Tuesday, June 29, 2010

சங்கம் மருவிய காதல் ... இன்று

முன்னுரை

சங்க காதல் எப்படி இருந்தது ? இன்றைய காதல் எப்படியிருக்கிறது ? அருமையான தலைப்பு. இந்த ஒப்பீட்டுக்குள் செல்லும் முன், முதலில் காதல் என்றால் என்ன என்பதையும், அடுத்து சங்ககாலத்துக் காதலையும், அதன்பின் இன்றைய காதலையும் அலசி ஆராய்ந்து, பின்னர் சங்க காலத்துக் காதலையும் இன்றைய காதலையும் ஒப்பிட்டு நோக்குவோம்.

வீரமும், காதலும் தான் தமிழனின் அடையாளமாக அன்று முதல் இன்று வரை சொல்லப்படுகிறது. . காதல் காதல் வயப்படாத ஆணோ பெண்ணோ கிடையாது. இது மனிதன் தோன்றிய காலம் முதல் உள்ள மனித இனத்துக்கே உள்ள தனி இயல்பு. காதலித்துப் பின்னர் துணையைத் திருமணம் முடிப்பவர்களும், திருமணம் ஆன பின் தன் துணையைக் காதலிப்பவர்களும் உண்டு.

காதல் என்பது சுருக்கமாக ஆணோ, பெண்ணோ மனத்தால் ஒன்றுவது. இரு மனங்களின் சங்கமம். முதல் பார்வையிலேயே காதல் தோன்றலாம், நீண்ட நாட்களும் ஆகலாம். பொதுவாகக் காதல் எனும் சொல் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அரும்பும் திருமணத்திற்கு முன் உள்ள காதலையே குறிக்கும் சொல்லாக வழக்கத்தில் உள்ளது. ஆணும், பெண்ணும் காதலிக்கும் போது, பாலினங்கள் வேறாக இருப்பதால் சலன உணர்ச்சிகள் அலைபாயும். இதனடிப்படையில் காதற் காமம், காமக் காதல் என்று கூட சொல்லலாம். காதலுக்குப் பின் காமம் நியாயமானது. காமத்துக்காகக் காதல் தவறாக முடிகிறது. . சங்ககாலக் காதல் 1. சில சொற்கள்

சங்ககாலக் காதலில் வரும் சொற்கள் சிலவற்றை, முக்கியமானவைகளை இங்கு பார்ப்போம்.

தலைவன் - காதலன்
தலைவி - காதலி
களவு - காதல் சந்திப்பு
களவொழுகி - காதல் வயப்பட்ட சந்திப்பு
பகல் களவு - காதல் சந்திப்பு பகலில்
இரவு களவு - காதல் சந்திப்பு இரவில்

தலைவன் வரும் வாகனங்கள் - தேர், குதிரை, யானை

தோழி - தலைவியின் தோழி, தலைவனுக்கும் தலைவிக்கும் இடையேயான தகவல் தொடர்பாளர்

புலவி - ஊடல் அம்பல் - கிசுகிசு

அலர் - புரணி

குறியிடம் - தலைவனும், தலைவியும் சந்திக்கும் இடம்

2. கண்ணில் தொடங்கும் காதல் ...

சங்க காலத்துலயும் காதல் கண்ல தான் ஆரம்பிக்குது.

"கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல" - குறள் 1100


"கடைக்கணால் சொல்வான்போல் போக்கி நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்" - கபிலர் - கலித்தொகை

இந்த ரெண்டு பாடல்களின் வரிகளுக்கும் விளக்கம் எழுத வேண்டியதில்லை. காதல் கண்ணில் அரும்புவதை சொல்கின்றது.

தலைவன் கண்ல படற தலைவியைத் தலைவன் வர்ணிக்கிறான் பாருங்க

"துளியிடை மின்னுப்போல் தோன்றி ஒருத்தி ஒளியோடு உருவென்னைக் காட்டி அளியள் என் நெஞ்சாறு கொண்டாள்; அதற்கொண்டும் துஞ்சேன்" - கலித்தொகை 139

தலைவன் மின்னலைப் போலத் தோன்றி தன் நெஞ்சத்தை
அள்ளிக்கொண்டவளைப் பற்றிப்பாடி, அந்த நிகழ்ச்சிக்கப்புறம் அவனுக்கு தூக்கம் வரலையாம்.

"நீயும் தவறிலை; நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமரும் தவறிலர்; நிறை அழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப் பறை அறைந் தல்லது செல்லற்க என்னா இறையே தவறுடையான்..." - கபிலர்

நீயும் தவறிலை. உன்னைத் தெருவிலே சுதந்திரமாகத் திரிய விட்ட சுற்றத்தாரும் தவறுடையவரில்லை. மதங்கொண்ட யானையை நீர்த்துறைக்கு விட்டால் முதலில் பறையறைந்து பின்னர் அனுப்புவார்களே அதுபோல் உன்னையும் பறைசாற்றியே செல்ல விடல் வேண்டும் என்று ஆணையிடாத இந் நாட்டு மன்னனே தவறுடையவன்.

3. தலைவியைச் சுற்றும் தலைவன் ...

ஒரு இளைஞன் தலைவியைச் சுத்திக்கிட்டே இருக்கான். தலைவி தோழியிடம் சொல்றா பாருங்க.

"வல்லான் போல்வதோர் வண்மையும் உடையன்; அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னைச் சொல்லும் சொல், கேட்டீ - சுடர் இழாய் பன்மாணும் நின்இன்றி அமையலேன் யான் என்னும் அவனாயின் அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிதாயின், என் உற்ற பிறர்க்கும்... " - கபிலர் உலகத்தைக் காப்பாற்றக் கூடிய வல்லமை உள்ளவன் போல தோன்றும் ஒருவன் தன் ஆண்மைகளை விட்டு என்னை வந்து சொல்வதைக் கேள். தோழி நீ இன்றி எனக்கு வாழ்க்கை அமையாது என்கிறான். அவள் பேச்சை நம்புவது எல்லாருக்குமே அரிதாக இருப்பது போல் எனக்கும் அவனை நம்புவது எப்படி என்று தெரியவில்லை. தலைவி தொடர்கிறாள்.

"வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவனாயின் ஏழையர் எனப்பலர் கூறும் சொல் பழியாயின் சூழுங்கால் நினைப்பதொன்று அறிகிலேன்" - கபிலர்

தலைவி நான் இனியும் உயிர்வாழலேன் என்பான் அவன், அதற்கு இரங்கி அவனுக்கு அருளலாமோ என்றால் இப்பெண் பேதையாகுபவளோ எனப் பலரும் பழி சொல்வார்களே, ஆராய்ந்தாலும் என்ன நினைப்பதென்று தெரியவில்லை. வலிமையான ஆணைக் காதலிக்கலாமா, வேண்டாமா என்று தலைவி எப்படி எண்ணுகிறாள். செய்வதறியாது நிற்கிறாள்.

தலைவியிடம் தோழி சொல்கிறாள்

"பூணாகம் நோக்கி, இமையான் நமந்த நம் கேண்மை விருப்புற்றவனை எதிர்நின்று நாண் அடப்பெயர்த்தல் நயவர வின்றே" -கபிலர் தோழி, தலைவியிடம் நம்மை விரும்பி வந்தவனை நாணம் தடுத்ததால் கைவிடுவது நல்ல பண்பன்று என்று சொல்கிறாள்.

தலைவனும், தலைவியும் பேச ஆரம்பிச்சிர்றாங்க. அப்பொழுது தோழி தலைவியிடம் "நின்னோடு சூழுங்கால் நீயும் நிலங்கிளையா என்னோடு நிற்றல் எளிதன்றோ மற்றுஅவன் தன்னோடு நின்று விடு" - கபிலர்

நீயும், அவனும் பேசும் போது என்கூட நிலத்தைக் கிளறி விட்டு நிக்கிறது உனக்கு எளிதல்ல. அதனால அவன்கூட நீ நின்னுக்க. என்னய ஆள விடு இது தோழி தான் விலகிக் கொள்வதாக அமைந்த பாடல் வரிகள். 4. காதல் ஆரம்பம் ...

காதல் அரும்பிருச்சு. தலைவி வீட்டுக்குப் போறார் ஒரு தலைவன். போற தலைவன் சும்மா இருப்பானா? தலைவி கையப் பிடிச்சு இழுக்குறான். தலைவி, தோழியிடம் சொல்கிறாள் "அன்னாய் இவனொருவன் செய்ததுகாண் என்றேனோ அன்னை அலறிப் படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கினான் என்றேனா" - கபிலர்

தலைவன் தண்ணீர் கேட்கிறான். தலைவி வீட்டில இருந்து குடிக்க தண்ணீர் கொண்டு வருகிறாள். தலைவி கையப் பிடிச்சு இழுத்த உடனே தலைவி "ஆ அன்னை"ன்னு கத்திர்றா. அன்னையும் வீட்டுக்குள்ளே இருந்து வரவே சமாளிக்கிறா பாருங்க தலைவி..... "இவனுக்கு நீர் விக்கிற்று என்று..." காதல் வந்துருச்சுன்னாலே கண்ணு மண்ணு தெரியாது. "நோக்குவ எல்லாம் அவையே போறல்" - தொல் 1045

எதைப் பாத்தாலும் ஒரே மாதிரி தெரியுதாம்.

"பசியட நிற்றல் கண் துயில் மறுத்தல்" - தொல் 1215


பசியிருக்காது, கண்ல தூக்கம் வராதாம் - தொல்காப்பியம் காலத்திலேயே இது. தோழி தலைவனிடம் கூறினாள்

"வேம்பின் பைங்காய் என் தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனீர்... " - வினைக்கந்தன் (குறுந்தொகை)

நல்லா கசக்குற வேப்பங்காயை தலைவி தந்தால், அதை இனிக்கும் வெல்லக்கட்டி என்கிறீரே தலைவியான காதலி கொடுத்தா எதையும் திம்பான் நம்ம தலைவன் காதலன்.

தலைவிக்காக இப்ப நம்ம தலைவன் உருகுறார். "கோடைத் திங்களும் பனிப்போல் வாடைப் பெரும்பணிக் கென்னள் கொல்" - கழார்க்கீரன் எயிற்றியார் (நற்றிணை)

உடனிருக்கும் போது, கோடை காலத்திலும் குளிரென நடுங்கும் என் காதலி குளிர் மிக்க வாடைக் காலத்தே நான் பிரிந்து போய் விட்டால் என்னாவாள் ?

காதலியோட கண்ணு படற பாட்டைப் பாருங்க

"வாராக்கால் துஞ்சா; வரின் துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண்" - குறள் 1179

தலைவன் வராதபொழுது அவர் எப்போது வருவார் என எதிர்பார்த்துக் கண்கள் துயில்வதில்லை. வந்த பிறகு தலைவனைப் பாத்துக்கிட்டே கண்கள் துயில்வதில்லை. ஆகையினால் கண்கள் தாங்க முடியாத துன்பத்தை உடையனவாயின. அந்தக் காலத்திலும் காதலி பெருமைப்படத் தக்கவளாக இருந்திருக்கிறாள்.

"துன்பம் துணையாக நாடின் அதுவல்லது இன்பமும் உண்டோ எனக்கு" - பாலை பாடிய பெருங்கடுங்கோ துன்பம் வந்தாலும் உன்னோடு சேர்ந்திருக்கும் இன்பம் பெரிது. காதலியின் அன்பு போற்றத்தக்கது. காதலர்கள் என்றாலே நேரம், காலம் அறியாமல் பேசிக் கொண்டிருப்பவர்கள். "தோய்தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால்" - குறுந்தொகை 152

காதலர்களை அவரவர் வீட்டுக்கு செல்லப் பணிக்க வைகறை வருது. காதல்ன்னாலே ரெண்டு மனமும் ஒன்றாகிறது.

" உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு" - குறள் 1121

உடலுடன் உயிருக்கு உள்ள தொடர்பு போல அந்த பெண்ணோடு உள்ளது எனது நட்பு. 5. கிசுகிசு ...

காதலர்கள் எத்தனை நாளைக்குத் தான் யார் கண்லயும் படாம பேச முடியும் ? அடுத்தவங்க பாத்துட்டா கிசுகிசு, புரணி எல்லாம் வரும். ஒரு குமரியைப் பற்றி ஊர் மகளிர் வாய்க்குள் (கிசுகிசு) பேசிக்கொள்வது அம்பல் எனவும், வெளிப்படையாகப் பேசுவது அலர் எனவும் பெயர் பெறும்.

" அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்" - நற்றிணை 143

இது கிசுகிசு.

" அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர் " - அகம் 203

இது புரணி.


6. பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் ...

வாழ்க்கைல அன்னைக்கும் பொருளாதாரம் மிக முக்கியமான அடிப்படையாக இருந்தது. பொருள் ஈட்ட, சம்பாதிக்க தலைவன் வெளியிடங்களுக்குச் சென்று தான் ஆக வேண்டும். அதேபோல் போர் - வீர மரபல்லவா, போர்ப் பாசறையில் பயிற்சிக்கும் போக வேண்டும். போருக்கு அனுப்புவதில் பெருமை கொள்ளும் பெண்கள், பொருள் ஈட்டச் செல்லும் பிரிவால் வருந்துகின்றனர்.

செல்வம் தேடிச் செல்லும் தலைவனைப் பலவாறு கூறி அவன் செல்வதை நிறுத்த முயலும் தோழி சொல்வதைப் பாருங்கள்.

"வானம் துளிமாறு பொழுதின், இவ் வுலகம் போலும் - நின் அளிமாறு பொழுதின் இவ் ஆய் இழை கவினே" - பாலை பாடிய பெருங்கடுங்கோ

மழை பெய்யாது போனால் இவ் வுலகம் என்னாகும்? அது போல உன் அருள்மழை இல்லாத பொழுது இந்த ஆயிழையின் கவினும் கெட்டுவிடுமல்லவா? பொருள் தேடி புறப்படுபவனை நிப்பாட்ட "ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து பொருள்வயிற் பிரிதல் வேண்டும் என்னும்..."

வேறு நாட்டிற்குப் போய் பொருள் தேடப் போறியே அன்னைக்கு

"நின்னிற் பிரியலென் அஞ்சல் ஓம்பு என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே, அவற்றுள் யாவோ வாயின? மாஅன் மகனே..." - பாலை பாடிய பெருங்கடுங்கோ

உன்னை விட்டுப் பிரிய மாட்டேன், பயப்படாதே என்பதையும் நீ தானே சொன்னாய். அதில் எது உண்மை ? தலைவனைக் காணாத தலைவி எப்படி இருப்பாள் ?

"பெயின்நந்தி வறப்பின்சாம் புலத்திற்குப் பெயர்போல யான் செலின்நந்தி செலின் சாம்பம் இவள் என்னும் தகையோதான்" - மருதன் இளநாகன்

மழை பெய்தால் வளமாகி, வறண்டால் வளங்குன்றி அழகு கெட்டு அழியும் விளைநிலம் போல நான் சென்றால் அழகு பெற்று நான் செல்லாவிட்டால் வாடியிருப்பாள் தலைவி. தலைவனுக்கே பிரிவு வந்தால் தலைவியோட நிலைமை தெரியுது பாருங்கள்.


7. தலைவன் திரும்புதல் ...

தலைவன் திரும்பி வந்தவுடன் தலைவியைப் பாருங்கள்

"மன்னிய நோயோடு மருள்கொண்ட மனத்தவள் பன்மலை இறந்தவன் பணிந்து வந்து அடிசேரத் தென்னவன் தெளித்த தேஎம் போல இன்நகை எய்தினள், இழந்த தன் நலனே..." - நல்லுந்துவனார் (கலித்தொகை)

காதலன் வந்ததும் புதுநலன் பெற்ற காதலியைப் பற்றி இன்னொரு பாடல்ல சொல்றார் நல்லுந்துவனார். "காதல் மன்ற அவனை வரக்கண் டாங்கு ஆழ்துயர மெல்லாம் மறந்தனள்..."


8. புலவி ...

தலைவனும் தலைவியும் எப்பவும் ஜாலியாவே உப்பு சப்பு இல்லாம இருக்க முடியுமா ? இருவருக்கிடையே பிணக்கு வருகிறது. அதைப் புலவி அப்படிங்கறார் வள்ளுவர்.

"உப்பமைந்து அற்றால் புலவி அது சிறிது மிக்கற்றால் நீள விடல் ...." - குறள் 1302

புலவியை நீள விடாது உப்பு போல அளவாய் இருத்தல் வேண்டும். இவ்வளவு தூரம் காதல் போய்க்கிட்டிருக்கும் போது தலைவி வீட்டுக்குத் தெரியாமப் போகுமா?

"ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய்" - குறள் 1147

காதல் நோயாகிய பயிரானது இவ்வூர் மகளிர் தூற்றுகின்ற அலர் உரமாகவும், அதனைக் கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற கடுஞ்சொல் நீராகவும் கொண்டு வளர்ந்து வருகிறது. 9. மணமுடித்தல் ...

தலைவனும் தலைவியும் காதலிப்பது தலைவி வீட்டில் தெரியாமல் தலைவிக்கு வேறு இடத்தில் மணம் பேசுகிறார்கள். அது பொறுக்காத தலைவி தோழியிடம் "அருநெறி ஆயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல்இயல் பன்றே" - நல்லுருத்திரனார்

உள்ளத்தால் தலைவனை மணந்ததால் மற்றொருவனுக்கு மணம் முடிக்கப் பேசுவதை இரண்டாவது மணம் என்கிறாள். இப்படி ஒரு சூழ்நிலை உருவான உடனே தோழி தன் பங்கை ஆற்ற வேண்டும் அல்லவா... தலைவன் கிட்ட ஓடுறா.

"தண்ணம் துறைவன் நல்கின் ஒன்நுதல் அரிவை பால்ஆ ரும்மே" - அம்மூவனார் அயலார் திருமணம் பேச வந்துள்ளனர். தலைவி உண்ணா நோன்பிருக்கிறாள். தலைவன் தலையளி செய்தால் தான் தலைவி பாலும் பருகுவாள். இன்னொரு பாட்டுல

"உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு இயங்கொலி நெடுந்திண்தேர் கடவுமதி விரைந்தே" - நல்லுந்துவனார்

காதலியிடம் தோழி "வேங்கை விரிவிடம் நோக்கி வீங்குஇறைப் பனைத்தோள் வரைந்தனன் கொளற்கே" - கபிலர்

தலைவன் வேங்கை பூக்கும் காலத்தை எதிர்பார்க்கின்றான். அப்போது மணம் பேச வருவான் என்கிறாள். தலைவி இவ்வளவு நடக்கும் பொழுது சும்மா இருப்பாளா ?. தன் தாயிடம் தன் நிலையைச் சொல்லுமாறு தோழியைப் பணிக்கிறாள்.

"..................................................நம்நகர் அருங்கடி நீவாமை கூறின் நன்று என நின்னொடு சூழ்வல், தோழி! நயம் புரிந்து இன்னது செய்தாள் இவள் என மன்னா உலகத்து மன்னுவது புரையே" - கபிலர்

அப்படி நீ கூறும்போது உன்னுடைய புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைக்கும். இதுக்கு இடையில் ஒரு நாள் தலைவி காதல் வயப்பட்டிருப்பதை ஒரு நிகழ்ச்சி காட்டிக் கொடுக்கிறது.

"அன்னையும் அத்தனும் இல்லராயாய் நாண அன்னைமுன் வீழ்ந்தன்றப் பூ..."

தலைவன் முல்லைப் பூ கொடுக்கிறான். தலைவி அதைத் தன் தலைமுடிகளுக்கிடையில் வெளியே தெரியாதது போல் சூடிக் கொள்கிறாள். தலைவி வீட்டிற்குள் வந்ததும் தலைக்குள்ளிருக்கும் பூ கீழே விழுந்து தலைவியின் காதலைக் காட்டிக் கொடுக்கிறது.

காதலன் காதலியைத் தவிக்க விடுவானா? "............................................. நம் வள்ளையுள் ஒன்றி நாம் பாட, மறைநின்று கேட்டருளி மென்தோழ் கிழவனும் வந்தனன்; நுந்தையும் மன்றல் வேங்கைக் கீழ் இருந்து மணம் நமந்தனன், அம்மலை கிழவோற்கே"

தோழி, நாம் அவளை வள்ளை பாடினோமே, அதை அவன் மறைந்து கேட்டு விட்டான். உன்னை பெண் கேட்டு வந்தான். உன் தந்தையும் வேங்கை மரத்தின் கீழே அமைத்த மேடையிலே, இருவருக்கும் மணம் செய்து வைக்க இசைந்து விட்டார். கல்யாணம் முடிவாயிருச்சு. அடுத்து 10.யாயும் ஞாயும் யார்ஆ கியரோ ...

" யாயும் ஞாயும் யார்ஆ கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே" - செம்புலப் பெயனீரார் (குறுந்தொகை)

என் தாயும் உன் தாயும் என்ன உறவு உடையவர்? என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினராவர் ? யானும் நீயும் எவ்வழியில் அறிந்து கொண்டோம்? நம் இருவரது காதலால் அன்புடை நெஞ்சங்கள் செம்மண் நிலத்துப் பெய்த மழைநீர் அப்பொழுதே நிறமும் சுவையும் மாறுதல் போல ஒன்றாய்க் கலந்தன.

காதலன் காதலியின் நல்ல சிந்தனையைப் பாருங்கள்

பெண்ணுக்கு கல்யாணம்னா பெற்ற தாய்க்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கும் பாருங்க, "யாயும் அவனே என்னும்; யாமும் வல்லே வருக, வரைந்த நாள் என நல்இறை மெல்விரல் கூப்பி இல்லுறை கடவுட்கு ஓக்குதும் பலியே.." - தொல்கபிலர் (அகநானூறு)

நம் தாயும், அவனே உனக்கு உரிய மணமகன் என்றனள். அவர்கள் திருமணத்திற்குக் குறித்த நாள் விரைவாக வருக என நல்ல இறையினுடைய மெல்லிய விரல்களைக் குவித்து நம் இல்லுறை தெய்வத்திற்குப் பலிக்கடன் செலுத்த வேண்டும். கல்யாண வெட்கம், எவ்வளவு தான் பழகியிருந்தாலும், யாவரும் காணக் கல்யாண நாளிலே தன் காதலனருகே இருக்கும் போது மணப்பெண்ணுக்கு வெட்கம் தானாக வந்து விடுகிறது.

"வதுவை அயர்தல் வேண்டுவள்; ஆங்கும் புதுவை போலும் நின்வரவும் இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே" - கபிலர்

தோழி, தலைவனிடம் புதியவன் போல் வந்து நீ இவள் வீட்டில் பெண் கேட்கும் காட்சியையும், உன்னருகிலிருக்க நாணங் கொண்டவள் போல் இவள் திருமணக் கோலத்திலே நாணி ஒடுங்கியிருக்கும் காட்சியையும் நாம் காண வேண்டும். 11. திருமணத்திற்குப் பின் ...

திருமணம் முடிகிறது. திருமணம் முடிந்த நள்ளிரவு ...

"கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ முயங்கல் விருப்பொடு முகம்புதை திறக்க" - நல்லாவூர்க் கிழார்

திருமண நள்ளிரவில் கோடியாடைக்குள் தன் உடலை வளைத்து முகம் மறைத்து கிடந்து காதலியைப் புறம் தழுவி முகமறைவை எடுத்தான் கணவனான காதலன். "காதற்காமம் காமத்துச் சிறந்தது விருப்போர் ஒத்து மெய்புறு புணர்ச்சி" - குன்றன் பூதனார், பரிபாடல்

பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ன சொல்றார் பாருங்க

"ஒன்றன் கூறு உடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை"

ஒரே உடையை இரண்டாகக் கிழித்து உடுப்பவரே ஆனாலும் மனதினால் ஒன்றாக ஒன்றி பிரியாது வாழ்பவர் வாழ்க்கையே வாழ்க்கை.

தலைவி திருமணம் முடிந்த பிறகு தலைவனிடம் சொல்கிறாள்

"இம்மை மாறி மறுமை ஆயினும் நீஆ கியர்! என் கணவனை! யான்ஆ கியர்! நின் நெஞ்சுநேர் பவளே" - குறுந்தொகை

இப் பிறப்பு நீங்கி வேறு பிறப்பு உண்டாயினும், நீயே பிரியாமல் கணவன் ஆகுக. யான் உன் மனதுக்கேற்ப நடக்கின்ற காதலியாக மறுபிறப்பிலும் அமைவேனாக என்கிறாள்.

தலைவி இப்படின்னா தலைவன் " நல்லோள் கணவன் இவன் என்னப் பல்வோர் கூற .... " - குறுந்தொகை வேண்டும் என விரும்பினான். 12. மழலைச் செல்வம் ...

கல்யாணம் முடிஞ்ச பிறகு மழலைச் செல்வம் "மறியிடைப் படுத்த மாண்பிணை போலப் புதல்வன் நடுவணன் ஆக நன்றும் இனிது மன்றவர் கிடக்கை முனிவின்றி நீனிற வியலகங் கவை இய ஈனும் உம்படும் பெறலருங் குரைத்தே" - முல்லைத் திணை (செவிலிக் கூற்றுப் பத்து)

தலைவன் வீட்டுக்குப் போய் வந்த செவிலி அங்கு தான் கண்டதை தாயிடம் கூறுகிறாள். தன் குட்டியை இடைநிலத்தே கிடக்க விட்டு இருமருங்கும் கிடக்கும் கலைமானும் பிணைமானும். அதுபோல புதல்வனை நடுவில் கிடத்தி இருவரும் படுத்திருக்கின்றனர்.

"மக்கள் மெய் தீண்ட லுடற்கின்பம் மற்றவர் சொற் கேட்டல் இன்பஞ் செவிக்கு" - குறள் 67.

மழலை பிறந்தபின் தலைவனுடைய, தலைவியுடைய கடமையை சொல்றார் பொன்முடியார். " ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; "

பிள்ளையைப் பெற்று வளர்த்து விடுதல் தாயினுடைய கடமை

" சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே "

13. மரணம் ...

வாழ்க்கையின் முடிவு மரணம். முதலில் தலைவன் "ஒற்றழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை இன்னும் வாழ்தல் என்னிதன் பண்பே" - சேரன் மாக்கோதை

ஒளிமிக்க தீப்படுக்கையை சேர்ந்து என் தலைவி உயிர் நீத்து மேலுலகம் சென்றனள். அவள், உயிர் நீப்பவும் இன்னும் நான் உயிர் வாழ்கின்றேன். என்னே இவ் வுலகியற்கை.

"நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலை" - தொல் 1024

14. தலைவியின் புலம்பல் ...

இதுவரை நாம் பார்த்தவை சங்க காலக் காதல் நிகழ்வுகள்

இன்னும் நடைபெறும் நிகழ்வுகள் காதல் ஆரம்பத்தில் இருந்து மரணம் வரை நடக்கும் நிகழ்ச்சிகள். 15. உடன் போக்கு ...

வீட்ல கல்யாணம் பண்ணி வைக்கலேன்னா இப்ப வீட்ட விட்டு ஓடிப்போயிர்றாங்கள்ல, அந் நிகழ்வு சங்க காலத்திலயும் இருக்கு. உடன்போக்கு அப்படிங்கிறாங்க. தலைவன் உடன் செல்லும் தலைவி. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய தமிழறிஞர் திரு. வ.சு. மாணிக்கனார் ரத்தினச் சுருக்கமாக உடன் போக்கைப் பற்றிச் சொல்கிறார். " காதல் நம்பிமார், நங்கைமார் உடன்போக்கும், போயபின் நற்றாய் இரங்கலும்" புலவோர் தம் கற்பனைப் பாய்ச்சலுக்கு வளமான துறைகளாம். 122 பாடல்கள் களவுச் செய்யுட்களில் ஏழில் ஒரு கூறு. இத்துறைப் பாலன இவற்றைப் பாடினோர் இருபத்தெண்மர், அதிகமாக உடன்போக்கைப் பற்றி பாடியவர் கயமனார். இவருக்கு அடுத்து உடன்போக்கை அதிகமாகப் பாடியவர் ஓதலாந்தையார். "மக்கட்போக்கிய வழித் தாயிரங்கு பத்து உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து மறுதரவுப் பத்து - ஐங்குறுணை

16. மடலேறுதல்

சங்ககால காதல்ல தனி இடம், மிகக் கொடூரமானது இது. தலைவி தலைவனுடைய காதலை ஏற்கவில்லை. அப்பொழுது தலைவன் செய்யும் செயல் தான் மடலேறுதல். பணங்கருக்களால் ஆன குதிரையைச் செய்து அதன் மேல் ஏறி அமர்ந்து தலைவியின் ஊர் மன்றத்தில் சபையோர் எள்ளி நகைத்தாலும் தன் காதலை முறையிடுவது. பனங்கருக்களால் ஆன குதிரையில் வருவதால் தலைவன் உடலில் பனகங்கருக்கள் குத்தி குருதி வழிவது நிச்சயம். சமயத்தில் இரத்தம் வழிவது அதிகமானால் தலைவன் இறக்கவும் நேரிடலாம். தலைவன் மடலேறிச் சென்று தலைவி, ஊர்க் காரர்களிடம் சொல்றான் பாருங்க.

"என்கண் இடும்பை அறிஇயினென் நுங்கண் தெருளுற நோக்கித் தெரியுங்கால் இன்ன மருளுறு நோயொடு மம்மர் அகல இருளுறு கூந்தலாள் என்னை அருளுறச் செயின் நுமக் கறனுமாறதுவே" - நல்லந்துவனார்

மடலேறித் தலைவியைக் கைப்பிடித்தவனைப் பாருங்க எப்படி சொல்றான்னு "இளையாரும் ஏதிலவரும் - உளைய யான் உற்றது உசாவும் துணை என்று யான் பாடக் கேட்டு அன்புறு கிளவியாள் அருளிவந்து அளித்தலின் துன்பத்தில் துணையாய மடல்இனி இவன்பெற இன்பத்துள் இடம்படல் என்று இரங்கிணள்- அன்புற்று"

இது மாதிரி காதலன் காதலிக்காக, காதலை அடைய தன்னை வருத்துவதை இன்றைக்குத் திரைப்படங்களில் தான் பார்க்க முடியும்.

. இன்றைய காதல்

டைம்பாஸ் காதல், மனமுதிர்ச்சி இல்லாத காதல், இப்படி நிறைய இருந்தாலும் உண்மையான காதலும் நிறைய இருக்கிறது. காதல் ஆரம்பிக்கிறது வழக்கம் போல என்னைக்கும் போல சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வரும் கண்ணிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.

"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"

இது காதல்ல, சமுதாயத்துல எல்லா பிரிவுல இருக்கவங்களுக்கும், ஒண்ணு தான் - காதலின் ஆரம்பம் கண்ணிலிருந்து.

வாழ்க்கை நிகழ்ச்சிகள் இரண்டிலும் ஒன்றே, இன்றும் சங்க காலத்திலும். கண்ணோடு கண் சேர்ந்த பிறகு புன்னகை. புன்னகையோடு பொதுவாப் பேசிக்கிட்டிருப்பாங்க. அப்புறம் தன்னைப் பத்தி, தன்னோட குடும்பத்தைப் பத்திப் பேசுவாங்க. அடுத்து தன்னோட குறிக்கோள் பத்தி பேச்சு.

அதுக்கப்புறம் தான் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே மேட்டர். ரெண்டு பேருமே நூல் விட்டுப் பாப்பாங்க. சினிமால மாதிரி ஐ லவ் யூல்லாம் கிடையாது. காதல் டேக் ஆப் ஆயிரும். 1. காதல் மலரும் இடங்கள்

காதல் வயப்படும் ஆணும் பெண்ணும் சந்திக்கும் இடங்களில் காதல் மலர்கிறது. அடித்தட்டு மக்கள்

அக்கம்பக்கத்து வீடுகள் அல்லது ஒரே தெருவில் வசிப்பது, ஒரே இடத்தில் பணிபுரிதல் ஆகியவை காதலர்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமைந்து, காதலை மலர வைக்கின்றது. நடுத்தர மக்கள்

அக்கம் பக்கத்து வீடுகள், ஒரே தெருவில் ஏரியாவில் வசிப்பது, ஒரே இடத்தில் பணி, ஒரே பேருந்தில் பயணம், ஒரே ரயிலில் பயணம் இப்படியாக காதல் மலரும் இடங்கள் அமைகிறது.

மேல்தட்டு மக்கள்

இங்கு காதல் மலரும் இடங்கள் ஒன்றாகப் படிப்பது, பொது விழாக்கள், குடும்ப விழாக்கள், இணையதளம், ஒரே இடத்தில் பணி 2. காதல் வளரும் இடங்கள்

ஜீஸ் கடை
வெயில் காலங்களில் காதலர்களின் தாகம் தீர்க்க உதவும் இடம். உட்கார இட வசதி இருந்தா, ஜீஸைக் குடிச்சுக்கிட்டு பேசிக்கிட்டே இருப்பாங்க. இளநீர் கடை

வெயில் காலத்துல இளநீரும் உண்டு. இளநீர உறிஞ்சிகிட்டே பேசிகிட்டே இருப்பாங்க.

ஐஸ் கிரீம் பார்லர்

காதலர்களுக்காக உருவான ஸ்பெஷலான இடம். பேசுறதுக்கு வசதியா, குறைவான வெளிச்சம் உள்ள ஐஸ் கிரீம் பார்லர்கள் அதிகம். கால்களோடு கால்கள் உரசிய நிலையில், கைகள் உரசிய நிலையில் காதலர்களை இங்கு காணலாம். சாலைகள்

சாலை ஓரங்களில் பேசிக்கொண்டே நடந்து செல்லும் காதலர்கள் அதிகம். ரெண்டு பேருமே ஆளுக்கொரு சைக்கிளை உருட்டிக்கிட்டுப் போகலாம். ஒருத்தர் சைக்கிளை உருட்டிக்கிட்டே பேச இன்னொருத்தர் நடந்துகிட்டே பேச, காதல் வளர்கிறது. ரோட்டோரத்துல சைக்கிளோ, டூ வீலரோ நிப்பாட்டி பேச ஆரம்பிச்சிட்டாங்கன்னா காதல் வலுப்பெறுதுன்னு அர்த்தம்.

உணவு விடுதிகள்

ஹோட்டல்ல சாப்பிடுற அளவுக்கு வந்துட்டாங்கன்னா, காதல்ல அடுத்த பரிணாமத்தைத் தொட்டுட்டாங்கன்னு எடுத்துக்கலாம். குளிரூட்டப்பட்ட அறை, மெல்லிய இசை, குறைந்த வெளிச்சம், மெதுவான பேச்சு, கொஞ்ச சாப்பாட்டை சாப்பிட அதிக நேரம் எடுத்துக் கொள்வது. கை, கால்கள் உரசல் அதிகமிருக்காது. படிக்கட்டுகள்

இங்கு வளரும் காதல் பொதுவாகப் பணிபுரியும் இடத்தில், கொஞ்சம் தள்ளி நின்றே பேசுவார்கள். பேசுகின்ற நேரமும் அளவாக இருக்கும். மர நிழல் இது படிப்பவர்கள், வேலை ஒரே இடத்தில் பார்ப்பவர்கள், அருகில் உள்ள மர நிழலில் பேசிக் கொண்டிருப்பது அதிகமாக நடைபெறும் நிகழ்ச்சியாகும். மரத்தடி நிழலில் காதலுக்கு கட்டமைப்பு செய்கிறது என்றால் அது மிகையல்ல. காதலுக்கு அச்சாரம் போடுவதே மர நிழலில் நடக்கும் பேச்சு வார்த்தைகள் தான்.

கோவில் காதல் ஆரம்பித்தவுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அல்லவா காதலிக்கு பூ உண்டு. சாமிக்கு அர்ச்சனை முடிந்து சாமி கும்பிட்டவுடன் கோயிலில் உட்கார வேண்டுமல்லவா, கோவிலில் வெளிப் பிரகாரத்தில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து சிறிது நேரம் பேச்சு. இந்தக் காதல் திருமணத்தில் முடிய வாய்ப்பு அதிகம். வேலை பார்க்கும் இடங்கள்

இங்கு அறிமுகம் ஆவார்கள், காதல் பூக்கும் இடம் என்று கூடச் சொல்லலாம். இங்கு அதிகம் பேச மாட்டார்கள். ஒருத்தரை ஒருத்தர் அதிகம் கண்டு கொள்ள மாட்டார்கள். ஏன் ? தெரியாதது போல் கூட இருப்பார்கள். காதல் வளர்வது வேலை பார்க்கும் இடத்துக்கு வெளியே தான். வேலை பார்க்கும் இடத்தில் தெரியாத மாதிரி நடிப்பதே ஒரு வகைக் காதல் தான்.

நூலகம் இங்கு வளர்வது கல்லூரிக் காதல், படிப்பார்கள். தன் துணைக்கான பாடக் குறிப்புகளை எடுத்துத் தருவார்கள். இங்கு உரசலுக்குக் கூட தடா. சினிமா தியேட்டர்

காதலர்கள் படம் பார்க்கச் சென்றாலே காமத்தைச் சுவைக்கத்தான். இப்ப சினிமா தியேட்டர்கள்ல கூட்டமே கிடையாது. அருகருகே அமர்ந்து படம் பார்க்கும் காதலர்களின் சேட்டைகள் சமயத்தில் அருவருப்பானவை. பூங்கா இங்கும் காமக்கூத்து தான்.

கடற்கரை

உண்மையான காதல் ஜோடிகளும் வரும் இடம். உரசினால் போல் அல்லது சிறிது விலகி இருப்பார்கள். காமக் காதல் ஜோடிகள் அரவணைத்தவாறு சில்லறை சேட்டைகளில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். சுற்றுலா தலங்கள்

சுற்றுலா தலங்களில் கார் வசதி உள்ள காதல் ஜோடிகள் ரூம் போட்டு காதலை, காமத்தை அனுபவிக்கிறார்கள். பிக்னிக் இடங்களில் பப்ளிக்காக அரவணைத்து, விதவிதமான ஸ்டில்களில் காதலர்களைக் காணலாம். திரைப்பட இயக்குநர்கள், கேமராமேன் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

பேருந்து நிறுத்தங்கள்

இது கல்லூரி, கிராமத்துக் காதல், வேலை பார்ப்போருடைய சந்திப்பு இடம். வெளியூர் நகரத்துக்குள்ளிருந்து கல்லூரிக்குச் செல்வோர், கிராமத்திலிருந்து படிக்க, வேலை பார்க்க பக்கத்து ஊர்களுக்குச் செல்வோர் , வேலை பார்ப்பவர்கள் அதிகம் பேர். அயலூர்களில் வேலை பார்ப்பது ஆகியன பேருந்து நிறுத்தங்களை காதல் வளரும் இடமாக மாற்றுகின்றன. குறைவான பேச்சு, உரசல் இல்லாமை ஆகியன இங்கு. 3. காதல் வளரும் விதம் ... அடித்தட்டு மக்கள்

மல்லிகைப் பூ, பிச்சிப் பூ தான் மொதல்ல. பிறகு வளையல், தோடு (கவரிங் தான்). காதலிக்குப் பிறகு வாட்ச், செருப்பு, காதல் உறுதியான பிறகு உடைகள், ஹோட்டலில் சாப்பாடு, காதலன் செலவு தான். கல்லூரிக் காதல்

கண்களின் பார்வை, புன்னகை, பாடப் புத்தகம், நோட்டுகள் பரிமாற்றங்கள், சாலை ஓர நடை, சன்னமான பேச்சு, ஹோட்டலில் லைட் டிபன், ஜூஸ், அபூர்வமாக கோயிலில் சாமி தரிசனம், சின்ன பரிசு, இங்க ரெண்டு பேருமே செலவு பண்ணுவாங்க.

வேலை பார்ப்போர் இன்னைக்குப் பாத்தீங்கன்னா கழுத்துல அடையாள அட்டையோட வேலை பாக்குற ஆணும் பெண்ணும் அதிகம். இவங்களோட காதல் ஐஸ் கிரீம் பார்லர், ஹோட்டல்ல குளிரூட்டப்பட்ட அறையில சாப்பாடு, பைக்ல நெருக்கமான சின்ன சின்ன சில்மிஷங்களோட ரவுண்டு, செருப்பு & சுடிதார் பரிசு. இங்க பொதுவா காதலனோட செலவு தான். சினிமா கண்டிப்பா உண்டு. கூட்டமில்லாத படங்கள். இங்க தழுவல், உரசல் அதிகம். காம சேட்டைகள் அதிகம், கைபேசி உபயோகம் அதிகம்.

மேல்தட்டு மக்கள்

காதல் வயப்பட எடுக்கும் நாட்கள் மற்ற தரப்பினரை விட அதிகம். முதலில் ஒருவரை ஒருவர் உணர்ந்து பிறகு ஆரம்பம். ஹோட்டல், டிஸ்கோ, வெளியூர்ப் பயணங்கள், பரிசுகள் எனத் தூள் கிளப்பும் இவர்களிடம் எல்லை மீறல் அதிகம். காதல் முறிந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். 4. புன்னகை ....

கண்களுக்கு அடுத்த காதல் பரிமாற்றம் புன்னகை தான். காதலன் பேச காதலியோட சிரிப்பும், காதலி பேச காதலனோட சிரிப்பும் பார்க்கக் கண் கோடி வேண்டும். எதுக்கு சிரிக்கிறாங்கன்னு அவங்களுக்குத் தான் தெரியும். எதிலும் சிரிப்பு, எங்கும் சிரிப்பு. சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாள் என்ற பாடலையும், இந்தப் புன்னகை என்ன விலை ? என்ற பாடலையும் இங்கு நினைவு கூறலாம். சிரிப்பதற்குக் கிடைக்கும் நேரங்கள் வாழ்க்கையில் மிகக் குறைவு. அதிலும் மெல்லிய சிரிப்பான புன்னகை மிக அபூர்வம். அந்த புன்னகை பூத்திருப்பது காதலர்களிடையே தான். 5. கைபேசி (செல் போன்) ...

கைபேசியின் பங்கு இன்றைய காதல்ல மிக முக்கியமானது. நேரடியாகப் பேச முடிந்த நேரம் தவிர மீதி நேரம் பேசுவதற்குக் கைபேசி. பேசுவது மட்டுமல்ல. கைபேசியில் குறுந்தகவல் வேறு. குட் மார்னிங், குட் நைட் போக காதல் வரிகள், சிறு காதல் கவிதைகள், படங்கள் குறுந்தகவலில் காதலை வளர்க்கின்றன.

கைபேசியில் பேச கட்டணம் செலுத்த வேண்டுமல்லவா. ரீசார்ஜ், டாப்அப் பண்ணுவது அனேகமாகக் காதலன் தான். பேசும் நேரம் பொதுவாக மாலை 7 மணியிலிருந்து இரவு 11 மணி. நிற்காமல் 30 நிமிடமாவது பேசுவார்கள். தன்னை மறந்த நிலையில் பேசும் அவர்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள். பேசுவதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் மொட்டை மாடி, சிட் அவுட், அறையில் கதவைப் பூட்டிக் கொண்டு பேசுவது, பாத்ரூமில் பேசுவது, வீட்டுக்குத் தெரியாமல் நடக்கும் நிகழ்ச்சிகள்.

மொட்டை மாடி, சிட் அவுட் பேச்சு பொதுவாக வீட்டில் உள்ளவர்கள் அறிய நடப்பது, நண்பிகளுடன் பேசுவதாக வீட்டில் நினைத்துக் கொள்வார்கள். பகலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கைபேசியில் பேச்சுத்தான். பகலில் பேசும் நேரம் குறைவு. கைபேசியில் என்ன பேசப் போகிறீர்கள் ? வழக்கமான வழிதல், உம்மாக்கள், தங்களின் இன்றைய & அடுத்த நாள் நிகழ்ச்சிகள், காதலனும், காதலியும் தங்களின் எதிர்காலம் பற்றிய பேச்சுக்களும் நடக்கும். அடுத்து சந்திக்க இருக்கும் இடங்கள்.

காதல் அவசரங்களில் பயன்படும் மிக அற்புதமான சாதனம் கைபேசி தான். திடீர்னு இரண்டு பேருக்கும் நேரடியா பேச வாய்ப்பு கிடைக்கும். திடீர்னு ஒரு புரோக்ராம் மனசுல உதிக்கும், அப்ப பொதுவா கைபேசி காதலர் இருவரையும் இணைக்கப் பிறந்த தகவல் தொடர்பு சாதனம்.

மிஸ்டு கால், வைப்ரேஷன் மோட் இதெல்லாம் நீ பேச வாய்ப்பு இருக்கிறதா என்பதற்கான அழைப்புகள்.

வீட்டை விட்டு ஓடிப் போறாங்க பாருங்க, அவங்களுக்கு முக்கியமான உதவியே கைபேசி தான். சங்க காலத்துல காதலுக்கு தோழி, இந்த காலத்துல கைபேசி.

6. இரு சக்கர வாகனம் (டூ வீலர்) ...

காதல்ல இன்றியமையாதது. ஒரு இடத்துல இருந்து பேசுவதற்கு நல்லா இருக்க இடத்துக்கு காதலியைக் கூப்பிட்டுச் செல்வதற்கு. ரெண்டு பேரும் இதுல போகும் போது காதலர்கள் சாகசங்கள் கௌப்பிடுவானுங்க.

பைக்ல போகும் போது ரெண்டு பேருக்கும் இடையில் இடைவெளி என்பது இருக்காது. காதலன் காதுல காதலி பேசிக்கிட்டே இருக்க, அவளோட கை காதலனை வளைச்சு இறுக்கி ஒரு ஆனந்தத்தை உண்டு பண்ண, காதலன் அந்த சுகத்தை அனுபவிச்சிகிட்டே இருசக்கர வாகனத்தை செலுத்துவதை எல்லோரும் பார்க்கலாம். காமக்காதல் பண்றவங்க ஊருக்கு ஒதுக்குப்புறமா பைக்ல போவாங்க. அப்புறம் பைக் ரோட்ல ஒரு ஓரமா நிக்கும். இவங்க ரெண்டு பேரும் காணாமப் போயிடுவாங்க. 7. காதல் பரிசுகள் ...

பிறந்த நாள் பரிசுகள், காதலர் தின பரிசுகள் முக்கியமானவை. சாவிக்கான செயின்ல கண்டிப்பா காதல் சின்னம் இருக்கும். கடிகாரம், கைபேசி வாங்குவாங்க. காதலன் வீட்டு விசேஷத்துக்கு காதலியும், காதலன் வீட்டு விசேஷத்துக்கு காதலியும் பரிசுப் பொருட்களோடு செல்வாங்க.

மோதிரம், கழுத்துக்கு தங்க செயின், கைக்கு பிரேஸ்லெட் எல்லாம் கொஞ்சம் வசதியான காதல்.

சுடிதார் பரிசாக, சேலை பரிசாக காதலிக்கு காதலன் வழங்குவது உண்டு. பரிசாகக் கொடுக்கக் கூடாது பேனா மற்றும் கர்சீப். 8. காதல் முத்திரைகள் ...

காதலனோட பேரை, காதலியோட பேரை வகுப்பறை பெஞ்ச்சுகளில் செதுக்குவது, மரங்களில் செதுக்குவது, சுற்றுலா தலங்களில் செதுக்குவது கண்டிப்பாக உண்டு. தன்னோட நெஞ்சில் காதலன் பேரை பச்சை குத்துறவங்க இருக்காங்க. இந்தக் காதல் கண்டிப்பா தோல்வில முடியுது. காதலன் தன்னோட நெஞ்சுல காதலி பேரை குத்தியிருந்தா காதல் வெற்றிக்கு 50-50 வாய்ப்பு.

முன்கைல காதலனோட பேரையோ, காதலியோட பேரையோ பச்சை குத்தியாச்சுன்னா காதல் வெற்றி உறுதி, கடைசி வரைக்கும் நீடிக்கும், நடுவுல பிரேக் ஆகாது. 9. தோழிகள், நண்பர்கள் ...

தோழிகள், நண்பர்கள் இல்லாம காதல் எப்படி வளரும் ? காதல் ஆரம்பிக்கும் போது வர்ற இவங்க காதல் கல்யாணத்துல முடியும் போது மறுபடி வருவாங்க. இதெல்லாம் கல்லூரி மற்றும் கழுத்துல அடையாள அட்டை தொங்க விட்டுக்கிட்டு வேலை பாக்குறாங்கள்ல அங்க தான்.

மத்த காதல்லாம் தோழிகள், நண்பர்கள் இல்லாமத்தான் வளருது. 10. கிராமத்துக் காதல் ...

கிராமத்துக் காதல் பொதுவா வலுவானது. இன்னும் சென்டிமென்ட் உள்ளது. கிராமக் காதல் காதலிச்ச ஆளை கைவிடக் கூடாதுங்கறது இங்க கண்டிப்பான விஷயம். காதல் பொதுவா கல்யாணத்துல முடியாது. கல்யாணம் முடிய வாய்ப்பு இல்லைன்னா தோல்வியத் தாங்கிக்கிட்டு வாழ இவங்களால முடியாது. தற்கொலை வாய்ப்புகள் அதிகம்.

11. காமக் காதல் ...

இன்றைய காதல் பொய்யோ என்று தோன்றக்காரணம் இந்தக் காமக் காதல் காரர்களால் தான். காதல்ங்கிற பேர்ல காமத்தைத் தணிச்சுக்கிறவங்க இவங்க. ஆண், பெண் ரெண்டு பேருக்குமே இது பொது. சின்னச் சின்ன பரிசுகள், ஹோட்டல் சாப்பாடு அப்புறம் காமம் தணித்தல்.

கொஞ்சம் சலிப்பு ஏற்பட்ட உடனே அடுத்த இணையைத் தேடிக் கவர்தல் இவங்களுக்கு உள்ள தனித்திறமை. இவங்க கொள்கையே ஒண்ணு போனா இன்ணொண்ணு. பொதுவா பொருளாதார ஏமாற்று வேலைகள் கண்டிப்பாக உண்டு. 12. ஓடிப்போதல் ...

காதலிக்கிறவங்களோட காதல் வீட்டுக்குத் தெரிஞ்சிரும். வீட்ல கண்டிப்பா காதலை ஏத்துக்கிட மாட்டாங்க, அதனால காதலனும் காதலியும் சேர்ந்து ஓடிப்போவது அதிகம். இப்படிப் போறவங்க நண்பர்கள் புடை சூழ பதிவு அலுவலகத்துல தங்களுடைய திருமணத்தைப் பதிவு செஞ்சுக்கிறாங்க. காவல் நிலையத்துக்கும் போய் காவல் ஆய்வாளர் முன்னிலையில் மாலைய மாத்திக்கிறவங்களும் உண்டு. இப்ப ஒரு பத்து வருஷமா எதாவது ஒரு வீட்ல ஓடிப்போற காதலை ஏத்துக்கிறாங்க. அவங்க ஓடிப்போற ஜோடிக்கு கோயில்ல அல்லது வீட்ல ரொம்ப எளிமையா கல்யாணத்தை முடிச்சு வச்சிர்றாங்க. 13. காதல் திருமணம் ...

காதலர்களா பதிவு அலுவலகத்தில் பதிந்து பதிவாளர், நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வது - ஒரு வகை. காதலன், காதலி - இரு வீட்டுப் பெற்றோரும் சேர்ந்து நின்று காதலர்கள் திருமணத்தை நடத்தி வைப்பது - ஒருவகை. இதில் பத்திரிக்கை அடித்துப் பலரை அழைப்பது ஒருவகை. கோவிலில் மணமுடித்து வைப்பவர்கள் இரண்டாம் வகை.

காதலன், காதலி இருவரில் ஒரு வீட்டார் நின்று நடத்தி வைக்கும் திருமணம் அடுத்த வகை. 14. காதல் திருமணமான தம்பதிகள் ...

இவர்கள் வாழ்க்கை குதூகலமானது, வாழ்க்கையில் தொழிலில் சாதிக்கிறார்கள், பிரகாசிக்கிறார்கள். இவர்கள் இருக்குமிடம் சந்தோஷமாகவும் இருக்கிறது.

வாழ்க்கையைச் சரியாகத் திட்டமிட்டு சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள். 15. காவல் நிலையம் ...


வீட்ல கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்கன்னு உறுதியான உடனே காதலர்கள் வீட்டில் இருந்து கிளம்பி நேரா போறது காவல் நிலையம் தான், பாதுகாப்பு வேணும்ல.

அதுலயும் பாருங்க, இந்தக் காதல் ஜோடிகள் எப்படித்தான் கண்டு பிடிக்கிறாங்கன்னு தெரியலை, போலீஸ் ஸ்டேஷனுக்கு ராசி வேணுமாம். இந்தக் காவல் நிலையத்துக்குப் போனால் காதலுக்கு பாதுகாப்புன்னு அவங்க நெனக்கிறாங்களா அல்லது காதலை ஆதரிக்கக்கூடிய காவல் ஆய்வாளர் அங்க இருக்காங்களா?

மதுரைல ஒரு காலத்துல திருப்பரங்குன்றம் காவல் நிலையம் ராசியானதா இருந்துச்சு. இப்ப காதலர்களுக்கு ராசியானது மேலூர் காவல் நிலையம். காவல் நிலையத்துக்குப் போற காதல் ஜோடிகளுக்கு ஒரு சிக்கலும் இருக்கு. ரெண்டு தரப்பு பெற்றோரையும் காவல் நிலையத்துக்கு வரவழைச்சு விசாரிப்பாங்க. பெற்றோரைப் பார்த்த உடனே கொஞ்சம் பலவீனமான காதல் பார்ட்டி பல்டி அடிச்சிரும். காதல் துணையை விட்டுட்டு, டாட்டா காண்பித்து விட்டு பெற்றோருடன் சென்று விடும். 100 காதல் திருமணம் காவல் நிலையத்தில் நடத்தி வைத்த காவல்துறை ஆய்வாளர்களும் இருக்கிறார்கள்.

16. காதல் தற்கொலை ...

காதலிப்பவர்கள், வீட்டார் எதிர்ப்பால், காதல் - திருமணத்தில் முடியாது என்பது நிச்சயமானால், வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்ய தைரியம் இல்லாத காரணத்தினால் எடுக்கக் கூடிய மிகவும் கோழைத்தனமான முடிவு. இந்த முடிவை எடுக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை இப்பொழுது மிகவும் குறைந்து விட்டது என்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம்.

17. காதல் முறிவு ...

காதல் வேகமாக வளர்வது போல் காதல் முறிவும் அதிகம். பொதுவாக காதல் முறிவு ஏற்படுவது காதலர்களுக்கிடையே தான். முதலில் தனக்குப் பிடித்தமான காதலனோ அல்லது காதலியின் குடும்பச்சூழல் தெரிந்தவுடன், சரி இது நமக்கு ஒத்து வராது என்று கழன்று கொள்வது. இப்பொழுது தன்னைக் காதலுக்காக வருத்திக் கொள்வது இல்லை. வாழ்க்கைல கஷ்டப்படாம இருக்கணும். இதான் எல்லாருடைய எண்ணம். காதலனும், காதலியும் திருமணத்துக்காக முயற்சி எடுக்கும் பொழுது, அவர்களது வீட்டார் எதிர்ப்பால், வீட்டுக்குப் பயந்து காதலில் தோல்வியைத் தழுவுவது - இது உண்மையான காதல்.

காதலை முறிப்பதில் காதலர்களின் வீட்டாரின் பங்கு முக்கியமானது. தங்கள் குடும்பத்து சூழ்நிலை காதலுக்கு ஒத்து வராது என்று வீட்டார்கள் பிள்ளைய அவர்களுடைய கோணத்தில், எதிர்பார்ப்பில் வளர்த்திருப்பார்கள். பிள்ளை காதலிப்பது அவர்களுடைய திட்டத்துக்கு ஒத்து வராது. எனவே காதலை முறிக்க அனைத்து வேலைகளையும் செய்து காதலுக்குச் சமாதி கட்டி விடுவார்கள். 18. காதல் தோல்வி - பாதிப்புகள் ...

உண்மைக் காதலில் தோல்வி அடைந்த பின்னர், நிதானத்துக்கு வருவதற்கே பலநாள் பிடிக்கும். காதலித்த இருவருக்குமே இதே நிலை தான். பாதிப்பு அதிகம் மனதளவில் தான். காதல் தோல்வியால் உயிரை விடுபவர்கள், உருக்குலைந்து போகிறவர்கள் இப்பொழுது இல்லை.

காதலில் தோல்வி அடைபவர்களும் சிறிது வருந்தி, பிறகு மனத்தைத் தேற்றி அடுத்த வாழ்க்கைக்குத் தங்களை தயார் படுத்திக் கொள்கிறார்கள். பழைய காதலை என்றாவது ஒருநாள் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார்கள். காதல் தோல்வி என்பது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. வருடங்கள் சில வேண்டுமானால் வாழ்க்கையில் வீணாகலாம். 19. காதல் மணமுறிவு ...

மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம் இது. காதல் திருமணம் செய்தபின் நீதிமன்றங்களில் போய் விவாகரத்து பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. முதலில் காதலித்து மணந்து பின்னர் மன முறிவாகி மணமும் முறிவாகிறது. காரணங்கள் பலவாயினும், முதன்மையானது காதலர்கள் கற்பனை செய்த வாழ்க்கை அமையாததே.

20. கள்ளக் காதல் ...

வழக்கமான காதலை விட அதிகரித்து வரும் விஷயம் கள்ளக் காதல், கள்ளக் காதலில் கொலைகள் அதிகம். கள்ளக் காதலுக்கு அடிப்படைக் காரணங்கள் இரண்டே விஷயங்கள் தான். பொருளாதாரம் & காமசுகம்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பவர்களை கொலை செய்யத் தூண்டும் அளவுக்கு வேகம் உள்ள கள்ளக்காதல் மிகவும் வருந்தத் தக்கது. . காதல் சங்ககாலத்திலும், இன்றும் ஓர் ஒப்பீட்டுரை

காதலின் ஆரம்பம் கண்களில் தான் - சங்க காலத்திலும் இன்றும். காதலியைப் பற்றிக் காதலன் நண்பனிடம் வர்ணிப்பது அன்றும் இன்றும் தொடர்கிறது.

காதலனும், காதலியும் காதல் வயப்படுவதை உற்ற நண்பர்கள், தோழிகள் உணர்த்துவது அன்றும் இன்றும் உண்டு. காதலிப்பதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள், பிளஸ் மற்றும் மைனஸ் ஆகியவைகளை காதலிக்குமுன் உற்ற நண்பர்களுடன் விவாதிப்பது இக்காலத்தில் உண்டு. சங்க காலத்தில் கிடையாது.

காதலியை வர்ணிப்பது சங்க காலம், இன்று வர்ணிப்பது அசடு வழிவதாக இருக்கிறது. ஜோக்கடிச்சு காதலியைச் சுத்தி இருக்கும் நண்பர்களைக் கலகலப்பாக வைத்திருப்பது இன்றைய காதல். சங்க காலத்தில் ஜோக்கடிச்சு காதலிக்கிறது பற்றிய குறிப்பு இல்லை.

காதலிக்கிறவங்களுக்கு எதைப் பார்த்தாலும் தன் துணையைப் போல தோன்றுவது அன்றும் இன்றும் உண்டு. அன்றும் காதலிக்க பசி கிடையாது. துயில் கிடையாது. இன்று பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது, பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது.

ஆக காதல் வந்து விட்டாலே பசி, தூக்கம் போய் விடுகிறது.

காதலர் பேச ஆரம்பிச்சு பக்கத்துல இருக்க தோழிகள், நண்பர்கள் அவங்க பேச்சுக்கு, இடையூறா இல்லாம ஒதுங்கிர்றாங்க. அந்தக் காலத்துல தோழி ஒதுங்கிருவா. சங்க காலத்துல தோழி மட்டும் தான் தூது, தோழன் கிடையாது. இன்னைக்கு நண்பர்கள், அதைவிடக் கைபேசி.

"வேம்பிற் பைங்காய் என்தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனீர்..."

இது அன்றைக்கு. இன்று காதல் ஆரம்பத்துல வேணும்னா காதலி முகம் சுழிக்கக் கூடாதுன்னு காதலி குடுக்கறத சாப்பிடுற காதலன் உண்டு. ஆனாலும் உனக்கு என்ன வேணும் அப்படின்னு அவங்க டேஸ்ட்டுக்கு விட்டுர்றாங்க.

காதலனும் காதலியும் தற்காலிகப் பிரிவால் துணை எப்படியிருக்குமோ என்று அன்று உருகியிருக்கிறார்கள். இன்று உருக வாய்ப்பில்லை. உபயம் கைபேசி. ஆனா இன்னைக்கு தூங்கும் போது காதல் துணையை நெனக்காம தூங்க முடியாது. அன்னைக்குப் பேச ஆரம்பிச்சா நேரம் போவது தெரியாமல் பேசிகிட்டு இருந்தாங்க. இன்றைக்கும் அப்படித்தான். நேரடியா பேசுற வாய்ப்பு கம்மியா இருந்தாலும் கைபேசில பேச ஆரம்பிச்சா நேரம் போறது தெரியாது. விடிய விடிய கைபேசில பேசுறவங்களும் உண்டு.

அன்றைக்கும் காதல்னா ஈருடல், ஓருயிர். இன்னைக்கும் அதே தான்.

காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா எப்படியும் தெரிஞ்சவங்க கண்ல பட்டுத்தானே ஆகணும். அன்னைக்கு அலர்வாய் பெண்டிர் & அம்பர் பெண்டிர். இன்னைக்குப் புரணி பேசுறது, கிசுகிசுல்லாம் கிடையாது. யாராவது குடும்ப நண்பர் எங்கயாச்சும் ஜோடியா பாத்துருவாங்க. காதலர் வீட்டுல போட்டுக் குடுத்துருவாங்க. வீட்டுக்குத் தகவல் போயிருச்சுன்னா 50-50 சான்ஸ், காதல் ஜெயிக்கிறதுக்கு. சங்ககாலக் காதல்ல தலைவன் பொருள் ஈட்டப் போயிருவான். தலைவன் பிரிவைத் தாங்க முடியாம தலைவி தவிக்கிறத பல பாடல்கள்ல சொல்றாங்க. இன்றைய காதல்ல காதலன், காதலி ரெண்டு பேருமே பொருள் ஈட்டுறவங்களாத் தான் இருக்காங்க. அதுனால பொருள் ஈட்டப் போய் பிரிவுங்கறது இல்லை. பணி நிமித்தமாக வெளியூர்ல மீட்டிங் எதாவது இருந்தாலும் 2 அல்லது 3 நாள் பிரிவு. அதுவும் கைபேசி இருக்கதால தெரியாது.

தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே உள்ள பிணக்கு அன்றும் இன்றும் உண்டு. பிரிந்திருந்த தலைவனைக் கண்ட தலைவிக்கு வரும் சந்தோஷம் அன்றும் இன்றும் உண்டு. காதலனைப் பாத்த உடனே காதலியிடம் சந்தோஷமான சிரிப்பு. காதல் மணம் பேசுவது சங்ககாலத்திலும் உண்டு. இன்றும் உண்டு. பெற்றோர் சம்மதத்துடன் அன்றும் இன்றும் திருமணம் உண்டு. இன்று காதலிக்கிறாள் என்றவுடன் தன் பெண்ணை வேறு ஒரு ஊருக்கு அனுப்பி ஒளித்து வைத்து தாங்கள் முடிவு செய்யும் மணமகனுக்கு தன் மகளைத் திருமணம் செய்து முடித்து வைக்கும் பெற்றோர் இருக்கிறார்கள்.

"பூங்கோதை இச் செரிக்கப்பட்டாள்" - அகத்துறை. தலைவியை ஒளித்து வைக்கும் குறிப்பு இது ஒன்றைத் தவிர சங்க காலத்தில் வேறு ஒன்றும் தெரியவில்லை. பெற்றோர் நிச்சயித்த திருமணத்தை விரும்பாமல், மணநாளில் அல்லது அதற்கு முதல் நாளில் தன் காதலனுடன் ஓடிப்போகும் நிகழ்ச்சிகள் அதிகம். இதில் பக்க பலம் கைபேசி.

காதல் திருமணம் என்றாலும் கல்யாண மேடையில் காதலியின் வெட்கம் அன்றும் இன்றும் உண்டு. திருமணத்திற்குப் பின் கூடி இன்புற்றாலும், மழலைச் செல்வமும், இணை பிரியாது வாழ்தலும் பிள்ளைகளை நல்ல முறையில் பேர் சொல்லுமாறு வளர்த்தலும் இன்றும் அன்றும் உண்டு.

உடன்போக்கு எனப்படும் வீட்டை விட்டு ஓடிப்போய் மணமுடித்தல் அன்றும் இன்றும் உண்டு. மடலேறுதல் என்னும் சங்க கால நிகழ்வு இப்பொழுது இல்லை. காதலியின் காதலைப் பெற தன்னை வருத்திக் கொள்ளும் காட்சிகள் திரைப்படத்தில் மட்டும் இடம்பெறுகிறது, நிஜ வாழ்க்கையில் அல்ல. அன்றைய காதலில் தழுவுதல் இருந்தது. இன்று தடவல் அதிகம்.

காதலன் வரும் சங்ககால வாகனங்கள் தேர், குதிரை, யானை. இன்று காதலன் பயணிப்பது சைக்கிள், பைக், கார்.

பரிசுகள் இல்லாத காதல் இன்று இல்லை. சங்க காலத்தில் பரிசுகள் கொடுக்க வாய்ப்புகள் இல்லை.

அன்று காதல் தோல்வி இல்லை என்றே சொல்லலாம். இன்று அதிகமான காதல் தோல்வியில் தான் முடிகிறது. மணமுறிவு பற்றிய குறிப்புகள் சங்க காலத்தில் இல்லை. இன்று காதல் முறிவும், காதல் மண முறிவும் உண்டு.

காவல் நிலையத்துக்கு இன்று காதல் பிரச்சனைகள் அதிகம். சங்க காலத்தில் காவல் நிலையமே கிடையாதல்லவா ...! . நிறைவுரை

இந்த ஆய்வுக்கு இது நிறைவுரை. காதலுக்கு நிறைவுரை கிடையாது. காதல் மனித இனம் உள்ளவரை தொடரும், காதலர்கள் காதல்முறைகள் மாறுமே ஒழிய அடிப்படை என்றும் மாறாது. கருத்தொருமித்தல் தான் காதலில் வேண்டும். சங்க காலக் காதலிலும், இன்று உள்ள காதலிலும் இது இருக்கிறது.

இன்றைய காதல் பொய்யானதாகத் தோன்றினாலும் உண்மைக் காதல்

9 comments:

benza said...

அய்யா, கட்டுரை ஆரம்பத்தில் உலகில் தமிழனுக்கு மட்டுமே காதல் என அடிச்சு சொல்லப்போறிங்கன்னு பயந்திட்டேன் -- இந்திரியம் மக்ஸிமம் நிரம்பினால் அதை வெழியேற்றும் மார்கத்துக்கு வழி கோலுவதே இயற்கை -- இதற்க்கு புனிதத்துவம் கொடுத்துள்ளான் கற்பனை நிரம்பிய மனிதகுல மகன்.
அருமையான, ஆழமான கவித்தன்மை பொங்கும் கட்டுரை.
வாழ்த்துக்கள்.
சங்ககால விஷயங்கள் எனக்கு எட்டாது --
இன்றைய சமுதாயத்தில் இளசுகள் கொஞ்சம் லாவகமாக தன் சோடியின் மேனியில் கை போடுறாங்க
நம்ம காலத்தில கை போட ஆசை இருந்தும் சமுதாய பயம் விடல --
இண்ணைக்கு நாம, எமக்கு நடந்த அநியாயத்தை மனதில மறைமுகமாக ஏற்று -- நம்ம இளசுகளுக்கு நாம கண்டும் காணாம லைசென்ஸ் கொடுத்திட்டமே --
காதலை லத்தீன் மொழியில Helen of Troy வர்ணிக்குது -- The Face That Launched 1000 Ships ன்னு.
லைலா மஜ்னு கதை -- அங்கிட்டு போனா ஷேக்ஸ்பியர் Romeo and Juliet பண்ணினாரே -- எல்லாத்தையும் கூட்டி கணக்கு பாத்தா காதல் எங்கிறது இயற்கையின் இனபெருக்க யுக்திக்கு மனிதன் வெச்ச புனிதமான சொல்லு -- காமஸூஸ்த்ரம் 64 சமாசாரம் சொன்னாலும் கடைசில நடப்பதும் முடிவும் ஓண்ணுதாம்மே --ஆமா இதை தொடர்ந்து செக்ஸ் எஜுகேஷன் கட்டுரை பொருந்துமே !

ஆ.ஞானசேகரன் said...

மிக பெரிய ஆய்வு அறிக்கை.. மீண்டும் படிக்க தூண்டும் ஒரு நல்ல ஆய்வு கட்டுரை.. இதே போல் தொடர்ந்து எழுதுங்கள் சார்....

Muniappan Pakkangal said...

Nandri Ben Sir.Love is a sacred thing from the ancient time till date.Itz a heart to heart one.Sex is a part in it.Sex is not love.I have clearly stated in my article Kaathal Kaamam & Kaama Kaathal.There are so many other language love stories,but here also you have Ambigapathy-Amaravathy a thing that is told.As i have mentioned in the start of the article Bravery & Love are the symbols are Tamilian's pride in which Bravery has gone. Todays lovers are given freedom-itz a must changing time.Love is recognised by most parents now,i'll be posting this subject in a latter post.Once again Ben,differentiate love from sex.

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan,i'll try to give these sort of post-I must find time.

Dikshith said...

ARUMAI ARUMAI ARUMAI ARPUDHAM>

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் .
நல்லாயிருக்குங்க .
வாழ்த்துக்கள் .

Muniappan Pakkangal said...

Nandri Dikshith.

Muniappan Pakkangal said...

Nandri Nandu @ Norandu.

Jabar Jabarali said...

மிக மிக அருமை ஐயா