Thursday, January 14, 2010

பத்து மாதம் வயித்து வலி

வித்தியாசமான நோயாளிகள் முனியப்பனைப் பார்க்க வருவார்கள்


டிசம்பர் 15, 2009 இரவு 9.15 மணிக்கு முனியப்பன் கன்சல்டிங் ரூமில் ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவசரமாக ஒரு 45 வயசுப் பெண்மணி முனியப்பனின் ரூமிற்குள் நுழைகிறார். "மகளுக்கு முதல் குழந்தை பிறந்து பத்து மாசம் ஆச்சு. இன்னும் பீரியட்ஸ் வரலை, இப்ப வயித்த வலிக்குதுங்குறா, உள்ள படுக்க வச்சிருக்கேன்" அப்படிங்கிறார்.

முனியப்பன் வேறொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததால், தனது ஆஸ்தான உதவியாளர் வள்ளியை அழைத்து என்ன என்று பார்க்கச் சொல்கிறார். வள்ளி பரிசோதிக்கப் போன வேகத்தில் திரும்பி வர்றார். வந்து "சார் மாசமா இருக்கு சார்"னு சொல்கிறார். முனியப்பன் வள்ளி கிட்ட வலிக்கு ஊசியப் போடுன்னுட்டு நோயாளியோட தாயாரைக் கூப்பிட்டு "ஏம்மா, ஒன் மக மாசமா இருக்கது ஒனக்குத் தெரியலையா? போய் லேடி டாக்டரைப் பாருங்கம்மான்னு" சொல்றார்.

வள்ளி ஊசி போட்டு வந்துர்றார். நோயாளியப் போய் "மாசமா இருக்கது ஒனக்கு எப்படி தெரியாது"ன்னு கேட்க முனியப்பன் கெளளம்பி போறார். வள்ளியும் துணைக்குப் போறாங்க. பெண் நோயாளிய ஆண் மருத்துவர் பரிசோதிக்கும் போது பெண் உதவியாளர் கூட இருக்கணும். இது தொழில் நியதி. சூடா ஒரு வார்த்தை கேட்டுட்டு பரிசோதிப்போம்னு போன முனியப்பனுக்கும், வள்ளிக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி. குழந்தையோட தலை வெளியே வந்துருச்சு, பிரசவம் ஆரம்பிச்சுருச்சு. என்ன செய்றதுன்னு தெரியாம இந்த மாதிரி மாட்டிக்கிடற சூழ்நிலைகள் வரும். பிரசவத்துக்கான உபகரணங்கள் இல்லை. பிரசவம் நடக்குது, என்ன செய்றது? மருத்துலவ ஆலோசனைக்கு 7 நோயாளிகள் வெயிட்டிங்.

சிக்கலான சூழ்நிலைல தான் முனியப்பனின் மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்யும். முனியப்பன் வள்ளியோட பிரசவம் பார்க்க ஆரம்பிச்சுர்றார். முனியப்பனுக்கு சோதனை வைக்காம பிள்ளை பிறந்திருது. 9.15க்கு வந்த பேஷண்டுக்கு 9.25க்கு பிரசவம். 10 நிமிஷத்துல பிள்ளையோட குவா குவா சத்தம் கேட்டதும், ஆஸ்பத்திரில இருந்த எல்லாருக்கும் ஒரே சிரிப்பு, ஒரு பக்கம் மனசுக்கு சந்தோஷமா இருந்தாலும், அடுத்து செய்ய வேண்டியதை யோசிச்சார் முனியப்பன். பிள்ளை பொறந்துருச்சு, இனி CORD STRUCTURES கட் பண்ணணும். PLACENTA வெளிய வரணும். பிறந்த குழந்தய MECONIUM சுத்தம் பண்ணணும்.

முனியப்பன் வெளில நின்ன ஒரு ஆட்டோல ஏறி பக்கத்துல இருந்த lady டாக்டர் கிட்ட போய் சொன்ன உடனே, அவங்க ஒரு உதவியாளரை அனுப்புனாங்க. முனியப்பன் இல்லாம தாயும் பிள்ளையோட வள்ளி தனியா. வள்ளிக்கு இது புது அனுபவம். முனியப்பன் 7 நிமிஷத்துல ஆளோட திரும்பி வந்துர்றார். அதுக்குள்ள மொபைல்ல வள்ளி "சார் கொடி கழுத்தச் சுத்தி இறுக்கமா இருக்கு", முனியப்பன் "ஒரு வெரல வச்சு அழுத்தமா பிடி" வள்ளி "பயமாயிருக்கு" முனியப்பன் "பயப்படாத" இப்படி வேற calls.

வள்ளியும் அந்த உதவியாளரும் சேர்ந்து தாயையும், பிள்ளையையும் சுத்தம் பண்ணி, எல்லா வேலையும் முடிஞ்சுருது. தாயும், பிள்ளையும் நலம். இரவு மணி 10.20, 9.10க்கு வயித்த வலியோட வந்த பொண்ணு 10.20க்கு கைல குழந்தையோட. தாயையும், பிள்ளையையும் பேறு காலத்துக்கான அடுத்த கட்ட மருத்துவ கண்காணிப்புக்கு அதே lady டாக்டர்கிட்ட அனுப்பிர்றார் முனியப்பன்.

இதுக்கிடைல, முனியப்பன் கிளினிக் பக்கத்துல உள்ள வீட்டுக்காரங்க, அந்தப் பொண்ணோட சொந்தக்காரங்க அப்படின்னு ஒரு கூட்டம் சேந்துருது. எல்லாரும் அந்தப் பொண்ணோட தாயாரை வைறாங்க "மக வயிறு வீங்கியிருக்கு, மாசமா இருக்கது ஒனக்கு எப்படி தெரியாம போச்சு"ன்னு.

இதுக்கெல்லாம் காரண கர்த்தா அந்தப் பொண்ணோட ஆம்படையான் இப்ப வர்றான். கோவிலுக்கு மாலை போட்டிருக்கான். முனியப்பன் அவனைக் கோபமாகவே கேட்கிறார், "ஏம்ப்பா ஒன் பொண்டாட்டி மாசமா இருக்கது ஒனக்கு எப்படிப்பா தெரியாம போச்சு" அதுக்கு அவன் "சாமி, நான் ஒண்ணும் செய்யலை, மாலை போட்ருக்கேன் சாமி" அப்படின்றார். முனியப்பனுக்கு கடுப்பாயிருது "எலேய் நீ இப்ப தாண்டா மாலை போட்ருக்கே " அப்படின்றார்.

ஒரு பொண்ணு மாசமாயிருக்கது அந்தப் பொண்ணுக்கோ, தாயாருக்கோ, வீட்டுக் காரனுக்கோ எப்படி தெரியாம இருக்கும் ? முழு கர்ப்பத்தை எப்படி மறைக்க முடியும் ?.

பொங்கல் வாழ்த்து

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்