Sunday, August 17, 2008

குற்றாலம்

சிவபெருமான் பார்வதி திருமணம் திருக்கயிலாய மலையில் நடைபெற்ற போது அக்கல்யாணத்தை காணவந்த கூட்டத்தால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அந்த ஏற்றத்தாழ்வை சமன் செய்ய அனுப்பப்பட்ட குறுமுனி அகத்தியர் வந்தமர்ந்த இடம் தான் பொதிகை மலையான குற்றாலம்.

குற்றாலக் குறவஞ்சி படிக்கலைன்னாலும் எல்லோரும் கேள்வியாவது பட்டிருப்பீங்க.

குற்றாலத்திலே குளிக்கிற அனுபவம் ஒரு தனி சுகம். அதுலயும் அருவில குளிக்கும் போது எருமைமாடு மாதிரி ஆடாம அசையாம ஒரே இடத்துல நின்னுகிட்டே மேலே இருந்து விழுகிற தண்ணில நிக்கிற சுகமே அலாதியானது. குற்றாலத்துல குளிக்கப்போனா, டக்குனு குளிச்சுப்புட்டு வெளியே வராம, நல்லா நின்னு குளிங். வித்தியாசம் உங்களுக்குத் தெரியும்.

மெயின் அருவில கம்பிய பிடிச்சுக்கிட்டு, மேல இருந்து விழுற தண்ணில தடதடன்னு முதுகில அடி வாங்குற சுகம், ஐந்தருவில இடுக்குக்கு போய் குளிச்சுட்டு வர்ற த்ரில், பழைய குற்றாலத்துல நிதானமான குளியல், புலியருவில தொட்டிக்குள்ள நிக்கிற சுகம், இதெல்லாம் அனுபவிக்க குடுத்து வைக்கனும்.

அருவிக்கப்புறம் குற்றாலம் மக்கள். குற்றாலத்துல தெரிஞ்ச ஆள் இருந்து நீங்க தங்குற விடுதில, போன் பண்ணி கேட்டா, எப்ப வந்தா நல்லாருக்கும், அருவிகளில் தண்ணீர் விழும் நிலவரம், ரொம்ப டீடெய்லா சொல்வாங்க.

குற்றால அருவியை விட சுகம், அந்தப்பகுதி மக்களோட மனம். வழி மாறிப்போய் , யாரையாவது வழி கேட்டா வழி கரெக்டா சொல்வாங்க. அதை கேக்குற, பாக்குற, இன்னொரு ஆளும் "அண்ணாச்சி நீங்க வந்திட்டீக"ன்னு சொல்லி கரெக்டான வழி சொல்லுவாக.

அருவில குளிக்கும் போது எண்ணெய் தேச்சு ஊறவச்சு கொஞ்ச நேரம் கழிச்சு குளிங்க. புத்துணர்ச்சி தெரியும். ஆயில் மசாஜ்ல, எண்ணெய் தேச்சுவிட்டு உங்களை படுக்கப்போட்டு, உட்கார வைச்சு ஒரு உலுக்கு உலுக்கி எடுப்பான் பாருங்க, அது சுகம்.

குற்றாலம்னா குரங்குகள் இல்லாமலா? குரங்குகளுக்கு ஏதாவது குடுத்திட்டு வாங்க. குற்றாலத்துல ஜாதிக்காய் ஊறுகாய் தனிசுவை. அதை மாதிரி பன்னீர் கொய்யா, ரம்டான், மங்குஸ்கான் பழங்கள் அவ்வளவு இளசா இருக்கும். பதநீர் அவ்வளவு டேஸ்ட்டானது.

வீட்ல செடி வளக்குறவங்களுக்கு செடி வாங்க குற்றாலத்துல நிறைய நர்சரி இருக்கு. முக்கியமானது மெயின் அருவில இருந்து ஐந்தருவிக்கு போற வழில இருக்ற அட்சயா ஹோட்டல் பின்னாடி இருக்க போத்தி நர்சரி. அங்க வாங்கற செடிகள்ல வெரைட்டி இருக்கும். விலையும் ரொம்ப சீப். காக்ஸ்டல்ல பல ரகம், போன்சாய் மரக்கன்றுகள், என்ன செடி வேணும்னாலும் கிடைக்கும்.

பார்டர் புரோட்டாக் கடை, கேரளா பார்டர்னு நெனக்காதீங்க. செங்கோட்டைல, பிரானூர் பார்டர்னு ஒரு இடம் இருக்கு, அங்க இருக்க ரஹ்மத் புரோட்டாக்கடை ரொம்ப பிரபலம்.

குற்றாலம் வருஷத்துக்கு ஒரு தடவை போய்ட்டு வர வேண்டிய இடம்.

No comments: