Friday, January 30, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (டாக்டர் நர்கீஸ் பானு)

முனியப்பன் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1982ல் முதுநிலை பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்த நேரம், 3 மாதம் அவர் இருந்த unitல் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்தார் டாக்டர் நர்கீஸ் பானு. அறிவிலும், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் தேர்ந்தவர். அவர் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்த 1 வருடமும் முனியப்பனின் நண்பராக இருந்தார். அவர் பயிற்சிக் காலம் முடிந்து அவர் நாகர்கோவிலுக்குச் சென்றார்.

1986 ஜனவரியில் நாகர்கோவிலில் நடைபெற்ற டாக்டர் நர்கீஸ் பானுவின் திருமணத்திற்கு முனியப்பனுக்கு அழைப்பு வந்தது. முனியப்பன் டாக்டர் நர்கீஸ் பானுவின் திருமணத்தில் கலந்து கொண்டார். மணமகன் டாக்டர். அப்துல் சுபான்.

1989ம் வருடம் காயல்பட்டினம் KMT மருத்துவமனையில் டாக்டர். நர்கீஸ் பானு பணிபுரிந்து கொண்டிருந்த பொழுது, முனியப்பன் அவரைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். ஒரு ஆண் குழந்தை இருப்பதாக டாக்டர். நர்கீஸ் பானு மகிழ்ச்சியுடன் சொன்னார்.அதன்பிறகு டாக்டர்.நர்கீஸ் பானுவுடன் தொடர்பு கொள்ள முனியப்பனுக்கு நேரம் கிடைக்கவில்லை. காலம் உருண்டோடியது.

முனியப்பன் தினத்தந்தி, ஹிண்டு நாளிதழ்களை காலையில் வாசிக்கும் வழக்கம் உள்ளவர். அதில் தினத்தந்தியில் போட்டோவுடன் வரும் டாக்டர் பற்றிய விளம்பரத்தைக் கண்டிப்பாகப் பார்ப்பார். அதிகமாக வெளிநாடு சென்று திரும்பும் டாக்டர்கள் போட்டோவுடன் கூடிய விளம்பரங்கள் தான் இருக்கும்.

01.01.09 அன்று தினத்தந்தியில் ஒரு டாக்டர் போட்டோ செய்தி வந்திருந்தது. டாக்டர் பேரைப் பார்த்தார் முனியப்பன். டாக்டர் அப்துல் சுபான் என்றிருந்தது. மேலே வபாத்தானார் என்றிருந்தது. அதிர்ச்சியடைந்த முனியப்பன் விளம்பரத்தின் கீழே பார்த்தார். Dr. நர்கீஸ் பானு என்றிருந்தது. உடனே ஆத்தூரில் இருக்கும் Dr. முத்துக் கிருஷ்ணனை தொடர்பு கொண்டார் முனியப்பன்.

மஞ்சள் காமாலையால் Dr. அப்துல் சுபான் மரணத்தைத் தழுவியதாகவும், முதல்நாளே இறுதிச் சடங்குகள் முடிந்ததாகவும், திருச்செந்தூர் கிளை (IMA) இந்திய மருத்துவக் கழக டாக்டர்கள் அனைவரும் இறுதிச்சடங்கில் பங்குகொண்டதாகவும், Dr. முத்துக் கிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.

முஸ்லீம் மதமாதலால் கணவனை இழந்த பெண்கள் 40 நாட்கள் ஆண்களை பார்க்கக் கூடாது என்ற தகவலும் முனியப்பனுக்குக் கிடைத்தது. 14.01.09ல் முனியப்பன் தன் தங்கை, தங்கை கணவர், தங்கை பிள்ளைகளுடன் காயல்பட்டினம் சென்றார். அவருக்கு வியப்பான விஷயம் அங்கு காத்திருந்தது. Dr. நர்கீஸ் பானு ஆலோசனை அறையில் பெண் நோயாளிகளுக்கு மட்டும் அவர் மருத்துவ சிகிச்சை அளிப்பதாகச் சொன்னார்கள். முனியப்பனின் தங்கை Dr. நர்கீஸ் பானுவைச் சந்தித்துத் துக்கம் விசாரித்து விட்டு வந்தார்.

முனியப்பனுடைய தங்கையிடம் Dr. நர்கீஸ் பானு அவருடைய கணவர் Dr. அப்துல் சுபானின் தங்கை கணவர் மாடியில் இருப்பதாகவும், முனியப்பனை அவரைச் சந்தித்து விட்டு போகச்சொன்னார். Dr. அப்துல் சுபானின் மைத்துனரை அனைவரும் சந்தித்தனர்.

Dr. நர்கீஸ் பானுவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். முதல் பையன் இரண்டாம் ஆண்டு மருத்துவமும், இரண்டாவது பையன் பிளஸ் டூவும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகள் இரண்டு பேரும் வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில், அவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகின்ற நேரம். இந்த நேரத்தில் கணவரின் மறைவு Dr. நர்கீஸ் பானுவை எந்த அளவு பாதித்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

கணவர் இறந்த பத்து நாட்களில், அவர்களுடைய நோயாளிகளின் நலனுக்காகவும், அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும், குடும்பத்திற்காகவும், ஆலோசனை அறையில் அமர்ந்த Dr.நர்கீஸ் பானு வீரப்பெண்களின் வரிசையில் இணைக்கப்பட வேண்டியவர்.