Thursday, July 29, 2010

ஒரிஜினல் முனியப்பன்


முனியப்பன்கிற புனை பேர்ல எழுதறது ஒரு கவர்ச்சிக்குத்தான். அப்ப முனியப்பன்!

தென் மாவட்டத்துக்கே உள்ள அடாதுடி நடவடிக்கை, மொரட்டுத்தனம், பேச்சு, மீசை உள்ளவர் ஒரிஜினல்.நம்ம முனியப்பனும் அதே மொரட்டு பகுதிங்கறதால மொரட்டுத்தனத்துல ஊறினவர். ஒரிஜினலும், நம்ம ஆளும் ஒரே பூமிங்கறதால நட்பு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிருச்சு.

ஒரிஜினல் மதுரைல ஒரு பிரபல மூன்றெழுத்து கம்பெனியோட ரப்பர் பேக்டரில வேலை பாத்ததாலயும் மிகுதியான புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதாலயும் சுவாசக் குறைபாடு COPD உள்ளவர். முனியப்பன் சிகரட் குடிக்காதய்யான்னு சொன்னா ஒரிஜினல் கேக்க மாட்டார்.

ஒரிஜினல் அப்பப்ப டூவீலர்லருந்து skid ஆகி கீழ விமுந்து எந்திரிக்கிறவர் . Hero honda பவுச்ல ஒரு துணி ரெடியா இருக்கும்காயத்துக்கு கட்டுப்போடத்தான். ஒரு தடவை திருமங்கலம் போய்ட்டு வர்ற்ப்ப நாய் குறுக்க ஓடுனதுல ஒரிஜினல் கீழ விமுந்து வேற இடத்தல அட்மிட் ஆயிட்டார்.

ஒதட்டுக்கு மேல காயம், மீசைல gap விழுந்துருச்சு. கண்ணாடில பாத்தா பாதி மீசய காணோம். ஒரிஜினல பாக்கப் போன நம்ம முனியப்பன்கிட்ட மீசை இல்லைன்னா தொங்கிருவேன்னு சொல்லி பயமுறுத்திட்டார். முனியப்பன் அவர அந்த ஆஸ்பத்திரிலருந்து கடத்திட்டு தன்னோட எடத்துக்கு கூப்பிட்டு வந்து மீசையை சரிபண்ணி விட்டார். பழயபடி மீசை வந்த ஒடனே கூடக் கொஞ்சம் அட்டாச் ஆயிட்டார் ஒரிஜினல்.

முனியப்பனுக்கு இதயத்துல ஒரு சிக்கல் வந்து அதுக்காக சென்னைல ஒரு opinion வாங்கப் போனார். ஒரிஜினல் முனியப்பனும் கூடவே போனார். ரெண்டு பேரும் சென்னைல ஒரு heart டாக்டர்கிட்ட போனாங்க. மொதல்ல ஒரிஜினல் தன்னோட COPD பிரச்சினைய consult பண்ணார்,
வெளிய போய்ட்டார். நம்ம முனியப்பன் தன்னோட consulting முடிச்சுட்டு வெளிய வந்தார். ஒரிஜினலை காணோம். முனியப்பன் கூட வந்த திருப்பதி, கார் டிரைவர் எல்லாரும் ஒரிஜினலை தேட ஆரம்பிச்சாங்க. Hospitalல எல்லா floor லயும், கீழ பார்க்கிங்லயும் தேடுனாங்க, ஒரிஜினல் சிக்கல. செல் போன்லயும் கெடைக்கல. கடைசில அந்த ஆஸ்பத்திரில ஒரு பெட்ல இருந்து ஒரு கை ஆடுது, என்னன்னு பார்த்தா முனியப்பனை ஒரிஜினல் கைய ஆட்டி கூப்பிடுகிறார். ஒரிஜினலை பெட்ல படுக்கப்போட்டு மூக்கு மேல netilaizer (நெடிலைசர்)அ வச்சு அமுக்கி வச்சதால ஒரிஜினலை கண்டு பிடிக்க முடியலை.

போன எடத்துல பாருங்க , நல்லா போன ஒரிஜினலை படுக்கப் போட்டு தேவையில்லாத வேலைய பாத்துட்டாங்க. அந்த hospital ல நெபுலைசரை பிடுங்கி போட்டுட்டு ஒரிஜினலும் முனியப்பனும் எஸ்கேப் ஆயிட்டங்க.

நம்ம முனியப்பனோட அறிவுரையை கிளீன்ஆ பாலோ பண்ணி சிகரட்ட விட்டுட்டார் ஒரிஜினல் முனியப்பன். இப்ப அவரோட COPD பிரச்சினை நல்லா இருக்கு, நல்லா மூச்சு விடமுடிகிறது அவரால.

தேவையில்லத சிகிச்சைகள் தவறான diognosis நெறய இருக்கு , பின்னால ஒரு பதிவுல வரும்.

Tuesday, July 20, 2010

தொழில் வேற நட்பு வேற

என்னதான் நட்பா close ஆக இருந்தாலும், தொழில்னு வரும் போது, அந்த தொழிலுக்கு உள்ள மரியாதையை குடுக்கனும். அப்பதான் தொழிலும் , நட்பும் நல்லா இருக்கும். இதுல முனியப்பனுக்கு நல்ல Roll Model அவர் அப்பா கு. வேலுசாமிதான்.

கு.வேலுசாமி பரமக்குடில குற்றவியல் நீதிபதியா பணியாற்றினப்ப அவரும், அந்த ஊர்ல வக்கீலா இருந்த உலக நாயகனோட அண்ணனும் சாயங்காலம் கோர்ட் முடிஞ்ச உடனே கோர்ட் காம்பவுண்ட்ல இருந்த டென்னிஸ் மைதானத்துல டென்னிஸ் வெளையாடுவாங்க. மொத நாள் சாயங்காலம் டென்னிஸ் வெளையாண்டிருப்பாங்க. அடுத்த நாள் காலைல கோர்ட்ல ஒலக நாயகன் வக்கீல் அண்ணனுக்கு எதிரான தீர்ப்பும் இருக்கும். நீதிக்கு முன்னால நட்பா?

எதிரான தீர்ப்பு வந்தாலும் அன்னைக்கும் அவங்க ரெண்டு பேரும் சாயங்காலம் டென்னிஸ் வெளையாடுவாங்க.அது அவங்க நட்போட இலக்கணம்.

முனியப்பனுக்கு வெள்ளைச்சாமின்னு ஒரு பள்ளி நண்பர். ரெண்டு பேரும் 2 வருஷம் மதுரைல ஒரு ஸ்கூல்ல வகுப்பு நண்பர்கள். வெள்ளைச்சாமி பின்னால மதுரைல Top Ten அரிசி ஆலை அதிபராயிர்றார். முனியப்பன் மருத்துவம் படிச்சிட்டு தொழில் ரீதியா மதுரைல வந்து செட்டில் ஆகுறார். முனியப்பன் ஸ்கூல்ல ஹாஸ்டல்ல இருந்து படிச்சவர். அதனால மதுரையில ஒண்னும் தெரியாது. முனியப்பன் மதுரைக்கு வந்த உடனே வெள்ளைச்சாமி நண்பனை பார்க்க வந்துர்றார். பழைய பள்ளி வகுப்பு நண்பர்களை அறிமுகப்படுத்தறார். அவங்க எல்லாரும் சேர்ந்து முனிபயப்பனுக்கு மதுரைல உள்ள இண்டு இடுக்கு எல்லாம் அறிமுகப்படுத்தி வைக்கிறாங்க.

முனியப்பன் அரிசி எங்க போய் வாங்குவார்? வெள்ளைச்சாமிகிட்டதான். முனியப்பன் அரிசி வாங்க நேரா போயிடுவார். முனியப்பனுக்கு அரிசிக்கான பில்லை போட்டு ரூபாய் வாங்கிட்டு, அரிசிய வெளிய எடுத்துட்டு போக கேட் பாஸ்ம் போடுவார் வெள்ளை சாமி. அரிசி மில்ல விட்டு அரிசிய கொண்டு போக கேட் பாஸ்.இது வெள்ளைச்சாமியின் சிஸ்டம். முனியப்பனுக்கும் அதேதான்.

தொழில் வேற நட்பு வேற.தொழில்னு வரும் போது என்னதான் நட்பா இருந்தாலும் ரெண்டுக்கும் எடைல ஒரு கோடு இருக்கனும்.முனியப்பனுக்கும் வெள்ளைச்சாமிக்கும் உள்ள நட்பின் வயது, ஜஸ்ட் 39 வருஷம்தான்.

Monday, July 12, 2010

மாதா? முனியப்பனா?

மார்ச் மாதம் பொழுது போக்குத் துறையைச் சேர்ந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும், அவர்கள் தொழில் சம்பந்தமாக மதுரைக்கு வந்தார்கள்.

அந்த ஆணை "ஆ" என்று வைத்து கொள்வோம். முனியப்பனின் நண்பர் ஒருவர் "ஆ" வுக்கு பழக்கமானவர். வேறு விஷயமாக "ஆ" மதுரை வரும் போதல்லாம் "ஆ" வை Airport ல் வரவேற்பது, வழியனுப்புவது முனியப்பனின் நண்பர்.

முனியப்பனின் நண்பருக்கு திடீரென ஒரு ஆசை. "ஆ" வையும் முனியப்பனையும் சந்திக்க வைக்க வேண்டுமென்று, பொழுது போக்குத்துறை சம்பந்தமாக "ஆ", ஒரு பெண் மற்றும் பரிவாரங்களுடன் மதுரைக்கு வந்த தருணத்தை நண்பர் பயன்படுத்தத் திட்டமிட்டார். "ஆ" வும் அந்த பெண்ணும் தங்கியிருந்தது மதுரை சங்கம் ஹோட்டல் அடுத்தடுத்த ரூமில்.

முனியப்பனின் கிளினிக் டைம். மாலை 7 மணி. நண்பரிடமிருந்து அலைபேசி, "கெளம்பி வாங்க "ஆ" வைப் பார்க்கலாம்". முனியப்பனும் கிளம்பி பேயிட்டார்.

சங்கம் ஹோட்டல்ல வெயிட்டிங் ஹால்ல "ஆ" வைப் பார்க்க 20 பேர் இருக்காங்க. "ஆ"வின் மதுரை செயலாளர், முனியப்பனிடமும், நண்பரிடமும் தலைவர் tired ஆ இருக்கார். நாளைக்கு பார்ப்போம்"னு சொல்றார்.

முனியப்பனுக்கு விஷயம் புருஞ்சு போச்சு, வந்த இடத்தில் கிடைத்த வாய்ப்பை "ஆ" பயன்படுத்திக் கொண்டார். "ஆ" முன் நின்ற கேள்வி "மாதா? முனியப்பனா?". முனியப்பனுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்.

Wednesday, July 7, 2010

நாகராஜின் சிரிப்பு. ரிப்போர்ட்டருக்கு நன்றி

அகதி மாணவன் நாகராஜின் பரிதவிப்பு தினத்தந்தி நாளிதழிலும், ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழிலும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இந்த செய்தி தமிழக முதல்வரிடம் எடுத்துச் செல்லப்பட்டது. இலங்கை அகதிகளின் குழந்தைகள் கல்வி நலனுக்காக அவர்களை பொதுப்பட்டியலில் சேர்த்து தமிழக அரசு அரசாணை (GO) பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் அகதி மாணவர்கள் பொறியியல் (BE) படிப்பிற்கான கலந்தாய்வில் (Counselling) கலந்து கொள்ளலாம். அகதி மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருந்தால் அவர்களுக்கான செலவையும் தமிழக அரசே ஏற்கும்.

அகதித் தமிழர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கும் இந்த அரசாணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அகதிகளின் அடிப்படைத் தேவைகளை மட்டும் கவனித்த தமிழக அரசு இப்பொழுது அகதி மாணவர்களின் உயர் கல்வியில் தனது முத்திரையைப் பதித்திருப்பது நல்ல நிகழ்வு. இந்த ஆரம்பம் ஈழத் தமிழர்களிடமும் தொடர வேண்டும்.

தனி ஒரு ஆளாக உயர் அதிகார்கள், அமைச்சர் வரை தன்னுடைய உயர் படிப்புக்காகப் போராடி, அகதி மாணவர்வளுக்கான கல்வி வசதியை கொண்டு
வந்த நாகராஜூக்குத்தான் இந்த பெருமை. இந்த ஆண்டு இதனால் பலன் பெறப் போவது 21 அகதி மாணவர்கள். மருத்துவம் படிக்க நாகராஜ் விரும்பியதால் ஒரு தனியார் தொண்டு நிறுவனம், நாகராஜீக்கான மருத்துவப் படிப்பபுக்கான முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டு SRM மருத்துவக் கல்லூரியில் நாகராஜிக்கு படிப்புக்கு இடம் வாங்கி சேர்த்து விட்டிருக்கிறது. ஆக அகதித் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிப் பிறந்திருக்கிறது.

Tuesday, July 6, 2010

அகதிக்கு இடமில்லை

ஈழத்தில் இடமில்லை
இங்கும் இடமில்லை
அங்கும் அடிமைதான்
இங்கும் மாற்றமில்லை
அந்நிய நாடுகளில் பலர்
அடைக்கலம் புகுந்தார்
வேலை செய்து பிழைத்தாலும்
வேற்று நாட்டில் புறக்கணிக்கப்படவில்லை
இங்கு அகதியாய் வந்தவர்
இன்னும் இன்னலில்
வக்கீலுக்கு படித்து
வழக்குரைக்க முடியவில்லை
பள்ளியில் மதிப்பெண் எடுத்த மாணவ அகதி தள்ளி வைக்கப்படுகிறான்.
தொழில் கல்வி தேர்வில் வாய்ச் சொற்களால்
அரசை வசைபாடும் சீமான்களே, புயல்களே அநத மாணவனுக்கு குரல் குடுத்தீரா?
அகதி நலனுக்கு என்ன போராடினாய்
தஞ்சம் புகுந்தவனை
தவிக்க விடும் அரசியலமைப்பே
தடைகளை தகர்த்து
தவிக்கும் அவனுக்கு இடம் கொடு
தமிழனாய்ப் பிறந்ததில் தவறில்லை
ஈழத்தின் வாரிசாய் பிறந்ததுதான் அவன் தவறு.
அதிலும் பெரும் தவறு
அவன் இங்கே தஞ்சம் புகுந்ததுதான்.

முனியப்பன் குமுறலுக்கு காரணம்
பாதிக்கப்பட்ட அகதியின் பெயர் : நாகராஜ்
வயது : 17
அகதி முகாம் : பாம்பார் அணை, கிருஷ்ணகிரி மாவட்டம்
12th Medical cut off : 197.5
Engineering cut off : 197.83
அதியமான் மேல்நிலைப் பள்ளி
மறுக்கப்பட்ட காரணம் : இலங்கை அகதி
இந்தியாவில் பிறந்தாலும் இந்திய குடியுரிமை கிடையாது