Thursday, October 30, 2008
நீங்கள் சந்திக்காத மனிதர்கள்
நேருன்னு பேரைப் பாத்த உடனே மறைந்த பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவ நெனச்சுராதீங்க.
இவர் பேர் நேரு வயது 50 ரொம்ப வித்தியாசமான ஆள்
1990 ல எம்.ஏ பி.எட். (ஆங்கிலம்) படிச்சு முடிச்சார். ஒடனே அரசாங்க வேலை கெடைக்குமா? கெடைக்கலை பிரைவேட் ஸ்கூல்லயும் சம்பளம் கம்மி. என்ன செய்றார் பாருங்க. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்துல மதுரைல பஸ் கண்டக்டர் ஆயிர்றார். பஸ்ல ஒடிக்கிடடே வாழ்க்கயை ஓட்டுறார்.
கண்டக்டராயிருந்துகிட்டே பல்வேறு எடங்கள்ல டீச்சர் வேலைக்கு அலையறார். ஒரு எடத்துலயும் கெடைக்கல. அரசாங்க வேலைக்கு ஆங்கில ஆசிரியரா 3 பேரை எடுக்குறாங்க. அதுல எம்ப்ளாய்மெண்ட் சீனியாரிட்டி இல்லாததுனால அப்பவும டீச்சர் வேலை மிஸ்ஸாகுது. ஒரு வழியா 2004ல TRB பரீட்சை எழுதி அதுல செலக்ட் ஆகி 2005ல வாத்தியார் வேலைல சேந்துர்றார்
அவர் வேல பாக்கற இடம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பிளாக்ல மாணிக்கம்பட்டி கிராமத்துல பஞ்சாயத்து யூனியன் ஸ்கூல்ல ஆங்கில ஆசிரியரா வேலை பாக்குறார். பிஆர்சில பத்தாயிரம் ரூபா சம்பளம் வாங்கிகிட்டு கிருந்தவரு தொகுப்புஊதியமா 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஆசிரியர் வேலைக்கு சேந்து இப்ப வழக்கமான சம்பளம் வாங்குறார். 2005ல அரசு வேலைக்கு சேந்ததுனால அரசாங்க ஓய்வூதியம் கெடையாது. (2004ல இருந்து அரசாங்க வேலைக்கு சேர்றவங்களுக்கு அரசு ஓய்வூதியம் கெடையாது. கான்ட்ரிபியூட்டரி ஓய்வூதியம் தான்).
பொருளாதார இழப்பு இருக்கும்போது ஏன் ஆசிரியர் வேலைக்கு சேந்தீங்கன்னு கேட்டா நான் ஆசிரியராறதுக்குன்னு படிச்சேன். நான் கற்ற பாடத்தை பிள்ளைகளுக்கு சொல்லிக்குடுக்கறதுல சந்தோஷப்படுறேன். ஆசிரியர் வேலைல எனக்கு மனசு திருப்தி கெடைக்குதுங்கறார்.
இவர் பேர் கருப்பு. இவரும் அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் தான். படிப்பு எம்.ஏ எம்.பில் எம். எஸ்சி. பி.எட் இவரும் ஆசிரியர் வேலை கெடைக்காம கண்டக்டர் வேலைல சேந்து அரசு ஆசிரியராகணும்னு முயற்சி பண்ணி கிட்டிருக்கார்.
இப்ப TRB வந்திருக்கு கருப்பு என்ன ஆனார்னு தெரியலை.
அரசு ஆசிரியராகனும்ற ஆசைய நிறைவேத்துன திரு.நேருக்கும் ஆசைப்படுற கருப்புவுக்கும் எனது சல்யூட்.
முனியப்பனும் மூணார் யானையும்
வரையாடு (Nilgiri Thar)
அவர் தாத்தா சின்ன தாத்தா காலத்துல மூணாறுக்கு பஸ் கெடையாது. நடந்துதான் போகணும். நடந்து போறப்ப யானை பக்கத்துல வரும் ஏலத் தோட்டத்துக்கும் யானை வரும். அதனால முனியப்பன் சின்னப் பிள்ளயா இருக்கப்ப கதை சொல்றப்ப யானைக் கதையும் நெறய சொல்லுவாங்க யானை முனியப்பன் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு.
அதுனால முனியப்பன் மூணார் போனா காட்டு யானைய தேடிப்போய் பாத்துட்டு வருவார். 2000த்தில மாட்டுப்பட்டி டேம்ல போட்டிங் போனார் முனியப்பன ஒரு கோஷ்டியோட. சாயஙகால நேரம. ஸ்பீட் போட் ஒடடுறவர். யானை அங்க தண்ணி குடிக்குதுன்னு ஒரு எடத்துக்கு கூப்பிட்டு போனார். தூரத்துல யானை தெரியுது. கரைல இருந்து காட்டுக்குள்ள போக மேல ஏற ஆரம்பிச்சிருச்சு போட் யானைய நெருங்க ஆரம்பிச்சது. மொத்தம் 3 யானை ஒரு குட்டி ரெண்டு பெரிசு. முனியப்பன் ஜாலியாய்ட்டாரு. கேமாரவ வச்சு போட்டா எடுக்க ஆரம்பிச்சாரு. ஸ்பீட் போட் கரைய ஒட்டி நின்ன ஒடனே படகு ஓட்டுநர் என்ஜினை ஆப் பண்ணிட்டார். மேல காட்டுக்குள்ள போன யானை திரும்பி நின்னுச்சு. 3 யானையும் சத்தம் போட்டுச்சு பாருங்க போட்ல இருந்த எல்லாரும் கடவுளே காப்பாத்து முருகா காப்பாத்துன்னு கத்த ஆரம்பிச்சாங்க. யானைக்கு கோபம் வந்தா வாலை ஸ்ட்ரெய்ட்டா தூக்கும். 2 யானை வாலை ஸ்ட்ரெய்ட்டா தூக்கிருச்சு. 3 யானையும் மேட்ல இருந்து முனியப்பன் இருந்த போட்டுக்கு இறங்க ஆரம்பிச்சுது.
முனியப்பனை முறைக்கும் காட்டு யானை
எல்லாருக்கும் இருதயம் ஒரு செகன்ட் நின்னுச்சு. படகு ஓட்டுநர் என்ஜினை ஆன் பண்ணி படகை ரிவர்ஸ் எடுத்தார். எல்லாருக்கும் அப்பத்தான் மூச்சு வந்துச்சு யானை வெரட்டின பிறகும் யானை பாக்க போறத முனியப்பன் இன்னும் விடவில்லை.இந்தியாவும் ஒலிம்பிக்சும்
ஒலிம்பிக்ஸ்ங்கிறது உலக அளவுல 4 வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கிற விளையாட்டு போட்டி. எல்லா நாட்டு விளையாட்டு வீரர்களும் தங்களோட திறமைய நிரூபிக்க வாய்ப்பு உள்ள ஒரு போட்டி
உலகத்தில இரண்டாவது ஜனத்தொகை உள்ள நாடு நமது இந்தியா அப்ப விளையாட்டு போட்டில எங்க இருக்கணும்? டாப்ல எப்படி நம்ம ஆளுக இருப்பாங்க நம்ம கௌரவம் என்னாறது!
இதுவரைக்கும் நடந்த ஒலிம்பிக் போட்டிகள்ல ஒவ்வொரு ஒலிம்பிக்லயும் ஒரே ஒரு பதக்கம்தான் பெற்று வந்தாங்க. ஹெல்சிங்கி ஒலிம்பிக்ல மட்டும் ஹாக்கில தங்கமும் மல்யுத்தத்துல வெண்கலம் என இரண்டு பதக்கங்கள். இப்ப பீஜிங் ஒலிம்பிக்ல அயினவ் பிந்த்ரா தங்கம் சுஷில்குமார் மற்றும் விஜேந்தர் தலா ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை பெற்று சாதித்திருக்கின்றனர். ஒண்ணுல இருந்து மூணு பதக்கம் வாங்கினதுக்கே நம்ம ஆளுகளுக்கு பெருமை தாங்கல
ராஜ்யவர்தன் ரதோர் துப்பாக்கி சுடுறதுல வெள்ளியும், கர்ணம் மல்லேஸ்வரி பளுதூக்குதல்ல வெண்கலமும், டென்னிஸ்ல வெண்கலமும் வாங்கியிருக்காங்க. தனி நபர் பதக்கங்கள் இவ்வளவுதான். ஹாக்கில தான் வரிசையா தங்கப் பதக்கங்கள். யார் கண்ணு பட்டுச்சோ பீஜிங் ஒலிம்பிக்ல விளையாட ஹாக்கி அணி தகுதி பெறவில்லை.
தடகளத்தில ஒலிம்பிக்ல இந்தியா பெற்ற சிறப்பான இடம் மில்கா சிங் (பறக்கும் சீக்கியர்) 100 மீட்டர் ஆண்கள் ஓட்டத்துல 4வது இடமும் இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா 100 மீட்ட பெண்கள் ஓட்டத்துல 4வது இடமும் பெற்றிருக்காங்க.
மொதல்ல பீஜிங்ல துப்பாக்கி சுடுறதுல தங்கம் வென்ற அவினவ் பிந்த்ரா விற்கும் மல்யுத்தத்துல வெண்கலம் பெற்ற சுஷீல் குமாருக்கும் குத்து சண்டையில் வெண்கலம் வென்ற விஜேந்தருக்கம் நமது பாராட்டுக்கள்.
பீஜிங் ஒலிம்பிக்ல உலகத்துல ஜனத்தொகைல பெரிய நாடான சீனா விளையாட்டுலயும் முதல் இடம். ஜனத்தொகைல இரண்டாவது இடத்துல இருக்க நாம எங்கய்யா.
ஏன் இந்த நெலம. நம்மனால சாதிக்க முடியாதா? முடியும் ஆனா முடியாது இப்ப அப்படி இருக்கு
முதல் காரணம் - கிரிக்கெட். காலைல விடிஞ்ச ஒடனே எல்லா ஊர்லயும் இளவட்ட பயலுக பூராம் கிரிக்கெட் வெளையாட கௌம்பிர்ரானுவ. ஞாயிற்றுக்கிழமை பாருங்க 20-30 வயசு குருப் அன்னைக்கு அவனுகளுக்கு லீவாம், Relax பண்ண கிரிக்கெட் மொதல்ல நம்ம பயலுகளுக்கு கிரிக்கெட்ட தவிர வேற விளையாட்டில ஈடுபாடு இல்ல.
ரெண்டாவது. போட்டி & பொறாமை கோஷ்டி. இது வெளையாடுறவங்களுக்கு இடைல உள்ளது. பயிற்சியாளர்கள் நிகழ்ச்சியை நடத்துபவர்களும் இதில வர்றாங்க திறமையானவங்களை வளக்கிறத விட்டுட்டு தனக்கு தெரிஞ்சவங்களை அவங்களுக்கு திறமை இல்லன்னாலும் ஆதரிக்கிறது. இப்படியே போனா எங்க மெடல் வாங்குறது?
மூணாவது காரணம்-அரசியல். ஆட்சிக்கு எப்படி வர்றது கெடைச்ச ஆட்சிய எப்படி தக்க வச்சுக்கிறதுன்னு நெனக்கிறதுக்குத்தான் அரசியல்வாதிகளுக்கு நேரம் இருக்கு. ஒலிம்பிக்ஸாவது புண்ணாக்காவது அட போய்யா.
நாலாவது ஸ்பான்ஸர் எனப்படும் நிதி உதவியாளர்கள் கிரிக்கெட் மேட்ச்ச நடத்த ஸ்பான்ஸர் பண்ணுவாங்க அதில அவங்களுக்கு விளம்பரம். அதுனால அவங்க பொருட்களோட வியாபாரம்.
அம்பானி, டாட்டா, லஷ்மி மிட்டல் இவங்கல்லாம் உலகளவில இந்திய கோடீசுவரர்கள். இவங்களுக்கு எல்லாம் எந்த கம்பெனிய வெலைக்கு வாங்குறது ? எப்படி பணத்தை பலமடங்கா பெருக்குறது ? இதான் அவங்களோட செயல்பாடே இந்தியா ஒலிம்பிக்ஸ்ல நெறய மெடல் வாங்குனா அவங்களுக்கென்ன கெடைக்கும்.
அஞ்சு-நம்ம பொருளாதாரம். இப்படியெல்லாம் இருக்குன்னு தெரியும்ல நீங்களாத்தான் போராடி முன்னுக்கு வந்து ஒங்க தெறமைய காட்டணும். நீங்க நெனக்கிறது சரி தன் கையே தனக்குதவி கிரிக்கெட்டுக்கு 6 ஸ்டம்ப் 1 பேட் ஒரு பால் போதும். மத்த விளையாட்டுக்கு அடிப்படை உபகரணங்கள் பயிற்சியாளர் செலவு இப்படி பெரிய அளவுல செலவழிக்க நம்ம ஆளுகளா முடியாது. ஏன்னா நம்ம பொருளாதாரம் வௌயாட்டுல ஆர்வம் திறமை இருக்கும் பொருளாதார தடையால அவங்களால மேல வரமுடியாது.
இன்னைக்கும் மைதானங்கள்ல கால்ல செருப்பு இல்லாம ஓடுறவங்களை நீங்க பாக்கலாம். அதே மாதிரி போலீஸ் செலக்ஷன்லயும் கால்ல செருப்பு இல்லாம ஓடுறவங்களை பாக்கலாம்.
பி.டி. உஷா பாருங்க உலக தரத்துல ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்துறாங்க. 2012 ஒலிம்பிக்ல தடகளத்தில தங்கம் வாங்கிரலாம்னு சொல்றாங்க.
ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிக்கிறது மிகப் பெரிய சவால். அதுக்காக உழைக்கிறதுக்கு விளையாட்டு வீரர்கள் இருக்காங்க அவங்களை ஊக்குவித்து, ஊக்கமளித்து, பயிற்சியளித்து ஜெயிக்க வைக்க முடியும் அதை யார் பொறுப்பெடுத்து செய்றது?
Friday, October 17, 2008
முனியப்பனின் காதலி
நாலெட்ஜ் இல்லாத
முனியப்பன் வாழ்க்கையில்
காதல் காற்று வீசியது
வீசியவள் பேரழகியில்லை
வளைவுகள் சரிவரப் பெற்றவள்
ஒரே துறையில், ஒரே இடத்தில், இருக்கவும்
ஒரே வேகமான காதல்
முனியப்பன் பாடத்தை பற்றிய பேச்சாளனல்லவா
பேசுவதற்கு குறிப்பெடுப்பாள் பேதையவள்
வக்கனை காட்டுபவள்
வஞ்சிக்காமல் சிரிக்கவும் செய்வாள்
படிக்கட்டுகளில் வளர்ந்த காதல்
இக்கட்டில் சிக்காமல் வளர்ந்தது
ஓட்டலுக்கு சாப்பிடப் போனால்
பில் கட்டுபவள் அவள்தான்
டீ குடிக்க போனால் சேலைகட்டிய இடுப்பில்
காடிச்சீப்பில் காசு வைத்திருப்பவளும் அவள்தான்
அய்யா அம்மா என்று
பணிபுரிபவர்கள் அழைக்க
அம்சமான காதல் வளர்ந்தது
சொல்லால் கொள்ளாமல் ஒருநாள்
காணாமல் போனான் முனியப்பன்
காதலனை காணாமல் தவித்தாள்
காரணம் புரியாமல் மயக்கம் போட்டாள்
பதறிய தோழிகள், மேலதிகாரிகள்
மருத்துவ காரணம் தேடினால்
மயக்கத்திற்கான காரணம் ஒன்றுமில்லை
அவர்களுக்கு தெரியுமா காதலின் அருமை
முனியப்பன் காணாமல் போகவில்லை
காதலியிடம் சொல்லாமல்
அறுவை சிகிச்சையில் இருந்தான்
அசராமல் தேடியவள்
கண்டு பிடிக்காமல் விடுவாளா என்ன?
கண்டு பிடித்து போனும் போட்டாள்
மீண்டும் வந்தவனை
கண்டு துள்ளி ஓடினாள்
காதருகே ஒற்றை ரோஜாவுடன்
காதலும் வளர்ந்தது
பிரச்சினைகளும் வளர்ந்தது
காதல் பயணம் சுகமானது
கப்பல் கவிழாதவரை
நான் ஆசைப்பட்டது எனக்கு கிடைக்காது
சொன்னவள் அவள்
விதி எனும் சூறாவளியில்
சிக்கிய காதல் சின்னாபின்னமானது
விதி விளையாடிய விளையாட்டு
காதலர் இருவரையும் புரட்டிப் போட்டது
உள்ளத்தை கொடுத்து
உதடுகளையும் கொடுத்தவளுக்கு
உதவவில்லை காலம்
தொழில் படிப்பால் பணத்தில்
துவளவில்லை இருவரும்
வெவ்வேறு இடங்களில்
வேறொரு துணையோடு வாழ்ந்தாலும்
வாழ்க்கையில் வீசிய
காதல் தென்றல் மறக்குமா?
முனியப்பன் காதலை, காதலியை மறக்கவில்லை
காதலியும் மறந்திருக்க மாட்டாள்
காதல் புதைக்கப்படும் போது, அழுத
கண்ணீர் வற்றும் போது
காதல் வரலாறாகிறது.
ஓட்டுநர், நடத்துநர், பேருந்து
ஒரு பேருந்து (Bus) ஓடணும்னா அதுக்கு ஒரு ஓட்டுநர் (Driver) பயணிகளுக்கு டிக்கட் போட ஒரு நடத்துநர் (Conducter) தேவை, அப்பத்தான வழித்தடத்தில் (Route) பயணிகள் பஸ் போகும். இது வழக்கமான வியம் தானே, அப்படீங்கறீங்களா, வழக்கமான விஷயம் தான், இதப் படிங்க.
மதுரைல இருந்து ஒரு பஸ் ஒரு ஊருக்கு புறப்பட்டு போகுது, ஓட்டுநரும், நடத்துநரும் உற்சாக பானம் லைட்டா ஏத்தின நெலமைல டிரிப் எடுக்கறாங்க. 20 கிலோ மீட்டர் தாண்டின ஒடனே ஒரு ஊர் வருது. வண்டி நிக்குது. ஊர் வந்தா பஸ்ஸ நிப்பாட்டி ஆளை ஏத்துறது, இறக்குறது தான நடக்கும். இங்கயும் அப்படித்தான். ஆனா பஸ்ல வந்த எல்லாரையும்,மீதி காசை கைல குடுத்து எறக்கிவிட்டுட்டாங்க., ஊருக்குப் போறோம் அப்படின்னு அந்த பஸ்ல வந்த எல்லாருக்கும் எப்படி இருந்திருக்கும் ?.
ஓட்டுநரும், நடத்துநரும், எங்க போவாங்க, நேரா அரசு மதுக்கடைதான், சரக்க கொஞ்சம் ஊத்திகிட்டு இன்னும் கொஞ்சம் கைல எடுத்துகிட்டு பஸ்ல ஏறி எங்க போனாங்க? பஸ் போற பாதையா? அதெப்படி? ஒரு பக்க (oneway) ரோட்ல பஸ்ஸ ஓட்டிட்டு போய், நிப்பாட்டி சரக்கடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
இது இப்படியிருக்க, பஸ் உரிமையாளர் என்ன செஞ்சாங்க?, பஸ் வரவேண்டிய டயத்துக்கு ஊருக்கு வரல, நடுல எங்கயாவது பிரேக்டவுண் ஆயிருக்கான்னு பாக்குறதுக்கு, பஸ்ஸோட வழித்தடத்துல வந்தா பஸ்ஸ காணோம். மதுரைல மேலிடத்துக்கு போன் பண்ணிட்டு, பஸ் எங்கயிருக்கும்னு தேட ஆரம்பிச்சு, கடைசில ஒரு வழியா பஸ்ஸ கண்டு பிடிச்சுட்டாங்க, ஓட்டுநரும் நடத்துநரும் முழிச்சிகிட்டா இருப்பாங்க?, மட்டை (flat). உபயம் அரசு மது. குடி, குடியை மட்டும் கெடுக்கல, பஸ் பயணிகளோட பயணத்தையும் கெடுத்துருச்சு.
வெங்கட்ராமன்
இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் B.E. படிக்கும்பொழுது 4வருடமும் தொடர்ந்து கோல்ட் மெடல் வாங்கினார். அடுத்து
M.E. சாப்ட்வேர் பெங்களுருவில் உலகத்தரம் வாய்ந்த IIM & IIS கல்வி நிறுவனங்களில் படித்தார். அங்கும் கோல்ட்மெடல் தான்.
படித்து முடித்ததும், அவரை MNC எனப்படும் மல்டி நேஷனல் கம்பெனிகள் அவரை வெளிநாட்டில் வேலை பார்க்க அழைப்பு விடுத்தன.
அவருடைய தகப்பனார் திரு ராமகிருஷ்ணன், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் கணிதத்துறை தலைவராகவும், பேராசியராகவும்
இருந்தார். அவர் தன்னுடைய மகன் இந்தியனாக இருக்க வேண்டும். அவருடைய உழைப்பு இந்தியாவில்தான் இருக்க வேண்டும். என்று
ஆசைப்பட்டார். தந்தையை போல எண்ணமுள்ள மகனும் வெளிநாடு செல்லாமல் பெங்களுருவில் 'டெக்ஸாஸ்' என்ற மிகப்பெரிய கம்பெனியில்
ஆரம்பத்திலேயே மேலதிகா??யாக பணியில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார். அவர் பெங்களுருவில் 1600 சதுர அடியில் ஒரு அடுக்கு மாடி
குடியிருப்பை விலைக்கு வாங்கியிருக்கிறார்.
அண்ணா பல்கலைகழகத்தில் B.E. படித்த 4 வருடமும் படிப்புக்கான தங்கப்பதக்கம், பெங்களுருவில் உலகத்தரம் வாய்ந்த IIS கல்வி
நிறுவனத்தில் M.E. பயின்ற 1 வருடத்திலும் தங்கப்பதக்கம் பெற்று, அயல் நாட்டுக்கு வேலைக்கு போகாமல் இந்தியாவில் பெங்களுருவில்
பணிபுரியும் திரு.வெங்கட்ராமன் மிகப்பெரிய பாராட்டுக்குரியவர். அவர் தந்தை திரு.ராமகிருஷ்ணனும் பாராட்டுக்குரியவர்.
ரஜினி, சிரஞ்சீவி, விஜயகாந்த்
இப்பவும் பாருங்க ஒகனேக்கல் பிரச்சினைல ஒரு வாய்ஸ் குடுத்தார். குசேலன் பட ரிலீஸ் டயத்துல ரஜினி ஒரு பல்டி அடிச்சார் பாருங்க, அவர் பஞ்ச் டயலாக்கை விட சூப்பர் அதான், ரஜினி சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், நீங்க நடிகரா மட்டும் நின்னுக்குங்க, தமிழக மக்களோட பிரச்சினைகளுக்காக வாய்ஸ் குடுக்கிற தகுதி உங்களுக்கு இல்லை. ஒங்களுக்கு ஒங்க படம் ஓடணும்கிற சுயநலம் மட்டும் தான்கிற விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சிபோச்சு.
ரஜினிய பத்தி பாத்துட்டோம். இப்ப விஜயகாந்த்தை பாப்போமா, இவர், மொதல்ல வலுவான பொருளாதார பிண்ணனிய உண்டாக்கிக்கிட்டார். பிறகு மக்களுக்கு உதவித் திட்டங்களை அவருடைய பிறந்த நாளைக்கு செயல்படுத்த ஆரம்பிச்சார். படங்கள்லயும் நல்லவன் மற்றும் அக்கிரம் செய்பவர்களை தண்டிக்கும் கதாபாத்திரங்களில் நடித்தார், மக்களின் மனதை ஒரளவுக்கு கவர்ந்தார்.
அரசியலுக்கு வருவேன், வருவேன்னு, ரஜினி மாதிரி சொல்லிக்கிட்டே இல்லாம, திடீர்னு அரசியலுக்கு வந்தார். பா.ம.க. கோட்டையான விழுப்புரத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபீல்ட் ஒர்க் எனப்படும் கள வேலைகளில் இவர் கெட்டிக்காரர். இவர் செல்லும் இடமெல்லாம் இவர் பேச்சை கேட்க மக்கள் திரளாக கூடுகிறார்கள். இவர் கட்சியின் வாக்கு வங்கியும் கூடிக்கொண்டே வருகிறது. இவருடைய பலம் இவருடைய துணைவியார் மற்றும் தொண்டர்கள்.
இன்னும் ரெண்டு பெரிய நடிகர்கள் தமிழக அரசியலில் இருக்கிறார்கள். அவர்கள் இருவருமே சாதிக் கட்சியினர், ஆகையால் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை.
ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிய பாத்தீகளா, ஆம்பிளை சிங்கம். அரசியல்ல குதிச்சிட்டார். ஆகஸ்ட் 17ல் அவர் ஒரு கூட்டத்தில் தான் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். ஏழை மக்களுக்காக, மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
கட்சியின் பெயர், கொடி முதலியன எல்லோரையும் கலந்து ஆலோசித்து சொல்வதாக சொல்லியிருக்கார். அவருடைய அறிவிப்பு அவரோட ரசிகர்கள் கிட்ட ஆரவாரத்தையும் உற்சாகத்தையும் உண்டாக்கியிருக்கு. ஆந்திர அரசியல்வாதிகள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.
கடைசில பாருங்க சிரஞ்சீவி ஆகஸ்ட் 26ந் தேதி 'பிரஜா ராஜ்யம்'னு கட்சி ஆரம்பிச்சுட்டார். கட்சி கொடி, கொள்கைகள் எல்லாத்தையும் மீட்டிங் போட்டு அறிவிச்சுட்டாரு, திருப்பதில நடந்த கூட்டம் திருப்பதிய உலுக்கி எடுத்துருச்சு. 10 லட்சம் பேர கூட்டுறதுன்னா லேசான விஷயமா?. அசத்தி காட்டிட்டார் சிரஞ்சீவி, 18 ட்ரெய்ன், 3000 பஸ்ல கூட்டத்துக்கு ஆட்கள். அதுக்கு மேல மத்த வாகனங்களில் 3000 போலீஸ் + 3000 தொண்டர்கள் பாதுகாப்பு, எங்க போய்ட்டார் பாருங்க சிரஞ்சீவிய
ரஜினி, விஜயகாந்த், சிரஞ்சீவி இப்ப ஒங்களுக்கு புருஞ்சிருக்கும்.
Thursday, October 9, 2008
நீங்கள் சந்திக்காத மனிதர்கள்
தவசித்தேவர்
விருமாண்டி மாதிரி முரட்டுத்தனமான ஆள் கெடையாது.
ரொம்ப அமைதியான, பழய காலத்து காங்கிரஸ்காரர், 80 வயதை தாண்டிய இளைஞர். மடிச்சுக்கட்டின வேட்டி, முழங்கை வரை வர்ற சட்டை, தோள்ல ரெண்டுபக்கமும் தொங்கும் நீளமான துண்டு அவர் முழங்காலுக்கு கொஞ்சம் மேல வரைக்கும் வரும்.
காலைல மதுரை பைபாஸ் ரோட்ல வாக்கிங்வரும் அவர் காலில் செருப்பு அணிவது கிடையாது. முனியப்பன் அவரிடம் என்னய்யா கால்ல செருப்பு இல்லாம நடக்குறீங்க ? அப்படின்னதுக்கு அவரோடு பதில் 'அப்பேர்ப்பட்ட மனுன் காந்தியே மதுரைல வந்து மக்களை பாத்து சட்டையை கழட்டிட்டு இனிமே சட்டை போட மாட்டேன்னுட்டார். நம்மளுக்கு எதுக்கு கால்ல செருப்பு' அப்படின்னார். கிட்டத்தட்ட 40 வருஷமா கால்ல செருப்பு போடாம நடக்கிறார். அவர் பேரன் பேத்திகள்லாம் தேசிய அளவுல உலக அளவுல இந்தியாவுக்காக செஸ் விளையாட்டு விளையாடுறவுங்க. அவங்களை அவர் செஸ் விளையாட அழைச்சிட்டு போயிருக்கார். அப்பவும் செருப்பு போட்டதில்ல டெல்லில குளிர்காலத்துல கூட அவர் கால்ல செருப்பு போட்டதில்லை.
அவர் சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் 'விருவீடு' எனும் ஊருக்கு அருகில் உள்ள விராலிமாயன்பட்டி.
மதுரையில தனது மகன்கள், மகள்களுடன் வசித்து வருகிறார். அவர்தான் கோடாங்கி. தை பொங்கலுக்கு அடுத்த நாளும், மாசி பச்சையிலும் (மகா சிவராத்திரி) கையில் சூலாயுதத்துடன் ஊரில் சாமியாடுவார்.
அவர் மகள் வயிற்றுப் பேரன் தான் தீபன் சக்கரவர்த்தி. செஸ்ஸில் இந்தியாவின் 14வது கிராண்ட் மாஸ்டர்.