Thursday, October 9, 2008

ராஜதர்மம்

ராஜதர்மம்

ராஜாவே இல்லை, அப்பறம் எதுக்கு ராஜதர்மம்கிறீங்களா? இந்த தலைப்புல ராஜாங்கிறது கார்ப்பரேட் தலைவனை, தலைவனாகக் கூடியவனை, அவன் எப்படி இருக்கணும் அப்படின்னு பார்ப்போம்.

அரசன் திக்குப்பாலகர் சொரூரூபம், ஆதலால் அனைவரையும் அடக்கி ஆளும் சக்தி அவனுக்கு உண்டாயிற்று. கார்ப்பரேட் தலைவன், எல்லாரையும் அன்பால் அடக்கி ஆளணும்.

அரசன் காரியா காரியங்களையும், காலங்களையும் எண்ணி, அடங்கியும் பலமுள்ளபோது உயர்ந்தும் வருவான், கார்ப்பரேட் நிறுவனத்தை ஆரம்பித்து, அதைப்பலப்படுத்தி அதை பயன்பாட்டுக்கு கொண்டு வரும்வரை மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்து, நல்ல முறையில் நிறுவனம் செயல்பட ஆரம்பித்ததும் புதிய பலம் பெற்று உயர்வான்.

இந்திரியத்தை அடக்கிய அரசனை உலகம் வணங்கும். உலகம் அரசனுக்கு வசப்படும். காமத்தை அடக்கி ஆளச் சொல்றாங்க. கண்டபடி மேயாம, ஒரு பொண்டாட்டி மட்டும் போதும், பெண்ணாசைல தவறு பண்ண ஆரம்பிச்சா கம்பெனி காலியாயிரும், அதைத்தான் இந்திரியத்தை அடக்கி ஆள் அப்படிங்கிறாங்க.

காமத்தால் உண்டான வேட்டையாடல், சூதாடல், குடித்தல், வீண் அலைச்சல், துரோகம், பொறாமை, பிறன் குணத்தைச் சகியாமை, ஒருவன் பொருளை அபகரித்தல் இதெல்லாம் அரசன்கிட்ட, அதாங்க கார்ப்பரேட் தலைவன்கிட்ட இருக்கக்கூடாது.

பொருளை விருத்தி செய்பவரையும், ஞானமுள்ளரையும், பலம், சாமர்த்தியம் உள்ளவர்களை அருகில் விலகாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பத்தாங்க கம்பெனி டெவலப் ஆகும்

தேச விசாரணை, பொக்கிஷம், முதலியவற்றைத் தன் ஆதீனத்திலும் சண்டை செய்வதும், சமாதானமாவதும் ஆகிய இரண்டையும் தூதனிடத்தும் நியமிக்க வேண்டும். கம்பெனியில் ஏற்படும் பிரச்சினைகளை விசாரிப்பதும், முடிவெடுப்பதும் தலைவன் கையில்தான் இருக்க வேண்டும். பணம் பெரிய விஷயம், நிதி நிர்வாகம் தலைவன் கையில் இருக்க வேண்டும். இல்லைன்னு வச்சிக்குங்க, இடைல உள்ளவங்க சாப்பிட்ருவாங்க, பணத்தை மட்டுமல்ல, தலைவனையும் சேத்து தான்.

சண்டை செய்வதும், சமாதானமாவதும், இது ரெண்டும் வக்கீல் பாத்துக்கிடுவார், லீகல் அட்வைசர் கண்டிப்பா வேணும்.

தன் பட்டணத்திற்கு சமீபத்தில் பல உபகிராமங்களை ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே இருக்கும் தலைமையகத்திற்கு அருகில் நிறுவனம் சார்ந்த கிளைகள் அல்லது உபநிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும். விரிவாக்கம்.

தனக்காக பல அரண்கள் உள்ள கோட்டைகளையும், மனையையும் கட்டிக் கொள்ள வேண்டும். வீட கட்டிரலாம், இங்க அரண்கள் கொண்ட கோட்டைங்கிறது தலைவனோட பாதுகாப்பு பற்றியது. பாதுகாப்புக்கு பாதுகாவலர்கள் போக, துப்பாக்கி உரிமமும் வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனம்னா மிகப்பெரிய தொழில் நிறுவனம்னு எடுத்துக்குங்க. மிகப்பெரிய நிறுவனத்தை உண்டாக்கி நடத்துற தலைவன், அரசனுக்கு சமமானவன்.

எல்லோருக்கும் மிகப் பெரிய நிறுவனம் நடத்தணும், அதுல 500 பேர், 1000பேர் வேலை பாக்கணும் அப்படிங்கற எண்ணம் இருக்கும் அவங்களுக்கான பக்கம்தான் இது.

இதுக்கெல்லாம் மேல தலைவனுக்கு, கல்வி அறிவு, தொலை நோக்கு, சுய சிந்தனை, துணிவு, நாவடக்கம், பண்பு, முடிவெடுக்கும் திறமை, சரியான திட்டமிடல், காலம் தவறாமை, மன உறுதி ஆகியவையும் வேண்டும்.
எங்க ..., ராஜாவாக கௌம்பிட்டீங்களா.

No comments: