Wednesday, February 25, 2009

ஆஸ்கார் - A.R. ரகுமான் - கமல்

ஆஸ்கார் - A.R. ரகுமான் - கமல்

உலக திரைப்பட விருதுகளில் முதன்மையானது அமெரிக்காவில் வழங்கப்படும் Academy விருதான OSCAR. இந்தியாவிற்கு அந்த விருதை பெற்றுத்தந்த A.R. ரகுமானுக்கு முதலில் நம் வாழ்த்துக்கள். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் 2 ஆஸ்கார் விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். 1. Original music 2. Original song இந்த இரண்டிலும் அவர் வெற்றிவாகை சூடியிருக்கிறார்.

A.R. ரகுமான் ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்திலேயே இசைக்காக தேசிய விருது பெற்றார். அவர் இசையுலகில் அவரது 12 வயதிலேயே அடியெடுத்து வைத்தவர். "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று கடவுளுக்கு நன்றி சொல்லும் A.R. ரகுமான் தாய்ப்பாசம் மிக்கவர்.

இந்த வேளையில் நமது கமலைப் பற்றியும் சில விஷயங்களை மன வருத்தத்தோடு பகிர்ந்தாக வேண்டும். பால்ய வயதிலேயே திரை உலகில் அடி எடுத்து வைத்தவர் நமது கமல். அவர் நடிப்பாற்றல் மிக்கவர். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

"Oscar கதவைத் தட்டுபவர்" என்று கமலைப் பற்றி பத்திரிகைச் செய்திகள் அவரைத் திருப்திப் படுத்தவா ?, அவருடைய பில்ட் அப்பா? "உலக நாயகனே" .... கடைசியாக வெளிவந்த கமலோட தசாவதாரப் பாடல். உலக நாயகன்கிற வார்த்தை யாரை ஏமாற்ற கமலையா ? அவரது ரசிகர்களையா ?

கொஞ்ச காலத்துக்கு முன்னால இந்தியாவுக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கலை அப்படிங்கிற ஒரு கேள்விக்கு கமல் சொன்ன பதில் "அமெரிக்கர்களுக்கு அமெரிக்கர்களால் வழங்கப்படும் விருது Oscar". அவங்களை இங்க வரச்சொல்லி நாம அவங்களுக்கு விருது கொடுப்போம்னு விரக்தியா சொல்லியிருந்தார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் இந்தியாவில் தயாரான படம். எட்டு Oscar விருதுகளைப் பெற்றுள்ளது. அதில் 4 விருதுகளைப் பெற்றவர்கள் இந்தியர்கள், ரகுமானுக்கு 2, பாட்டு எழுதிய குல்சாருக்கு 1, ஒலிக்கலவைக்கு கேரளாவின் பூக்குட்டிக்கு 1. இது போக டாக்குமெண்டரி படத்துக்காக உதடு பிளவுபட்ட கருத்தை வைத்து எடுத்த படத்துக்கும் 1 Oscar விருது. ஆக மொத்தம் இந்தியர்கள் மூலமாக இந்த வருடம் பெற்ற Oscar விருதுகளின் எண்ணிக்கை 5.

நடிப்புக்காக வழங்கப்படும் 4 விருதுகளில், 3 விருதுகள் அமெரிக்கர் அல்லாதோர் பெற்றுள்ளனர். Oscar விருது அமெரிக்கர்களுக்காக வழங்கப்படும் விருது என்று கமல் கூறியது இங்கு நினைவுக்கு வருகிறது. மொத்தம் உள்ள 24 ஆஸ்கார் விருதுகளில், 4 விருதுகள் இந்தியர்களுக்கும் 1 விருது இந்தியச் சிறுமியை வைத்து எடுக்கப்பட்ட Documentaryக்கு (short film) ஒரு Oscar விருது, இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் விதமாக அமைந்துள்ளது 2009 ஆம் வருட அமெரிக்க Academy விருதுகள் (Oscar).

A.R. ரகுமான் 2 Oscar விருது வாங்குனதுக்கு திரை உலகில் உள்ளவர்கள் பேட்டி குடுக்கறாங்க. சூர்யா சொல்றார் "+2 பாஸ் பண்ண சந்தோஷம்"கிறார். டைரக்டர் சங்கர் சொல்றார். "A.R. ரகுமான் ஞாயிற்றுக்கிழமை கூட work பண்ணுவார். ஓய்வுங்கறது ரொம்ப ஆபூர்வம்". இப்ப நம்மாளு கமல் என்ன சொல்றார் "தமிழராயிருக்கது மட்டுமில்ல, தகுதிய வளத்துக்கிட்டார்."

இப்ப கமலுக்கு ஒரு கேள்வி, நீங்க ஏன் Oscarக்கான ஒங்க தகுதிய வளத்துக்கிடலை?. கமல் ஒங்களை நெறைய கேள்வி கேக்கலாம்? இங்கிலாந்து ராணி queen எலிசபெத்தை வச்சி பூஜை போட்டீங்களே 'மருதநாயகம்'. அது என்ன ஆச்சு? இப்ப கூட ஒங்க மர்மயோகிய காணோம்.!

கமல், ஒங்களுக்கு ஒரு வேண்டுகோள். "உண்மையிலேயே Oscar விருதுக்கான ஆசை உங்களுக்கு இருந்தால் " அதுக்கான தகுதிய வளத்துக்குங்க, முயற்சில எறங்குங்க. சும்மா ஒலக நாயகன்கிற வார்த்தையை use பண்ணாதீங்க. நீங்க நடிப்பாற்றல் மிக்கவர். Oscar விருதைக் கைப்பற்றும் திறமை உங்களுக்கு உண்டு. நீங்கள் Oscar விருது பெறும் நாளை தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

என்ன, முனியப்பன் கமல் மேல காட்டமாய்ட்டார்னு பாக்கறீங்களா? இது ஒரு வகையான அன்பு, அப்படித்தான் சொல்ல முடியும். முனியப்பன் பரமக்குடில spm காலணில 8ம் நம்பர் வீட்டில 3 வருஷம் இருந்தப்ப 1ம் நம்பர் வீட்டுக்காரர் நம்ம கமல். கமலும், முனியப்பனும் long long ago பம்பரம், பச்சைக் குதிரை, ஓடிப்பிடிச்சு, கிரிக்கெட், கிட்டி வெளையாண்டவங்க. அந்த பால்ய நட்போட ஆதங்கம் தான் இது.

Saturday, February 14, 2009

அப்பா பிள்ளை விளையாட்டு

அமர், Ashu & முனியப்பன்

முனியப்பன் சொந்தக்கதை சோகக்கதை, காதல் தோல்வி, திருமண தோல்வி. இருந்தாலும் ஆள் ஒரு ஜோக் பார்ட்டி. பொதுவா சபை (கூட்டம்) களை கட்டனும்னா, அதுக்கு ஒரு ஆள் வேணும். நம்ம முனியப்பன் இருக்கற எடம் கலகலப்பாயிரும்.

முனியப்பனைக் கிறுக்குப் பிடிக்க வைக்க ரெண்டு பேர் இருக்கானுவ. முனியப்பன் தங்கச்சி பையங்க. பேரு அமர் 7 வயசு. Ashu 4 வயசு. சின்ன புள்ளைக வெளையாட்டு மாறிக்கிட்டே இருக்கும். புதுசு புதுசா அவனுக கற்பனைல உதிக்கிற வெளையாட்டை வெளையாடுவானுங்க. நாமளும் அதுக்கேத்த மாதிரி update ஆயிரணும், எப்படின்னா, பாட syllabus, Computer, TV, Cell Phone புதுசா update ஆன உடனே நாமளும் அதை தெரிஞ்சிக்கிற மாதிரி, சின்னப் புள்ளைக வெளையாட்டுக்கும் update ஆயிரணும்.

இப்ப ஒரு 4 நாளா அமர், Ashu வெளையாட்டு புதுசா இருக்கு. Ashu அப்பாவாம், முனியப்பன் Ashuவோட பிள்ளையாம். அமர் கார் டிரைவராம். Ashu பிரிகேஜி. முனியப்பன் 60 கிலோ, வெளையாட்டைப் பாருங்க. Ashuவுக்கு ஒரு நாள் பொழுது எப்படிப் போகுதோ, அதை அப்படியே முனியப்பன் சின்னப் பிள்ளையா வெளையாடணும். அமர், Ashu ரெண்டு பேரும் சேந்து விளையாடுவாங்க.

முனியப்பன் தூங்குற மாதிரி படுத்துக்கிடுவார். "ஏ பிள்ளை எந்திரி," Ashu எழுப்ப, "இன்னும் அஞ்சு நிமிஷம்" எந்திரிக்க Ashu மாதிரி முனியப்பன் டைம் கேப்பார். "அஞ்சு நிமிஷம் ஆச்சு எந்திரி" Ashu மறுபடி எழுப்ப முனியப்பன் எந்திரிக்கணும், Ashu முனியப்பன் கையப் பிடிச்சிக்கிட்டு போய் "one toilet போப்பா", பல் தேய்க்க paste குடுப்பார் Ashu (Action தான்). முனியப்பன் பல் தேய்க்கிற மாதிரி நடிக்கணும், பெறகு பிள்ளையக் குளிப்பாட்டி Ashu துவட்டி விடுவார். பெறகு schoolக்கு கெளம்பற மாதிரி, uniform, shoes, lunch box. "டிரைவர் அண்ணன் வந்தாச்சா" முனியப்பன் கேப்பார். அமர் "நான் வந்து 30 மினிட்ஸ் ஆச்சும்பார்". பிறகு முனியப்பன் school bagஅ தோள்ல தூக்கிப்போட்டு schoolக்கு கெளம்பி கார்ல ஒக்காருவார். அமர் காரை ஓட்டிக்கொண்டு போய் முனியப்பனை schoolல drop பண்ணிருவார்.

இந்த வெளையாட்டு நடக்குற நேரம் இரவு 10.30 மணி. எடம் முனியப்பனோட துயில் அறை. school முடிஞ்சு அப்பா Ashu, பிள்ளை முனியப்பனைக் கூப்பிட்டு வருவார். வரும் போது பிள்ளை தண்ணிப் பழ ஜீஸ் குடிக்கும். ரெகுலரா schoolல இருந்து வந்த ஒடனே, அமர் கார் டிரைவர் உதவியுடன் கார் ஓட்டுவார். அதை முனியப்பன் அப்பா பிள்ளை வெளையாட்டுல சேத்துக்கிடுவார். தலையணை - அது மேல pencil box - அதான் car steering. அத பிடிச்சுக்கிட்டு, பின்னால car driver அமர் ஒக்காந்திருக்க, முனியப்பன் car ஓட்டுவார்.

இது இப்ப 4 நாளா நடக்குது. நம்மாளு முனியப்பனும் ஜோக் பார்ட்டில்ல, அவரும் அமர், Ashu கூட சேந்து கலக்குவார். "அப்பா எனக்கு Horlicks குடு". Ashu குடுக்கும் action டம்ளர்க்குள் விரல விட்டு, நாக்குல கைய வச்சுப் பாத்து இன்னும் கொஞ்சம் Horlicks, Ashu ஹார்லிக்ஸ் கொட்டுவார், பிறகு முனியப்பன் குடிப்பார். அமர் சொல்றதையும் அவுத்து விடுவார். "அப்பா டிரைவர் அண்ணனை 3.15க்குக் கூப்பிட வரச்சொல்லுப்பா ", Ashu அமர்கிட்ட சொல்லுவார். பெறகு ஒண்ணு சொல்லுவார் முனியப்பன். அமர், Ashu ரெண்டு பேரும் தலைல அடிச்சிக்கிடுவாங்க. முனியப்பன் "2 toilet கழுவி விடும்"பார். அமர், Ashu ரெண்டு பேரும் "ச்சீய்"ன்ருவாங்க.

Ashu, முனியப்பன் வெளையாட்ல ஓரளவு பங்கெடுத்துக்கிற அமரோட comment, "இப்படி ஒரு பிள்ளை planetல கெடையாது. Outer galaxyலயும் கெடையாது."

சிறு பிள்ளைகளுடன் நம் உறவு உணர்வுப் பூர்வமாக இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்தால் மட்டுமே போதாது, நமது அருகாமையும் தேவை, அவர்களுடன் கலந்து அவர்களுடைய கற்பனையை, அறிவை மேம்படுத்த வேண்டும்.

முனியப்பனோட அப்பா இதே மாதிரி முனியப்பனை வளத்தார். அதை தங்கச்சி பிள்ளைகள் வளர்ப்பில் முனியப்பன் பின்பற்றுகிறார்.

Thursday, February 12, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (தவசி)

தண்ணி லாரி தவசி

தண்ணி லாரி (water tanker) ஓட்டுற தவசி, மதுரைல அடி மட்டத்துல இருந்து மேல வந்துக்கிட்டிருக்க ஒரு சராசரி மனிதர். முனியப்பன் காலை நடைப் பயிற்சியின் போது தவசிய சந்திப்பார். தவசி அப்ப டூட்டிக்கு போய்க்கிட்டிருப்பார். மொதல்ல வீட்லருந்து டூட்டிக்கு நடந்து போன தவசி, ரொம்ப நாள் கழிச்சு TVS 50, அப்புறம் கொஞ்ச நாள்ல M 80,ரொம்ப நாள் கழிச்சு Hero Honda. நிதானமான, படிப்படியான முன்னேற்றம்.

தவசி, மதுரை அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர். எல்லா போக்குவரத்துக் கழகத்துலயும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி சங்கங்கள் உண்டு. ஆளுங்கட்சிக்காரங்க முக்கியமான வழித்தடங்கள்ல (route) ஓட்டுநர், நடத்துநராயிருப்பாங்க. அது மாதிரி ரொம்ப light duty வண்டிகளும் அவங்க தான். இது prestige (கெளரவம்). அதுல ஒண்ணு தான் தண்ணி லாரி (water tanker). பசுமலை டெப்போல இருந்து லாரிய எடுத்து அரசரடி குடிநீர் நீரேற்று நிலையத்துல லாரில தண்ணிய fill பண்ணி, பசுமலைக்கும், தலைமை அலுவலகத்துக்கும் தண்ணிய கொண்டுபோய் சேர்க்கணும். காலைல 6 மணில இருந்து மதியம் 1 மணி வரைக்கும் டுட்டி. அதுக்கப்புறம் rest. மறுபடி அடுத்த நாள் தான் டூட்டி. வாரம் ஒரு நாள் விடுப்பு.

இந்த டூட்டி நேரம் நம்மாளு தவசிக்குப் பிடிச்சுப் போச்சு. அதுனால அந்த வண்டிய மட்டும் ஓட்ற மாதிரி பாத்துக்கிட்டார். ஆட்சி மாறின ஒடனே, இவரும் டக்குன்னு ஒரு துண்டைப் பொத்தி ஆளுங்கட்சி அரசியல்வாதி மூலமா தண்ணி லாரி டூட்டிய தக்க வச்சிக்கிருவார். இப்படி 20 வருஷமா தண்ணி லாரி ஓட்டுனார். யார் கண்ணு பட்டுச்சோ, இந்த தடவை ஆட்சி மாறின ஒடனே இவர் மேல ஒரு கண் வச்சிக்கிட்டிருந்தவங்க மொத வேலையா "தவசிய தண்ணி லாரிய விட்டு எறக்குடா"னு நம்ம தவசிய தண்ணி லாரி டூட்டில இருந்து எறக்கி விட்டுவிட்டாங்க. இப்ப தவசி ரெண்டு வருஷமா சிட்டி பஸ் ஓட்டிகிட்டிருக்கார்.

இவர் தண்ணி லாரி ஓட்டக் காரணம் இல்லாமலா இருக்கும். இவர் வாழ்க்கைல அடிமட்டத்துல இருந்து தன் கையே தனக்குதவின்னு தானே பாடுபட்டு முன்னேறிகிட்டு இருக்கவர். மதியம் 1 மணில இருந்து 11 மணி வரை தன்னுடைய குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைப்பவர். சைடுல ஒரு ஆட்டோ வாங்கி விட்டார். அது இன்னைக்கு 5 ஆட்டோ வா இருக்கு.

திரை உலகில் நடிகர் சங்கிலி முருகன், நடிகர் செந்தில், நடிகர் ஜெயம் ரவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். அவர்களது குடும்பத்தாருடனும் நெருங்கிய பரிச்சயமுள்ளவர். நடிகர் விஜயகாந்துடனும் தொடர்பு உள்ளவர். சங்கிலி முருகன் பேரவையிலும், ஜெயம் ரவி ரசிகர் மன்ற மாநிலப் பொறுப்பிலும் இருக்கிறார். திரைப்படங்களிலும் தோன்றி இருக்கிறார்.

தவசியிடம் முனியப்பனுக்குப் பிடித்த விஷயம் அவருடைய பல்வேறு முகங்கள், 1. அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநர், 2. அரசியல் 3. திரை உலக தொடர்பு 4. பொது வாழ்க்கை

Friday, February 6, 2009

கேட்பாரில்லையா ............... ?

குருதி வெறி பிடித்த பிசாசுகளிடம்
இறுதி நாட்களில் பல உயிர்கள்
தமிழினத்தை அழிக்க

தான்தோன்றித் தனமான தாக்குதல்
இருக்கும் ஒரு மருத்துவசாலை - மீதும்
இடைவிடாத குண்டு வீச்சு

தமிழராய் பிறந்ததைத் தவிர
தவறென்ன அவர்களிடம்
இன வெறி பிடித்த
இலங்கை அரசைக் கேட்பது யார் ?

தீர்மானங்கள் போட்டால் அது
தீர்வாகுமா ஈழத் தமிழனுக்கு
கடை அடைத்தால்
கஷ்டங்கள் போய் விடுமா ?

மேடையில் முழங்கினால் ஈழத் தமிழன்
மேல்உலகம் செல்வது நின்று விடுமா ?

தொப்புள் கொடி உறவுகள் அரசியலாக்காமல்
தோணி ஏறி துயர்துடைக்க வரலாமே
வீடியோ பாருங்கள் ஈழத் தமிழனின்
விதவிதமான அவலங்கள், அழிவுகள், காரியங்கள்

உலகமே உறங்குது
உலக போலீஸ் அமெரிக்காவும் தான்
ஒபாமா சின்னப் பிள்ளையா
ஒன்றும் தெரியாமல் இருப்பதற்கு

ஐக்கிய நாடுகள் சபை எதற்கு
அநியாயங்களைக் கேட்பதற் கில்லையா ?
கடவுளுக்கும் கண்ணில்லை யென்றால்
காது கேட்கவில்லை யென்றால் ஈழத் தமிழன்
கண்களில் பெருகும் கண்ணீர்
காலத்தை வெல்லும்

Monday, February 2, 2009

நாகேஷ்

மறக்கமுடியாத நகைச்சுவை நடிகர். அவருடைய நகைச்சுவை கதாபாத்திரங்கள், உணர்ச்சிகரமான வேடங்கள் மறக்க முடியாதவை. முனியப்பனின் மனதை மட்டும் கவர்ந்த நடிகரல்ல அவர், உலகத் தமிழர்கள் அனைவரையும் கவர்ந்தவர்.

அவரது ஒல்லியான உடல்வாகும், வேகமான நடனமும் நினைவில் நிற்பவை. நகைச்சுவை நடிகர்களில் நடனத்திலும் சிறந்து விளங்கியவர் திரு.நாகேஷ் தான். நகைச்சுவை நடிகர்களில் கதாநாயகனாக வெற்றிக்கொடி நாட்டியவர் அவர் மட்டும் தான். அவருடைய நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், சாது மிரண்டால் போன்ற படங்களில் கதாநாயகனாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி, அந்தப் படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு அடித்தளம் அமைத்திருப்பார்.

அனைத்து நகைச்சுவை நடிகைகளுடனும் ஜோடி போட்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய் சங்கர், ரஜினி, கமல் ஆகிய எல்லோருடனும் நகைச்சுவை வேடம் கட்டியவர். திருவிளையாடல் படத்தில் வறுமையில் வாடும் 'புலவர் தருமியாக' வருவார். பாட்டுக்குப் பொற்காசு என்று அறிவிக்கப்பட்டவுடன், கோயிலில் பாட்டுக்கு நான் எங்க போவேன் என்று புலம்புவார். சிவபெருமானிடம் பாட்டை வாங்கி வந்து நக்கீரனிடம் மாட்டி பிழை இருக்கிறது என்றதும் "எவ்வளவுக் கெவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்து கொடுங்கள்" என்று கெஞ்சும் போதும், பின்பு கோவிலில் வந்து "அவன் வரமாட்டான்" என்று நொந்து பேசும் போதும் பட்டயக் கெளப்பியிருப்பார் நாகேஷ்.

'அன்பே வா' படத்தில் காஷ்மீரில் எம்.ஜி.ஆர் வீட்டை எம்.ஜி.ஆருக்கே வாடகைக்கு விட்டு அசத்தியிருப்பார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் 'வைத்தி'யாகக் கையில் எலுமிச்சம்பழத்துடன் வருவார். காதலிக்க நேரமில்லை படத்துல கலக்கல் காமெடி. சினிமா மோகத்துல, சினிமா டைரக்ட் பண்ண துடிக்கிற character. அவருடைய தந்தையாக வரும் பாலையாவிடம் நச்சரிப்பார். பாலையாவும் ஒரு கட்டத்தில் "சரி ஒன் கதைய சொல்லு"ன்னு கதை கேக்கவும் ஒக்காருவார். அவர்கிட்ட நாகேஷ் கதை சொல்லி மிரள வச்சு, நடுங்க வைப்பார் பாருங்க, சிரிச்சிக்கிட்டேயிருக்கலாம்.

நகைச்சுவை, உணர்ச்சிகரமான வேடங்கள் தவிர, வில்லனாகவும் திரையில் தோன்றியவர் அவர். கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் மெயின் வில்லனே நாகேஷ் தான். தமிழ் திரைப்பட வரலாற்றில் அவர் ஒரு மைல் கல் & LEGEND.