Wednesday, May 19, 2010

நெனச்சு கலலைப்படுறியா - அஷீ

முனியப்பனின் அய்யாம்மா (அப்பாவை பெத்த மகராசி) குருவம்மா 7 பிள்ளையை பெத்துட்டு 1939ல இறந்துர்றாங்க. அவங்க மகன் (முனியப்பனோட அப்பா) கு. வேலுசாமி நீதித்துறையில பணியாற்றினதால முனிப்பபனும் பல ஊர்கள்ல படிச்சு வளர்ந்தார். அதனால சொந்தங்களோட உறவாடி வளர முனிப்பனுக்கு வாய்ப்பில்லாம போயிடுச்சு. கால்பரிட்சை, அரைப்பரிட்சை, முழுப்பரிட்சை விடுமுறையில மட்டும் சொந்தங்களை பார்க்க வாய்ப்பு. அதுலயும் மதுரை, M.கல்லுப்பட்டி, போடி, மூணார்னு ஒரு ரவுண்ட் சொந்தங்களை முழுமையா உணர முடியலை.

இதுல முனிப்பனுக்கு ஆச்சியும் (அம்மாவோட அம்மா) கெடையாது. அய்யாம்மா, ஆச்சி அரவணைப்பு இல்லாம வளர்ந்ததால முனியப்பனுக்கு அந்த ஏக்கம் இருந்துச்சு. இப்படியே பலகாலம் ஓடிருச்சு. ஆச்சி போட்டோ இருக்கு, அய்யாம்மா போட்டோ லேது.

அய்யாம்மா நினைவு மனசுல ஒரு ஓரத்துல இருந்ததால அய்யாம்மவோட குல தெய்வத்தை ரெண்டு வருஷத்துக்கு முன்னால பார்க்க போனார் முனியப்பன். தங்கச்சி, மாப்பிள்ளை, அஷீ, அமரை கூப்பிட்டுகிட்டுத்தான். கோவில் கற்குவேல் அய்யனார் கோவில், இடம். திருச்செந்தூர் அருகே காயா மொழி தாண்டி தேரிக்குடியிருப்பு. தெக்கத்தி சீமைல ஒரு துடிப்பான கோவில்.

அய்யாம்மா கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சு. அய்யாம்மா படத்தை தேட ஆரம்பிச்சார் முனியப்பன். 75 வருஷத்துக்கு முன்னால வாழ்ந்தவங்க. அதுலயும் ஒரு கிராமத்துல , படிப்பறிவே இல்லாத நேரத்துல போட்டோ எப்படி? முனியப்பன் சோர்ந்து போயிட்டார்.

அய்யாம்மாவை தேடி முனியப்பன் அலையறதை பாத்துகிட்டே இருக்கார் அஷீக்குட்டி. திடீர்னு ஒரு நாள் அய்யாம்மா போட்டோ ஒரு எடத்துல இருக்குன்னு தகவல். முனியப்பனால சும்மா இருக்க முடியுமா? ஒடனே போய் போட்டோவை லபக்கிட்டு வந்துடறார். தூக்கிட்டு வந்த போட்டோவை ஸ்டுடியோவுல குடுத்து Full Size, Half Size னு எடுக்கிறார்.

அய்யாம்மா போட்டோ நாளைக்கு வந்துரும்னு முனியப்பன் தன்னோட அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருந்தத பார்த்த அஷீக்குட்டி "அய்யாம்மாவ நெனைச்சு கவலைப்படுறியாக்கும்" னு சொல்லிட்டு போய்ட்டார். முனியப்பனுக்கும், அவர் அம்மாவுக்கும் சிரிப்பு தாங்கலை. இந்த விஷயத்தை ஆரம்பத்திலிருந்தே கவனிச்சுகிட்டிருந்த அஷீக்குட்டி தன்னோட கருத்தை எப்படி சொன்னார் பாத்தீங்களா, இப்பல்லாம் சின்னப் பிள்ளைங்க இல்ல, சூப்பர் பிள்ளைங்க.