Thursday, October 30, 2008

நீங்கள் சந்திக்காத மனிதர்கள்

நேரு
நேருன்னு பேரைப் பாத்த உடனே மறைந்த பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவ நெனச்சுராதீங்க.

இவர் பேர் நேரு வயது 50 ரொம்ப வித்தியாசமான ஆள்

1990 ல எம்.ஏ பி.எட். (ஆங்கிலம்) படிச்சு முடிச்சார். ஒடனே அரசாங்க வேலை கெடைக்குமா? கெடைக்கலை பிரைவேட் ஸ்கூல்லயும் சம்பளம் கம்மி. என்ன செய்றார் பாருங்க. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்துல மதுரைல பஸ் கண்டக்டர் ஆயிர்றார். பஸ்ல ஒடிக்கிடடே வாழ்க்கயை ஓட்டுறார்.

கண்டக்டராயிருந்துகிட்டே பல்வேறு எடங்கள்ல டீச்சர் வேலைக்கு அலையறார். ஒரு எடத்துலயும் கெடைக்கல. அரசாங்க வேலைக்கு ஆங்கில ஆசிரியரா 3 பேரை எடுக்குறாங்க. அதுல எம்ப்ளாய்மெண்ட் சீனியாரிட்டி இல்லாததுனால அப்பவும டீச்சர் வேலை மிஸ்ஸாகுது. ஒரு வழியா 2004ல TRB பரீட்சை எழுதி அதுல செலக்ட் ஆகி 2005ல வாத்தியார் வேலைல சேந்துர்றார்

அவர் வேல பாக்கற இடம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பிளாக்ல மாணிக்கம்பட்டி கிராமத்துல பஞ்சாயத்து யூனியன் ஸ்கூல்ல ஆங்கில ஆசிரியரா வேலை பாக்குறார். பிஆர்சில பத்தாயிரம் ரூபா சம்பளம் வாங்கிகிட்டு கிருந்தவரு தொகுப்புஊதியமா 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஆசிரியர் வேலைக்கு சேந்து இப்ப வழக்கமான சம்பளம் வாங்குறார். 2005ல அரசு வேலைக்கு சேந்ததுனால அரசாங்க ஓய்வூதியம் கெடையாது. (2004ல இருந்து அரசாங்க வேலைக்கு சேர்றவங்களுக்கு அரசு ஓய்வூதியம் கெடையாது. கான்ட்ரிபியூட்டரி ஓய்வூதியம் தான்).

பொருளாதார இழப்பு இருக்கும்போது ஏன் ஆசிரியர் வேலைக்கு சேந்தீங்கன்னு கேட்டா நான் ஆசிரியராறதுக்குன்னு படிச்சேன். நான் கற்ற பாடத்தை பிள்ளைகளுக்கு சொல்லிக்குடுக்கறதுல சந்தோஷப்படுறேன். ஆசிரியர் வேலைல எனக்கு மனசு திருப்தி கெடைக்குதுங்கறார்.

இவர் பேர் கருப்பு. இவரும் அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் தான். படிப்பு எம்.ஏ எம்.பில் எம். எஸ்சி. பி.எட் இவரும் ஆசிரியர் வேலை கெடைக்காம கண்டக்டர் வேலைல சேந்து அரசு ஆசிரியராகணும்னு முயற்சி பண்ணி கிட்டிருக்கார்.

இப்ப TRB வந்திருக்கு கருப்பு என்ன ஆனார்னு தெரியலை.

அரசு ஆசிரியராகனும்ற ஆசைய நிறைவேத்துன திரு.நேருக்கும் ஆசைப்படுற கருப்புவுக்கும் எனது சல்யூட்.

முனியப்பனும் மூணார் யானையும்

முனியப்பன் தாத்தா மூணார்ல சாராயம் வித்த காசுல ஏலக்கா தோட்டம் ஒண்ணு வாங்கிப் போட்டாரு அது இப்ப முனியப்பன் கிட்ட இருக்கு மதுரைல இருந்து வருஷத்துக்கு ஒரு தடவை ஏலத் தோட்டத்த போய் பாத்துட்டு வருவாரு முனியப்பன்.

வரையாடு (Nilgiri Thar)

அவர் தாத்தா சின்ன தாத்தா காலத்துல மூணாறுக்கு பஸ் கெடையாது. நடந்துதான் போகணும். நடந்து போறப்ப யானை பக்கத்துல வரும் ஏலத் தோட்டத்துக்கும் யானை வரும். அதனால முனியப்பன் சின்னப் பிள்ளயா இருக்கப்ப கதை சொல்றப்ப யானைக் கதையும் நெறய சொல்லுவாங்க யானை முனியப்பன் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு.


அதுனால முனியப்பன் மூணார் போனா காட்டு யானைய தேடிப்போய் பாத்துட்டு வருவார்.
2000த்தில மாட்டுப்பட்டி டேம்ல போட்டிங் போனார் முனியப்பன ஒரு கோஷ்டியோட. சாயஙகால நேரம. ஸ்பீட் போட் ஒடடுறவர். யானை அங்க தண்ணி குடிக்குதுன்னு ஒரு எடத்துக்கு கூப்பிட்டு போனார். தூரத்துல யானை தெரியுது. கரைல இருந்து காட்டுக்குள்ள போக மேல ஏற ஆரம்பிச்சிருச்சு போட் யானைய நெருங்க ஆரம்பிச்சது. மொத்தம் 3 யானை ஒரு குட்டி ரெண்டு பெரிசு. முனியப்பன் ஜாலியாய்ட்டாரு. கேமாரவ வச்சு போட்டா எடுக்க ஆரம்பிச்சாரு. ஸ்பீட் போட் கரைய ஒட்டி நின்ன ஒடனே படகு ஓட்டுநர் என்ஜினை ஆப் பண்ணிட்டார். மேல காட்டுக்குள்ள போன யானை திரும்பி நின்னுச்சு. 3 யானையும் சத்தம் போட்டுச்சு பாருங்க போட்ல இருந்த எல்லாரும் கடவுளே காப்பாத்து முருகா காப்பாத்துன்னு கத்த ஆரம்பிச்சாங்க. யானைக்கு கோபம் வந்தா வாலை ஸ்ட்ரெய்ட்டா தூக்கும். 2 யானை வாலை ஸ்ட்ரெய்ட்டா தூக்கிருச்சு. 3 யானையும் மேட்ல இருந்து முனியப்பன் இருந்த போட்டுக்கு இறங்க ஆரம்பிச்சுது.

முனியப்பனை முறைக்கும் காட்டு யானை

எல்லாருக்கும் இருதயம் ஒரு செகன்ட் நின்னுச்சு. படகு ஓட்டுநர் என்ஜினை ஆன் பண்ணி படகை ரிவர்ஸ் எடுத்தார். எல்லாருக்கும் அப்பத்தான் மூச்சு வந்துச்சு யானை வெரட்டின பிறகும் யானை பாக்க போறத முனியப்பன் இன்னும் விடவில்லை.

இந்தியாவும் ஒலிம்பிக்சும்

இந்தியாவும் ஒலிம்பிக்சும்

ஒலிம்பிக்ஸ்ங்கிறது உலக அளவுல 4 வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கிற விளையாட்டு போட்டி. எல்லா நாட்டு விளையாட்டு வீரர்களும் தங்களோட திறமைய நிரூபிக்க வாய்ப்பு உள்ள ஒரு போட்டி

உலகத்தில இரண்டாவது ஜனத்தொகை உள்ள நாடு நமது இந்தியா அப்ப விளையாட்டு போட்டில எங்க இருக்கணும்? டாப்ல எப்படி நம்ம ஆளுக இருப்பாங்க நம்ம கௌரவம் என்னாறது!

இதுவரைக்கும் நடந்த ஒலிம்பிக் போட்டிகள்ல ஒவ்வொரு ஒலிம்பிக்லயும் ஒரே ஒரு பதக்கம்தான் பெற்று வந்தாங்க. ஹெல்சிங்கி ஒலிம்பிக்ல மட்டும் ஹாக்கில தங்கமும் மல்யுத்தத்துல வெண்கலம் என இரண்டு பதக்கங்கள். இப்ப பீஜிங் ஒலிம்பிக்ல அயினவ் பிந்த்ரா தங்கம் சுஷில்குமார் மற்றும் விஜேந்தர் தலா ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை பெற்று சாதித்திருக்கின்றனர். ஒண்ணுல இருந்து மூணு பதக்கம் வாங்கினதுக்கே நம்ம ஆளுகளுக்கு பெருமை தாங்கல

ராஜ்யவர்தன் ரதோர் துப்பாக்கி சுடுறதுல வெள்ளியும், கர்ணம் மல்லேஸ்வரி பளுதூக்குதல்ல வெண்கலமும், டென்னிஸ்ல வெண்கலமும் வாங்கியிருக்காங்க. தனி நபர் பதக்கங்கள் இவ்வளவுதான். ஹாக்கில தான் வரிசையா தங்கப் பதக்கங்கள். யார் கண்ணு பட்டுச்சோ பீஜிங் ஒலிம்பிக்ல விளையாட ஹாக்கி அணி தகுதி பெறவில்லை.

தடகளத்தில ஒலிம்பிக்ல இந்தியா பெற்ற சிறப்பான இடம் மில்கா சிங் (பறக்கும் சீக்கியர்) 100 மீட்டர் ஆண்கள் ஓட்டத்துல 4வது இடமும் இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா 100 மீட்ட பெண்கள் ஓட்டத்துல 4வது இடமும் பெற்றிருக்காங்க.

மொதல்ல பீஜிங்ல துப்பாக்கி சுடுறதுல தங்கம் வென்ற அவினவ் பிந்த்ரா விற்கும் மல்யுத்தத்துல வெண்கலம் பெற்ற சுஷீல் குமாருக்கும் குத்து சண்டையில் வெண்கலம் வென்ற விஜேந்தருக்கம் நமது பாராட்டுக்கள்.
பீஜிங் ஒலிம்பிக்ல உலகத்துல ஜனத்தொகைல பெரிய நாடான சீனா விளையாட்டுலயும் முதல் இடம். ஜனத்தொகைல இரண்டாவது இடத்துல இருக்க நாம எங்கய்யா.

ஏன் இந்த நெலம. நம்மனால சாதிக்க முடியாதா? முடியும் ஆனா முடியாது இப்ப அப்படி இருக்கு

முதல் காரணம் - கிரிக்கெட். காலைல விடிஞ்ச ஒடனே எல்லா ஊர்லயும் இளவட்ட பயலுக பூராம் கிரிக்கெட் வெளையாட கௌம்பிர்ரானுவ. ஞாயிற்றுக்கிழமை பாருங்க 20-30 வயசு குருப் அன்னைக்கு அவனுகளுக்கு லீவாம், Relax பண்ண கிரிக்கெட் மொதல்ல நம்ம பயலுகளுக்கு கிரிக்கெட்ட தவிர வேற விளையாட்டில ஈடுபாடு இல்ல.

ரெண்டாவது. போட்டி & பொறாமை கோஷ்டி. இது வெளையாடுறவங்களுக்கு இடைல உள்ளது. பயிற்சியாளர்கள் நிகழ்ச்சியை நடத்துபவர்களும் இதில வர்றாங்க திறமையானவங்களை வளக்கிறத விட்டுட்டு தனக்கு தெரிஞ்சவங்களை அவங்களுக்கு திறமை இல்லன்னாலும் ஆதரிக்கிறது. இப்படியே போனா எங்க மெடல் வாங்குறது?

மூணாவது காரணம்-அரசியல். ஆட்சிக்கு எப்படி வர்றது கெடைச்ச ஆட்சிய எப்படி தக்க வச்சுக்கிறதுன்னு நெனக்கிறதுக்குத்தான் அரசியல்வாதிகளுக்கு நேரம் இருக்கு. ஒலிம்பிக்ஸாவது புண்ணாக்காவது அட போய்யா.

நாலாவது ஸ்பான்ஸர் எனப்படும் நிதி உதவியாளர்கள் கிரிக்கெட் மேட்ச்ச நடத்த ஸ்பான்ஸர் பண்ணுவாங்க அதில அவங்களுக்கு விளம்பரம். அதுனால அவங்க பொருட்களோட வியாபாரம்.

அம்பானி, டாட்டா, லஷ்மி மிட்டல் இவங்கல்லாம் உலகளவில இந்திய கோடீசுவரர்கள். இவங்களுக்கு எல்லாம் எந்த கம்பெனிய வெலைக்கு வாங்குறது ? எப்படி பணத்தை பலமடங்கா பெருக்குறது ? இதான் அவங்களோட செயல்பாடே இந்தியா ஒலிம்பிக்ஸ்ல நெறய மெடல் வாங்குனா அவங்களுக்கென்ன கெடைக்கும்.

அஞ்சு-நம்ம பொருளாதாரம். இப்படியெல்லாம் இருக்குன்னு தெரியும்ல நீங்களாத்தான் போராடி முன்னுக்கு வந்து ஒங்க தெறமைய காட்டணும். நீங்க நெனக்கிறது சரி தன் கையே தனக்குதவி கிரிக்கெட்டுக்கு 6 ஸ்டம்ப் 1 பேட் ஒரு பால் போதும். மத்த விளையாட்டுக்கு அடிப்படை உபகரணங்கள் பயிற்சியாளர் செலவு இப்படி பெரிய அளவுல செலவழிக்க நம்ம ஆளுகளா முடியாது. ஏன்னா நம்ம பொருளாதாரம் வௌயாட்டுல ஆர்வம் திறமை இருக்கும் பொருளாதார தடையால அவங்களால மேல வரமுடியாது.

இன்னைக்கும் மைதானங்கள்ல கால்ல செருப்பு இல்லாம ஓடுறவங்களை நீங்க பாக்கலாம். அதே மாதிரி போலீஸ் செலக்ஷன்லயும் கால்ல செருப்பு இல்லாம ஓடுறவங்களை பாக்கலாம்.

பி.டி. உஷா பாருங்க உலக தரத்துல ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்துறாங்க. 2012 ஒலிம்பிக்ல தடகளத்தில தங்கம் வாங்கிரலாம்னு சொல்றாங்க.

ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிக்கிறது மிகப் பெரிய சவால். அதுக்காக உழைக்கிறதுக்கு விளையாட்டு வீரர்கள் இருக்காங்க அவங்களை ஊக்குவித்து, ஊக்கமளித்து, பயிற்சியளித்து ஜெயிக்க வைக்க முடியும் அதை யார் பொறுப்பெடுத்து செய்றது?