - காதல் சந்திப்பு இரவில்

தலைவன் வரும் வாகனங்கள் - தேர், குதிரை, யானை

தோழி - தலைவியின் தோழி, தலைவனுக்கும் தலைவிக்கும் இடையேயான தகவல் தொடர்பாளர்

புலவி - ஊடல் அம்பல் - கிசுகிசு

அலர் - புரணி

குறியிடம் - தலைவனும், தலைவியும் சந்திக்கும் இடம்

2. கண்ணில் தொடங்கும் காதல் ...

சங்க காலத்துலயும் காதல் கண்ல தான் ஆரம்பிக்குது.

"கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல" - குறள் 1100


"கடைக்கணால் சொல்வான்போல் போக்கி நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்" - கபிலர் - கலித்தொகை

இந்த ரெண்டு பாடல்களின் வரிகளுக்கும் விளக்கம் எழுத வேண்டியதில்லை. காதல் கண்ணில் அரும்புவதை சொல்கின்றது.

தலைவன் கண்ல படற தலைவியைத் தலைவன் வர்ணிக்கிறான் பாருங்க

"துளியிடை மின்னுப்போல் தோன்றி ஒருத்தி ஒளியோடு உருவென்னைக் காட்டி அளியள் என் நெஞ்சாறு கொண்டாள்; அதற்கொண்டும் துஞ்சேன்" - கலித்தொகை 139

தலைவன் மின்னலைப் போலத் தோன்றி தன் நெஞ்சத்தை
அள்ளிக்கொண்டவளைப் பற்றிப்பாடி, அந்த நிகழ்ச்சிக்கப்புறம் அவனுக்கு தூக்கம் வரலையாம்.

"நீயும் தவறிலை; நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமரும் தவறிலர்; நிறை அழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப் பறை அறைந் தல்லது செல்லற்க என்னா இறையே தவறுடையான்..." - கபிலர்

நீயும் தவறிலை. உன்னைத் தெருவிலே சுதந்திரமாகத் திரிய விட்ட சுற்றத்தாரும் தவறுடையவரில்லை. மதங்கொண்ட யானையை நீர்த்துறைக்கு விட்டால் முதலில் பறையறைந்து பின்னர் அனுப்புவார்களே அதுபோல் உன்னையும் பறைசாற்றியே செல்ல விடல் வேண்டும் என்று ஆணையிடாத இந் நாட்டு மன்னனே தவறுடையவன்.

3. தலைவியைச் சுற்றும் தலைவன் ...

ஒரு இளைஞன் தலைவியைச் சுத்திக்கிட்டே இருக்கான். தலைவி தோழியிடம் சொல்றா பாருங்க.

"வல்லான் போல்வதோர் வண்மையும் உடையன்; அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னைச் சொல்லும் சொல், கேட்டீ - சுடர் இழாய் பன்மாணும் நின்இன்றி அமையலேன் யான் என்னும் அவனாயின் அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிதாயின், என் உற்ற பிறர்க்கும்... " - கபிலர் உலகத்தைக் காப்பாற்றக் கூடிய வல்லமை உள்ளவன் போல தோன்றும் ஒருவன் தன் ஆண்மைகளை விட்டு என்னை வந்து சொல்வதைக் கேள். தோழி நீ இன்றி எனக்கு வாழ்க்கை அமையாது என்கிறான். அவள் பேச்சை நம்புவது எல்லாருக்குமே அரிதாக இருப்பது போல் எனக்கும் அவனை நம்புவது எப்படி என்று தெரியவில்லை. தலைவி தொடர்கிறாள்.

"வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவனாயின் ஏழையர் எனப்பலர் கூறும் சொல் பழியாயின் சூழுங்கால் நினைப்பதொன்று அறிகிலேன்" - கபிலர்

தலைவி நான் இனியும் உயிர்வாழலேன் என்பான் அவன், அதற்கு இரங்கி அவனுக்கு அருளலாமோ என்றால் இப்பெண் பேதையாகுபவளோ எனப் பலரும் பழி சொல்வார்களே, ஆராய்ந்தாலும் என்ன நினைப்பதென்று தெரியவில்லை. வலிமையான ஆணைக் காதலிக்கலாமா, வேண்டாமா என்று தலைவி எப்படி எண்ணுகிறாள். செய்வதறியாது நிற்கிறாள்.

தலைவியிடம் தோழி சொல்கிறாள்

"பூணாகம் நோக்கி, இமையான் நமந்த நம் கேண்மை விருப்புற்றவனை எதிர்நின்று நாண் அடப்பெயர்த்தல் நயவர வின்றே" -கபிலர் தோழி, தலைவியிடம் நம்மை விரும்பி வந்தவனை நாணம் தடுத்ததால் கைவிடுவது நல்ல பண்பன்று என்று சொல்கிறாள்.

தலைவனும், தலைவியும் பேச ஆரம்பிச்சிர்றாங்க. அப்பொழுது தோழி தலைவியிடம் "நின்னோடு சூழுங்கால் நீயும் நிலங்கிளையா என்னோடு நிற்றல் எளிதன்றோ மற்றுஅவன் தன்னோடு நின்று விடு" - கபிலர்

நீயும், அவனும் பேசும் போது என்கூட நிலத்தைக் கிளறி விட்டு நிக்கிறது உனக்கு எளிதல்ல. அதனால அவன்கூட நீ நின்னுக்க. என்னய ஆள விடு இது தோழி தான் விலகிக் கொள்வதாக அமைந்த பாடல் வரிகள். 4. காதல் ஆரம்பம் ...

காதல் அரும்பிருச்சு. தலைவி வீட்டுக்குப் போறார் ஒரு தலைவன். போற தலைவன் சும்மா இருப்பானா? தலைவி கையப் பிடிச்சு இழுக்குறான். தலைவி, தோழியிடம் சொல்கிறாள் "அன்னாய் இவனொருவன் செய்ததுகாண் என்றேனோ அன்னை அலறிப் படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கினான் என்றேனா" - கபிலர்

தலைவன் தண்ணீர் கேட்கிறான். தலைவி வீட்டில இருந்து குடிக்க தண்ணீர் கொண்டு வருகிறாள். தலைவி கையப் பிடிச்சு இழுத்த உடனே தலைவி "ஆ அன்னை"ன்னு கத்திர்றா. அன்னையும் வீட்டுக்குள்ளே இருந்து வரவே சமாளிக்கிறா பாருங்க தலைவி..... "இவனுக்கு நீர் விக்கிற்று என்று..." காதல் வந்துருச்சுன்னாலே கண்ணு மண்ணு தெரியாது. "நோக்குவ எல்லாம் அவையே போறல்" - தொல் 1045

எதைப் பாத்தாலும் ஒரே மாதிரி தெரியுதாம்.

"பசியட நிற்றல் கண் துயில் மறுத்தல்" - தொல் 1215


பசியிருக்காது, கண்ல தூக்கம் வராதாம் - தொல்காப்பியம் காலத்திலேயே இது. தோழி தலைவனிடம் கூறினாள்

"வேம்பின் பைங்காய் என் தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனீர்... " - வினைக்கந்தன் (குறுந்தொகை)

நல்லா கசக்குற வேப்பங்காயை தலைவி தந்தால், அதை இனிக்கும் வெல்லக்கட்டி என்கிறீரே தலைவியான காதலி கொடுத்தா எதையும் திம்பான் நம்ம தலைவன் காதலன்.

தலைவிக்காக இப்ப நம்ம தலைவன் உருகுறார். "கோடைத் திங்களும் பனிப்போல் வாடைப் பெரும்பணிக் கென்னள் கொல்" - கழார்க்கீரன் எயிற்றியார் (நற்றிணை)

உடனிருக்கும் போது, கோடை காலத்திலும் குளிரென நடுங்கும் என் காதலி குளிர் மிக்க வாடைக் காலத்தே நான் பிரிந்து போய் விட்டால் என்னாவாள் ?

காதலியோட கண்ணு படற பாட்டைப் பாருங்க

"வாராக்கால் துஞ்சா; வரின் துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண்" - குறள் 1179

தலைவன் வராதபொழுது அவர் எப்போது வருவார் என எதிர்பார்த்துக் கண்கள் துயில்வதில்லை. வந்த பிறகு தலைவனைப் பாத்துக்கிட்டே கண்கள் துயில்வதில்லை. ஆகையினால் கண்கள் தாங்க முடியாத துன்பத்தை உடையனவாயின. அந்தக் காலத்திலும் காதலி பெருமைப்படத் தக்கவளாக இருந்திருக்கிறாள்.

"துன்பம் துணையாக நாடின் அதுவல்லது இன்பமும் உண்டோ எனக்கு" - பாலை பாடிய பெருங்கடுங்கோ துன்பம் வந்தாலும் உன்னோடு சேர்ந்திருக்கும் இன்பம் பெரிது. காதலியின் அன்பு போற்றத்தக்கது. காதலர்கள் என்றாலே நேரம், காலம் அறியாமல் பேசிக் கொண்டிருப்பவர்கள். "தோய்தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால்" - குறுந்தொகை 152

காதலர்களை அவரவர் வீட்டுக்கு செல்லப் பணிக்க வைகறை வருது. காதல்ன்னாலே ரெண்டு மனமும் ஒன்றாகிறது.

" உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு" - குறள் 1121

உடலுடன் உயிருக்கு உள்ள தொடர்பு போல அந்த பெண்ணோடு உள்ளது எனது நட்பு. 5. கிசுகிசு ...

காதலர்கள் எத்தனை நாளைக்குத் தான் யார் கண்லயும் படாம பேச முடியும் ? அடுத்தவங்க பாத்துட்டா கிசுகிசு, புரணி எல்லாம் வரும். ஒரு குமரியைப் பற்றி ஊர் மகளிர் வாய்க்குள் (கிசுகிசு) பேசிக்கொள்வது அம்பல் எனவும், வெளிப்படையாகப் பேசுவது அலர் எனவும் பெயர் பெறும்.

" அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்" - நற்றிணை 143

இது கிசுகிசு.

" அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர் " - அகம் 203

இது புரணி.


6. பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் ...

வாழ்க்கைல அன்னைக்கும் பொருளாதாரம் மிக முக்கியமான அடிப்படையாக இருந்தது. பொருள் ஈட்ட, சம்பாதிக்க தலைவன் வெளியிடங்களுக்குச் சென்று தான் ஆக வேண்டும். அதேபோல் போர் - வீர மரபல்லவா, போர்ப் பாசறையில் பயிற்சிக்கும் போக வேண்டும். போருக்கு அனுப்புவதில் பெருமை கொள்ளும் பெண்கள், பொருள் ஈட்டச் செல்லும் பிரிவால் வருந்துகின்றனர்.

செல்வம் தேடிச் செல்லும் தலைவனைப் பலவாறு கூறி அவன் செல்வதை நிறுத்த முயலும் தோழி சொல்வதைப் பாருங்கள்.

"வானம் துளிமாறு பொழுதின், இவ் வுலகம் போலும் - நின் அளிமாறு பொழுதின் இவ் ஆய் இழை கவினே" - பாலை பாடிய பெருங்கடுங்கோ

மழை பெய்யாது போனால் இவ் வுலகம் என்னாகும்? அது போல உன் அருள்மழை இல்லாத பொழுது இந்த ஆயிழையின் கவினும் கெட்டுவிடுமல்லவா? பொருள் தேடி புறப்படுபவனை நிப்பாட்ட "ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து பொருள்வயிற் பிரிதல் வேண்டும் என்னும்..."

வேறு நாட்டிற்குப் போய் பொருள் தேடப் போறியே அன்னைக்கு

"நின்னிற் பிரியலென் அஞ்சல் ஓம்பு என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே, அவற்றுள் யாவோ வாயின? மாஅன் மகனே..." - பாலை பாடிய பெருங்கடுங்கோ

உன்னை விட்டுப் பிரிய மாட்டேன், பயப்படாதே என்பதையும் நீ தானே சொன்னாய். அதில் எது உண்மை ? தலைவனைக் காணாத தலைவி எப்படி இருப்பாள் ?

"பெயின்நந்தி வறப்பின்சாம் புலத்திற்குப் பெயர்போல யான் செலின்நந்தி செலின் சாம்பம் இவள் என்னும் தகையோதான்" - மருதன் இளநாகன்

மழை பெய்தால் வளமாகி, வறண்டால் வளங்குன்றி அழகு கெட்டு அழியும் விளைநிலம் போல நான் சென்றால் அழகு பெற்று நான் செல்லாவிட்டால் வாடியிருப்பாள் தலைவி. தலைவனுக்கே பிரிவு வந்தால் தலைவியோட நிலைமை தெரியுது பாருங்கள்.


7. தலைவன் திரும்புதல் ...

தலைவன் திரும்பி வந்தவுடன் தலைவியைப் பாருங்கள்

"மன்னிய நோயோடு மருள்கொண்ட மனத்தவள் பன்மலை இறந்தவன் பணிந்து வந்து அடிசேரத் தென்னவன் தெளித்த தேஎம் போல இன்நகை எய்தினள், இழந்த தன் நலனே..." - நல்லுந்துவனார் (கலித்தொகை)

காதலன் வந்ததும் புதுநலன் பெற்ற காதலியைப் பற்றி இன்னொரு பாடல்ல சொல்றார் நல்லுந்துவனார். "காதல் மன்ற அவனை வரக்கண் டாங்கு ஆழ்துயர மெல்லாம் மறந்தனள்..."


8. புலவி ...

தலைவனும் தலைவியும் எப்பவும் ஜாலியாவே உப்பு சப்பு இல்லாம இருக்க முடியுமா ? இருவருக்கிடையே பிணக்கு வருகிறது. அதைப் புலவி அப்படிங்கறார் வள்ளுவர்.

"உப்பமைந்து அற்றால் புலவி அது சிறிது மிக்கற்றால் நீள விடல் ...." - குறள் 1302

புலவியை நீள விடாது உப்பு போல அளவாய் இருத்தல் வேண்டும். இவ்வளவு தூரம் காதல் போய்க்கிட்டிருக்கும் போது தலைவி வீட்டுக்குத் தெரியாமப் போகுமா?

"ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய்" - குறள் 1147

காதல் நோயாகிய பயிரானது இவ்வூர் மகளிர் தூற்றுகின்ற அலர் உரமாகவும், அதனைக் கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற கடுஞ்சொல் நீராகவும் கொண்டு வளர்ந்து வருகிறது. 9. மணமுடித்தல் ...

தலைவனும் தலைவியும் காதலிப்பது தலைவி வீட்டில் தெரியாமல் தலைவிக்கு வேறு இடத்தில் மணம் பேசுகிறார்கள். அது பொறுக்காத தலைவி தோழியிடம் "அருநெறி ஆயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல்இயல் பன்றே" - நல்லுருத்திரனார்

உள்ளத்தால் தலைவனை மணந்ததால் மற்றொருவனுக்கு மணம் முடிக்கப் பேசுவதை இரண்டாவது மணம் என்கிறாள். இப்படி ஒரு சூழ்நிலை உருவான உடனே தோழி தன் பங்கை ஆற்ற வேண்டும் அல்லவா... தலைவன் கிட்ட ஓடுறா.

"தண்ணம் துறைவன் நல்கின் ஒன்நுதல் அரிவை பால்ஆ ரும்மே" - அம்மூவனார் அயலார் திருமணம் பேச வந்துள்ளனர். தலைவி உண்ணா நோன்பிருக்கிறாள். தலைவன் தலையளி செய்தால் தான் தலைவி பாலும் பருகுவாள். இன்னொரு பாட்டுல

"உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு இயங்கொலி நெடுந்திண்தேர் கடவுமதி விரைந்தே" - நல்லுந்துவனார்

காதலியிடம் தோழி "வேங்கை விரிவிடம் நோக்கி வீங்குஇறைப் பனைத்தோள் வரைந்தனன் கொளற்கே" - கபிலர்

தலைவன் வேங்கை பூக்கும் காலத்தை எதிர்பார்க்கின்றான். அப்போது மணம் பேச வருவான் என்கிறாள். தலைவி இவ்வளவு நடக்கும் பொழுது சும்மா இருப்பாளா ?. தன் தாயிடம் தன் நிலையைச் சொல்லுமாறு தோழியைப் பணிக்கிறாள்.

"..................................................நம்நகர் அருங்கடி நீவாமை கூறின் நன்று என நின்னொடு சூழ்வல், தோழி! நயம் புரிந்து இன்னது செய்தாள் இவள் என மன்னா உலகத்து மன்னுவது புரையே" - கபிலர்

அப்படி நீ கூறும்போது உன்னுடைய புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைக்கும். இதுக்கு இடையில் ஒரு நாள் தலைவி காதல் வயப்பட்டிருப்பதை ஒரு நிகழ்ச்சி காட்டிக் கொடுக்கிறது.

"அன்னையும் அத்தனும் இல்லராயாய் நாண அன்னைமுன் வீழ்ந்தன்றப் பூ..."

தலைவன் முல்லைப் பூ கொடுக்கிறான். தலைவி அதைத் தன் தலைமுடிகளுக்கிடையில் வெளியே தெரியாதது போல் சூடிக் கொள்கிறாள். தலைவி வீட்டிற்குள் வந்ததும் தலைக்குள்ளிருக்கும் பூ கீழே விழுந்து தலைவியின் காதலைக் காட்டிக் கொடுக்கிறது.

காதலன் காதலியைத் தவிக்க விடுவானா? "............................................. நம் வள்ளையுள் ஒன்றி நாம் பாட, மறைநின்று கேட்டருளி மென்தோழ் கிழவனும் வந்தனன்; நுந்தையும் மன்றல் வேங்கைக் கீழ் இருந்து மணம் நமந்தனன், அம்மலை கிழவோற்கே"

தோழி, நாம் அவளை வள்ளை பாடினோமே, அதை அவன் மறைந்து கேட்டு விட்டான். உன்னை பெண் கேட்டு வந்தான். உன் தந்தையும் வேங்கை மரத்தின் கீழே அமைத்த மேடையிலே, இருவருக்கும் மணம் செய்து வைக்க இசைந்து விட்டார். கல்யாணம் முடிவாயிருச்சு. அடுத்து 10.யாயும் ஞாயும் யார்ஆ கியரோ ...

" யாயும் ஞாயும் யார்ஆ கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே" - செம்புலப் பெயனீரார் (குறுந்தொகை)

என் தாயும் உன் தாயும் என்ன உறவு உடையவர்? என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினராவர் ? யானும் நீயும் எவ்வழியில் அறிந்து கொண்டோம்? நம் இருவரது காதலால் அன்புடை நெஞ்சங்கள் செம்மண் நிலத்துப் பெய்த மழைநீர் அப்பொழுதே நிறமும் சுவையும் மாறுதல் போல ஒன்றாய்க் கலந்தன.

காதலன் காதலியின் நல்ல சிந்தனையைப் பாருங்கள்

பெண்ணுக்கு கல்யாணம்னா பெற்ற தாய்க்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கும் பாருங்க, "யாயும் அவனே என்னும்; யாமும் வல்லே வருக, வரைந்த நாள் என நல்இறை மெல்விரல் கூப்பி இல்லுறை கடவுட்கு ஓக்குதும் பலியே.." - தொல்கபிலர் (அகநானூறு)

நம் தாயும், அவனே உனக்கு உரிய மணமகன் என்றனள். அவர்கள் திருமணத்திற்குக் குறித்த நாள் விரைவாக வருக என நல்ல இறையினுடைய மெல்லிய விரல்களைக் குவித்து நம் இல்லுறை தெய்வத்திற்குப் பலிக்கடன் செலுத்த வேண்டும். கல்யாண வெட்கம், எவ்வளவு தான் பழகியிருந்தாலும், யாவரும் காணக் கல்யாண நாளிலே தன் காதலனருகே இருக்கும் போது மணப்பெண்ணுக்கு வெட்கம் தானாக வந்து விடுகிறது.

"வதுவை அயர்தல் வேண்டுவள்; ஆங்கும் புதுவை போலும் நின்வரவும் இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே" - கபிலர்

தோழி, தலைவனிடம் புதியவன் போல் வந்து நீ இவள் வீட்டில் பெண் கேட்கும் காட்சியையும், உன்னருகிலிருக்க நாணங் கொண்டவள் போல் இவள் திருமணக் கோலத்திலே நாணி ஒடுங்கியிருக்கும் காட்சியையும் நாம் காண வேண்டும். 11. திருமணத்திற்குப் பின் ...

திருமணம் முடிகிறது. திருமணம் முடிந்த நள்ளிரவு ...

"கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ முயங்கல் விருப்பொடு முகம்புதை திறக்க" - நல்லாவூர்க் கிழார்

திருமண நள்ளிரவில் கோடியாடைக்குள் தன் உடலை வளைத்து முகம் மறைத்து கிடந்து காதலியைப் புறம் தழுவி முகமறைவை எடுத்தான் கணவனான காதலன். "காதற்காமம் காமத்துச் சிறந்தது விருப்போர் ஒத்து மெய்புறு புணர்ச்சி" - குன்றன் பூதனார், பரிபாடல்

பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ன சொல்றார் பாருங்க

"ஒன்றன் கூறு உடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை"

ஒரே உடையை இரண்டாகக் கிழித்து உடுப்பவரே ஆனாலும் மனதினால் ஒன்றாக ஒன்றி பிரியாது வாழ்பவர் வாழ்க்கையே வாழ்க்கை.

தலைவி திருமணம் முடிந்த பிறகு தலைவனிடம் சொல்கிறாள்

"இம்மை மாறி மறுமை ஆயினும் நீஆ கியர்! என் கணவனை! யான்ஆ கியர்! நின் நெஞ்சுநேர் பவளே" - குறுந்தொகை

இப் பிறப்பு நீங்கி வேறு பிறப்பு உண்டாயினும், நீயே பிரியாமல் கணவன் ஆகுக. யான் உன் மனதுக்கேற்ப நடக்கின்ற காதலியாக மறுபிறப்பிலும் அமைவேனாக என்கிறாள்.

தலைவி இப்படின்னா தலைவன் " நல்லோள் கணவன் இவன் என்னப் பல்வோர் கூற .... " - குறுந்தொகை வேண்டும் என விரும்பினான். 12. மழலைச் செல்வம் ...

கல்யாணம் முடிஞ்ச பிறகு மழலைச் செல்வம் "மறியிடைப் படுத்த மாண்பிணை போலப் புதல்வன் நடுவணன் ஆக நன்றும் இனிது மன்றவர் கிடக்கை முனிவின்றி நீனிற வியலகங் கவை இய ஈனும் உம்படும் பெறலருங் குரைத்தே" - முல்லைத் திணை (செவிலிக் கூற்றுப் பத்து)

தலைவன் வீட்டுக்குப் போய் வந்த செவிலி அங்கு தான் கண்டதை தாயிடம் கூறுகிறாள். தன் குட்டியை இடைநிலத்தே கிடக்க விட்டு இருமருங்கும் கிடக்கும் கலைமானும் பிணைமானும். அதுபோல புதல்வனை நடுவில் கிடத்தி இருவரும் படுத்திருக்கின்றனர்.

"மக்கள் மெய் தீண்ட லுடற்கின்பம் மற்றவர் சொற் கேட்டல் இன்பஞ் செவிக்கு" - குறள் 67.

மழலை பிறந்தபின் தலைவனுடைய, தலைவியுடைய கடமையை சொல்றார் பொன்முடியார். " ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; "

பிள்ளையைப் பெற்று வளர்த்து விடுதல் தாயினுடைய கடமை

" சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே "

13. மரணம் ...

வாழ்க்கையின் முடிவு மரணம். முதலில் தலைவன் "ஒற்றழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை இன்னும் வாழ்தல் என்னிதன் பண்பே" - சேரன் மாக்கோதை

ஒளிமிக்க தீப்படுக்கையை சேர்ந்து என் தலைவி உயிர் நீத்து மேலுலகம் சென்றனள். அவள், உயிர் நீப்பவும் இன்னும் நான் உயிர் வாழ்கின்றேன். என்னே இவ் வுலகியற்கை.

"நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலை" - தொல் 1024

14. தலைவியின் புலம்பல் ...

இதுவரை நாம் பார்த்தவை சங்க காலக் காதல் நிகழ்வுகள்

இன்னும் நடைபெறும் நிகழ்வுகள் காதல் ஆரம்பத்தில் இருந்து மரணம் வரை நடக்கும் நிகழ்ச்சிகள். 15. உடன் போக்கு ...

வீட்ல கல்யாணம் பண்ணி வைக்கலேன்னா இப்ப வீட்ட விட்டு ஓடிப்போயிர்றாங்கள்ல, அந் நிகழ்வு சங்க காலத்திலயும் இருக்கு. உடன்போக்கு அப்படிங்கிறாங்க. தலைவன் உடன் செல்லும் தலைவி. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய தமிழறிஞர் திரு. வ.சு. மாணிக்கனார் ரத்தினச் சுருக்கமாக உடன் போக்கைப் பற்றிச் சொல்கிறார். " காதல் நம்பிமார், நங்கைமார் உடன்போக்கும், போயபின் நற்றாய் இரங்கலும்" புலவோர் தம் கற்பனைப் பாய்ச்சலுக்கு வளமான துறைகளாம். 122 பாடல்கள் களவுச் செய்யுட்களில் ஏழில் ஒரு கூறு. இத்துறைப் பாலன இவற்றைப் பாடினோர் இருபத்தெண்மர், அதிகமாக உடன்போக்கைப் பற்றி பாடியவர் கயமனார். இவருக்கு அடுத்து உடன்போக்கை அதிகமாகப் பாடியவர் ஓதலாந்தையார். "மக்கட்போக்கிய வழித் தாயிரங்கு பத்து உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து மறுதரவுப் பத்து - ஐங்குறுணை

16. மடலேறுதல்

சங்ககால காதல்ல தனி இடம், மிகக் கொடூரமானது இது. தலைவி தலைவனுடைய காதலை ஏற்கவில்லை. அப்பொழுது தலைவன் செய்யும் செயல் தான் மடலேறுதல். பணங்கருக்களால் ஆன குதிரையைச் செய்து அதன் மேல் ஏறி அமர்ந்து தலைவியின் ஊர் மன்றத்தில் சபையோர் எள்ளி நகைத்தாலும் தன் காதலை முறையிடுவது. பனங்கருக்களால் ஆன குதிரையில் வருவதால் தலைவன் உடலில் பனகங்கருக்கள் குத்தி குருதி வழிவது நிச்சயம். சமயத்தில் இரத்தம் வழிவது அதிகமானால் தலைவன் இறக்கவும் நேரிடலாம். தலைவன் மடலேறிச் சென்று தலைவி, ஊர்க் காரர்களிடம் சொல்றான் பாருங்க.

"என்கண் இடும்பை அறிஇயினென் நுங்கண் தெருளுற நோக்கித் தெரியுங்கால் இன்ன மருளுறு நோயொடு மம்மர் அகல இருளுறு கூந்தலாள் என்னை அருளுறச் செயின் நுமக் கறனுமாறதுவே" - நல்லந்துவனார்

மடலேறித் தலைவியைக் கைப்பிடித்தவனைப் பாருங்க எப்படி சொல்றான்னு "இளையாரும் ஏதிலவரும் - உளைய யான் உற்றது உசாவும் துணை என்று யான் பாடக் கேட்டு அன்புறு கிளவியாள் அருளிவந்து அளித்தலின் துன்பத்தில் துணையாய மடல்இனி இவன்பெற இன்பத்துள் இடம்படல் என்று இரங்கிணள்- அன்புற்று"

இது மாதிரி காதலன் காதலிக்காக, காதலை அடைய தன்னை வருத்துவதை இன்றைக்குத் திரைப்படங்களில் தான் பார்க்க முடியும்.

. இன்றைய காதல்

டைம்பாஸ் காதல், மனமுதிர்ச்சி இல்லாத காதல், இப்படி நிறைய இருந்தாலும் உண்மையான காதலும் நிறைய இருக்கிறது. காதல் ஆரம்பிக்கிறது வழக்கம் போல என்னைக்கும் போல சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வரும் கண்ணிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.

"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"

இது காதல்ல, சமுதாயத்துல எல்லா பிரிவுல இருக்கவங்களுக்கும், ஒண்ணு தான் - காதலின் ஆரம்பம் கண்ணிலிருந்து.

வாழ்க்கை நிகழ்ச்சிகள் இரண்டிலும் ஒன்றே, இன்றும் சங்க காலத்திலும். கண்ணோடு கண் சேர்ந்த பிறகு புன்னகை. புன்னகையோடு பொதுவாப் பேசிக்கிட்டிருப்பாங்க. அப்புறம் தன்னைப் பத்தி, தன்னோட குடும்பத்தைப் பத்திப் பேசுவாங்க. அடுத்து தன்னோட குறிக்கோள் பத்தி பேச்சு.

அதுக்கப்புறம் தான் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே மேட்டர். ரெண்டு பேருமே நூல் விட்டுப் பாப்பாங்க. சினிமால மாதிரி ஐ லவ் யூல்லாம் கிடையாது. காதல் டேக் ஆப் ஆயிரும். 1. காதல் மலரும் இடங்கள்

காதல் வயப்படும் ஆணும் பெண்ணும் சந்திக்கும் இடங்களில் காதல் மலர்கிறது. அடித்தட்டு மக்கள்

அக்கம்பக்கத்து வீடுகள் அல்லது ஒரே தெருவில் வசிப்பது, ஒரே இடத்தில் பணிபுரிதல் ஆகியவை காதலர்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமைந்து, காதலை மலர வைக்கின்றது. நடுத்தர மக்கள்

அக்கம் பக்கத்து வீடுகள், ஒரே தெருவில் ஏரியாவில் வசிப்பது, ஒரே இடத்தில் பணி, ஒரே பேருந்தில் பயணம், ஒரே ரயிலில் பயணம் இப்படியாக காதல் மலரும் இடங்கள் அமைகிறது.

மேல்தட்டு மக்கள்

இங்கு காதல் மலரும் இடங்கள் ஒன்றாகப் படிப்பது, பொது விழாக்கள், குடும்ப விழாக்கள், இணையதளம், ஒரே இடத்தில் பணி 2. காதல் வளரும் இடங்கள்

ஜீஸ் கடை
வெயில் காலங்களில் காதலர்களின் தாகம் தீர்க்க உதவும் இடம். உட்கார இட வசதி இருந்தா, ஜீஸைக் குடிச்சுக்கிட்டு பேசிக்கிட்டே இருப்பாங்க. இளநீர் கடை

வெயில் காலத்துல இளநீரும் உண்டு. இளநீர உறிஞ்சிகிட்டே பேசிகிட்டே இருப்பாங்க.

ஐஸ் கிரீம் பார்லர்

காதலர்களுக்காக உருவான ஸ்பெஷலான இடம். பேசுறதுக்கு வசதியா, குறைவான வெளிச்சம் உள்ள ஐஸ் கிரீம் பார்லர்கள் அதிகம். கால்களோடு கால்கள் உரசிய நிலையில், கைகள் உரசிய நிலையில் காதலர்களை இங்கு காணலாம். சாலைகள்

சாலை ஓரங்களில் பேசிக்கொண்டே நடந்து செல்லும் காதலர்கள் அதிகம். ரெண்டு பேருமே ஆளுக்கொரு சைக்கிளை உருட்டிக்கிட்டுப் போகலாம். ஒருத்தர் சைக்கிளை உருட்டிக்கிட்டே பேச இன்னொருத்தர் நடந்துகிட்டே பேச, காதல் வளர்கிறது. ரோட்டோரத்துல சைக்கிளோ, டூ வீலரோ நிப்பாட்டி பேச ஆரம்பிச்சிட்டாங்கன்னா காதல் வலுப்பெறுதுன்னு அர்த்தம்.

உணவு விடுதிகள்

ஹோட்டல்ல சாப்பிடுற அளவுக்கு வந்துட்டாங்கன்னா, காதல்ல அடுத்த பரிணாமத்தைத் தொட்டுட்டாங்கன்னு எடுத்துக்கலாம். குளிரூட்டப்பட்ட அறை, மெல்லிய இசை, குறைந்த வெளிச்சம், மெதுவான பேச்சு, கொஞ்ச சாப்பாட்டை சாப்பிட அதிக நேரம் எடுத்துக் கொள்வது. கை, கால்கள் உரசல் அதிகமிருக்காது. படிக்கட்டுகள்

இங்கு வளரும் காதல் பொதுவாகப் பணிபுரியும் இடத்தில், கொஞ்சம் தள்ளி நின்றே பேசுவார்கள். பேசுகின்ற நேரமும் அளவாக இருக்கும். மர நிழல் இது படிப்பவர்கள், வேலை ஒரே இடத்தில் பார்ப்பவர்கள், அருகில் உள்ள மர நிழலில் பேசிக் கொண்டிருப்பது அதிகமாக நடைபெறும் நிகழ்ச்சியாகும். மரத்தடி நிழலில் காதலுக்கு கட்டமைப்பு செய்கிறது என்றால் அது மிகையல்ல. காதலுக்கு அச்சாரம் போடுவதே மர நிழலில் நடக்கும் பேச்சு வார்த்தைகள் தான்.

கோவில் காதல் ஆரம்பித்தவுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அல்லவா காதலிக்கு பூ உண்டு. சாமிக்கு அர்ச்சனை முடிந்து சாமி கும்பிட்டவுடன் கோயிலில் உட்கார வேண்டுமல்லவா, கோவிலில் வெளிப் பிரகாரத்தில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து சிறிது நேரம் பேச்சு. இந்தக் காதல் திருமணத்தில் முடிய வாய்ப்பு அதிகம். வேலை பார்க்கும் இடங்கள்

இங்கு அறிமுகம் ஆவார்கள், காதல் பூக்கும் இடம் என்று கூடச் சொல்லலாம். இங்கு அதிகம் பேச மாட்டார்கள். ஒருத்தரை ஒருத்தர் அதிகம் கண்டு கொள்ள மாட்டார்கள். ஏன் ? தெரியாதது போல் கூட இருப்பார்கள். காதல் வளர்வது வேலை பார்க்கும் இடத்துக்கு வெளியே தான். வேலை பார்க்கும் இடத்தில் தெரியாத மாதிரி நடிப்பதே ஒரு வகைக் காதல் தான்.

நூலகம் இங்கு வளர்வது கல்லூரிக் காதல், படிப்பார்கள். தன் துணைக்கான பாடக் குறிப்புகளை எடுத்துத் தருவார்கள். இங்கு உரசலுக்குக் கூட தடா. சினிமா தியேட்டர்

காதலர்கள் படம் பார்க்கச் சென்றாலே காமத்தைச் சுவைக்கத்தான். இப்ப சினிமா தியேட்டர்கள்ல கூட்டமே கிடையாது. அருகருகே அமர்ந்து படம் பார்க்கும் காதலர்களின் சேட்டைகள் சமயத்தில் அருவருப்பானவை. பூங்கா இங்கும் காமக்கூத்து தான்.

கடற்கரை

உண்மையான காதல் ஜோடிகளும் வரும் இடம். உரசினால் போல் அல்லது சிறிது விலகி இருப்பார்கள். காமக் காதல் ஜோடிகள் அரவணைத்தவாறு சில்லறை சேட்டைகளில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். சுற்றுலா தலங்கள்

சுற்றுலா தலங்களில் கார் வசதி உள்ள காதல் ஜோடிகள் ரூம் போட்டு காதலை, காமத்தை அனுபவிக்கிறார்கள். பிக்னிக் இடங்களில் பப்ளிக்காக அரவணைத்து, விதவிதமான ஸ்டில்களில் காதலர்களைக் காணலாம். திரைப்பட இயக்குநர்கள், கேமராமேன் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

பேருந்து நிறுத்தங்கள்

இது கல்லூரி, கிராமத்துக் காதல், வேலை பார்ப்போருடைய சந்திப்பு இடம். வெளியூர் நகரத்துக்குள்ளிருந்து கல்லூரிக்குச் செல்வோர், கிராமத்திலிருந்து படிக்க, வேலை பார்க்க பக்கத்து ஊர்களுக்குச் செல்வோர் , வேலை பார்ப்பவர்கள் அதிகம் பேர். அயலூர்களில் வேலை பார்ப்பது ஆகியன பேருந்து நிறுத்தங்களை காதல் வளரும் இடமாக மாற்றுகின்றன. குறைவான பேச்சு, உரசல் இல்லாமை ஆகியன இங்கு. 3. காதல் வளரும் விதம் ... அடித்தட்டு மக்கள்

மல்லிகைப் பூ, பிச்சிப் பூ தான் மொதல்ல. பிறகு வளையல், தோடு (கவரிங் தான்). காதலிக்குப் பிறகு வாட்ச், செருப்பு, காதல் உறுதியான பிறகு உடைகள், ஹோட்டலில் சாப்பாடு, காதலன் செலவு தான். கல்லூரிக் காதல்

கண்களின் பார்வை, புன்னகை, பாடப் புத்தகம், நோட்டுகள் பரிமாற்றங்கள், சாலை ஓர நடை, சன்னமான பேச்சு, ஹோட்டலில் லைட் டிபன், ஜூஸ், அபூர்வமாக கோயிலில் சாமி தரிசனம், சின்ன பரிசு, இங்க ரெண்டு பேருமே செலவு பண்ணுவாங்க.

வேலை பார்ப்போர் இன்னைக்குப் பாத்தீங்கன்னா கழுத்துல அடையாள அட்டையோட வேலை பாக்குற ஆணும் பெண்ணும் அதிகம். இவங்களோட காதல் ஐஸ் கிரீம் பார்லர், ஹோட்டல்ல குளிரூட்டப்பட்ட அறையில சாப்பாடு, பைக்ல நெருக்கமான சின்ன சின்ன சில்மிஷங்களோட ரவுண்டு, செருப்பு & சுடிதார் பரிசு. இங்க பொதுவா காதலனோட செலவு தான். சினிமா கண்டிப்பா உண்டு. கூட்டமில்லாத படங்கள். இங்க தழுவல், உரசல் அதிகம். காம சேட்டைகள் அதிகம், கைபேசி உபயோகம் அதிகம்.

மேல்தட்டு மக்கள்

காதல் வயப்பட எடுக்கும் நாட்கள் மற்ற தரப்பினரை விட அதிகம். முதலில் ஒருவரை ஒருவர் உணர்ந்து பிறகு ஆரம்பம். ஹோட்டல், டிஸ்கோ, வெளியூர்ப் பயணங்கள், பரிசுகள் எனத் தூள் கிளப்பும் இவர்களிடம் எல்லை மீறல் அதிகம். காதல் முறிந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். 4. புன்னகை ....

கண்களுக்கு அடுத்த காதல் பரிமாற்றம் புன்னகை தான். காதலன் பேச காதலியோட சிரிப்பும், காதலி பேச காதலனோட சிரிப்பும் பார்க்கக் கண் கோடி வேண்டும். எதுக்கு சிரிக்கிறாங்கன்னு அவங்களுக்குத் தான் தெரியும். எதிலும் சிரிப்பு, எங்கும் சிரிப்பு. சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாள் என்ற பாடலையும், இந்தப் புன்னகை என்ன விலை ? என்ற பாடலையும் இங்கு நினைவு கூறலாம். சிரிப்பதற்குக் கிடைக்கும் நேரங்கள் வாழ்க்கையில் மிகக் குறைவு. அதிலும் மெல்லிய சிரிப்பான புன்னகை மிக அபூர்வம். அந்த புன்னகை பூத்திருப்பது காதலர்களிடையே தான். 5. கைபேசி (செல் போன்) ...

கைபேசியின் பங்கு இன்றைய காதல்ல மிக முக்கியமானது. நேரடியாகப் பேச முடிந்த நேரம் தவிர மீதி நேரம் பேசுவதற்குக் கைபேசி. பேசுவது மட்டுமல்ல. கைபேசியில் குறுந்தகவல் வேறு. குட் மார்னிங், குட் நைட் போக காதல் வரிகள், சிறு காதல் கவிதைகள், படங்கள் குறுந்தகவலில் காதலை வளர்க்கின்றன.

கைபேசியில் பேச கட்டணம் செலுத்த வேண்டுமல்லவா. ரீசார்ஜ், டாப்அப் பண்ணுவது அனேகமாகக் காதலன் தான். பேசும் நேரம் பொதுவாக மாலை 7 மணியிலிருந்து இரவு 11 மணி. நிற்காமல் 30 நிமிடமாவது பேசுவார்கள். தன்னை மறந்த நிலையில் பேசும் அவர்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள். பேசுவதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் மொட்டை மாடி, சிட் அவுட், அறையில் கதவைப் பூட்டிக் கொண்டு பேசுவது, பாத்ரூமில் பேசுவது, வீட்டுக்குத் தெரியாமல் நடக்கும் நிகழ்ச்சிகள்.

மொட்டை மாடி, சிட் அவுட் பேச்சு பொதுவாக வீட்டில் உள்ளவர்கள் அறிய நடப்பது, நண்பிகளுடன் பேசுவதாக வீட்டில் நினைத்துக் கொள்வார்கள். பகலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கைபேசியில் பேச்சுத்தான். பகலில் பேசும் நேரம் குறைவு. கைபேசியில் என்ன பேசப் போகிறீர்கள் ? வழக்கமான வழிதல், உம்மாக்கள், தங்களின் இன்றைய & அடுத்த நாள் நிகழ்ச்சிகள், காதலனும், காதலியும் தங்களின் எதிர்காலம் பற்றிய பேச்சுக்களும் நடக்கும். அடுத்து சந்திக்க இருக்கும் இடங்கள்.

காதல் அவசரங்களில் பயன்படும் மிக அற்புதமான சாதனம் கைபேசி தான். திடீர்னு இரண்டு பேருக்கும் நேரடியா பேச வாய்ப்பு கிடைக்கும். திடீர்னு ஒரு புரோக்ராம் மனசுல உதிக்கும், அப்ப பொதுவா கைபேசி காதலர் இருவரையும் இணைக்கப் பிறந்த தகவல் தொடர்பு சாதனம்.

மிஸ்டு கால், வைப்ரேஷன் மோட் இதெல்லாம் நீ பேச வாய்ப்பு இருக்கிறதா என்பதற்கான அழைப்புகள்.

வீட்டை விட்டு ஓடிப் போறாங்க பாருங்க, அவங்களுக்கு முக்கியமான உதவியே கைபேசி தான். சங்க காலத்துல காதலுக்கு தோழி, இந்த காலத்துல கைபேசி.

6. இரு சக்கர வாகனம் (டூ வீலர்) ...

காதல்ல இன்றியமையாதது. ஒரு இடத்துல இருந்து பேசுவதற்கு நல்லா இருக்க இடத்துக்கு காதலியைக் கூப்பிட்டுச் செல்வதற்கு. ரெண்டு பேரும் இதுல போகும் போது காதலர்கள் சாகசங்கள் கௌப்பிடுவானுங்க.

பைக்ல போகும் போது ரெண்டு பேருக்கும் இடையில் இடைவெளி என்பது இருக்காது. காதலன் காதுல காதலி பேசிக்கிட்டே இருக்க, அவளோட கை காதலனை வளைச்சு இறுக்கி ஒரு ஆனந்தத்தை உண்டு பண்ண, காதலன் அந்த சுகத்தை அனுபவிச்சிகிட்டே இருசக்கர வாகனத்தை செலுத்துவதை எல்லோரும் பார்க்கலாம். காமக்காதல் பண்றவங்க ஊருக்கு ஒதுக்குப்புறமா பைக்ல போவாங்க. அப்புறம் பைக் ரோட்ல ஒரு ஓரமா நிக்கும். இவங்க ரெண்டு பேரும் காணாமப் போயிடுவாங்க. 7. காதல் பரிசுகள் ...

பிறந்த நாள் பரிசுகள், காதலர் தின பரிசுகள் முக்கியமானவை. சாவிக்கான செயின்ல கண்டிப்பா காதல் சின்னம் இருக்கும். கடிகாரம், கைபேசி வாங்குவாங்க. காதலன் வீட்டு விசேஷத்துக்கு காதலியும், காதலன் வீட்டு விசேஷத்துக்கு காதலியும் பரிசுப் பொருட்களோடு செல்வாங்க.

மோதிரம், கழுத்துக்கு தங்க செயின், கைக்கு பிரேஸ்லெட் எல்லாம் கொஞ்சம் வசதியான காதல்.

சுடிதார் பரிசாக, சேலை பரிசாக காதலிக்கு காதலன் வழங்குவது உண்டு. பரிசாகக் கொடுக்கக் கூடாது பேனா மற்றும் கர்சீப். 8. காதல் முத்திரைகள் ...

காதலனோட பேரை, காதலியோட பேரை வகுப்பறை பெஞ்ச்சுகளில் செதுக்குவது, மரங்களில் செதுக்குவது, சுற்றுலா தலங்களில் செதுக்குவது கண்டிப்பாக உண்டு. தன்னோட நெஞ்சில் காதலன் பேரை பச்சை குத்துறவங்க இருக்காங்க. இந்தக் காதல் கண்டிப்பா தோல்வில முடியுது. காதலன் தன்னோட நெஞ்சுல காதலி பேரை குத்தியிருந்தா காதல் வெற்றிக்கு 50-50 வாய்ப்பு.

முன்கைல காதலனோட பேரையோ, காதலியோட பேரையோ பச்சை குத்தியாச்சுன்னா காதல் வெற்றி உறுதி, கடைசி வரைக்கும் நீடிக்கும், நடுவுல பிரேக் ஆகாது. 9. தோழிகள், நண்பர்கள் ...

தோழிகள், நண்பர்கள் இல்லாம காதல் எப்படி வளரும் ? காதல் ஆரம்பிக்கும் போது வர்ற இவங்க காதல் கல்யாணத்துல முடியும் போது மறுபடி வருவாங்க. இதெல்லாம் கல்லூரி மற்றும் கழுத்துல அடையாள அட்டை தொங்க விட்டுக்கிட்டு வேலை பாக்குறாங்கள்ல அங்க தான்.

மத்த காதல்லாம் தோழிகள், நண்பர்கள் இல்லாமத்தான் வளருது. 10. கிராமத்துக் காதல் ...

கிராமத்துக் காதல் பொதுவா வலுவானது. இன்னும் சென்டிமென்ட் உள்ளது. கிராமக் காதல் காதலிச்ச ஆளை கைவிடக் கூடாதுங்கறது இங்க கண்டிப்பான விஷயம். காதல் பொதுவா கல்யாணத்துல முடியாது. கல்யாணம் முடிய வாய்ப்பு இல்லைன்னா தோல்வியத் தாங்கிக்கிட்டு வாழ இவங்களால முடியாது. தற்கொலை வாய்ப்புகள் அதிகம்.

11. காமக் காதல் ...

இன்றைய காதல் பொய்யோ என்று தோன்றக்காரணம் இந்தக் காமக் காதல் காரர்களால் தான். காதல்ங்கிற பேர்ல காமத்தைத் தணிச்சுக்கிறவங்க இவங்க. ஆண், பெண் ரெண்டு பேருக்குமே இது பொது. சின்னச் சின்ன பரிசுகள், ஹோட்டல் சாப்பாடு அப்புறம் காமம் தணித்தல்.

கொஞ்சம் சலிப்பு ஏற்பட்ட உடனே அடுத்த இணையைத் தேடிக் கவர்தல் இவங்களுக்கு உள்ள தனித்திறமை. இவங்க கொள்கையே ஒண்ணு போனா இன்ணொண்ணு. பொதுவா பொருளாதார ஏமாற்று வேலைகள் கண்டிப்பாக உண்டு. 12. ஓடிப்போதல் ...

காதலிக்கிறவங்களோட காதல் வீட்டுக்குத் தெரிஞ்சிரும். வீட்ல கண்டிப்பா காதலை ஏத்துக்கிட மாட்டாங்க, அதனால காதலனும் காதலியும் சேர்ந்து ஓடிப்போவது அதிகம். இப்படிப் போறவங்க நண்பர்கள் புடை சூழ பதிவு அலுவலகத்துல தங்களுடைய திருமணத்தைப் பதிவு செஞ்சுக்கிறாங்க. காவல் நிலையத்துக்கும் போய் காவல் ஆய்வாளர் முன்னிலையில் மாலைய மாத்திக்கிறவங்களும் உண்டு. இப்ப ஒரு பத்து வருஷமா எதாவது ஒரு வீட்ல ஓடிப்போற காதலை ஏத்துக்கிறாங்க. அவங்க ஓடிப்போற ஜோடிக்கு கோயில்ல அல்லது வீட்ல ரொம்ப எளிமையா கல்யாணத்தை முடிச்சு வச்சிர்றாங்க. 13. காதல் திருமணம் ...

காதலர்களா பதிவு அலுவலகத்தில் பதிந்து பதிவாளர், நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வது - ஒரு வகை. காதலன், காதலி - இரு வீட்டுப் பெற்றோரும் சேர்ந்து நின்று காதலர்கள் திருமணத்தை நடத்தி வைப்பது - ஒருவகை. இதில் பத்திரிக்கை அடித்துப் பலரை அழைப்பது ஒருவகை. கோவிலில் மணமுடித்து வைப்பவர்கள் இரண்டாம் வகை.

காதலன், காதலி இருவரில் ஒரு வீட்டார் நின்று நடத்தி வைக்கும் திருமணம் அடுத்த வகை. 14. காதல் திருமணமான தம்பதிகள் ...

இவர்கள் வாழ்க்கை குதூகலமானது, வாழ்க்கையில் தொழிலில் சாதிக்கிறார்கள், பிரகாசிக்கிறார்கள். இவர்கள் இருக்குமிடம் சந்தோஷமாகவும் இருக்கிறது.

வாழ்க்கையைச் சரியாகத் திட்டமிட்டு சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள். 15. காவல் நிலையம் ...


வீட்ல கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்கன்னு உறுதியான உடனே காதலர்கள் வீட்டில் இருந்து கிளம்பி நேரா போறது காவல் நிலையம் தான், பாதுகாப்பு வேணும்ல.

அதுலயும் பாருங்க, இந்தக் காதல் ஜோடிகள் எப்படித்தான் கண்டு பிடிக்கிறாங்கன்னு தெரியலை, போலீஸ் ஸ்டேஷனுக்கு ராசி வேணுமாம். இந்தக் காவல் நிலையத்துக்குப் போனால் காதலுக்கு பாதுகாப்புன்னு அவங்க நெனக்கிறாங்களா அல்லது காதலை ஆதரிக்கக்கூடிய காவல் ஆய்வாளர் அங்க இருக்காங்களா?

மதுரைல ஒரு காலத்துல திருப்பரங்குன்றம் காவல் நிலையம் ராசியானதா இருந்துச்சு. இப்ப காதலர்களுக்கு ராசியானது மேலூர் காவல் நிலையம். காவல் நிலையத்துக்குப் போற காதல் ஜோடிகளுக்கு ஒரு சிக்கலும் இருக்கு. ரெண்டு தரப்பு பெற்றோரையும் காவல் நிலையத்துக்கு வரவழைச்சு விசாரிப்பாங்க. பெற்றோரைப் பார்த்த உடனே கொஞ்சம் பலவீனமான காதல் பார்ட்டி பல்டி அடிச்சிரும். காதல் துணையை விட்டுட்டு, டாட்டா காண்பித்து விட்டு பெற்றோருடன் சென்று விடும். 100 காதல் திருமணம் காவல் நிலையத்தில் நடத்தி வைத்த காவல்துறை ஆய்வாளர்களும் இருக்கிறார்கள்.

16. காதல் தற்கொலை ...

காதலிப்பவர்கள், வீட்டார் எதிர்ப்பால், காதல் - திருமணத்தில் முடியாது என்பது நிச்சயமானால், வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்ய தைரியம் இல்லாத காரணத்தினால் எடுக்கக் கூடிய மிகவும் கோழைத்தனமான முடிவு. இந்த முடிவை எடுக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை இப்பொழுது மிகவும் குறைந்து விட்டது என்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம்.

17. காதல் முறிவு ...

காதல் வேகமாக வளர்வது போல் காதல் முறிவும் அதிகம். பொதுவாக காதல் முறிவு ஏற்படுவது காதலர்களுக்கிடையே தான். முதலில் தனக்குப் பிடித்தமான காதலனோ அல்லது காதலியின் குடும்பச்சூழல் தெரிந்தவுடன், சரி இது நமக்கு ஒத்து வராது என்று கழன்று கொள்வது. இப்பொழுது தன்னைக் காதலுக்காக வருத்திக் கொள்வது இல்லை. வாழ்க்கைல கஷ்டப்படாம இருக்கணும். இதான் எல்லாருடைய எண்ணம். காதலனும், காதலியும் திருமணத்துக்காக முயற்சி எடுக்கும் பொழுது, அவர்களது வீட்டார் எதிர்ப்பால், வீட்டுக்குப் பயந்து காதலில் தோல்வியைத் தழுவுவது - இது உண்மையான காதல்.

காதலை முறிப்பதில் காதலர்களின் வீட்டாரின் பங்கு முக்கியமானது. தங்கள் குடும்பத்து சூழ்நிலை காதலுக்கு ஒத்து வராது என்று வீட்டார்கள் பிள்ளைய அவர்களுடைய கோணத்தில், எதிர்பார்ப்பில் வளர்த்திருப்பார்கள். பிள்ளை காதலிப்பது அவர்களுடைய திட்டத்துக்கு ஒத்து வராது. எனவே காதலை முறிக்க அனைத்து வேலைகளையும் செய்து காதலுக்குச் சமாதி கட்டி விடுவார்கள். 18. காதல் தோல்வி - பாதிப்புகள் ...

உண்மைக் காதலில் தோல்வி அடைந்த பின்னர், நிதானத்துக்கு வருவதற்கே பலநாள் பிடிக்கும். காதலித்த இருவருக்குமே இதே நிலை தான். பாதிப்பு அதிகம் மனதளவில் தான். காதல் தோல்வியால் உயிரை விடுபவர்கள், உருக்குலைந்து போகிறவர்கள் இப்பொழுது இல்லை.

காதலில் தோல்வி அடைபவர்களும் சிறிது வருந்தி, பிறகு மனத்தைத் தேற்றி அடுத்த வாழ்க்கைக்குத் தங்களை தயார் படுத்திக் கொள்கிறார்கள். பழைய காதலை என்றாவது ஒருநாள் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார்கள். காதல் தோல்வி என்பது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. வருடங்கள் சில வேண்டுமானால் வாழ்க்கையில் வீணாகலாம். 19. காதல் மணமுறிவு ...

மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம் இது. காதல் திருமணம் செய்தபின் நீதிமன்றங்களில் போய் விவாகரத்து பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. முதலில் காதலித்து மணந்து பின்னர் மன முறிவாகி மணமும் முறிவாகிறது. காரணங்கள் பலவாயினும், முதன்மையானது காதலர்கள் கற்பனை செய்த வாழ்க்கை அமையாததே.

20. கள்ளக் காதல் ...

வழக்கமான காதலை விட அதிகரித்து வரும் விஷயம் கள்ளக் காதல், கள்ளக் காதலில் கொலைகள் அதிகம். கள்ளக் காதலுக்கு அடிப்படைக் காரணங்கள் இரண்டே விஷயங்கள் தான். பொருளாதாரம் & காமசுகம்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பவர்களை கொலை செய்யத் தூண்டும் அளவுக்கு வேகம் உள்ள கள்ளக்காதல் மிகவும் வருந்தத் தக்கது. . காதல் சங்ககாலத்திலும், இன்றும் ஓர் ஒப்பீட்டுரை

காதலின் ஆரம்பம் கண்களில் தான் - சங்க காலத்திலும் இன்றும். காதலியைப் பற்றிக் காதலன் நண்பனிடம் வர்ணிப்பது அன்றும் இன்றும் தொடர்கிறது.

காதலனும், காதலியும் காதல் வயப்படுவதை உற்ற நண்பர்கள், தோழிகள் உணர்த்துவது அன்றும் இன்றும் உண்டு. காதலிப்பதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள், பிளஸ் மற்றும் மைனஸ் ஆகியவைகளை காதலிக்குமுன் உற்ற நண்பர்களுடன் விவாதிப்பது இக்காலத்தில் உண்டு. சங்க காலத்தில் கிடையாது.

காதலியை வர்ணிப்பது சங்க காலம், இன்று வர்ணிப்பது அசடு வழிவதாக இருக்கிறது. ஜோக்கடிச்சு காதலியைச் சுத்தி இருக்கும் நண்பர்களைக் கலகலப்பாக வைத்திருப்பது இன்றைய காதல். சங்க காலத்தில் ஜோக்கடிச்சு காதலிக்கிறது பற்றிய குறிப்பு இல்லை.

காதலிக்கிறவங்களுக்கு எதைப் பார்த்தாலும் தன் துணையைப் போல தோன்றுவது அன்றும் இன்றும் உண்டு. அன்றும் காதலிக்க பசி கிடையாது. துயில் கிடையாது. இன்று பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது, பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது.

ஆக காதல் வந்து விட்டாலே பசி, தூக்கம் போய் விடுகிறது.

காதலர் பேச ஆரம்பிச்சு பக்கத்துல இருக்க தோழிகள், நண்பர்கள் அவங்க பேச்சுக்கு, இடையூறா இல்லாம ஒதுங்கிர்றாங்க. அந்தக் காலத்துல தோழி ஒதுங்கிருவா. சங்க காலத்துல தோழி மட்டும் தான் தூது, தோழன் கிடையாது. இன்னைக்கு நண்பர்கள், அதைவிடக் கைபேசி.

"வேம்பிற் பைங்காய் என்தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனீர்..."

இது அன்றைக்கு. இன்று காதல் ஆரம்பத்துல வேணும்னா காதலி முகம் சுழிக்கக் கூடாதுன்னு காதலி குடுக்கறத சாப்பிடுற காதலன் உண்டு. ஆனாலும் உனக்கு என்ன வேணும் அப்படின்னு அவங்க டேஸ்ட்டுக்கு விட்டுர்றாங்க.

காதலனும் காதலியும் தற்காலிகப் பிரிவால் துணை எப்படியிருக்குமோ என்று அன்று உருகியிருக்கிறார்கள். இன்று உருக வாய்ப்பில்லை. உபயம் கைபேசி. ஆனா இன்னைக்கு தூங்கும் போது காதல் துணையை நெனக்காம தூங்க முடியாது. அன்னைக்குப் பேச ஆரம்பிச்சா நேரம் போவது தெரியாமல் பேசிகிட்டு இருந்தாங்க. இன்றைக்கும் அப்படித்தான். நேரடியா பேசுற வாய்ப்பு கம்மியா இருந்தாலும் கைபேசில பேச ஆரம்பிச்சா நேரம் போறது தெரியாது. விடிய விடிய கைபேசில பேசுறவங்களும் உண்டு.

அன்றைக்கும் காதல்னா ஈருடல், ஓருயிர். இன்னைக்கும் அதே தான்.

காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா எப்படியும் தெரிஞ்சவங்க கண்ல பட்டுத்தானே ஆகணும். அன்னைக்கு அலர்வாய் பெண்டிர் & அம்பர் பெண்டிர். இன்னைக்குப் புரணி பேசுறது, கிசுகிசுல்லாம் கிடையாது. யாராவது குடும்ப நண்பர் எங்கயாச்சும் ஜோடியா பாத்துருவாங்க. காதலர் வீட்டுல போட்டுக் குடுத்துருவாங்க. வீட்டுக்குத் தகவல் போயிருச்சுன்னா 50-50 சான்ஸ், காதல் ஜெயிக்கிறதுக்கு. சங்ககாலக் காதல்ல தலைவன் பொருள் ஈட்டப் போயிருவான். தலைவன் பிரிவைத் தாங்க முடியாம தலைவி தவிக்கிறத பல பாடல்கள்ல சொல்றாங்க. இன்றைய காதல்ல காதலன், காதலி ரெண்டு பேருமே பொருள் ஈட்டுறவங்களாத் தான் இருக்காங்க. அதுனால பொருள் ஈட்டப் போய் பிரிவுங்கறது இல்லை. பணி நிமித்தமாக வெளியூர்ல மீட்டிங் எதாவது இருந்தாலும் 2 அல்லது 3 நாள் பிரிவு. அதுவும் கைபேசி இருக்கதால தெரியாது.

தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே உள்ள பிணக்கு அன்றும் இன்றும் உண்டு. பிரிந்திருந்த தலைவனைக் கண்ட தலைவிக்கு வரும் சந்தோஷம் அன்றும் இன்றும் உண்டு. காதலனைப் பாத்த உடனே காதலியிடம் சந்தோஷமான சிரிப்பு. காதல் மணம் பேசுவது சங்ககாலத்திலும் உண்டு. இன்றும் உண்டு. பெற்றோர் சம்மதத்துடன் அன்றும் இன்றும் திருமணம் உண்டு. இன்று காதலிக்கிறாள் என்றவுடன் தன் பெண்ணை வேறு ஒரு ஊருக்கு அனுப்பி ஒளித்து வைத்து தாங்கள் முடிவு செய்யும் மணமகனுக்கு தன் மகளைத் திருமணம் செய்து முடித்து வைக்கும் பெற்றோர் இருக்கிறார்கள்.

"பூங்கோதை இச் செரிக்கப்பட்டாள்" - அகத்துறை. தலைவியை ஒளித்து வைக்கும் குறிப்பு இது ஒன்றைத் தவிர சங்க காலத்தில் வேறு ஒன்றும் தெரியவில்லை. பெற்றோர் நிச்சயித்த திருமணத்தை விரும்பாமல், மணநாளில் அல்லது அதற்கு முதல் நாளில் தன் காதலனுடன் ஓடிப்போகும் நிகழ்ச்சிகள் அதிகம். இதில் பக்க பலம் கைபேசி.

காதல் திருமணம் என்றாலும் கல்யாண மேடையில் காதலியின் வெட்கம் அன்றும் இன்றும் உண்டு. திருமணத்திற்குப் பின் கூடி இன்புற்றாலும், மழலைச் செல்வமும், இணை பிரியாது வாழ்தலும் பிள்ளைகளை நல்ல முறையில் பேர் சொல்லுமாறு வளர்த்தலும் இன்றும் அன்றும் உண்டு.

உடன்போக்கு எனப்படும் வீட்டை விட்டு ஓடிப்போய் மணமுடித்தல் அன்றும் இன்றும் உண்டு. மடலேறுதல் என்னும் சங்க கால நிகழ்வு இப்பொழுது இல்லை. காதலியின் காதலைப் பெற தன்னை வருத்திக் கொள்ளும் காட்சிகள் திரைப்படத்தில் மட்டும் இடம்பெறுகிறது, நிஜ வாழ்க்கையில் அல்ல. அன்றைய காதலில் தழுவுதல் இருந்தது. இன்று தடவல் அதிகம்.

காதலன் வரும் சங்ககால வாகனங்கள் தேர், குதிரை, யானை. இன்று காதலன் பயணிப்பது சைக்கிள், பைக், கார்.

பரிசுகள் இல்லாத காதல் இன்று இல்லை. சங்க காலத்தில் பரிசுகள் கொடுக்க வாய்ப்புகள் இல்லை.

அன்று காதல் தோல்வி இல்லை என்றே சொல்லலாம். இன்று அதிகமான காதல் தோல்வியில் தான் முடிகிறது. மணமுறிவு பற்றிய குறிப்புகள் சங்க காலத்தில் இல்லை. இன்று காதல் முறிவும், காதல் மண முறிவும் உண்டு.

காவல் நிலையத்துக்கு இன்று காதல் பிரச்சனைகள் அதிகம். சங்க காலத்தில் காவல் நிலையமே கிடையாதல்லவா ...! . நிறைவுரை

இந்த ஆய்வுக்கு இது நிறைவுரை. காதலுக்கு நிறைவுரை கிடையாது. காதல் மனித இனம் உள்ளவரை தொடரும், காதலர்கள் காதல்முறைகள் மாறுமே ஒழிய அடிப்படை என்றும் மாறாது. கருத்தொருமித்தல் தான் காதலில் வேண்டும். சங்க காலக் காதலிலும், இன்று உள்ள காதலிலும் இது இருக்கிறது.

இன்றைய காதல் பொய்யானதாகத் தோன்றினாலும் உண்மைக் காதல்

Friday, June 18, 2010

ஆம்பளைக்கும் வெட்கம் வரும் - கருப்பையா

வெட்கம்கிறது பெண்களுக்கான ஒரு சிறப்பம்சம். இலக்கியங்கள்ல, அந்தக் காலத்துல இந்தக் காலத்துல எந்தக் காலத்துலயும் மாறாத ஒரு சிறப்பியல்பு.

ஆம்பளைக்கு வெட்கம் வராதுன்னு யார் சொன்னது?

முனியப்பனின் நெடுநாள் வாடிக்கையாளர் கருப்பையா. அவர் குழந்தைக் குட்டி, அவர் தம்பிகள் குடும்பங்கள் எல்லாம் முனியப்பனிடம் மருத்துவம் பார்பவர்கள்.

கருப்பையாவுக்கு 3 வருஷம் முன்னால முடக்கு வாதம் (RHEUMATODI ARTHRITIS) வந்து படுத்த படுக்கையாயிட்டார். சுத்தி உள்ள ஆட்கள்லாம் அவர் போய்ச் சேர்ந்துடுவார்னு முடிவு பண்ணிட்டாங்க. முனியப்பன் கருப்பையாவ போய்ச் சேர விட்டுருவாரா?

இப்ப கருப்பையாவுக்கு 60 வயசுல ஆம்பளையாட்களுக்கு வர்ற அந்தரங்க பிரச்சனை. முனியப்பன்கிட்ட தன்னோட பிரச்சனையை சொன்னார். முனியப்பன் அவர பரிசோதிக்கிறதுக்காக அடுத்த ரூம்ல ஒக்காரச் சொன்னார். கருப்பையா வள்ளிகிட்ட டாக்டர் என்னைய டெஸ்ட் பண்ண வரப்போறார்னு சொல்றார். வள்ளி கருப்பையா மகள்.

முனியப்பன் கருப்பையா இருக்க ரூமுக்குள்ள போய் கதவ பூட்டிட்டு வேட்டிய அவுருங்கன்னு சொன்ன உடனே, கருப்பையா "அட நீங்க வேற" ன்னு வெட்கப்பட்டார் பாருங்க. அவருக்கு அவ்வளவு சிரிப்பு, வெட்கம். நெடுநாள் பழக்கம். விசுவாசம் வேற. அதான் அந்த வெட்கம்

Monday, June 14, 2010

முனியப்பனின் யானை சோகம்


முனியப்பன் மூணார் போனா காட்டு யானைய பார்க்கப் போவார். மாட்டுப்பட்டி டேம் மேல Echo point, ரெண்டுக்கும் எடைல இருக்க நீர்நிலைல காட்டு யானை தண்ணி குடிக்க வரும். மேஞ்சுகிட்டு இருக்கும். முனியப்பனும் பாதுகாப்பான எடத்துல இருந்து யானை பாத்துட்டு வருவார்.

2008 - செப்டம்பர்ல போனப்ப ஒரு வித்தியாசமான யானை அனுபவம். ஆண் யானை அதுவும் ஒத்த யானை 70 பேர் யானையை பாக்குறாங்க. விசிலடிக்கிர்றான். கார் Horn அடிக்கிறாங்க, அமைதியா இருந்த யானை Disturb ஆகி ஆளை விரட்ட 4 ஸ்டெப் எடுத்து வைக்குது. அஷீ , அமர கூப்பிட்டு போயிருந்த முனியப்பன், பிள்ளைகளை கூப்பிட்டு Car, vanல ஏறி பறந்துர்றாங்க. சனியங்க தொலைஞ்சாங்கன்னு யானை அமைதியாகி, மேய ஆரம்பிச்சிடுது. "ஒத்த யானையும், 70 பேரும்" னு முனியப்பன் தன்னோட பதிவில் போடுறார். இது நடந்தது செப்டம்பர் 2008.

இப்ப 02.05.2010ல அதே யானை echo pointல மேஞ்சுகிட்டருக்கு. மூணார் Tour போனவங்க நெறைய போர் அதை பாக்குறாங்க. யானைய பாத்த ஒடனே சிலருக்கு ஒரு மாதிரி மனநிலை ஆயிருது. விசிலடிக்கிறாங்க, Car, van horn அடிக்கிறாங்க. யானையோட Privacy disturb ஆகுது. இதுல மோசமான பயபுள்ளக யானைய கல்ல விட்டு எறியறாங்க, அதை விட மோசமான 2 பேர் பீர் பாட்டில ஒடைச்சு யானை மேல எறிஞசிருக்காங்க. எவ்வளவு மோசமான காரியம் பாருங்க. அமைதியா இருந்த ஒரு ஜீவனை தொந்தரவு பண்ணிட்டாங்க. அவங்க தொந்தரவு பண்ணினது ஒத்த யானை. அதுவும் ஆண் யானை. யானைக்கு கோபம் வந்து மனுஷனை துவம்சம் பண்ண கெளம்பிடுது. யானைய தொந்தரவு பண்ணினவங்க அங்க நின்னவங்க எல்லாரும் சிட்டா பறந்துர்றாங்க.

Open placeல மேஞ்சுகிட்டிருந்த யானை இப்ப தார் ரோட்டுக்கு வெறியோட வருது. வண்டிய எல்லாம் போட்டுட்டு நம்ம ஆளுக உயிர் தப்பிச்சா போதும்மு ஓடிர்றானுவ. மனுஷன் ஓடிட்டான். இப்ப என்ன செய்றது. யானை யோசிக்குது. அவங்க வந்த Two wheeler, four wheelerஐ வெறி கொண்டு தாக்குது. ஒரு மணி நேரம் வண்டிய எல்லாம் போட்டு ஒடைக்குது. யானையின் வெறிக்கு ஆளான வாகனங்ஙகள் 35. இந்த நிகழ்ச்சிய TVல வேற காட்டியிருக்காங்க. வெறி அடங்கின ஒடனே யானை காட்டுக்குள்ள போயிடுது.மறுநாள் 3ந் தேதி அந்த யானை காட்டுக்குள்ள dead ஆ கெடக்கு.

இப்ப மாட்டுப்பட்டி,echo point, மூணார் யானைய பத்தி பார்ப்பபோம். மாட்டுப்பட்டிங்கிறது Indo swiss Project. மாடு வளக்குறாங்க. அங்க உள்ள கன்னுக்குட்டியே நம்ம மாட்டு சைசுக்கு இருக்கும். இந்த மாட்டு சமாச்சாரத்தால அந்த எடத்த மாட்டுப்பட்டுன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அங்க உள்ள டேமும் மாட்டுப்பட்டி டேம் ஆயிடுச்சு. மாட்டுப்பட்டி டேம்ல Fibre Boatல செம திரில்லிங்கா கூப்பிட்டு போவாங்க.

மாட்டுப்பட்டி பக்கத்துல உள்ள நீர்நிலை. காடுகள், யானைக்கு இருக்க தோதான எடம். பொதுவா யானைகள் எடம் மாறி கூட்டம் கூட்டமா போய்க்கிட்டு இருக்கும் யானை போற வர்ற பாதையை Elephant corridor அப்படிம்பாங்க. ஆனா மாட்டுப்பட்டி யானைகள் வழி தவறின யானைகள். Elephant corrider இந்த யானைகளுக்கு தெரியாது. அதனால அந்த Area தான் அவங்களுக்கு. காட்டுக்குள்ள இருக்க நேரம் தவிர மீதி நேரம் மக்கள் கண்ல படும்..

இப்ப யானை மனிதர்களை பத்தி பார்போம் . யானை பொதுவா மனிதனை ஒண்ணும் செய்யாது. யானை பக்கத்துல வந்தா சும்மா அசையாம அப்படியே நின்னா போதும். யானை அது பாட்டுக்கு போயிடும். 1930ல முனியப்பன் தாத்தா குழந்தை வேலு ஏலக்காய் தோட்டம் உண்டு பண்ணப்ப, யானை பக்கத்துல மேஞ்சுகிட்டிருக்கும், குழந்தை வேலு கொஞ்சம் தள்ளி ஏலக்காய் எடுத்துகிட்டிருப்பாரு.

மாட்டுப்பட்டி Indo swiss பண்னைல வேலை பாக்குற ஆளுகளுக்கு மருத்துவர் வேணும்ல. பண்ணைக்கு மருத்துவர் Dr. IK. ராஜ்குமார், அங்கயே 23 வருஷமா இருக்கார். அந்த campusலயே அவருக்கு குடியிருக்க குவார்ட்டர்ஸ் குடுத்திருக்காங்க. I.K.ராஜ்குமாரும் நம்ம முனியப்பனும் மருத்துவம் படிக்கும் போது Class mates.

டாக்டர் I.k.ராஜ்குமார் மாட்டுப்பட்டி குவார்ட்டர்ஸ்ல தங்கி வேல பாத்து, குடும்பம் நடத்தி, பிள்ளகுட்டி பெத்து வளத்து அங்கயே 25 வருஷத்தை ஓட்டிட்டார். நைட்ல அவர் இருக்க மாட்டுப்பட்டி Indo swiss பண்னைல, யானை கூட்டமா ஒரு விசிட் அடிக்கும் Dr.Tk. ராஜ்குமார் வீட்டை சுத்தி யானைக்கூட்டம் நின்ன இரவுகளும் உண்டு. யானை கூட்டத்துக்குள்ள பகல்ல அவர் நடந்து போன நாட்களும் உண்டு. அவர மாதிரிதான் அந்த Indo swiss பண்ணைல இருக்க மத்த ஆட்களும் யானையோடதான் வாழ்றாங்க இப்ப சமீபமா Indo swiss பண்னை எல்லைய சுத்தி கம்பி வேலி கட்டி, நைட்ல யானை உள்ள வராம இருக்கிறதுக்கு கம்பில Low voltage மின்சாரத்தை பாய்ச்சுறாங்க. அது கூட மாட்டுக்கு வளக்குற புல்லை யானை மேஞ்சுட்டு போறத தடுக்கறதுக்குத்தான்.

ஆக யானைங்கிறத பயப்பட வேண்டிய காட்டு விலங்கு இல்லை. அதைத் தொந்தரவு செய்ற மனுஷனைத் தாக்குமே ஒழிய, யானைங்கிறது அமைதியான ஆத்மா. சங்க காலத்துல இருந்தே யானை மனிதன் கட்டளைக்கு அடி பணிஞ்சு நடக்குது. மதம் பிடிச்ச யானை ஒண்ணுதான் சிக்கல்.


டூரிஸ்ட் போறவங்க வனவிலங்குகளை ரசிக்கனும், சந்தோஷப்படனும். அதை விட்டுட்டு துள்றதும், வக்ர புத்திய காட்டுறதும் தண்டிக்கப்பட வேண்டியது. டூரிஸ்ட்களால் ஒரு யானை மரணத்தை தழுவியிருக்கு. யானையை பீர் பாட்டில விட்டு எறிஞ்சு சந்தோஷப்பட்டிருக்காங்க பாருங்க. இப்ப மிருகம் அவங்கதான.

Friday, June 11, 2010

லைலா புயல் - வள்ளி

முனியப்பன்கிட்ட வேலை பாக்குற வள்ளி இருக்காங்களே வெளி உலகம் தெரியாம வளந்தவங்க இப்ப கல்யாணம் ஆகி வீட்டுக்காரர் டூவீலர்ல மதுரய சுத்துறாங்க. அவங்க சொந்தகாரங்க வீட்டு விசேஷம் - ராமநாதபுரம் மாவட்டத்துல மதுரய விட்டு வெளி மாவட்டத்துக்கு டூவீலர்ல வீட்டுக்காரரோட சந்தோஷமா போறாங்க. போக வேண்டிய ஊருக்கு போற வழில ஜிலு ஜிலுன்னு காத்து, மழை. போன எடத்துல இருட்டாயிடுச்சு, மழை வேற பெய்யுது, "தங்கிட்டு போங்கன்னு சொல்றாங்க". வள்ளி வீட்டுக்காரரோட அங்க தங்கிர்றாங்க. விடிய விடிய காத்து மழை. வள்ளி சந்திக்காத Climate. அடுத்த நாள் அந்த Climate, எடத்த விட்டு பிரிய மனசில்லாம அங்கருந்து கெளம்பி மதுரைக்கு வந்து வேலைக்கும் வந்துர்றாங்க. மதுரைல அணலடிக்குது. வெக்கை தாங்க முடியாம வள்ளி முனியப்பன்கிட்ட, "நீங்கல்லாம் எப்படித்தான் மதுரைல இருக்கீங்களோ அங்கல்லாம் குளு குளுன்னு இருக்கு". ராமநாதபுரத்த பத்தி அவங்களுக்கு ஊட்டி மாதிரி ஒரு எண்ணம் உண்டாயிடுச்சு. அவங்க அனுபவிச்ச Climateஐ ரசிச்சு சொல்றாங்க. முனியப்பனுக்கு சிரிப்பு வராம என்ன செய்யும்?. லைலா புயல் கடலோர மாவட்டங்கள்ல காத்தோட மழைய குடுத்துச்சு. வள்ளி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு போனப்ப லைலா புயலோட எபக்ட் அங்க. அதனால தான்,
புயலடிச்சா மழை பெய்ற ராமநாதபுரத்துல, மழையும் காத்தும். முனியப்பன் ராமநாத புரம், லைலா புயலை வள்ளிக்கிட்ட சொன்னார். மனசுல பட்டத முன்ன பின்ன யோசிக்காம சொல்றதுதான் வள்ளியோட ஸ்டைல்.

Wednesday, May 19, 2010

நெனச்சு கலலைப்படுறியா - அஷீ

முனியப்பனின் அய்யாம்மா (அப்பாவை பெத்த மகராசி) குருவம்மா 7 பிள்ளையை பெத்துட்டு 1939ல இறந்துர்றாங்க. அவங்க மகன் (முனியப்பனோட அப்பா) கு. வேலுசாமி நீதித்துறையில பணியாற்றினதால முனிப்பபனும் பல ஊர்கள்ல படிச்சு வளர்ந்தார். அதனால சொந்தங்களோட உறவாடி வளர முனிப்பனுக்கு வாய்ப்பில்லாம போயிடுச்சு. கால்பரிட்சை, அரைப்பரிட்சை, முழுப்பரிட்சை விடுமுறையில மட்டும் சொந்தங்களை பார்க்க வாய்ப்பு. அதுலயும் மதுரை, M.கல்லுப்பட்டி, போடி, மூணார்னு ஒரு ரவுண்ட் சொந்தங்களை முழுமையா உணர முடியலை.

இதுல முனிப்பனுக்கு ஆச்சியும் (அம்மாவோட அம்மா) கெடையாது. அய்யாம்மா, ஆச்சி அரவணைப்பு இல்லாம வளர்ந்ததால முனியப்பனுக்கு அந்த ஏக்கம் இருந்துச்சு. இப்படியே பலகாலம் ஓடிருச்சு. ஆச்சி போட்டோ இருக்கு, அய்யாம்மா போட்டோ லேது.

அய்யாம்மா நினைவு மனசுல ஒரு ஓரத்துல இருந்ததால அய்யாம்மவோட குல தெய்வத்தை ரெண்டு வருஷத்துக்கு முன்னால பார்க்க போனார் முனியப்பன். தங்கச்சி, மாப்பிள்ளை, அஷீ, அமரை கூப்பிட்டுகிட்டுத்தான். கோவில் கற்குவேல் அய்யனார் கோவில், இடம். திருச்செந்தூர் அருகே காயா மொழி தாண்டி தேரிக்குடியிருப்பு. தெக்கத்தி சீமைல ஒரு துடிப்பான கோவில்.

அய்யாம்மா கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சு. அய்யாம்மா படத்தை தேட ஆரம்பிச்சார் முனியப்பன். 75 வருஷத்துக்கு முன்னால வாழ்ந்தவங்க. அதுலயும் ஒரு கிராமத்துல , படிப்பறிவே இல்லாத நேரத்துல போட்டோ எப்படி? முனியப்பன் சோர்ந்து போயிட்டார்.

அய்யாம்மாவை தேடி முனியப்பன் அலையறதை பாத்துகிட்டே இருக்கார் அஷீக்குட்டி. திடீர்னு ஒரு நாள் அய்யாம்மா போட்டோ ஒரு எடத்துல இருக்குன்னு தகவல். முனியப்பனால சும்மா இருக்க முடியுமா? ஒடனே போய் போட்டோவை லபக்கிட்டு வந்துடறார். தூக்கிட்டு வந்த போட்டோவை ஸ்டுடியோவுல குடுத்து Full Size, Half Size னு எடுக்கிறார்.

அய்யாம்மா போட்டோ நாளைக்கு வந்துரும்னு முனியப்பன் தன்னோட அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருந்தத பார்த்த அஷீக்குட்டி "அய்யாம்மாவ நெனைச்சு கவலைப்படுறியாக்கும்" னு சொல்லிட்டு போய்ட்டார். முனியப்பனுக்கும், அவர் அம்மாவுக்கும் சிரிப்பு தாங்கலை. இந்த விஷயத்தை ஆரம்பத்திலிருந்தே கவனிச்சுகிட்டிருந்த அஷீக்குட்டி தன்னோட கருத்தை எப்படி சொன்னார் பாத்தீங்களா, இப்பல்லாம் சின்னப் பிள்ளைங்க இல்ல, சூப்பர் பிள்ளைங்க.

Tuesday, April 27, 2010

400 ரூபா - Bell's Palsy

மீனாட்சி சுந்தரம் மதுரை TVSல வேல பாத்து ரிட்டயர் ஆயிர்றாரு. அவருக்கு 3 மகன்ங்க. அவர் சம்பாதிச்ச 25 லட்ச ரூபா வீட்டை மகன்க 3 பேருக்கும் எழுதி வச்சுர்றார். மகன்களோட அதே வீட்ல குடியிருக்கார். சாப்பாடு மகன்க வீட்ல.

தமிழக அரசால் மாதாமாதம் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகையான ரூ.400 அவர் காபி செலவுக்கு. திடீர்னு அவருக்கு Bell's Palsy எனும் தலையிலுள்ள நரம்பு தாக்கம் ஆகுது. வாய் கோணிக்கிது, எச்சி ஒழுகுது. ஒரு கண்ணை மூட முடியல.

மகன் 4 நாள் அவரை TVS ஆஸ்பத்திரில கூப்பிட்டுக் கொண்டு போய் 4 கரண்ட் (Faradic Stimulation) வச்சு விடுறார். அதுக்கப்புறம் கூப்பிட்டுப்போக மாட்டேங்கிறார்.ஏன்னா, அவருக்கு வைத்தியத்துக்கான உச்ச வரம்பு ரூ.5000 மட்டும். அப்பனுக்குப் பாத்தா, பிள்ளைகளுக்கு ஒண்ணுன்னா என்ன செய்யறது?

மகன் கைவிட்டாச்சு, மீனாட்சி சுந்தரம் என்ன செய்வார்? முனியப்பன் கிட்ட வர்றார். நெலமைய சொல்றார். முனியப்பன் "பெரிய ஆஸ்பத்திரிக்கு போகலாமில்ல". மீனாட்சி சுந்தரம் அழுக ஆரம்பிச்சுர்றார். பெரிய ஆஸ்பத்திரிக்குப் போக பஸ்ஸூக்கு காசு வேணும்ல, சும்மாவா ஏத்திட்டுப் போவாங்க.

அவரோட நெலமையப் பாருங்க, பெத்த பிள்ளைங்க 3 பேரு, வீடு குடுத்திருக்காரு, சோறு மட்டும் போடுவாங்க, அதோட நிப்பாட்டிக்கணும்.

கலி காலமய்யா .... !

Monday, April 19, 2010

நீங்கதான் சொன்னீங்களாம்ல ...?!!!

முனியப்பனுக்கு நேரும் நோயாளி அனுபவங்கள் வித்தியாசமா இருக்கும்.

20 நாளைக்கு முன்னால ஒரு பாட்டிக்கு வயித்தால ஓடுது. பெரிய இடத்துப் பாட்டி - 80 வயசு. முனியப்பன் வள்ளிய அவங்க வீட்டுக்கு அனுப்பி, வயித்தால நிக்கிறதுக்கு ஊசி போட்டு, மாத்திரை குடுத்து அனுப்பியும் வயித்தால ஓடுது, நிக்கல.

முனியப்பன் பாட்டிய பெட்ல சேத்து ட்ரீட்மெண்ட் பாக்க சொல்றார். பதிலே இல்லை. 4 நாள் கழிச்சு பாட்டிய பாக்க கூப்பிட்டு விடுறாங்க, வள்ளி போய் பாட்டிய பாத்தா Dead.

அப்புறம் ஒருநாள் கழிச்சு அந்த பெரிய இடத்துக்கு போய்ட்டு வர்ற ஆள் ஒருத்தர் ட்ரீட்மெண்டுக்கு வர்றார், அவருக்கான வைத்தியம் முடிஞ்சவுடனே பாட்டிய பத்தி பேசுனார். அப்ப ஒரு குண்டத் தூக்கி போட்டார் பாருங்க 'பாட்டி பொழைக்காது, ட்ரீட்மெண்ட் பாக்காதீங்கன்னு நீங்கதான் சொன்னீங்களாம்ல' அப்படின்னு.

பாட்டிய வைத்தியம் பார்க்க மனசில்லாம, போக விட்டுட்டு அதுக்கு ஒரு சப்பைக்கட்டு. பார்த்தீங்களா கொடுமையை.

Tuesday, April 6, 2010

மொட்டை- லட்சன்

நான் ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா ? - லட்சன்

முனியப்பன் மக்களிடம் வெகு நெருக்கமாகப் பழகக்கூடியவர். வயது வித்தியாசமின்றி அவரது நட்பு வட்டாரம் பரந்தது. அப்படி நெருக்கமானவன் லட்சன் ஆதித்யா. வயது 7.

லட்சன் துறுதுறு பையன். அவனோட தாத்தாவுக்கு Pet. தாத்தா ராமலிங்கமும் லட்சன் மேல் உயிரானவர். 39 வயதான லட்சனின் தந்தை திடீரென ஹார்ட் அட்டாக்கில் உயிரிழக்கிறார். குடும்பத்துக்கே அதிர்ச்சி.

சிறிதுநாள் கழித்து முனியப்பனிடம் ட்ரீட்மெண்டுக்கு வந்த லட்சன் முனியப்பனிடம் சொன்னது நான் "ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா? எங்கப்பா செத்துப்போயிட்டார்"

லட்சனைத் தேற்ற வார்த்தைகள் இல்லாமல் முதுகில் தட்டிக் கொடுத்தார் முனியப்பன்.

Tuesday, March 30, 2010

தோட்டக்காரன் முனியப்பன்

குழந்தைவேலு எம்.கல்லுப்பட்டியில் ஒரு பெரிய விவசாயி. அவர் மகன் நீதிபதி கு.வேலுசாமி. செடி, கொடிகளின் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர். விவசாயக் குடும்பமல்லவா, அந்த வழி வந்த கு.வேலுசாமி மகன் முனியப்பனும் அப்பாவுடன் செடி, கொடி வளர்த்து வந்தவர். தற்சமயம் செடிகள் மட்டும் வளர்க்கிறார்.

முதலில் சைகாஸ் எனப்படும் தென்னை மரக் குடும்பத்தைச் சேர்ந்த செடி. மரமாக வளரக்கூடியது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இலைகள் வரும். சிறிது காஸ்ட்லியான செடி. முதலில் ஒரு இலையுடன் வரும் கன்று அடுத்தடுத்து வளரும் போது இலைகளின் எண்ணிக்கை கூடும்.

தென்னை மாதிரியே குருத்தாக விரியும் இலைகள். இலைகளின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக செடியின் விலையும் அதிகரிக்கும். 100 ரூபாய் விலைக்கு கிடைக்கும் சைகாஸ் கன்று வளர, வளர விலையும் உயர்ந்து 20000 ரூபாய் வரையில் வளர்த்தியைப் பொறுத்துக் கிடைக்கிறது.

முனியப்பனின் சைகாஸ் குருத்துவிட்டு, இலைகளாக விரிவதைப் படம் எடுத்தது அமர். 12 இலைகளுடன் நிற்கும் சைகாஸ் செடி குருத்திலிருந்து இலை விரிவதற்கு எடுத்துக் கொண்ட காலம், ரொம்ப அதிகமில்லை. just 2 மாதங்கள்.
Tuesday, March 16, 2010

மன்னிக்க வேண்டுகிறேன்

கடந்த இரு மாதங்களாக பதிவுகளில் பின்னூட்டம் இடும் முனியப்பனைக் காணோம் என்று தேடும் பதிவுலக நண்பர்களுக்கு மன்னிப்பு வேண்டி ஒரு மடல்

காரணங்கள் சில தான். ஒரு முக்கியமான எழுத்துப்பணி, கணிணிப்பிரச்சினைகள் மோடம் அடாப்டர், நெட் கனெக்ஷனிலும் பிரச்சினைகள். பிழை பொறுத்தருள்வீர் நண்பர்களே!

சிங்கப்பூர் பதிவர்கள் கவனத்திற்கு
மணற்கேணி 2009 என்ற பெயரில் பதிவர்களுக்கான கருத்தாய்வுப் போட்டி நடத்தினீர்கள். ஆகஸ்ட் 15, 2009 என்ற இறுதி நாளை நீட்டித்து செப்டம்பர் 2009 என்று கருத்தாய்வுகள் வந்து சேர கடைசி நாளாக அறிவித்திருந்தீர்கள். முடிவை அறிவித்து விட்டீர்களா நண்பர்களே ? கொஞ்சம் தெரியப்படுத்துங்கள்.

முனியப்பனின் மூன்று கருத்தாய்வுகள் அதில் உண்டு.