Thursday, March 12, 2009

சன் (son) of தமிழன் எழுத்து

இன்னார் மகன் இன்னார்

குழந்தை பிறந்த ஒடனே தாயார் தகப்பனார் பேர் போட்டு பிறப்பு சான்றிதழ் ஸ்கூல்ல காலேஜ்ல சேரும் போது அப்ளிகேஷன்ல இன்னார் மகன் இன்னார் ஸ்கூல் காலேஜ் TCல இன்னார் மகன் இன்னார் எங்க போனாலும் இதே தான். கடைசில செத்த பிறகு இறப்பு சான்றிதழ்ல கூட இன்னார் மகன் இன்னார் போட்டுதான் பதியனும்.

இது தான் தெரியுமே. அப்புறம் எதுக்குங்கிறீங்களா ? இங்க தான் தமிழன், அவனோட மொழி, அவனோட எழுத்து வருது.

தமிழன் நாகரீகம், சுமேரிய நாகரீகம், ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகங்கள் பழமையானவை எல்லா எடத்துலயும் எழுத்து இருக்கு. தமிழன் இங்கதான் ஸ்கோர் பண்றான்.

தமிழ் பிராமி எழுத்து காலத்துல இருந்து இன்றைக்கு வரைக்கும் இன்னார் மகன் இன்னார்னு பதியறாங்க. தமிழ் பிராமின்னா தமிழ் மொழிய மொத மொத எழுதுனது பிராமி முறைல. 2000 வருஷம் பழமையான எழுத்து தமிழன பாருங்க 2000 வருஷத்துக்கு முன்னாலேயே மகன் அப்படிங்கற வார்த்தைல பயன்படுத்தியிருக்கான். அன்னைக்கே தமிழ் மொழிய எழுத்துல பொறிச்சு வச்சிருக்காங்க.

1) அந்தைய் பிகன் மகன் வெண்அ
விக்கிரமங்கலம் கல்வெட்டு கிமு.2ம் நூற்றாண்டு
2) கணதிகண் கணக அதன் மகன் அதன்
அழகர் மலை கிமு முதலாம் நூற்றாண்டு கல்வெட்டு
3) இலஞ்சில் வேள் பாப்பாவன் மகன் மெயவன்
கிமு 3ம் நூற்றாண்டு அரிட்டாபட்டி கல்வெட்டு
என்ன மகன் கதையா இருக்கே அந்த காலத்து தமிழனுக்கு மக இல்லையா? கொதிக்காதீங்கப்பா கூல் டவுண்.


நல்லிய் ஊர் ஆ பிடந்தை மகள்
கீரன் கொற்றி அதிடானம்
கல்வெட்டு புகளுர்-2ம் நூற்றாண்டு கி.பி
ஆ பிடந்தை மகள் கீரன் கொற்றி

மகன் மகள் என்ற வார்த்தைகள் அந்த காலத்திலேயே வழக்கில் இருந்திருக்கிறது. அதைக் கல்வெட்டில் பதித்து மொழியை வளர்த்திருக்கிறார்கள்.

ஜராவதம் மகாதேவன், நாகசாமி இவங்கல்லாம் சீனியர் தொல்லியல் ஆய்வாளர்கள் கல்வெட்டுகளை பத்தி நெறய புக் போட்ருக்காங்க.

சன் ஆஃப், டாட்டர் ஆஃப் எல்லாம் இன்னைக்கும் இருக்கு தமிழன் தெரிஞ்சோ, தெரியாமலோ தாய் மொழி தமிழை காப்பாத்திகிட்டுருக்கான். தமிழ் நிரந்தரமானது. தமிழுக்கு அழிவில்லை. என் தாய்மொழி தமிழ் என கூறுவதில் நம் அனைவருக்கும் பெருமைதான்.