Thursday, March 5, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (வள்ளி)

சேலையா ? கொடமா ?

மதுரைல அஞ்சாநெஞ்சர் மு.க.அழகிரியோட பிறந்த நாளை, மதுரைல உள்ள தி.மு.க. உடன் பிறப்புகள் ஒவ்வொரு பகுதிவாரியா கொண்டாடுறாங்க. நலத்திட்டங்கள்னு பேர்ல, இலவச மருத்துவ முகாம், இலவசமா பொருட்கள் வழங்குறது அப்படின்னு.

முனியப்பன் கிளினிக் நேரம். அந்த நேரத்துல ஒருத்தர் வந்து வள்ளிகிட்ட அழகிரி படம் போட்ட ஒரு கூப்பனைக் குடுத்து "சேலை குடுக்குறாங்க. ஒடனே போ" அப்படின்னு சொல்றாங்க. வள்ளிக்கு 'ஆஹா. சேலை free' அப்படின்னு ஒரு ஜில். முனியப்பன்கிட்ட சொல்லிட்டு சேலை வாங்கப் போறாங்க. அங்க போய்ப் பார்த்தா ஒரே கூட்டம். ஒரு கல்யாண மண்டபம் முன்னால 2000 பேருக்கு மேல நிக்குறாங்க. முனியப்பன்கிட்ட இருக்கறதால,

அந்த கூட்டத்துல பாதிப்பேர் தெரிஞ்ச முகமாயிருக்கு, "நீ போப்பா"ன்னு, வள்ளிய முன்னால அனுப்பி விடுறாங்க. பொருள் குடுக்கற எடத்துக்கு போனா, - வள்ளிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. 'சேலைன்னு சொன்னாங்க, கொடமும் சேர்த்துக் குடுக்குறாங்க'ன்னு. வள்ளிகிட்ட அழகிரி படம் போட்ட கூப்பனை வாங்கிக்கிட்டு கொடமும் சேலையும் குடுக்கறாங்க.

சேலையும், கொடமும் வாங்கிட்டு சந்தோஷமா வள்ளி வெளிய வாராங்க. அப்ப பாருங்க கொடுமைய. வாங்கிட்டு வர்றத புடுங்கிட்டு போறதுக்கு ஒரு 40 பேர் நிக்கிறான். அவங்கள தாண்டித்தான் வரணும். வள்ளி வாங்கிட்டு வந்த சேலையப் பிடிச்சு ஒருத்தன் இழுக்கிறான். இந்த மாதிரி இக்கட்டான நேரங்கள்ல நம்ம மூளை ரொம்ப சுறுசுறுப்பா செயல்படும். ரெண்டுல ஒண்ணு-எதுன்னு முடிவு பண்ண வேண்டிய தருணம். வாழ்வா? சாவா? உயிரா? மானமா? மாதிரி இப்ப வள்ளிக்கு கொடமா? சேலையா? பிரச்சினை.

வள்ளியோட ஒடம்புல அட்ரினலின் ஓட்டம். கண நேரத்துல (fraction of a second) முடிவு பண்றாங்க. சேலை இத்துப் போகும், இல்ல கிழிஞ்சு போகும். கொடம் என்னைக்கும் இருக்கும். சேலை போனாப் போகுதுன்னு கொடத்தை இறுகப் பிடிச்சுக்கிட்டு தப்பிச்சு வந்துர்றாங்க.