Tuesday, April 7, 2009

குழந்தை வேலும் டெல்லி லெட்டரும்

குழந்தை வேலு அப்ப 85 வயசுக்காரர். தன் வாயால பெருமையடிக்கிறது அவருக்குப் பிடிக்காத விஷயம். அவருக்குப் பெருமையா உள்ள விஷயங்களை அடுத்தவங்களை சொல்ல வச்சு அவர் நெஞ்சுக்குள்ள சந்தோஷப் பட்டுக்கிடுவார்.

அவர் பேரன் ஒருத்தன் ஸ்கூல் டூர்ல டெல்லி போயிருந்தான். டெல்லிலருந்து ஒரு போஸ்ட் கார்டுல அவருக்கு ஒரு லெட்டரைப் போட்டுட்டான். இது நடந்தது 38 வருஷத்துக்கு முன்னால. அந்தக் காலத்து லெட்டர் எப்படி இருக்கும் ? "மகா ள ள ள ஸ்ரீ கனம் பொருந்திய தாத்தா அவர்களுக்கு உங்கள் பேரன் எழுதிக் கொண்டது. நான் இப்பொழுது டெல்லியில இருக்கிறேன். நேற்று ஆக்ராவில் தாஜ்மஹால் பார்த்தோம். ஊர் நல்லா இருக்கு. ஊரில் அனைவரும் நலமாக இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு உங்கள் பேரன் .........."

குழந்தைவேலுக்கு பேரன் டெல்லிலருந்து லெட்டர் போட்டது பெருமை பிடிபடலை. "பேரன் தாஜ்மஹால் பாத்திருக்கான், இதை ஊர் பூராம் கொட்டடிக்காம இருக்கதா, டெல்லிக்குக் கல்லுப்பட்டில இருந்து யார் போயிருக்கா ?". நம்மாளு குழந்தைவேலு டெக்னிக்கலான ஆளாச்சா, அவர் தேர்ந்தெடுத்த டெக்னிக் "சொல்லாமலே''

வீட்ட விட்டு வெளியே கெளம்பும் போது பேரனோட லெட்டர எடுத்து அடுத்தவங்க கண்ல பட்ற மாதிரி அவரோட சட்டைப் பைக்குள்ள வச்சிக்கிடுவார். அதைப் பாக்குறவங்க "அது என்ன லெட்டர்"னு கேப்பாங்க. குழந்தைவேலு 1886ல பிறந்தவர். அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. "பேரன் டெல்லிலருந்து லெட்டர் போட்ருக்கான். இத என்னன்னு படிப்பா" அப்படின்னு அவுங்க கைல குடுத்துருவார். நாலு நாள்ல கல்லுப்பட்டி பூரா, குழந்தை வேலு பேரன் தாஜ்மஹால் பார்த்து, டெல்லில இருக்கது தெரிஞ்சு போச்சு. நாலு நாளுக்கப்பறம் போஸ்ட் கார்டை வீட்டுல வச்சுட்டார்.

குழந்தைவேலு டெக்னிக் எப்படி? கிராமப்புற பெருசுகளுக்கு பேரன், பேத்தின்னா அவ்வளவு உசிரு. அவங்க நல்லா இருக்கது அவங்களுக்குக் கூடக் கொஞ்சம் சந்தோஷம். குழந்தைவேலு பேரன் வேற யாரு, சாட்சாத் நம்ம முனியப்பன் தான்.