Sunday, June 28, 2009

கொடியவள் நீ ...

காதல் என்றால் என்ன என்றவனை
காதல் வலையில் வீழ்த்தி காதலுக்கு
முகவுரை எழுதியவளும் நீ
முடிவுரை எழுதியவளும் நீ

கரம்பற்றி கைகோர்த்தது
கைவிடவா....?

நீ கவிழ்த்தது கப்பலை அல்ல
என் இதயத்தை
சிதறு தேங்காய் போல்
சிதறியது என்மனக் கோட்டைகள்

நீ வளர்த்த காதலை
நீயே தகர்த்த கொடியவள் நீ

என் இதயத்தை
ஏன் ரணகளமாக்கினாய் ... ?

காதலிக்க ஒருவன்
கைப்பிடிக்க ஒருவன்
நீயும் ஏன்
பத்தோடு பதினொன்றாகிப் போனாய்....?

Monday, June 22, 2009

Table Tennis காலங்கள்

முனியப்பன் டேபிள் டென்னிஸ் விளையாடப் பழகுனதே ஒரு தற்செயலான நிகழ்ச்சி. முனியப்பன் காலேஜ்ல இருந்து ஒதுக்கி வச்சிருந்தாங்க. சேட்டைக் காரனை என்ன செய்வாங்க. Suspension தான். அப்ப சும்மா இருக்க காலத்துல, காலேஜ் டேபிள் டென்னிஸ பிளேயர் ஒருத்தர் அடிஷனல் ஸ்டூடண்டா இருந்தாரு. ரெண்டு பேரும் பிரண்ட்ஸா, பொழுது போகணும்ல முனியப்பனுக்கு Table Tennis விளையாட சொல்லிக்குடுத்தார்.

அப்ப நெல்லை மருத்துவக் கல்லூரில, ஸ்போர்ட்ஸ் டே வந்துச்சு, inter class தான். முனியப்பன் அவர் classmateடோ ட கல்லூரி விளையாட்டு விழாவுக்காக கொஞ்சம் seriousஆ அதிக நேரம் பிராக்டிஸ் பண்ணாங்க. லேடிஸ் வேற Table Tennis வெளையாடலாம்னு முடிவு பண்ணி அவங்களுக்கும் போட்டின்னு அறிவிச்சாங்க.

முனியப்பனே அரைகுறை. இதுல அவர் பேட்ச் லேடி ஒருத்தருக்குTable Tennis வெளையாட பழகிக் கொடுத்தார். எல்லா கிளாஸ்லயும் miss world மாதிரி ஒரு அழகி இருப்பாங்கள்ல, "clean beauty" வகுப்பு அழகி அவங்க தான். முனியப்பன் கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டாங்க.

வகுப்பு அழகியோட முனியப்பன் Table Tennis வெளையாடுற நியூஸ் மாணவர்கள் மத்தில தீயாப் பரவிருச்சு. ரெண்டு பேரும் எப்படா வெளையாடுவாங்கன்னு தேடி வந்து பாக்க ஒரு குரூப். வகுப்பு அழகிய பின் தொடர்பவர்கள் (followers) ஒரு குரூப். One side love (ஒரு தலைக் காதல்) உள்ளவங்க ரெண்டு பேர், அவன்ங்களுக்கு தொணைக்கு 2 பேர், நாலு பேரும் முனியப்பன் வகுப்பு அழகி வெளையாடும் போது, பந்து பொறக்கி போட வந்துருவாய்ங்க.

ஒரு 15 நாள், செம ஜாலி "முனியப்பன் நேரத்தைப் பாருடா"ன்னு அவிங்களுக்கு முனியப்பன் மேல பொறாமை வேற. அவனுகளைப் பாக்கப் பாக்க முனியப்பனுக்கு சிரிப்பா வரும். சிரிப்ப அடக்காம முனியப்பன் சிரிச்சிருவார். அவனுகளுக்கு ஒரு மாதிரி ஆயிரும். ஒரு lady முன்னாடி nose cut பண்ணா feeling அவனுகளுக்கு வந்துரும்.

Sports dayம் வந்துருச்சு. முனியப்பனும் அவர் நண்பரும் ஆண்கள் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று வின்னர். முனியப்பன் நண்பர் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தோல்வி. மகளிர் பிரிவில் நம்ம வகுப்பு அழகி இரண்டாவது சுற்றில் தோல்வி.

இரட்டையர் கலப்பு பிரிவில் (mixed doubles) என்னாச்சு ? நம்ம முனியப்பனும் வகுப்பு அழகியும் இறுதி ஆட்டத்தில். இறுதி ஆட்டம்(Finals)னாலே பரபரப்பு தான். ஆட்டத்தைப் பார்க்க ரெண்டு வகுப்பைச் சேந்த 60 பேர் சுத்தி இருக்காங்க. எதிர் தரப்பு ஒரு காதல் ஜோடி. அப்பத்தான் சீரியஸான காதல் ஆரம்பம். முனியப்பனுக்கு எதிர்தரப்பு ஜோடி நெருங்கிய நண்பர்கள். முனியப்பனுக்கு எளகின மனசு. அப்புறம் என்ன நடக்கும் ? போராடி தோக்குற மாதிரி முனியப்பன் தோத்துட்டார்.

60 பேர் முன்னால இறுதி ஆட்டத்துல தோத்தா எப்படி இருக்கும் ? வகுப்பு அழகி அழுததைப் பாக்கணும் அன்னைக்கு, அவங்க கண்ணீரைத் தொடச்சி விட அவங்க தோழி, பந்து பொறக்கி போட வருவாங்களே ரெண்டு பேரு, அவங்க ரெண்டு பேரும் முனியப்பனை எகிறித் தள்ளிட்டாங்க "எப்படிடா தோக்கலாம்னு".

அடுத்த நாள் அந்த இளம் ஜோடி முனியப்பனுக்கு நன்றி சொன்னாங்க. ஜெயிச்சிருந்தா கெடைச்சிருக்கக் கூடிய சந்தோஷத்தை விட, அந்த ஜோடி சொன்ன நன்றி முனியப்பனுக்கு மிகப் பெரிய வெற்றி.

காலேஜ்ல மட்டும் TT வெளையாண்டா போதுமா? Inter College டோ ர்னமெண்ட் வேண்டாமா? அதெப்படி அங்க போகாம இருக்க முடியுமா ?

3 வருஷம் நெல்லை மருத்துவக் கல்லூரிக்காக Table Tennis வெளையாண்டார் முனியப்பன். TT வெளையாட்டெல்லாம் சீரியஸா வெளையாடுறது இல்ல. படிக்கணும்ல, முனியப்பனும், அவங்க டீமும் மேட்சுக்கு முன்னால 10-20 நாள் practice பண்ணுவாங்க. அதுக்கப்புறம் மேட்ச், மேட்ச் முடிஞ்ச ஒடனே படிப்பு.

மொதமொத முனியப்பன் TT மேட்ச் வெளையாட நிக்கிறார். எதிர் அணி மதுரை மருத்துவக் கல்லூரி. எடமும் அதே மதுரை மெடிக்கல் காலேஜ் தான். முதல் எதிராளி மதுரை யுனிவர்சிடி கேப்டன். சிங்கத்தை சிங்கத்தோட கோட்டையில சந்திச்சார் முனியப்பன். வேற என்ன செய்ய? ஸ்ட்ரெய்ட் setல தோல்வி தான்.

முனியப்பனை ஈஸியா ஜெயிச்சரலாம்னு slowவா வெளையாண்ட கேப்டன் எதிர்பார்க்காம முனியப்பன் shot அடிச்சார். Shot அடிச்சுப் பாயிண்ட் எடுத்த ஒடனே TT batஅ TT டேபிள்ல வச்சுட்டு clap பண்ணார் பாருங்க. வேடிக்கை பாக்க வந்த மதுரை மெடிக்கல் மாணவர்கள் அதிர்ந்து, பெறகு சுதாரிச்சு அவங்களும் கைதட்டினாங்க. முனியப்பனை லேசா எடை போட்ட கேப்டன், பெறகு சீரியஸா வெளையாண்டு ஜெயிச்சார். பாய்ண்ட்டே எடுக்க முடியாது அவ்வளவு தான்னு நெனச்ச முனியப்பன் ஒவ்வொரு setலயும் 10,10 பாய்ண்ட் எடுத்தார். முனியப்பன் shotக்கு மக்கள் கைதட்டுனாங்க. எதிராளி கோட்டைல ஒரு ஒரு மறக்க முடியாத கலக்கல்.

படிப்புல கவனம் செலுத்துனதால முனியப்பன் வெளையாட்டுல சீரியஸா எறங்கல. 3 வருஷம் நெல்லை மருத்துவக் கல்லூரிக்காக முனியப்பன் வெளையாண்ட Inter Collegieate மேட்ச் 9. அதுல 3 வின், 6 தோல்வி. ஆனா படிப்புல, 2 பாடத்துல university ஃபர்ஸ்ட்.

1978 - 1980ல டேபிள் டென்னிஸ் வெளையாண்ட ரூமை 1992ல முனியப்பன் பாத்தபோது எடுத்த photo. பசுமையான TT நாட்கள்.

Wednesday, June 17, 2009

அஷுக்குட்டியின் முதல் ஃபோட்டோ

4 வயசு அஷுவுக்கு ஒரு கேமரா வாங்கிக்கொடுத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்லிக்கொடுத்தார் முனியப்பன். அஷுவுக்குப் பொதுவான instructions தான். அஷு மனதுக்குப் பிடித்த மாதிரி அவனாக எடுத்த ஃபோட்டோஸ்.

அஷுவோட அப்பா, அம்மா, அண்ணன் அமர்

அஷுவோட மீன்கள்


அஷுவோட எலக்ட்ரிக் பைக்

அமர்நாத், அஷுவின் அண்ணன் மீனுக் குட்டியுடன் (பூனை)

அஷுவின் பீரோ

அஷுவின் TV, கார்டூன் நெட்வொர்க்

அஷுவின் ஆச்சி (முனியப்பன் அம்மா)

அஷு, எடுத்தது அண்ணன் அமர்

சிறு வயதிலேயே குழந்தைகளை ஆர்வமூட்டி வளர்க்கும் பொழுது பிற்காலத்தில் அவர்கள் சிறப்பாக வருவார்கள் தங்கை பிள்ளைகள் வளர்ப்பில் முனியப்பனின் டெக்னிக் இது.

Sunday, June 7, 2009

DIABETIC RETINOPATHY - ஏட்டையா

முனியப்பன் clinic வச்சிருக்க ஏரியால ஒரு ஏட்டையா (Head Constable) . மதுரை S.S.காலணி போலீஸ் ஸ்டேஷன்ல வேல பாத்துக்கிட்டிருந்தார். நீரிழிவு (Diabetes) வியாதிக்காரர்.

ஒரு நாள் முனியப்பன் அவரை ரோட்ல கிராஸ் பண்ணும் போது பாக்குறார். ஏட்டையா ரொம்ப மெலிஞ்சிருந்தார். முனியப்பன் டூ வீலரை நிப்பாட்டி ஏட்டையாவ clinic வரச் சொன்னார். டெஸ்ட் பண்ணிப் பாத்தா ரத்தத்துல சுகர் கண்டபடி எகிறியிருக்கு. TB வியாதி வேற நுரையீரலத் தாக்கியிருக்கு. சுகருக்கு இன்சுலின் போட்டு, TBக்கும் ஊசி, மாத்திரை குடுத்து முனியப்பன் ஏட்டையாவ சுகமாக்கிர்றார். ஒரே ஒரு அட்வைஸ் ஏட்டையாவுக்கு. தண்ணி அடிக்கக்கூடாது. ஏன்னா, ஏட்டையா சூப்பர் தண்ணி பார்ட்டி.

தண்ணி அடிக்காதன்னா யாராவது கேப்பானா...? ஏட்டையா ஊத்துறார். போலீஸ் யூனிஃபார்ம்லேயே எங்கயாவது flat ஆகி ரோட்ல கூட படுத்துக்கிடப்பார். யாராவது தெரிஞ்ச ஆள் அவரத் தூக்கிக்கொண்டு போய் அவர் வீட்ல விட்ருவாங்க.

முனியப்பன் கிட்ட ஏட்டையா அப்பப்ப வருவார். ரத்தத்துல சுகர் 300க்கு கொறையாது. முனியப்பன் சத்தம் போடுவார். ஏட்டையாவா கேக்குற ஆளு. 'அவன் கெடக்கான் டாக்டரு'ன்னு அவர் மனசுக்குள்ளயே வச்சிக்கிருவார். டெய்லி தண்ணி தான்.

ஒரு தடவை விராட்டிபத்து போலீஸ் செக்போஸ்ட்ல 150 ஃபுல் பாட்டிலோட ஒரு ஆட்டோ வ நிப்பாட்டிர்றாங்க. பாண்டிச்சேரிலருந்து கடத்திக்கிட்டு வந்த சரக்கு. ஆட்டோ வ விட்டுட்டு அதுல வந்த மூணு பேரும் எறங்கி ஓடுறானுவ. செக் போஸ்ட்ல நம்ம ஏட்டையாவும் டூட்டில இருக்கார். ஏட்டையாவ பாட்டில பாத்துக்கிட சொல்லிட்டு SI யும் ரெண்டு கான்ஸ்டபிளும் ஓடுறவங்களைப் பிடிக்க ஓடுறாங்க. எவன் பிடிபடுவான் ... ? மூணு பேரும் எஸ்கேப். SI திரும்பி வந்து பாத்தா, அந்த நாலுல ஒரு பாட்டில ஓபன் பண்ணி முக்காவாசியக் குடிச்சி முடிச்சிட்டார் நம்ம ஏட்டையா. எவ்வளவு சின்சியரான டூட்டி பாருங்க...?

குடியும் சுகரும் பிரண்ட்ஸ். குடிக்க குடிக்க சுகர் கொறையாது. இது நடைமுறை, குடிய நிப்பாட்டுனா சுகர் கொறையும். நம்ம ஏட்டையாவா குடிய நிப்பாட்டுற ஆளு.

டெய்லி குடிக்கறதுக்கு எதாவது நடக்கணும்ல. அதெப்படி நடக்காம இருக்கும். ஏட்டையாவுக்கு கைல, கால்ல வெரல்ல புண்ணு வர ஆரம்பிச்சது. வெரல் அழுகி (Diabetic Gangrene) ஏட்டையா கைலயும், கால்லயும் 6 வெரல கட் பண்ணி எடுத்தாச்சு.

வெரல் போனா என்ன...? குடிய நிப்பாட்ட முடியுமா? ஏட்டையா குடிச்சிகிட்டே இருக்கார். கண்ல பார்வை கொறைய ஆரம்பிக்குது. தமிழ்நாட்ல உள்ள எல்லா கண் ஆஸ்பத்திரிலயும் காட்டுறார். சுகரக் கண்ட்ரோல் பண்ணாததால (Uncontrolled Diabetes) பார்வைக்கு வாய்ப்பில்லை. லேசர் தான் வைக்க முடியும், மேஜிக் மாதிரி எதுவும் செய்ய முடியாது அப்படின்னு சொல்லிர்றாங்க. கண்ணோட கதை முடிஞ்சிருச்சு.

டூ வீலர்ல முனியப்பன்கிட்ட தானே வந்தவர், கொஞ்ச நாள் கழிச்சு நடந்து வர்றார் (கண் பார்வை கொறையுதுல்ல...). நடந்து வந்தவர், அப்புறம் அதுவும் முடியாம ஆட்டோல வர்றார். ஒரு நிதானத்துல வீட்டுக்கு பக்கத்துல இருந்த கடைக்குப் போய்க்கிட்டிருந்தார். இப்ப அதுவும் முடியாம வீட்டுக்குள்ளேயே மொடங்கிக் கெடக்குறார். வீட்டுக்குள்ள நடக்கிறதுக்கே யாராவது help பண்ணனும்.

கண் கெட்ட பெறகு சூர்யநமஸ்காரம்பாங்க. கண் பார்வை முழுசா போன பெறகு இப்ப நம்ம ஏட்டையா இப்ப குடிக்கறதில்லை.

Tuesday, June 2, 2009

Boxing 11 ரவுண்டு - Ashu

4 வயசு Ashuக் குட்டி முனியப்பன் தங்கச்சி மகன். அவனும் அவன் அண்ணன் 7 வயசு அமரும் முனியப்பனைப் பாடாப் படுத்திருவானுக. இரவு 10.30க்கு நைட் ரவுண்ட்ஸ் டூ வீலர்ல. Ashu கையக் காட்டுற பக்கம் எல்லாம் வண்டிய ஓட்டிட்டுப் போகனும் (ஆளுக, போக்குவரத்து குறைவான பகுதி தான்). ரவுண்ட்ஸ் முடிஞ்ச உடனே வெளையாட்டு.

இப்ப ரெண்டு நாளா Boxing நடக்குது. 4 வயசு Ashuவும் முனியப்பனும் மோதுவாங்க. எடம் முனியப்பனின் படுக்கை. 7 வயசு அமர் நடுவர். Boxing 11 ரவுண்ட், 1 ரவுண்டுக்கு 1 பாயிண்ட். அதுல யார் ஃபர்ஸ்ட் 6 ரவுண்ட் ஜெயிக்கிறாங்களோ, அவங்க தான் வின்னர். குத்துச் சண்டை வீரர்கள் குதிக்கிற மாதிரி Ashuவும் முனியப்பனும் குதிப்பாங்க. போட்டிக்கு முன்னால Ashu கையவும், முனியப்பன் கையவும் பிடிச்சு Shake Hands குடுக்க வைப்பார் அமர். போட்டி துவங்கறப்ப மொதல்ல இப்பிடி வர்ணனை குடுப்பார் அமர். "இப்ப டாக்டர் முனியப்பனும் டாக்டர் Ashuவும் சண்டை போடப் போகிறாங்க, Action"ம்பார்.

Actionன உடனே Ashuவும் முனியப்பனும் குத்துக்களை விட ஆரம்பிச்சிருவாங்க. Ashu குத்தின ஒடனே முனியப்பன் கீழே விழுந்துருவார். Ashu 1 பாயிண்ட். அடுத்து முனியப்பன் Ashuவைக் கீழே தள்ளிவிட்ருவார், முனியப்பன் 1 பாயிண்ட். Ashu 2 முனியப்பன் 2 வந்த ஒடனே Ashu கண்ணு கலங்கிரும். அடுத்த ரவுண்ட்ல எல்லாம் Ashu குத்துக்கு முனியப்பன் கீழே விழுந்துருவார். 6 பாயிண்ட் Ashu எடுத்துருவார். நடுவர் அமர், "Ashu 6 பாயிண்ட் எடுத்து வின்னர் ஆயிட்டார்"னு முடிவை அறிவிப்பார்.

அப்ப Ashuவோட நடையைப் பாக்கணும். வெற்றி நடை, துள்ளல் நடை, வாயெல்லாம் சிரிப்பு, "ஹே"ன்னு ஒரு சத்தம். குழந்தைகளைக் குதூகலப்படுத்திப் பார்ப்பது தனி இன்பம்......