Sunday, May 20, 2012

ஹெல்மெட் தொடர்ச்சி .....

கண்ணப்பன் மதுரை கமிஷனரா இருந்தவர். பிப்ரவரி, 2012ல மதுரைல டூவீலர் ஓட்டுற போலீஸ் எல்லாரும் தலைல ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்ட விட்டார். பிப்ரவரி 29ல இருந்து ஹெல்மெட் போடாம டூவீலர் ஓட்டுற பொது ஜனத்தை பிடிச்சு ஃபைன் போட ஆரம்பிச்சாங்க. மார்ச் 5ந் தேதிக்குள்ள மதுரைல டூவீலர் ஓட்டுற எல்லாரும் தலைல ஹெல்மெட் மாட்டிட்டாங்க.

எங்க பாத்தாலும் ஹெல்மெட் தலை தான். ஹெல்மெட் போடலைன்னா போலீஸ் பிடிக்கும்... அப்புறம் ஃபைன் ... இப்படியே ஏப்ரல் 15 வரைக்கும் ஓடுச்சு. கண்ணப்பன் ஐபிஎஸ் மதுரைல இருந்து டிரான்ஸ்பர் வாங்கிட்டுப் போனார். இப்ப யாரும் ஹெல்மெட் போடுறது இல்ல. போலீசும் பிடிக்கிறது இல்ல. எல்லாமே LAW ENFORCING AUTHORITYய பொறுத்துத் தான்.

Friday, May 11, 2012

நீ மட்டும் ஏன் ஹெல்மெட் போட மாட்டேங்குற - அமர்

இப்ப தலையில ஹெல்மெட் மாட்டிக்கிட்டுத் தான் டூவீலர் ஓட்டணும்னு ஒரு ரூல் போட்டு, பிப்.29ம் தேதில இருந்து ஹெல்மெட் போடாம டூவீலர் ஓட்டுறவங்களை பிடிச்சு ஃபைன் போடுறாங்க.

நம்ம முனியப்பன் ஹெல்மெட் போடாம டூவீலர்ல போற ஆள். பயண தூரம் 1 கி.மீ. தான். அதுக்குப் போய் எதுக்கு ஹெல்மெட்டு. பிடிக்கிற போலீஸ் சரக (லோக்கல்) போலீசா இருந்தா முனியப்பன் டூவீலர்ல வந்தா விட்டுருவாங்க. பிடிக்கிற போலீஸ்ல இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, ஏட்டையா இல்லன்னா பிசி இப்படி முனியப்பன்கிட்ட ட்ரீட்மெண்ட் பாக்க வர்றவங்க.

டிராஃபிக் போலீஸ் டீமா வந்து பிடிப்பாங்க. அப்புறம் முனியப்பன் ஹெல்மெட் போடமாட்டார். சைட் ரோட்ல போயிடுவார். நேரா போயிரலாம். அப்புறம் அவுக கிட்ட நிக்கணும்.

இப்ப காலைல டென்னிஸ் வெளையாட அமர், அஷுவை முனியப்பன் எட்வர்ட் ஹாலுக்கு கூப்பிட்டுப் போறார். வழக்கம் போல ஹெல்மெட் போடாமத் தான். எல்லாரும் தலைல ஹெல்மெட் மாட்டிக்கிட்டு டூவீலர்ல போறாங்க. இவன் மட்டும் ஹெல்மெட் போடாம ஓட்டுறான் அப்படின்னு அமர் மனசுக்குள்ள இப்படி ஒரு சிந்தனை ஓடியிருக்கு. இன்னைக்கு முனியப்பனை நேராவே கேட்டுப்புட்டான் அமர்.

நீ மட்டும் ஏன் ஹெல்மெட் போட மாட்டேங்குறேன்னு. சின்னப் பையன் கேட்டா ... அவனுக்கு சிம்பிளா பதில் சொல்லணும். முனியப்பன் ஒரே வரில சொல்லி முடிச்சிட்டார். இப்ப ரோட்டுல விக்குற ஹெல்மெட் எல்லாம் வித்து முடிஞ்ச பிறகு யாரையும் போலீஸ் பிடிக்காது அப்படின்னு.

இப்படி ஹெல்மெட் கட்டாயம் போடுங்கறதும், அப்புறம் வேணாங்கிறதும் இன்னக்கி நேத்தா நடக்குது. எம்ஜிஆர் காலத்துல இருந்து 30 வரு­மா இந்த கேலிக்கூத்து நடக்குது.     

Thursday, April 12, 2012

காலை 5 மணி குளியல் - அஷூ

நம்ம அஷூக்குட்டி தூங்கும் போது கூட சட்டை போட்டுத் தான் தூங்குவார். இதுல பொத்திக்கிறதுக்கு கம்பளி வேற.

முனியப்பன் காலைல 6 மணிக்கு அஷூ, அமர எழுப்புறதுக்கு மாடிக்குப் போயிருவார், டென்னிஸ் விளையாடத் தான். இப்ப முழுப் பரீட்சை ஆரம்பிச்சிருச்சு. அதுனால டென்னிஸ் கிடையாது.

இன்னைக்கு 7 மணிக்கு எழுப்பப் போனார், அப்ப அஷூவோட அம்மா, அதான் முனியப்பன் தங்கச்சி சிரிச்சிட்டே சொல்லுச்சு, அஷூ காலைல 5 மணிக்கு குளிச்சிட்டு தூங்குதுன்னு.

அஷூ எந்திரிச்சி வந்த ஒடனே கேட்டப்ப, அஷூவுக்கு குளிச்ச ஞாபகம் இல்லை. மதியம் ஸ்கூல் முடிச்சு வந்த உடனே கேட்டப்ப எனக்கு தெரியாதுன்னு சொல்லி முடிச்சிட்டார்.

இப்பல்லாம் பவர்கட் காலைல 6 மணியில் இருந்து இரவு 12 மணிக்குள் 7 - 8 மணி நேரம். இரவு 12 மணியில் இருந்து காலைல 6 மணிக்குள்ள 3 தடவை 3 மணி நேரம். பகல்ல கரண்ட் கட்டானா வெக்கையத் தணிக்க இளநீர், தண்ணீர் பழம், ஐஸ் கிரீம் இப்படி சாய்ஸ்ல நிறைய இருக்கு.

இரவு பவர் கட்ல வெக்கை தாங்கமுடியாம அஷூ என்ன செய்வார்? அவருக்குத் தெரிஞ்ச ஐடியா குளியல்.

தமிழ்நாட்ல உள்ள பிள்ளைகளோட தவிப்பு இது.

Thursday, March 15, 2012

டேய் தம்பி - ஹாட் சிப்ஸ்ல் அமர்

அமர் டென்னிஸ் விளையாட ஆரம்பிச்சு 10 மாசம் ஆகுது. அமர் 10 வயசு 6 மாச பையன் தான். நடு நடுல மேட்ச் ஆட போயிருவார். அவர் படிக்கிற ஸ்கூலுக்காக 3 மேட்ச் ஆடியிருக்கார். ஓபன் டோர்னமெண்ட் 2 ஆடுனார். இப்ப ஸ்டேட் ரேங்கிங் டோர்னமெண்ட் 2 ஆடிட்டார். பொங்கல் டயத்துல சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ, இப்ப 25, 26ல சென்னை ஜெயின் காலேஜ்ல.

அமருக்கு மேனேஜர், பாடி கார்டு நம்ம முனியப்பன் தான். ஸ்டேட் ரேங்கிங் டோர்னமெண்ட் ஆடுறதுல ஒரு சிறப்பம்சம், வெளையாட வர்ற பயலுவ 3 வரு­மாவது ஆடுற பயலாத்தான் இருப்பான். அவனுகளோட மேட்ச் விளையாடும் போது தான் விளையாட்டு நல்லா ஷேப் ஆகும். அமர் சின்னப் பையன்கிறதால முனியப்பன் அமர்கிட்ட சொல்லியிருக்கார். 2012 பூரா தோத்தாலும் பரவாயில்லை, ஸ்கோர்ல முட்டை மட்டும் வாங்கக் கூடாது. பாயிண்ட் எடுத்துத் தான் தோக்கணும். இப்ப ஜெயின் காலேஜ்ல 3 - 8, 5 - 8னு தான் அமர் தோத்திருக்கார். அமர் விளையாடுற category அண்டர் 12 மற்றும் அண்டர் 14.

இப்ப ஜெயின் காலேஜ் டோர்னமெண்ட் விளையாட போனப்ப, பிப்.24, 25, 26, 27ல சாப்பாடு காரப்பாக்கம் ஹாட் சிப்ஸ் ஹோட்டல்ல தான். மொத தடவை சாப்பிடப் போறப்ப, அமர் அவர் உடம்பை நெளிச்சு ஆடிக்கிட்டே போய் சாப்பாடு டேபிள்ல உட்கார்ந்தார். அதப் பாத்து அந்த ஓட்டல்ல டேபிள் கிளீன் பண்ற பொம்பள பிள்ளை சிரிச்சுகிட்டு அமர் பக்கத்துல வந்திருச்சு.

"அக்கா, அந்த டேபிளை கிளீன் பண்ணுங்க" அப்படின்னு சொன்னதும், பக்கத்து டேபிளை கிளீன் பண்ணிட்டு அமர் கூட பேச ஆரம்பிச்சிருச்சு. அமர் கூட இன்னொரு பையன் பிரின்சும் முனியப்பன் கூட வந்திருந்தார். பிரின்சும், அமரும், அந்தப் பிள்ளையும் பேசுனாங்க. இந்தப் பிள்ளை பேசுதுன்னு இன்னும் ரெண்டு பிள்ளைகளும் அந்தக் கலாய்ப்புல கலந்துகிட்டாங்க.

3 கிளீனர்களும், அமரும், பிரின்சும் அங்க சாப்பிடப் போறப்ப எல்லாம் சிரிப்புத் தான். 3 பிள்ளைகளும் அமர டேய் தம்பின்னு தான் கூடும். அமர், பிரின்ஸ், 3 பிள்ளைக சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கும் போது முனியப்பன் அவங்களை தொந்தரவு பண்ண மாட்டார். அக்கா - தம்பி பாசம் 3 நாளு பொங்கி வழிஞ்சிச்சு. 26ம் தேதி நைட் சாப்பிடப் போனப்ப அமர், நாங்க 27ம் தேதி கிளம்புறோம்னு சொல்லவும் 3 பிள்ளைகளுக்கும் தாங்க முடியல.

டேய் நாளைக்கு நாங்க லீவுடா, அன்னைக்கு நைட் சாப்பிட்டு கெளம்பினப்ப 3 பிள்ளைகளும், ஒன்னா நிண்ணு அமர், பிரின்சுக்கு டாடா சொல்லிச்சுக. அதுல ஒரு பிள்ளை டேய் தம்பி நாளைக்கு எனக்கு லீவுன்னாலும், உன்னைப் பாக்க காலைல வருவேன்னு சொல்லி, அதே மாதிரி 27ந் தேதி காலைல அமர், பிரின்ச பாக்க வந்துருச்சு.

சமுதாயத்தில் அடித்தட்டு மக்களோட பாசம் அலாதியானது. அந்தப் பிள்ளைக நாங்க கஸ்டமர் யார்க்கிட்டயும் பேசமாட்டோம்மா, ஒங்கிட்டதான் இப்படி சிரிச்சுப் பேசறம்னு அமர்கிட்ட சொல்லுச்சுக. Machine மாதிரி ஓடிட்டிருந்த 3 பிள்ளைகளுக்கும் முகத்துல ஒரு மலர்ச்சி அமரப் பாத்து.

பாசம்கிறது காசு குடுத்து வாங்குறது இல்ல. இந்த மாதிரி தன்னால வரணும்.

Friday, March 9, 2012

ஓட்டு போடு ..... இல்லைன்னா

இப்ப இடைத் தேர்தல் வருது. ரெண்டு கட்சியுமே ஓட்டுக்கு ரூவா குடுக்குறவங்க. ஒரே குட்டையில் ஊறின மட்டைகள். இடைத் தேர்தல்ல ஜெயிக்கணு, இல்லாட்டா கவுரவம் போயிடும். இதுனால இடைத் தேர்தல்ல எப்பவுமே ஒரு பெரிய கூட்டமே வேலை பார்க்கும்.ரூவா குடுப்பாய்ங்க. சூடம் கொளுத்தி சத்தியம் வாங்குவாங்க.

இப்ப ஜெயிக்கலைன்னா பதவி போயிடும். நேரா கூப்பிட்டு டோஸ் விடுவாங்க. அதுனால எப்படியும் ஜெயிச்சாகணும்ல...

இப்ப 1 ஓட்டுக்கு ரூ.2000 + ஒரு மிரட்டல் .... ஓட்டு போடலைன்னா கரண்ட்டும் வராது, தண்ணியும் வராது.

நம்ம அரசியல்வாதிங்க என்ன ரேஞ்சில இருக்காங்க பாருங்க.

ரூவாயும் கொடுத்து ஒரு மிரட்டல் வேற ....... சூப்பர்ல ...

Sunday, February 19, 2012

கோபால கிருஷ்ண காந்தி

இவரு வேற யாரும் இல்ல, நம்ம காந்தி தாத்தா பேரன் தான். மேற்கு வங்காளத்துல கவர்னரா கொஞ்ச நாள் இருந்தாரு. அவருக்கென்னன்னு கேட்குறீங்களா, கடைசில சொல்றேன்.

தமிழ்நாடு பூரா கரண்ட் கட், டயத்தை கொஞ்சம் கொஞ்சமா கூட்டி இப்ப முந்தா நாள் வரைக்கும் காலைல 3 மணி நேரம், மதியம் 3 மணி நேரம், சாயங்காலம் 6 - 10க்குள்ள ஒன்றரை மணி நேரம்னு மொத்தம் ஒரு நாளைக்கு ஏழரை மணி நேரம் கரண்ட் கட். இப்ப இரண்டு நாளைக்கு முன்னால இருந்து இரவு 12 - காலைல 6 மணிக்குள்ள 30 நிமி­ம் 30 நிமி­மா 3 தடவை கரண்ட் போகுது. ஆக டோடல் கரண்ட் கட் 9 மணி நேரம். ஒரு நாளைக்கு மக்கள் படுற வேதனை கொஞ்ச நஞ்சமில்ல.

தமிழ்நாடு பூரா கரண்ட் கட்டாம், சென்னைல மட்டும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தானாம். அங்க இருக்கவனும் தமிழன் தான. தமிழ்நாடே கரண்ட் கட்டுல கஷ்டப்படும் போது சென்னைத் தமிழன் அந்தக் கஷ்டத்தைப் பங்கு போடக் கூடாதா ?. தான், தனக்கு, தனது என்று தமிழன் சுயநலவாதியா மாறி ரொம்பநாளாச்சு.

சென்னை தலை நகராம். அங்கு எம்என்சி எனப்படும் மல்டி நேசனல் கம்பெனிகள் அதிகம். அவங்க தொழில் ஆரம்பிக்கும் போதே தடையில்லா மின்சாரம் வேணும்னு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு தான் தமிழ்நாட்டுக்குள்ள வர்றான். இதேமாதிரி கார்பரேட் கம்பெனிகள், ஹை எண்ட் யூசர்ஸ் எனப்படும் மின்சாரத்தை அதிகம் செலவழிக்கிறாங்க. அவணுக தொழில் பண்ணி சம்பாதிக்கறதுக்கு தமிழ்நாடே கரண்ட் கட்ல இருக்கணுமா ?

பரீட்சைக்கு பிள்ளைக படிக்க முடியல. சின்னப் பிள்ளைக காத்து இல்லாம தூங்க முடியல. தொழில் பூரா முடங்கிக் கிடக்கு. தொழிலாளிக்கு வேலை கொடுக்கமுடியல. அரசாங்கத்தோட ஓர வஞ்சனையைப் பாருங்க.

இங்க தான் கோபால கிருஷ்ண காந்திய பத்தி ஞாபகம் வருது. அவரு மேற்கு வங்காளத்துல கவர்னரா இருக்கப்ப மேற்கு வங்காளத்துல சரியான கரண்ட் கட். கொல்கத்தாவிலும் தான். மக்கள் கரண்ட் கட்ல வாடும் போது நமக்கு எதுக்கு கரண்டுன்னு கவர்னர் மாளிகைல கரண்ட் கட்டைக் கொண்டு வந்தவர். அவரும் யுபிஎஸ் போடாம, ஜெனரேட்டர் ஓட்டாம கரண்ட் கட்ட அனுபவிச்சார்.

அடுத்தவன் கஷ்டப் பட்டா என்ன ? ... நம்ம ஜாலியா இருக்கோம்ல, இதான் இன்னைக்கி தமிழன்.

Monday, January 30, 2012

ஏமாத்தறதுக்கு ஊசி போடாதீங்க - தும்மக்குண்டு பேச்சி

கிராமத்து மக்கள் எப்பவுமே வெளிப்படையா பேசறவங்க. மதுரையே ஒரு பெரிய கிராமம் தான். அதச் சுத்தி உள்ள கிராமங்கள்ல இருந்து வைத்தியம் பாக்க மதுரைக்கு வருவாங்க.

தும்மக்குண்டுன்னு ஒரு ஊர்.... செக்காணத்துல இருந்தும் போகலாம், திருமங்கலத்துல இருந்தும் போகலாம், உசிலம்பட்டில இருந்தும் போகலாம். மதுரைல இருந்து 45 கிமீ. அங்க இருந்து பேச்சி வந்தாங்க.

முனியப்பன் கிட்ட முழங்கால் வலின்னு ஊசி போட வந்தாங்க.

பேச்சிக்கு முழங்கால் வலி ... 40 ‡ 50 வயசுல யாராயிருந்தாலும் வரும். Knee Joint மொத்த உடம்பையும் தாங்குற இணைப்பு. அதில lubrication இருக்கும். வயசாகும் போது wear & tear ல lubrication fluid கொறஞ்சு வலி வரும்.

சிலிம் பாடின்னா கொஞ்ச நாள்ல வலி போயிரும். கொஞ்சம் எக்சர்சைஸ், கொஞ்சம் மாத்திரை அவ்வளவு தான்... சொகமாயிரும்.

குண்டானவங்க .. obese னா சிக்கல் தான். Osteoarthritis வந்துரும். அதுக்கு மாத்திரை, பிசியோ தெரபின்னு போய்க்கிட்டே இருக்கும். சொகமாகாது.

தும்மக்குண்டு பேச்சி சிலிம் பாடிங்கிறதால முழங்கால் வலி சரியாயிடுச்சி. நாலஞ்சு தடவ முனியப்பன்கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வந்தாங்க. நல்லாய்ட்டாங்க.

அவங்க ட்ரீட்மெண்டுக்கு வந்த மொதநாள் ஜோக் அடிச்சிட்டாங்க. சும்மா ஏமாத்தறதுக்கு ஊசி போடாதீங்கன்னு. அங்க இருந்த எல்லாரும் சிரிச்சிட்டாங்க. கிராமத்து சனங்களுக்கு மனசுல இருக்கது அப்படியே வெளிய வந்துரும்.