Monday, February 2, 2009

நாகேஷ்

மறக்கமுடியாத நகைச்சுவை நடிகர். அவருடைய நகைச்சுவை கதாபாத்திரங்கள், உணர்ச்சிகரமான வேடங்கள் மறக்க முடியாதவை. முனியப்பனின் மனதை மட்டும் கவர்ந்த நடிகரல்ல அவர், உலகத் தமிழர்கள் அனைவரையும் கவர்ந்தவர்.

அவரது ஒல்லியான உடல்வாகும், வேகமான நடனமும் நினைவில் நிற்பவை. நகைச்சுவை நடிகர்களில் நடனத்திலும் சிறந்து விளங்கியவர் திரு.நாகேஷ் தான். நகைச்சுவை நடிகர்களில் கதாநாயகனாக வெற்றிக்கொடி நாட்டியவர் அவர் மட்டும் தான். அவருடைய நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், சாது மிரண்டால் போன்ற படங்களில் கதாநாயகனாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி, அந்தப் படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு அடித்தளம் அமைத்திருப்பார்.

அனைத்து நகைச்சுவை நடிகைகளுடனும் ஜோடி போட்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய் சங்கர், ரஜினி, கமல் ஆகிய எல்லோருடனும் நகைச்சுவை வேடம் கட்டியவர். திருவிளையாடல் படத்தில் வறுமையில் வாடும் 'புலவர் தருமியாக' வருவார். பாட்டுக்குப் பொற்காசு என்று அறிவிக்கப்பட்டவுடன், கோயிலில் பாட்டுக்கு நான் எங்க போவேன் என்று புலம்புவார். சிவபெருமானிடம் பாட்டை வாங்கி வந்து நக்கீரனிடம் மாட்டி பிழை இருக்கிறது என்றதும் "எவ்வளவுக் கெவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்து கொடுங்கள்" என்று கெஞ்சும் போதும், பின்பு கோவிலில் வந்து "அவன் வரமாட்டான்" என்று நொந்து பேசும் போதும் பட்டயக் கெளப்பியிருப்பார் நாகேஷ்.

'அன்பே வா' படத்தில் காஷ்மீரில் எம்.ஜி.ஆர் வீட்டை எம்.ஜி.ஆருக்கே வாடகைக்கு விட்டு அசத்தியிருப்பார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் 'வைத்தி'யாகக் கையில் எலுமிச்சம்பழத்துடன் வருவார். காதலிக்க நேரமில்லை படத்துல கலக்கல் காமெடி. சினிமா மோகத்துல, சினிமா டைரக்ட் பண்ண துடிக்கிற character. அவருடைய தந்தையாக வரும் பாலையாவிடம் நச்சரிப்பார். பாலையாவும் ஒரு கட்டத்தில் "சரி ஒன் கதைய சொல்லு"ன்னு கதை கேக்கவும் ஒக்காருவார். அவர்கிட்ட நாகேஷ் கதை சொல்லி மிரள வச்சு, நடுங்க வைப்பார் பாருங்க, சிரிச்சிக்கிட்டேயிருக்கலாம்.

நகைச்சுவை, உணர்ச்சிகரமான வேடங்கள் தவிர, வில்லனாகவும் திரையில் தோன்றியவர் அவர். கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் மெயின் வில்லனே நாகேஷ் தான். தமிழ் திரைப்பட வரலாற்றில் அவர் ஒரு மைல் கல் & LEGEND.