Monday, August 24, 2009

நிர்வாண சாமியார் - முனியப்பன்

முனியப்பன் நெல்லை மருத்துவக் கல்லூரில படிக்கும் போது ஒரு கலக்கல் பார்ட்டி. கலக்கல்லயும் அதிரடிக் கலக்கல் தான். அந்தக் கலக்கல்ல ஒண்ணு தான் நிர்வாண சாமியார்.

Dr. பரதன் குமரப்பா, Dr. திவாகர், Dr. அல்போன்ஸ் செல்வராஜ்னு ஒரு Mega மாணவர் கூட்டணி. அவங்க நெல்லை மருத்துவக் கல்லூரி விழாக்கள்ல நாடகங்கள் போடுறதை வழக்கமா வச்சிருந்தாங்க. நாடகம் முழுக்க நையாண்டி மேளம் தான். ஒரே கேலியும் கிண்டலும் தான். பொதுவா ராஜா காலத்து நாடகம், அதுல அந்தக் காலகட்டத்துல உள்ள சமூக நிகழ்ச்சிய கலந்து கலக்கிருவாங்க.

அந்தக் கால கட்டத்துல 1978 - 80ல், நிர்வாண சாமியார்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தாங்க. குரூப்பா, இல்லைன்னா தனித்தனியா வருவாங்க. அவங்க போற எடம் பூராம், போலீஸ் பாதுகாப்பு. ஏன்னா ? நிர்வாணம்.

நம்ம டாக்டர் மாணவர்கள் கூட்டணி இதை விடுவாங்களா ? அந்த நிர்வாண சாமியாரை அவங்க நாடகத்துல ஒரு கதாபாத்திரமா அவங்களோட நாடகத்துல சேத்துக்கிட்டாங்க. Character ரெடி. Actor யாரு ? எல்லாரையும் கேட்டுப் பாக்குறாங்க, "யாருப்பா நடிக்கிறது ?" கதாபாத்திரத்தைக் கேட்ட ஒடனே தலை தெறிக்க ஓடுறாங்க நான் இல்ல, நீ இல்லன்னு. College function அதுல நிர்வாண சாமியாரா stageல வரணும். எப்படி இருக்கும்?, ஒரு பயலும் மாட்டேங்கிறான்.

நம்மாளு முனியப்பன் கலக்கல்ல இருந்து ஒதுங்கி முழுமூச்சா படிச்சிக்கிட்டிருந்த நேரம். அந்த Mega மாணவர் கூட்டணியிடம் அன்பான தொடர்புள்ளவர். அவங்க யோசிச்சுப் பாத்து முனியப்பனை அன்பால நடிக்கச் சம்மதிக்க வச்சுர்றாங்க. முனியப்பன் நிர்வாண சாமியார் வேஷம் கட்ட ரெடியாயிர்றார். ரிகர்சல் நடக்குது. அந்த நேரத்துலயே சிரிப்பை control பண்ண முடியாம எல்லாரும் சிரிச்சு உருள்றாங்க. அந்த நாளும் வருது. கல்லூரி விழா. Stage performance.

மேடைல ராஜாவோட தர்பார் ஹால். ராஜா seatல இருக்கார். மந்திரி, சேனாதிபதி, எல்லாம் இருக்காங்க, சேவகன் "பராக், பராக்" போடுறான். "நிர்வாண சாமியார் வர்றார் பராக், பராக்" Audience அதிர்றாங்க, சிரிப்பலை, சிரிப்பு அடங்குது. Audienceக்கு ஒரு ஆவலான எதிர்பார்ப்பு, மூவர் கூட்டணி ஏமாத்திடுவாங்களா என்ன? ரெண்டு பேரு மடிச்ச 4 முழ வேஷ்டியை வச்சு மறைச்சுக்கிட்டு, முனியப்பனோட இடுப்புக்கு மேல, பாதி தொடைலருந்து தெரியற மாதிரி முனியப்பனை நடுவில வுட்டு அழைச்சு வர்றாங்க. வேஷ்டிக்குப் பின்னால முனியப்பன் கவர்ச்சி நடிகையை விட கம்மியான காஸ்ட்யூம்ல, அரங்கமே அதிருது சிரிப்பால்.
Audience பூராம் குலுங்கி குலுங்கி சிரிக்கறாங்க. இதுல விசில் சத்தம் வேற. மூவர் கூட்டணி எதிர்பார்த்தது இது தான். அவங்க கதாபாத்திரத்துக்கான வெற்றி கெடைச்சுருச்சு. சிரிச்சுக்கிட்டே இருக்காங்களே ஒழிய சிரிப்பலை நிக்க மாட்டேங்குது. Audience சிரிச்சது பத்தாதுன்னு Stage ல் உள்ள ராஜா, மந்திரி, சேனாதிபதி வேற சிரிக்க ஆரம்பிச்சுர்றாங்க. ஆம்பிள சிங்கமா Stageக்குள்ள நுழைஞ்ச முனியப்பன், கழுத்துல மாலயப் போட்டு வெட்டுறதுக்கு ஆட்டை கூப்பிட்டுப் போவாங்கள்ல, பலிகடா, அந்த மாதிரி Portionக்குப் போயிர்றார். எல்லாருடைய சிரிப்புக்குக் காரணமான காட்சிப் பொருள் முனியப்பனுக்குப் பேச வேண்டிய வசனம் மறந்து போயிருது. இதுக்கு இடைல ஒரு பயம் வேற, வேஷ்டியப் பிடிச்சிக்கிட்டு இருக்கவங்க வேட்டியைக் கீழே விட்டுட்டா ?

சிரிப்ப நிப்பாட்டி நாடகத்தைப் பாக்க எல்லாரும் தயாராகுறாங்க. Prompter முனியப்பனுக்கு வசனத்தை எடுத்து விடுறார். சீன் களை கட்டுது. வீரபாண்டிய கட்டபொம்மன், ஜாக்சன் துரை மாதிரி வசனம்

ராசா : என்னவே இப்படி வந்திருக்கீரு ?

நி.சா. : டிரஸ்ஸக் கழட்டுனா நீரும் இப்படித்தான்வே.

அரங்கம் சிரிப்பலையால் அதிர்கிறது. சரிப்பலை அடங்கிய பிறகு,

ராசா : வீட்டை விட்டு வெளியே வந்தா கொஞ்சமாவது துணி வேண்டாமாய்யா ?

நி.சா. : பிறந்ததுல இருந்தே ஆடையில்லாதவன்யா நான்

தலையில் அடித்துக் கொள்ளும் ராசா,

ராசா : ஆமா, ஒத்த ஆளாத்தான் வந்தீராவே ?

நி.சா. : இல்ல ராசா, இன்னம் 23 பேர் வாரவ

அரங்கத்தில் சிரிப்பு, ராசா சுதாரித்துக் கொண்டு,


ராசா : உம்ம வருகையின் நோக்கம் என்னய்யா

நி.சா. : எம் கொள்கையைப் பரப்ப வந்திருக்கோம்யா

ராசா : ஒம்ம மாதிரி திரியறுதுக்கா ?

சிரிப்பலை

நி.சா. : அது ஆரம்பம்

ராசா : ஆரம்பமே சரியில்லையேய்யா, சேனாதிபதி ...

சேனாதிபதி : ராசா,

ராசா : இந்த ஆளைத் தூக்கிக் கொண்டு போய் நாட்டின் எல்லையைத் தாண்டி வீசிவிட்டு வாரும்

சேனாதிபதி, சேவகர்கள் பிடிக்க வர, நிர்வாண சாமியார் முனியப்பன் நேரா மேக்கப் ரூமுக்குப் பறந்து போயிட்டார், அவ்வளவு ஸ்பீடு.

அரங்கமே அதிர்ந்தது.

அதுக்கப்புறம் ஒரு வாரம் காலேஜ்ல முனியப்பன் படாத பாடு பட்டுப் போனாரு. சீனியர் மாணவர்கள் "என்னடே" அப்படின்னு சிரிப்பாங்க, ஜூனியர் மாணவர்கள் 'சார்.....ர்' ஒரு நமுட்டுச் சிரிப்பு, மாணவிகள் தலையைக் குனிஞ்சு சிரிச்சுகிட்டுப் போயிருவாங்க.

இப்ப Dr. பரதன் குமரப்பா நிலக்கோட்டைல இருக்கார், Dr. திவாகர் சிவகங்கைல இருக்கார், Dr. அல்போன்ஸ் செல்வராஜ் சென்னைல இருக்கார். அவங்க மூணு பேரும் காலேஜ்ல நாடகங்கள் போட்டு கலக்குனது - அப்பா, செம கலக்கல் நாட்கள்.