Monday, February 2, 2009

நாகேஷ்

மறக்கமுடியாத நகைச்சுவை நடிகர். அவருடைய நகைச்சுவை கதாபாத்திரங்கள், உணர்ச்சிகரமான வேடங்கள் மறக்க முடியாதவை. முனியப்பனின் மனதை மட்டும் கவர்ந்த நடிகரல்ல அவர், உலகத் தமிழர்கள் அனைவரையும் கவர்ந்தவர்.

அவரது ஒல்லியான உடல்வாகும், வேகமான நடனமும் நினைவில் நிற்பவை. நகைச்சுவை நடிகர்களில் நடனத்திலும் சிறந்து விளங்கியவர் திரு.நாகேஷ் தான். நகைச்சுவை நடிகர்களில் கதாநாயகனாக வெற்றிக்கொடி நாட்டியவர் அவர் மட்டும் தான். அவருடைய நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், சாது மிரண்டால் போன்ற படங்களில் கதாநாயகனாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி, அந்தப் படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு அடித்தளம் அமைத்திருப்பார்.

அனைத்து நகைச்சுவை நடிகைகளுடனும் ஜோடி போட்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய் சங்கர், ரஜினி, கமல் ஆகிய எல்லோருடனும் நகைச்சுவை வேடம் கட்டியவர். திருவிளையாடல் படத்தில் வறுமையில் வாடும் 'புலவர் தருமியாக' வருவார். பாட்டுக்குப் பொற்காசு என்று அறிவிக்கப்பட்டவுடன், கோயிலில் பாட்டுக்கு நான் எங்க போவேன் என்று புலம்புவார். சிவபெருமானிடம் பாட்டை வாங்கி வந்து நக்கீரனிடம் மாட்டி பிழை இருக்கிறது என்றதும் "எவ்வளவுக் கெவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்து கொடுங்கள்" என்று கெஞ்சும் போதும், பின்பு கோவிலில் வந்து "அவன் வரமாட்டான்" என்று நொந்து பேசும் போதும் பட்டயக் கெளப்பியிருப்பார் நாகேஷ்.

'அன்பே வா' படத்தில் காஷ்மீரில் எம்.ஜி.ஆர் வீட்டை எம்.ஜி.ஆருக்கே வாடகைக்கு விட்டு அசத்தியிருப்பார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் 'வைத்தி'யாகக் கையில் எலுமிச்சம்பழத்துடன் வருவார். காதலிக்க நேரமில்லை படத்துல கலக்கல் காமெடி. சினிமா மோகத்துல, சினிமா டைரக்ட் பண்ண துடிக்கிற character. அவருடைய தந்தையாக வரும் பாலையாவிடம் நச்சரிப்பார். பாலையாவும் ஒரு கட்டத்தில் "சரி ஒன் கதைய சொல்லு"ன்னு கதை கேக்கவும் ஒக்காருவார். அவர்கிட்ட நாகேஷ் கதை சொல்லி மிரள வச்சு, நடுங்க வைப்பார் பாருங்க, சிரிச்சிக்கிட்டேயிருக்கலாம்.

நகைச்சுவை, உணர்ச்சிகரமான வேடங்கள் தவிர, வில்லனாகவும் திரையில் தோன்றியவர் அவர். கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் மெயின் வில்லனே நாகேஷ் தான். தமிழ் திரைப்பட வரலாற்றில் அவர் ஒரு மைல் கல் & LEGEND.

Friday, January 30, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (டாக்டர் நர்கீஸ் பானு)

முனியப்பன் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1982ல் முதுநிலை பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்த நேரம், 3 மாதம் அவர் இருந்த unitல் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்தார் டாக்டர் நர்கீஸ் பானு. அறிவிலும், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் தேர்ந்தவர். அவர் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்த 1 வருடமும் முனியப்பனின் நண்பராக இருந்தார். அவர் பயிற்சிக் காலம் முடிந்து அவர் நாகர்கோவிலுக்குச் சென்றார்.

1986 ஜனவரியில் நாகர்கோவிலில் நடைபெற்ற டாக்டர் நர்கீஸ் பானுவின் திருமணத்திற்கு முனியப்பனுக்கு அழைப்பு வந்தது. முனியப்பன் டாக்டர் நர்கீஸ் பானுவின் திருமணத்தில் கலந்து கொண்டார். மணமகன் டாக்டர். அப்துல் சுபான்.

1989ம் வருடம் காயல்பட்டினம் KMT மருத்துவமனையில் டாக்டர். நர்கீஸ் பானு பணிபுரிந்து கொண்டிருந்த பொழுது, முனியப்பன் அவரைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். ஒரு ஆண் குழந்தை இருப்பதாக டாக்டர். நர்கீஸ் பானு மகிழ்ச்சியுடன் சொன்னார்.அதன்பிறகு டாக்டர்.நர்கீஸ் பானுவுடன் தொடர்பு கொள்ள முனியப்பனுக்கு நேரம் கிடைக்கவில்லை. காலம் உருண்டோடியது.

முனியப்பன் தினத்தந்தி, ஹிண்டு நாளிதழ்களை காலையில் வாசிக்கும் வழக்கம் உள்ளவர். அதில் தினத்தந்தியில் போட்டோவுடன் வரும் டாக்டர் பற்றிய விளம்பரத்தைக் கண்டிப்பாகப் பார்ப்பார். அதிகமாக வெளிநாடு சென்று திரும்பும் டாக்டர்கள் போட்டோவுடன் கூடிய விளம்பரங்கள் தான் இருக்கும்.

01.01.09 அன்று தினத்தந்தியில் ஒரு டாக்டர் போட்டோ செய்தி வந்திருந்தது. டாக்டர் பேரைப் பார்த்தார் முனியப்பன். டாக்டர் அப்துல் சுபான் என்றிருந்தது. மேலே வபாத்தானார் என்றிருந்தது. அதிர்ச்சியடைந்த முனியப்பன் விளம்பரத்தின் கீழே பார்த்தார். Dr. நர்கீஸ் பானு என்றிருந்தது. உடனே ஆத்தூரில் இருக்கும் Dr. முத்துக் கிருஷ்ணனை தொடர்பு கொண்டார் முனியப்பன்.

மஞ்சள் காமாலையால் Dr. அப்துல் சுபான் மரணத்தைத் தழுவியதாகவும், முதல்நாளே இறுதிச் சடங்குகள் முடிந்ததாகவும், திருச்செந்தூர் கிளை (IMA) இந்திய மருத்துவக் கழக டாக்டர்கள் அனைவரும் இறுதிச்சடங்கில் பங்குகொண்டதாகவும், Dr. முத்துக் கிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.

முஸ்லீம் மதமாதலால் கணவனை இழந்த பெண்கள் 40 நாட்கள் ஆண்களை பார்க்கக் கூடாது என்ற தகவலும் முனியப்பனுக்குக் கிடைத்தது. 14.01.09ல் முனியப்பன் தன் தங்கை, தங்கை கணவர், தங்கை பிள்ளைகளுடன் காயல்பட்டினம் சென்றார். அவருக்கு வியப்பான விஷயம் அங்கு காத்திருந்தது. Dr. நர்கீஸ் பானு ஆலோசனை அறையில் பெண் நோயாளிகளுக்கு மட்டும் அவர் மருத்துவ சிகிச்சை அளிப்பதாகச் சொன்னார்கள். முனியப்பனின் தங்கை Dr. நர்கீஸ் பானுவைச் சந்தித்துத் துக்கம் விசாரித்து விட்டு வந்தார்.

முனியப்பனுடைய தங்கையிடம் Dr. நர்கீஸ் பானு அவருடைய கணவர் Dr. அப்துல் சுபானின் தங்கை கணவர் மாடியில் இருப்பதாகவும், முனியப்பனை அவரைச் சந்தித்து விட்டு போகச்சொன்னார். Dr. அப்துல் சுபானின் மைத்துனரை அனைவரும் சந்தித்தனர்.

Dr. நர்கீஸ் பானுவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். முதல் பையன் இரண்டாம் ஆண்டு மருத்துவமும், இரண்டாவது பையன் பிளஸ் டூவும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகள் இரண்டு பேரும் வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில், அவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகின்ற நேரம். இந்த நேரத்தில் கணவரின் மறைவு Dr. நர்கீஸ் பானுவை எந்த அளவு பாதித்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

கணவர் இறந்த பத்து நாட்களில், அவர்களுடைய நோயாளிகளின் நலனுக்காகவும், அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும், குடும்பத்திற்காகவும், ஆலோசனை அறையில் அமர்ந்த Dr.நர்கீஸ் பானு வீரப்பெண்களின் வரிசையில் இணைக்கப்பட வேண்டியவர்.

Monday, January 26, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (வள்ளி)

என்ன பித்தளயக் குடுக்கறீங்க ..... ?

நம்ம முனியப்பனோட பெண் உதவியாளர் ஒருத்தர் இருக்கார். வெளிஉலகம் அதிகம் பார்த்திராதவர். பெயர் சண்முக வள்ளி. வள்ளி ஜோக்ஸ்ன்னு சொல்லி ஒரு புக் போடலாம். அந்தளவுக்கு திடீர் ஜோக்ஸ். முனியப்பன் கிளினிக்ல டெட்பாடிக்குப் பல்ஸ் பார்த்தாரே அவரே தான். நோயாளிகளை ஒழுங்கா பாத்திருவார். அதுல correct.

முனியப்பன் cell phoneஅ சார்ஜ் போட வயரை சொருகிருவார் வள்ளி, ஆனா switchஅ ஆன் பண்ண மாட்டார். இந்த மாதிரி எதாவது செஞ்சி சிரிக்க வச்சிருவார்.

இப்ப, அவர் வீட்டுக்காரருக்கு ஒரு பேங்க் செக் குடுக்குறாங்க. அவர் அதை மாத்த நேரமில்லாம என்ன செய்றாரு; நம்ம வள்ளிக்கிட்ட குடுத்து "பேங்க்ல போய் செக்கக் குடுத்து ரூவா வா புள்ள"ன்னு சொல்லிர்றார். வள்ளிக்கு பேங்க் நடைமுறைலாம் தெரியாது. வள்ளி நேரா கிளம்பி பேங்க்ல போய் செக்கக் குடுக்குறாங்க. அந்த பேங்க் காலைல 8 மணியிலிருந்து சாயங்காலம் 8 மணி வரை உள்ள பேங்க். வள்ளி அங்க போன டைம், மாலை 4.30 மணிக்கு. செக்ல வள்ளிக்கிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டு பித்தளை token குடுக்கிறாங்க.

வள்ளிக்கு அதிர்ச்சியாயிருது. என்னடா நம்ம செக்கக் குடுத்தோம், இந்த ஆளு ரூவா குடுக்காம என்னத்தயோ குடுக்குறாரு. ஒடனே செக்க பேங்க்ல யார்கிட்ட குடுத்தாரோ அவர்கிட்ட நேராவே கேட்டுர்றாரு. "என்ன ரூவா குடுக்காம பித்தளயக் குடுக்கறீங்க?". பேங்க் ஊழியர் அசந்துர்றார். "திருப்பி ஒரு தடவை சொல்லுங்க"ன்னு வள்ளியக் கேக்குறார். வள்ளி டென்ஷன்ல இருக்காங்கள்ல, மறுபடியும் ஒருதட்வை அதே மாதிரி "என்ன ரூவா குடுக்காம பித்தளயக் குடுக்கறீங்க"ன்றார். வள்ளிக்கு 'Voice Box' லவுட் ஸ்பீக்கர் மாதிரி. அவுங்க சொல்றது பேங்க்ல வேல பாக்குற எல்லாத்துக்கும் கேக்குது. பேங்க்ல கூட்டம் வேற இல்லையா, பேங்க்ல உள்ள எல்லாரும் அவங்களை மறந்து சிரிச்சுர்றாங்க.

"பேங்க்ல குடுத்தது token, அது உள்ள நம்பர் படி கூப்பிடுவாங்க. அப்ப cash counterல ரூவா தருவாங்க"ன்னு வள்ளிக்குச் சொல்லிக் குடுக்குறாங்க. அதுபடி வள்ளி ரூவாய வாங்கிட்டு வர்றாங்க.

சில சமயம் எதிர்பாக்காத நேரம் ஜோக் வெடிக்கும். வள்ளி ஒரு ஜோக் வெடி, திடீர்னு சுத்தி இருக்கவங்களைச் சிரிக்க வச்சிருவாங்க. அடுத்தவங்களச் சிரிக்க வைக்கிறது மிகப்பெரிய வரம்.

Case Sheet

காயங்களும் காரணங்களும்

முனியப்பன்கிட்ட அடிபட்டு காயத்தோட வைத்தியத்துக்கு வர்றவங்களும் உண்டு. சைக்கிள், Two wheeler accidentனா ஒடம்பெல்லாம் சிராய்ப்பு இருக்கும். எலும்பு முறிவு இருக்கலாம். சைக்கிள், Two wheelerல இருந்து skid ஆகி வருவாங்க.

பல் பட்ருச்சு, பாய்ஸன் ஆகாம ஊசி போடுங்கன்னு வருவாங்க. சின்னப் பிள்ளைக அடுத்த பிள்ளைய கடிச்சு வச்சிரும். நம்மாளுக, சண்டையில அடுத்தவனை கடிச்சு வச்சிருவாங்க.

சின்னப் பிள்ளைக சைக்கிள்ல ஒக்காந்து போகும் போது சைக்கிளுக்குள்ள, காலை விட்ரும். எலும்பு முறிவு ஆகாது. இரத்தக்காயம் தான் இருக்கும். புண் முழுசா ஆற 21 நாள்ல இருந்து 42 நாள் வரைக்கும் ஆகும். சைக்கிள், two wheeler ஓட்டிப் பழகும் போது விழுந்து எந்திரிச்சுக் காயத்தோட வருவாங்க.

வேல பாக்குற எடத்துல மேலே இருந்து கீழே வந்துருவாங்க. மெஷினுக்குள்ள கைய விட்ருவாங்க. காயம் வெரலக் கேட்ரும், இல்ல சும்மா லேசான கட்டா இருக்கும். இதெல்லாம் வழக்கமா நடக்குறது தான்.

புருஷன் பொண்டாட்டி சண்டைல கெளப்பிருவாங்க. சண்டைல காயமாயிரும். வைத்தியத்துக்கு வர்றவங்க முட்டிட்டேன், இரும்பு சாமான் விழுந்துருச்சு அப்படின்னு எதாவது பொய்க்காரணம் சொல்வாங்க. புருஷன் அடிச்சு மூஞ்சியெல்லாம் வீங்கி ரத்தம் கன்னிப்போயிருக்கும் (contusion), உண்மையச் சொல்ல மாட்டாங்க. அழுதுகிட்டே இருப்பாங்க. நம்மளா புரிஞ்சிக்கிட வேண்டியது தான். முனியப்பன் service ஆன ஆளு இல்லையா, பாத்த ஒடனே என்ன நடந்திருக்கும்னு தெரியும். வைத்தியத்தை மட்டும் பாத்து அனுப்பி வச்சிருவார்.

உண்மையான காரணத்தைச் சொல்லாம செத்துப்போன ஒரு நோயாளிய முனியப்பன் இன்னைக்கும் மறக்க முடியாம இருக்கார்.

10 வருஷத்துக்கு முன்னால முனியப்பனுக்கு நல்லா தெரிஞ்சவர் ஒருத்தர், ஒரு நோயாளியக் கூப்பிட்டு வந்தார். "கார் ஓட்டும் போது sudden brake போட்டதுல steering wheel வயித்துல இடிச்சுருச்சு, வயிறு வலிக்குது பாருங்கன்னார்." நோயாளி வாயத் திறக்க மாட்டேங்கறான். முனியப்பன் அவனப் படுக்க வச்சு பரிசோதிக்கிறார். வயித்தை எங்க தொட்டாலும் கல்லு கணக்கா இருக்கு (Abdominal Rigidity). வயித்துக்கு x - ray, ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறார் முனியப்பன். Plain x ray. Abdomenல Air under diaphragm. ஸ்கேன்ல intra abdominal haemorrage. ஒடனே மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அந்த நோயாளிய அனுப்பி வைக்கிறார். அங்க ஒடனே அவசர அறுவை சிகிச்சை பண்றாங்க, ரத்தம் ஏத்துறாங்க. நோயாளி தீவிர சிகிச்சை பண்ணியும் பலன் இல்லாம 2 நாள்ல இறந்துர்றான்.

அந்த நோயாளியக் கூப்பிட்டு வந்தவர், அவரோட சேந்தவங்க எல்லாம் அந்த treatment சம்பந்தமான record எல்லாத்தையும் தீ வச்சு கொளுத்திர்றாங்க. அவனுக்கு வயித்துல இரத்தம் கசிஞ்சதுக்குக் காரணம், இவங்க அவனை ஊமை அடியா அடிச்சது தான். நோயாளியும் இவங்களுக்குச் சாதகமா கடைசில சாகிற வரைக்கும் வாயால எதையும் சொல்லாம செத்துப் போய்ட்டான்.

இன்னும் காட்டுமிராண்டித் தனமான வாழ்க்கை நடைமுறையில் உள்ளது. மனிதன் நாகரீகம் அடைந்து விட்டான் என்று யார் சொன்னது ?

Sunday, January 18, 2009

முனியப்பனின் யானைக் கனவுகள்

கனவுகளும், பலன்களும்

இது எந்த அளவுக்கு உண்மை ?

முனியப்பனுக்கும், யானைக்கும் எந்த பிறவில, என்ன தொடர்போ தெரியலை. முனியப்பன் கனவுல யானை வரும். பொதுவா அதிகாலை கனவு தான். சின்னப் பிள்ளைல இருந்தே முனியப்பன் கனவுல யானை வரும். அப்பல்லாம் அதுக்கு அர்த்தம் தெரியாது. இப்ப ஒரு 15 வருஷமாத்தான் அந்த யானைக் கனவுகளை அலசிப் பாக்குறார் முனியப்பன்.

யானை கனவுல வரும், லேசான கனவா என்ன ? யானை முனியப்பனை ஓட ஓட வெரட்டும். சமயத்துல, பயத்துல முனியப்பன் தூக்கம் கலைஞ்சு எந்திரிச்சு கூட ஒக்காந்திருவார். அப்ப ஹார்ட் படக்படக்னு துடிக்கும். படக் படக் நிக்கிறதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். அவ்வளவு பயங்கரமா கனவு இருக்கும்.

சமயத்துல ஒத்த யானை வெரட்டும். சில சமயம் ஒரு யானைக் கூட்டமே முனியப்பனைக் கனவுல வெரட்டும். கனவுல யானை துரத்த, முனியப்பன் ஓட, சும்மா செம thrillஆ இருக்கும். Hollywood படமே எடுக்கலாம். செம chase.

இப்படித்தான் 1995 கடைசில, கனவுல, யானை & யானைக் கூட்டம் முனியப்பனை துரத்துச்சு. ஒரு மூணு மாசம் அப்பப்ப துரத்தும். தினசரி கெடையாது. 1996 பிப்ரவரி வரைக்கும். 1996 பிப்ரவரி 16ந் தேதி முனியப்பனோட ரோல்மாடல், அவுக அப்பா K.வேலுச்சாமி B.A., B.L. தமிழக அரசு நீதித்துறை நீதிபதி (ஓய்வு) மரணத்தைத் தழுவுறார்.

அப்புறம் கனவுல யானையக் காணோம். மறுபடியும் 1999ல யானை கனவுல வருது, ஒரு மூணு மாசம் அப்பப்ப gap விட்டு.1999 ஏப்ரல் 14ந் தேதி முனியப்பனோட பெரியப்பா போய்ச் சேந்துர்றார். அப்பத்தான் முனியப்பன் யானைக் கனவை அலசி, ஆராய்ஞ்சு பாக்குறார். "யானை கனவுல வந்தா, நம்ம வீட்டு ஆளு ஒண்ணு அவுட்ரா."

அப்புறம் யானைக் கனவக் காணோம். 2002 ல மறுபடியும் யானைக் கனவு. இந்த தடவை யானை என்ன செய்யுது ? முனியப்பன் வீட்டுக்குள்ள வந்து ஹால்ல ஒக்காந்துக்குது. முனியப்பனுக்கு ஒரே நடுக்கம். என்ன ஆகுமோன்னு பயம். பயந்தது மாதிரியே மே 11ந் தேதி அவரோட அன்புத்தம்பி மூர்த்தி இறந்துர்றார்.

மறுபடி 2005ல யானைக் கூட்டம் முனியப்பனைக் கனவுல துரத்துது. முனியப்பன் என்ன செய்வார் ? அவரும் ஓடுறார். 2003 மார்ச்ல முனியப்பனோட சித்தப்பா அவுட்.

07.01.09 மதியம் மறுபடியும் முனியப்பன் கனவுல யானை. ஒரு யானை முனியப்பன் வீட்டு முன்னால வந்து நின்னுக்கிட்டு "நீ வீட்டை விட்டு வெளிய வா பாப்பம்"னு முனியப்பனுக்கு சவால் விட்டுக்கிட்டிருக்கு. என்ன ஆகப் போகுதோன்னு முனியப்பனுக்குக் கவலை. இந்தத் தடவை பகல் கனவு. பகல் கனவு பலிக்காதும்பாங்களே, அப்படின்னும் ஒரு யோசனை, முனியப்பன் மனசுக்குள்ள ஓடுது. இருந்தாலும் கனவுல யானை, அதான் பயம். நெனச்ச மாதிரியே 09.01.09ந்தேதி முனியப்பன் அப்பாவோட தங்கச்சி அவுட். இந்தத் தடவை ரொம்ப speed. கனவு வந்த ரெண்டு நாள்ல result.

கனவுல யானை வெரட்டுனா முனியப்பனோட தந்தை வழி உறவுல ஒரு இறப்பு நிச்சயம். இது அனுபவப்பூர்வமான உண்மை.

இளவயது மரணங்கள்

தாய்தந்தை வளர்த்த பின்
தானே வளர்ந்து
ஒரு வேலை கிடைத்து
ஒரு வழியாக செட்டில் ஆகும் சமயம்

அனைவரும் ஆவலோடு அவன் வளர்ச்சியை
அவனை ஆசையாய் எதிர்பார்க்கும் நேரம்
அவன் மரணம் இளவயதில்
அது அனைவர் உள்ளத்தையும் உருக்குகிறது

உயிரை இழக்கும் அவன்
உயிரை எடுக்கும் காலன் கொடியவன்

முப்பது வயது முருகானந்தம்
மூளையில் புற்று நோய்
அன்பான காதலியையும்
அத்துடன் குடும்பத்தையும்
மரணத்தால் தவிக்க விட்டவன்

இருபத்தேழு வயது முருகேசனுக்கு
இடியோபதிக் திராம்போ சைட்டோ னிக் பர்ப்யூரா
மூளையில் கட்டுப்படுத்த முடியாத இரத்தக் கசிவு
முடிவில் மரணம்

முப்பது வயது மகேந்திரன்
மூளையில் கட்டி
மனைவி மகளை
மரணத்தால் பிரிந்தான்

24 வயது ராஜேஸ்வரியை மரணத்தால்
இரு பிள்ளைகளிடமிருந்து பிரித்த Blood Cancer

மாடியில் இருந்து தவறிவிழுந்து
மரணத்தைத் தழுவிய ராம்குமார் I yr B.com

மேல்நாட்டில் வேலைக்குச் சென்று
மேல்உலகம் சென்ற மோகன் குமார், கார்த்தி, வினோத்

சொல்லிக் கொண்டே போகலாம்
சொல்ல முடியாத இளவயது மரணங்கள்
என்ன பிழை செய்தார்கள் இவர்கள்
எதற்காக இறைவா இளம்வயதில் பறிக்கிறாய் ?

இது போன்ற இளவயது மரணங்களால்
இறைவா உனக்கு என்ன அல்ப சந்தோஷம்

படைப்பவனும் நீ
பாதியில் அழைப்பவனும் நீ
இனி இந்த விளையாட்டு போதும்
இதயங்கள் நொறுங்காமல் குடும்பங்கள் சிதையாமல்
காப்பது உன் வேலை
கலங்க வைக்காதே இனி ........

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் சிவனாண்டி

நீங்கள் சந்திக்காத மனிதர்கள்
சிவனாண்டியும் நாட்டுக்கோழி முட்டையும்

சிவனாண்டினா ... உடனே சின்னப்பையன்னு நெனச்சுராதீங்க. இவர் 80 வயசு பெருசு. மதுரைல பைபாஸ் ரோட்ல ஒரு எடத்துக்கு காவல்காரரா ரொம்ப வருஷமா இருக்கார். இந்த வயசுலேயும் தானே பொங்கிச் சாப்பிட வேண்டிய சூழ்நிலை

அவரோடது. அடுத்தவங்க செய்ற சின்ன சின்ன உதவிகள்ல அவர் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு. சிவனாண்டி ஒடம்புக்கு சுகமில்லைன்னா நேரா கெளம்பி முனியப்பன் கிட்ட வந்துருவார். முனியப்பன் அவருக்கு வைத்தியம் பாத்து அவர் பீஸ் குடுத்தா வாங்கிக்குவார். பீஸ் குடுக்கலைன்னாலும் விட்ருவார். சிவனாண்டி பீஸ் குடுத்தாலும் 10 ரூபா தான் குடுப்பார். இப்ப கொஞ்ச நாளா அந்த 10 ரூபாவும் குடுக்கிறது இல்லை. இப்ப ஒருநாள் சிவனாண்டி ட்ரீட்மென்ட்டுக்கு வந்தார்.

வைத்தியம் பாத்து முடிச்சிட்டு கெளம்பும் போது நேரா முனியப்பன்கிட்ட வந்தார் சட்டைப் பைக்குள்ள கைய விட்டார். ஒரு Carry bag; அதை எடுத்தார். அந்த Carry bagல நாலு முட்டை, "நாட்டுக்கோழி முட்டை சின்ன வெங்காயம் சேத்து, ஆம்லேட் போட்டு சாப்பிடுங்க"ன்னார். முனியப்பன் ஒரு நொடி அசந்துட்டார். நம்ம மேல பெருசு இவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு.

இப்ப முனியப்பன் வீட்ல நாட்டுக்கோழி முட்டை ஆம்லேட்; சிவனாண்டி வந்துட்டார்னா. கிராமத்து மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமே தனி.